Tuesday, 10 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா - 3

இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழி சமஸ்கிருதம் என்று சமீபத்தில் நடந்த பதினைந்தாவது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். சமஸ்கிருதம்  இந்திய திருநாட்டின் உணர்வையே பிரதிபலிக்கிறது எனும் கூற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது. தமிழ் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ பிற நாட்டு மொழி ஆர்வலர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். செக்கோஸ்லோவோகியா நாட்டை சேர்ந்த சமீபத்தில் மரணமடைந்த மொழி ஆய்வாளர் கமில் ஜ்வேலேபில் தம் - இல் என்று பிரித்து தம் என்றால் ஒருவருடைய இல் என்றால் ஒலி என கூறுகிறார். மொழி என்றால் அது தமிழ். ஆனால் தமிழை ஒழித்து கட்ட பல்வேறு காலங்களில் பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஆங்கிலம்தனை தன்னில் ஏற்றுக்கொண்டு தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மொழிகளுக்கு எல்லாம் தாய் எதுவெனில் ஒலி. இதை எவரும் மறுக்க இயலாது. ஒலி மூலமே மொழி பயன்பாட்டிற்கு வந்திருக்க இயலும். தமிழ் எனும் வார்த்தை உருவானதிலிருந்தே நாம் தெளிவுபடுத்த வேண்டியது என்னவெனில் மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ். தமிழ் மொழி ஒலியின் வடிவத்தில் இருந்து தொடங்கி பின்னர் கொண்ட மாற்றங்கள் இதை மிகவும் அழகாக பறைசாற்றுகின்றன. நன்னூல் மிகவும் அழகாகவே சொல்கிறது, பவணந்தி முனிவர் நன்னூல் எழுதும்போது இவ்வாறு தமிழ் கொண்ட மாற்றத்தை மனதில் கொண்டே பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என நன்னூல்தனை முடித்து வைக்கிறார். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்.

இதே சமஸ்கிருதம் என்றால் என்ன அர்த்தம்? சமஸ்தம் என்றால் யாவும் என பொருள்படும், கிருதம் என்றால் சேர்த்து என்று பொருள்படும். பிற மொழிகளையெல்லாம் சேர்த்து உருவாக்கியது சமஸ்கிருதம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். அதே வேளையில் சம்யம்-கிருதம் என்றால் நன்கு அமைக்கப்பட்டது என்று பொருள்படும். மேலும் சமஸ்கிருதம் பற்றி திரு மன்மோகன் சிங் குறிப்பிடுகையில் சமஸ்கிருதம் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ சொந்தமானது அல்ல என கூறி இருக்கிறார். சமஸ்கிருதம் ஒரு இனத்தின் மொழியாகத்தான் இருந்து இருக்க கூடும். இன்றைய கணக்குப்படி பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக சமஸ்கிருதம் ஆகிப்போனது என்னவோ உண்மை, வெறும் பதினைந்தாயிரம் மக்களே சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக உள்ளனர் எனும்போது சமஸ்கிருதம் பேசும் இனம் அழிந்து போனது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் அடிப்படையில், வேதங்கள் அடிப்படையில் சமஸ்கிருதம் பெரும் மதிப்பை பெற்றது என்பது அன்றைய காலத்தில் சரியே. சிறந்த சிந்தனையாளர்கள் தமிழில் இருந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் ஒரு சாட்சி. ராமாயணமும், மகாபாராதமும், வேதங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தால் சமஸ்கிருதம் மொழிகளில் தாய் ஆகிவிட இயலாது. ஓம் எனும் பிரணவ மொழி தமிழ் தந்ததுதான். தமிழில் எழுத்துக்கள் உண்டு, எண்கள் உண்டு, மாதங்கள் உண்டு, வாரங்கள் உண்டு, வருடங்கள் உண்டு.

இந்த சமஸ்கிருதம் முன்னர் குறிப்பிட்டதை போல தென்னிந்திய மொழிகளில் பெருமளவு கலந்து சற்று சீரமைப்பு செய்தது என மொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தொல்காப்பியம் எழுதப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது தமிழுக்கு இலக்கணம் சொல்லித்தந்தது சமஸ்கிருதம் என்பதெல்லாம் எத்தகைய உண்மை என புரிவதற்கு இல்லை. ரிக் வேதங்களில் தமிழ் சொற்கள் கலந்து இருக்கிறது என்கிறார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் வாக்கியம் எந்த வேதத்துக்கும் மேலானது, அதைத் தந்தது தமிழ் தான்.

பழங்கால கல்வெட்டுகளில் இருந்த மொழி தமிழ் தான் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமஸ்கிருதம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை எந்த ஒரு கல்வெட்டிலும் இல்லை என்பது தெளிவு. இந்த மொழி பிற மொழிகளில் இருந்து கடன் வாங்கியே வளர்ந்து உள்ளது. எப்படி ஆங்கிலம் கடன் வாங்கி வளர்ந்ததோ அதைப்போல இந்த சமஸ்கிருதம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. ஆனால் தமிழ் இயற்கையாகவே உருவான மொழி எனவும் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் செம்மொழி என போராடி இந்திய அரசால் 2004ம் ஆண்டு தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் தமிழ் உலகின் தாய் மொழி எனும் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். மொழிகளில் தாய் தமிழ் பற்றிய சிறப்பு பார்வை தொடரும். 

8 comments:

மகேந்திரன் said...

////ஓம் எனும் பிரணவ மொழி தமிழ் தந்ததுதான்////

அறிந்திராத பல செய்திகள் அறிந்துகொள்ள முடிந்தது நண்பரே.
நன்றிகள் பல.

Varadaraj_dubai said...

மிகவும் பெருமையாக இருக்கிறது! நானும் தமிழன் என நினைக்கும்போது!!!

முத்தரசு said...

அடேங்கப்பா!...தமிழ் தமிழ்.... தொடருங்கள்.

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன்

Unknown said...

நல்லதொருப் பதிவு தொடர்கள்....
"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்"

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாரும்
பனிமலர் எறியத் தேனும் - காய்ச்சுப்
பாகிடை எறியச் சுவையும்
நனி பசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரி ளநீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
- பாரதி தாசன்.

தொடருங்கள்...

Radhakrishnan said...

நன்றி மகேந்திரன்.

நன்றி வரதராஜன்.

நன்றி மனசாட்சி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி நண்பரே.

நல்லதொரு பாட்டின் அறிமுகம் தந்தமைக்கு நன்றி தமிழ் விரும்பி ஐயா.

கோவி.கண்ணன் said...

பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே கிருந்த எழுத்து கண்ட சிறப்பு மொழி சமஸ்கிரதம் தான் என்பதற்கு சான்று இங்கே
:)

Radhakrishnan said...

நன்றி கோவியாரே. விரைவில் படித்து விடலாம்.