Thursday, 3 November 2011

பெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்

யோவ் எந்த காலத்துல இருக்க, என்ன பேச்சு பேசு பேசற. பொண்ணுக வேலைக்கு போக கூடாதா! நல்லா இருக்குயா ஞாயம். 

ஏய்யா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குனு சொன்னவங்களை எதிர்த்து அந்த காலத்துல போராட்டம் தொடங்கனவங்களை கேலி பண்றியா.  

இப்போ எல்லா துறைகளிலும் பொண்ணுக கொடி கட்டி பறபற அப்படின்னு பரபரப்பா முன்னேறிட்டு வராங்க. என்னய்யா பேச்சு பேசற. 

பேசாம இந்த இடத்தை உட்டு ஓடிப் போயிரு. இல்லை விளக்கம்மாத்து அடி, செருப்பு அடி அப்படின்னு எல்லா அடியும் வந்து விழுகும். 

ராஜாராம் மோகன்ராய் தெரியுமாய்யா உனக்கு, பெண்கள் தங்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து மீளனும் அப்படின்னு ஒரு புரட்சியையே பண்ணுனவரு. 

படிக்காத காலத்துலேயே காடு மேடுன்னு ஓயாம வீட்டுக்கும் காட்டுக்கும் உழைச்சி ஓடா போனவங்கய்யா இந்த தாய்மாருக. நாலு காசு சம்பாதிச்சி நகை நட்டுன்னு வீடு வாசனு திறமையோட வாழறவங்களையா வேலைக்கு போகாதேன்னு சொல்ற. சொந்த காலுல தைரியமா நிற்குறாங்க. 

மேடம் க்யுரீ தெரியுமா உனக்கு, உனக்கு அவங்களை எப்படி தெரியும்? ஒரு சல்சா தெரியும், அதைவிட்டா ஒரு குல்சா தெரியும். பிசிக்ஸ்ல, கேமிசிட்ரில நோபல் பட்டம் வாங்குனவங்க. தன்னோட ஆராய்ச்சிக்கே உயிரை விட்டவங்கய்யா. 

இங்க பாரு, இத்தனை சொல்லியும் அசையாம நிற்குற. ஆளுக வராங்காட்டியும் ஓடிப்போயிரு. தான் படிச்சி, தங்களோட புள்ளைகள படிக்க வைச்சி, சமைச்சி, அலசி, குடும்பத்தை கட்டிக்காக்குற  பொண்ணுங்க இருக்கிற உலகத்துல என்ன உதாரு விடற. 

புரட்சி பொண்ணுங்க வாழற உலகம் இது. அவங்களை இப்படி உசுப்பேத்தி அடிமைபடுத்தலாம்னு மட்டும் கணக்கு போடாத. 

'பேசியாகிவிட்டதா, நான் கொஞ்சம் பேசலாமா'

என்னத்த பேசப் போற, அதான் ஒரு வரி அம்மணமா சொல்லிருக்கியே. வேலைக்கு போகாதீங்கன்னு. யாருயா அவங்களுக்கு சோறு போடுவா. அவங்க அடுத்தவங்க கையை ஏந்தி நிற்கனுமா. நீ துரை, வேலைக்கு போய்ட்டு வந்து ஹாயா காலு மேல காலு போட்டு உட்காருவா. அவங்க உனக்கு பணிவிடை செய்யணும், அதுவும் பெண் குழந்தைன்னா அழுகாம அத்தனை வேலையும் செய்யணும். என்னத்தையா பேச போற. 

'சரி சரி பேசுங்க, நான் நீங்க பேசி முடிக்கிறவரைக்கும் காத்து இருக்கேன்'

உனக்கு நெஞ்சுல எத்தனை தைரியம் இருந்தா இன்னும் பேச போறேன்னு இங்க நிற்ப. பேசு, நீ பேச பேச உனக்கு விழற அடியோட எண்ணிக்கை கூடத்தான் செய்யும். 

'நான் பொண்ணுங்களை படிக்க வேண்டாம்னு சொல்லல. வேலைக்கு போகவேண்டாம்னு சொன்னேன். ரொம்ப பேரு குடும்ப சூழல் காரணமாத்தான் வேலைக்கு போறாங்க. வேலைக்கு போகணும்னு நினைச்சி அவங்க போகறது இல்லை. நீங்க சொன்னீங்களே மேடம் க்யூரி அவங்க மாதிரி வாழறவங்க ரொம்ப குறைச்சல்.  பஸ்லயும், ரெயிலுளையும் அடிச்சி பிடிச்சி அவங்க வேர்த்து விறுவிறுத்து வேலைக்கு போறது பார்த்து கஷ்டமா இருக்கு. போகப் பொருளா பொண்ணுகளை பார்க்குற பூமிய நினைச்சி கவலயா இருக்கு. அதுவும் அவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தப்பரம் வேலைக்கு போய் குழந்தைய கவனிக்க முடியாம, வேலையிலும் மனசு ஒட்டாம பாவம் அவங்களை நினைச்சி பரிதாபமா இருக்கு. நீங்க சொன்னீங்களே, வீட்டுல வேலை, வெளியில வேலை. பாவம் இல்லையா. வசதி வாய்ப்புக்காக இப்படி அவங்களை சின்னபின்னாமாக்குறது தப்பில்லையா. தாங்களே இஷ்டப்பட்டு வேலைக்கு போனா போகட்டும். ஆனா ' 

என்ன ஆனா. நீ என்ன பொண்ணுகளை காக்க வந்த ரட்சகனா. அவங்க வேலைக்கு போகமாட்டேன்னு அடம் பிடிச்சாங்களா. வேலைக்கு போகமாட்டோம்னு போர்க்கொடி தூக்குனாங்களா. அரசியல் தலைவிங்க, கம்பெனி முதலாளிங்க அப்படின்னு இருக்கறாங்க, நீ என்னமோ பேசற. 

'இல்லை, விபச்சாரத்தை தொழிலா நடத்துறவங்களை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன். உடலை காட்டி பணம் சம்பாரிக்கிற தொழிலுக்கு போக வேணாம்னு சொன்னேன். சின்ன சின்ன குழந்தைங்க எல்லாம் வைச்சி தொழில் நடத்துறாங்களே அவங்களுக்கு துணை போக வேணாம்னு சொன்னேன். சினிமா படத்துல ஒரு மெழுகு பொம்மையாட்டம், அளவு துணி பத்தாத பெண்ணாட்டம் பண்ற தொழிலு வேணாம்னு சொன்னேன், அடிமைத்தனமா பாக்குற வேலைக்கு வேணாம்னு சொன்னேன், அடிமையா வேலை செய்ற வீட்டு வேலை கூட வேணாம்னு சொன்னேன், எதோ பெத்துக்கரனும் அப்படின்னு இல்லாம, சும்மா சும்மா பெத்துக்குற வேலையும் வேணாம்னு சொன்னேன்'

பேச்சை மாத்துறியா. ஆளுங்க வராங்க. ஓடிப்போயிரு. 

ஆண்களே, பெண்களே வேலைக்கு விருப்பத்துடனே செல்கிறேன் என உங்களால் உறுதிமொழி கொடுக்க இயலுமா? 

வேலைக்கு செல்வதின் உண்மையான நோக்கம் என்ன, பணம் சம்பாதிக்கவும், புகழ் சம்பாதிக்கவும் தானா? 

வேலைக்கு செல்வதினால் அடைந்த லாபங்களும், அடைந்த துயரங்களும் தான் எத்தனை?

வேலைக்கு செல்வதின் மூலம் உங்களால் நிம்மதியாக வாழ முடிகிறதா? மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை? 

நாட்டில், உலகில் வேலையில்லா திண்டாட்டம் பெருக்கெடுத்து ஓடுகிறது? எதனால். 

சிந்திப்பீர். 

5 comments:

SURYAJEEVA said...

மாற்று சிந்தனை அருமையாக இருந்தது.. இது அடி மனதில் இன்னும் நிறைய கேள்வி இருக்கு.. கொஞ்சம் பதில் தருவது போல் இருக்கிறது, என் மனைவியிடம் நான் சொல்லும் ஒரே பதில்... நீ வேலைக்கு போ ஆனால் வீட்டு வேலை எதையும் நீ செய்யக் கூடாது, அதுக்கு ஒரு ஆள் வச்சுக்க என்றேன்... பதினோரு வருஷமாய் இந்த வாதம் ஓடி கொண்டு தான் இருக்கிறது...

வவ்வால் said...

நல்ல சொன்னிங்க,

ஆனால் யதார்த்தம் என ஒன்று உலகத்தில இருக்கு அது ரொம்ப பயமுறுத்துது,

படிக்காத, அல்லது வேலைக்கு போகத பெண் என்றால் நல்ல வேலையில் இருக்கும் கணவன் கிடைப்பதில்லையே,அப்புறம் வரதட்சனை எல்லாம் ரொம்ப அதிகம் கேட்பாங்க. இது வேலைக்கு போற பெண் என்றால் தட்சணை குறையும், கூடவே மணமகனை தேர்வு செய்யவும் முடியுது.

இதே 10 அ 12 படிச்சுட்டு வீட்டுல இருக்க பொண்ணுக்கிட்டே பெற்றோரே சொல்வாங்க உனக்கு என்ன கலக்டர் மாப்பிள்ளையா வருவான், கழுத்த நீட்ட சொன்னா நீட்டுனு ஒரு ஆட்டோ ஓட்டுனர் போல ஒரு மணமகன் கிட்டே புடிச்சுக்கொடுப்பாங்க, இது ஆண்கள் உலகமய்யா!

மாற்றம் வர நாட்கள் ஆகும்.

G.M Balasubramaniam said...

வேலைக்குப் போவது என்றவுடன் படிதுப் பட்டம் பெற்று பணிக்குச் செல்பவர்கள் மட்டும்தான் கவனத்துக்கு வருகிறார்களா. ? கிராமங்களில் ஆணுக்குப் பெண் சரி நிகராகப் பணி எடுப்பது தெரிவதில்லையா.?கட்டிட வேலை துணி நெய்யும் வேலை என்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் காலங்காலமாகப் பணி செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

'வேலையில்லா திண்டாட்டம் குறையும்'

என் அம்மாவின் வாதம் இது. என்னுடைய எதிர் வாதம் பல வருடங்கள் தொடர்ந்தது.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜீவா.பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. சோம்பேறித்தனமாக, எரிச்சலாக இருந்தாலும் வீட்டு வேலைகள் பல நானே செய்துவிடுவேன். :)

மிக்க நன்றி வவ்வால். ஆண்களின் உலகம் சிறிது சிறிதாக மாறிக்கொண்டு வருகிறது.

மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதனால் தான் படிக்காத காலத்தில் காடு மேடு என ஒரு வாசகம் வைத்தேன்.

மிக்க நன்றி சகோதரி. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தாலும், வீட்டு பொருளாதாரம் நலிந்துவிடும்.

விளம்பரத்திற்கு நன்றி இணைய வேலை வாய்ப்பு.