சமீபத்தில் திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் பேச்சுதனை கேட்க நேரிட்டது. அந்த பேச்சில் இருந்து அவருக்கும் ஆனந்த விகடனுக்கும் அவரது படம் சம்பந்தமாக மன வருத்தம் என புரிந்து கொள்ள முடிந்தது. எதுக்கு விமர்சனம் எழுதுற, எதுக்கு மார்க் போடுற என ஆனந்த விகடனை பிடி பிடி என பிடித்துவிட்டார். உன்னால ஒரு நல்ல தமிழ் படம் எடுக்க முடியுமா? உன்னால சின்னத்திரையிலதான் எல்லாரையும் அழ வைக்க முடியும், ஒரு படம் எடுத்தியே அது எப்படி இருந்துச்சி என ஏகத்துக்கும் பேசிவிட்டார், ஏசிவிட்டார்.
விமர்சனம் என்பது என்ன? ஒருவரின் படைப்பை, செயலை உண்மையிலேயே மனம் திறந்து குறைகளை மட்டுமே சொல்லாமல் நிறைகளையும் சுட்டி காட்டுவதுதான். பெரும்பாலான விமர்சனங்கள் எப்படி அமைகிறது என்பது அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்து அமைகிறது. ஒருவர் இப்படி என்பார், மற்றொருவர் அப்படி என்பார். இந்த இரண்டையும் கேட்டுவிட்டு படைப்பை பார்ப்பவர் இப்படி அப்படி என்பார்.
'போராளி' என பேரு வைச்சிருக்காங்களே அப்படின்னு நினைச்சா, நட்பு பற்றிய கதை என அரசல் புரசலாக தெரிய ஆரம்பித்தது. பொதுவாகவே முழு விமர்சனங்கள் படம் பார்க்கும் முன்னர் நான் படிப்பது இல்லை. அதைப்போல முழு விமர்சனங்கள் படத்தைப் பற்றி நான் எழுதுவதும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் வரிகள் தான்.
போராளி என்பவர் யார்? போராளி என்பவர் சொந்த பந்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமால் தனது சமூகத்திற்காக பாடுபடுவர். அதாவது சொந்தங்களும் அதில் உள்ளடக்கம். இந்த போராளிகள் தனக்கென குடும்பத்தை வைத்து இருந்தாலும், இவர்களது போராட்டம் எல்லாம் சமூக அவலங்களை களை எடுப்பதுதான். இவர்களுக்கு தனது சமூகமே அவர்களது குடும்பம். இந்த போராளிகள் ஒரு இலக்கோடு தங்களது பயணத்தைத் தொடங்குவார்கள். அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். இந்த போராளிகள் தனி தனி குழுக்களாக செயல்படுவார்கள். இந்த போராளிகளுக்கு என ஒரு தலைவர் இருப்பார். இப்படிப்பட்ட போராளிகளால் சமூகங்கள் விழிப்புணர்வு அடைவது உண்டு. ஆனால் இந்த போராளிகளை விட தொழிலாளிகளே மேல் எனும் கருத்து நிலவுவது உண்டு. தொழிலாளிகள் தங்களது அடிமைத்தனத்தில் இருந்து தங்களை தாங்களே மீட்க தெரிந்து கொண்டால் இந்த போராளிகள் உருவாகும் சாத்தியம் இல்லை.
சரி இந்த திரைப்படத்திற்கு வருவோம். படத்தில் சில பல காட்சிகள் பார்க்கும்போது இயக்குனரை, படக் குழுவினரை பாராட்ட வேண்டும் என மனம் சொல்லிக் கொண்டது. இப்படியெல்லாம் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த முடியாதா என்கிற சின்ன அபிலாசை இந்த இயக்குனருக்கு இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகரைப் போல ஆங்காங்கே ஓரிரு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறருக்கு உதவும் குணம்.
அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கும் மனிதர்கள் இவ்வுலகில் மிகவும் அதிகமாகவே உண்டு. நான் வேலைக்கு செல்லும் வழியில் சுரங்க பாதையில் எப்போதும் உறங்கி கொண்டிருப்பது போன்று இருக்கும் நபர்களை காண்பது உண்டு. ஏதாவது சில்லறை தாருங்கள் என கேட்பார்கள். அவர்கள் மிகவும் உடல் வலிமையுடனே காணப்படுவார்கள். மனதில் இவர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் என அவர்களை சட்டை செய்யாமல் சென்று விடுவது உண்டு. வீடு இல்லாதவர்களுக்கு என ஆதரவு கரம் இந்த அரசு அளித்தாலும் இவர்கள் உழைக்க முயற்சி செய்வது இல்லை, அல்லது உழைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுவது இல்லை. எப்படித்தான் இந்த குளிரிலும் இவர்களால் இப்படி வாழ முடிகிறது எனும் ஆச்சரிய குறி எழுந்துவிட்டு போகும்.
நான் கடவுள் எனும் திரைப்படம் எப்படி ஒரு அவல நிலையை சுட்டி காட்டி அதற்கு ஒரு முட்டாள்தனமான தீர்வு சொன்னதோ, அதை விட பல மடங்கு மேலாக நல்லதொரு தீர்வை இந்த படத்தில் சொல்வதாகவே தெரிகிறது. ஆனால் நட்பு என்பதை தூக்கி நிறுத்துகிறோம் என்கிற பெயரில் அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து குடும்பம், சொந்தங்களை கொச்சை படுத்தி இருக்கிறார்கள். கொச்சை படுத்தி இருக்கிறார்கள் என்பதை விட நடப்பதை காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 'கிட்ட இருந்தால் முட்டப் பகை'
குடும்பங்கள், உறவினர்கள் என்றாலே சொத்து சிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. இது காலம் காலமாகவே நடைபெற்று வரும் ஒரு பொல்லாத விசயம். பணம் இது ஒன்றுதான் பிரதானம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே செல்கிறது, அதுவும் நகைச்சுவையுடன் நளினம் ஆடுகிறது. 'தொட்டதெற்கெல்லாம் குற்றம் சொல்லும் மனைவி' 'குடித்தும் தன்னிலை மறவா பாத்திரம்' மிகவும் அழகாகவே நகர்கிறது. படத்தின் கருவில் ஒரு மாபெரும் குறை இருக்கிறது! எவர் எவரையோ நல்வழி படுத்தும் கதாநாயகர் தனது சொந்தங்கள் மீது வெறி கொள்வது எதற்கு. சொந்தங்களின் பேராசையை புரிந்து கொண்டு விலகி முன்னரே விலகி இருந்தால் பல இழப்புகள் நேர்ந்து இருக்காது. இது போன்ற சொந்தங்களின் உறுதியை வலுப்படுத்தும் கதைகள் வந்திருக்கின்றன என்பதாலும், தான் கொண்ட நட்பு உயர்ந்தது என்பதாலும் அதற்காக மட்டுமே இந்த அன்பு உபயோகப்படுவதாக கட்டம் கட்டி இருக்கிறார்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்'
அன்பு, அரவணைப்பு இல்லாத பட்சத்தில் மனநிலை பிறழ்வதற்கான வாய்ப்புகள் அனைவருக்குமே சாத்தியம். இந்த அன்பும், அரவணைப்பும் மனிதர்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தவறு செய்யும் குழந்தையை அடிப்பதை காட்டிலும், அன்புடன் பேசும்போது ஒரு பாதுகாப்பாகவே அந்த குழந்தை உணர்கிறது. மனம் விட்டு பேசுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். எவராவது பிரச்சினை என சொல்லும்போது அவர்களின் வலியை நீங்கள் முதலில் உணர கற்று கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை பற்றி பேசினாலே பெரும் பிரச்சனைகளை உருவாக்குபவர்களாகவே நாம் இருக்கிறோம். மேலும் ஒரு திட்டமிட்ட மனநிலை. நான் இப்படித்தான் என்கிற போக்கு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என இல்லாத அக்கறை.
இதற்கு காரணமாக அறிவியல் விசயங்கள் கூட உண்டு என்கிறார்கள். அதாவது செரோடொனின் எனும் மூலக்கூறானது நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுதாக கண்டுபிடிக்க பட்டு உள்ளது.
நாம் சந்தோசமாக இருக்கும்போது இந்த மூலக்கூறு நரம்புகளில் இருந்து வெளிப்படுகிறது. இதன் அளவு குறையும் போது நமக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டு அதற்காகவே மன அழுத்தம் தனை குறைக்க செய்யும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல பில்லியன் டாலர்கள் விற்பனை செய்தது. அது ப்ரோஜாக் எனப்படும் மருந்து ஆகும். இந்த ப்ரோஜாக் இந்த செரோடொனின் அளவை அதிகரிக்க செய்து மனதை மகிழ்வாக வைக்க உதவும் என்கிறார்கள்.
இதற்காகவே நமது முன்னோர்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என சொல்லி வைத்தார்கள். இந்த வாசகமும் படத்தில் வருகிறது. சினிமா என்பதால் ரசனைக்கு பஞ்சமில்லை. ஆனால் போராளி சமூகத்திற்காக போராடுபவன். திருந்தும் அல்லது திருத்தப்படும் சில மனிதர்கள் மட்டுமே சமூகம் ஆகிவிட முடியாது!
3 comments:
இந்த மாதிரி ஒரு வித்தியாசமான விமர்சனத்தை நான் படித்ததே இல்லை... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை...
உங்கள் பதிவை முதலிலும் கடைசியிலுமே மட்டுமே வாசித்தேன்... நானும் போராளியைத் திரையில் பார்க்க வேண்டும் என்பதால்... மீண்டும் வருவேன். செரோடினின் பற்றிய செய்திக்கு நன்றி...
மிக்க நன்றி பிரபாகரன், அது சரி.
மிக்க நன்றி ஐயா. மிகவும் நல்ல படம் தான், நிச்சயம் கண்டு களியுங்கள்.
Post a Comment