Wednesday, 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.


3 comments:

முத்தரசு said...

மயக்கம் என்ன? மனசனுக்கு/மனசுக்கு உந்துதல்.

Unknown said...

மயக்கம் என்ன, உண்மையிலேயே மனதை மயக்க வைக்க்கும் படம், உங்களின் கட்டுரையும் அதனை உணர்த்துகின்றது

Radhakrishnan said...

நன்றி மனசாட்சி
நன்றி இரவு வானம்