Sunday, 30 October 2011

விவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா?

திருமணம் முடித்துவிட்டு சேர்ந்து வாழ முடியாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து அதுதான் சரியான முடிவு என வாழும் சக மனிதர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்துவிட்டு வேறு வழியின்றி அதுதான் சரியான முடிவு என சேர்ந்து வாழும் சக மனிதர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்ததன் அவசியம் புரிந்து வாழ்க்கையை மிகவும் மென்மையாக நேசித்து வாழும் சக மனிதர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 

இப்படி பூங்கா ஒன்றில் எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த அந்த வயதானவரைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரை பார்க்கின்றேன். அவர் எழுதி கொண்டிருந்ததை கண்டதும் எனக்குள் அவரிடம் பேச வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியது. எப்படி பேசுவது என்ற யோசனை எதுவும் எழுந்திடாமல் அவரது எழுத்துகளையே விசயமாக பேசினேன். 

'என்ன சார், எதுக்காக இப்படி எழுதிட்டு இருக்கீங்க?'

'என்னுடைய அனுமதி இல்லாம நான் எழுதுறதை படிக்கிறது உனக்கு அநாகரிகமா தெரியலையா?'

'சாரி சார், நீங்க எழுதினது சுவாரஸ்யமா இருந்துச்சி அதுதான் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருக்கவங்க படிக்கிற பேப்பரை எட்டி பார்க்கிறமாதிரி பாத்துட்டேன்' 

'உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?'

'என்னோட பர்சனல் விசயத்தை நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படறது உங்களுக்கு அநாகரிகமா தெரியலையா சார்?' 

'நான் சொன்னதையே நீ சொல்ற, சொல்லு எத்தனை வருசம் ஆச்சு?'

'ஆறு வருசம் ஆச்சுங்க சார், சில நேரத்துல எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கும்'

'ஏன் கல்யாண வாழ்க்கை புளிச்சி போச்சா?'

'இல்லைங்க சார், சில நேரங்களில் அப்படி தோணுறது சகஜம்தானே, எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ சுமைகள், நம்மளை விட ரொம்ப கஷ்டபடறவங்க இந்த உலகத்துல வாழ்ந்தாலும் நமக்கு வந்திருக்கிற பிரச்சினைதான் பெரிய பிரச்சினைன்னு தோணுமில்லையா சார்? எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நினைப்பு வருமில்லையா சார்'

'வேலை பார்க்கிறியா, குழந்தை இருக்கா'

'ஆமா சார், வேலை பார்க்கிறேன், ஒரு ஆணு, ஒரு பொண்ணுன்னு ரெண்டு குழந்தை இருக்காங்க, உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே சார் அதுவும் பொதுவா இப்படி எழுதுறத பத்தி'

'நான் ரிடையர்டு ஆயி ஒரு வருசம் ஆகுது. எனக்கு ஆறு குழந்தைங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. போன மாசம் தான் கடைசி பொண்ணு என் மருமகன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கனும்னு வந்து நிற்கிறா, கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை' 

'சாரி சார், உங்க மனைவி இருக்காங்களா சார்?' 

'ம்ம்... இருக்கா. ரொம்பவும் நொந்து போய் இருக்கா' 

'சார், தப்பா நினைக்கலைன்னா எதுக்கு உங்க பொண்ணு விவாகரத்து வாங்கனும்னு நினைக்கிறாங்க?'

'என்னோட மருமகன் நிறைய பொண்ணுகளோட பழக்கம் வைச்சிருக்காராம், இவகிட்ட அன்போட இருக்க மாட்டேங்கிறாராம், எப்பவும் சண்டை சச்சரவுதானாம், அதானால அவரோட வாழப் பிடிக்கலைன்னு வந்து நிற்கிறா'

அவரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது. 

'சார், பொதுவா பிரச்சினைனா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தானே சார், நீங்க எடுத்து சொன்னீங்களா, அதுவும் இத்தனை வருசம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி சொன்னீங்களா சார்' 

'நீ சொன்னியே, எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைப்பு வரும்னு. அந்த மாதிரி ஒரு நாலு கூட நான் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணின அடுத்த நிமிசமே அவதான் என் வாழ்க்கை, நான் தான் அவ வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். அதை என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப தெளிவாவே சொல்லிட்டேன், நாங்களும் அவகிட்ட ரொம்ப அன்பாவே சொல்லிப் பார்த்தோம் ஆனா ஒரு முடிவா இருக்கா, என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் தனியா இந்த பார்க்குக்கு வந்து போய்ட்டு இருக்கேன், எதாச்சும் முடிவு கிடைக்காதான்னு' 

'சார், நான் கூட என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிருவேன்னு பல தடவை மிரட்டி இருக்கேன், ஆனா பெத்த புள்ளைங்க, சுத்தி இருக்கற சமுதாயத்த பாத்து அந்த நினைப்பு செத்து போயிருக்கு சார், அதுபோல என் பொண்டாட்டியும் என்னை பல தடவை மிரட்டி இருக்கா. ஆனா இதுவரைக்கும் அப்படி ஒரு எல்லைக்கு போனதில்லை சார். அதுக்கு தைரியம் இல்லைன்னு இல்லை சார், அவசியமில்லைன்னு ரெண்டு பேருக்குமே தோணும் சார்' 

'அதுதான் ரெண்டாவது வாக்கியம். வேற வழியில்லைன்னு சேர்ந்து வாழறது. இப்படித்தான் ரொம்ப பேரு வாழறாங்க. வாழ்க்கையோட அடிப்படையை புரிஞ்சிக்க முடியாதவங்க. இவங்களை விட முதல் வாக்கியத்துல சொன்னவங்க எவ்வளோ மேல். வேற வழியில்லன்னு பிரிஞ்சி போயிருரவங்க. ஆனா இதனால பெருமளவு பாதிக்கப்படறது அவங்களோட குழந்தைங்க. நீ ரெண்டாம் வகை' 

'இல்ல சார், நான் மூன்றாம் வகை. என்னால பிரிஞ்சி போக முடியும் சார். அவளாலயும் பிரிஞ்சி போக முடியும் சார். ஆனா கல்யாணம் எதுக்கு பண்ணினோம் அப்படிங்கிறதை புரிஞ்சி வாழறோம் சார். கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கை ரொம்ப சிரமம் சார். ஒரே மொழி பேசத்தான் சார் ஆசை. சில நேரங்களில வாய்க்கிறது இல்லை, அதுக்காக மொத்த வாழ்க்கையும் தொலைக்க ஆசை இல்ல சார்'

'என் பொண்ணுக்கு இது புரியலையே, எல்லா பிள்ளைகளும் நல்லாத்தான் இருக்காங்க, இவ மட்டும் எதுக்கு இப்படி. மருமகன் கிட்ட பேசிட்டேன், அவர் விவாகரத்து பண்ண சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு, ஆனா இவதான் ஒரேயடியா வம்பா நிற்கிறா'

'சார், உங்க மருமகன் கிட்ட பிரச்சினை இருக்கு சார், அவரை  உங்க பொண்ணு விருப்பப்படி வாழ சொல்லுங்க சார், எல்லாம் சரியாப் போயிரும்' 

'நீ என்னப்பா சொல்ற'

'அனுபவத்தில சொல்றேன் சார். ரொம்ப ஈசி சார், விவாகரத்து பண்றது அவ்வளவு ஈசின்னா வாழறது கூட ரொம்ப ஈசி சார். புருஷன், பொண்டாட்டி இவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த கொம்பனும் உள்ள வரக்கூடாது சார். புருசனுக்கு பொண்டாட்டிதான் எல்லாம், பொண்டாட்டிக்கு புருஷன் தான் எல்லாம். ரொம்ப சிம்பிளான பார்முலா சார். இந்த அடிப்படை விசயம் எங்க கால வேகத்துல அடிப்பட்டு போகுது சார். அதுதான் எனக்கு கூட சில நேரத்தில எதுக்குடா கல்யாணம்னு தோணும் சார்'

'புரியலை, இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எல்லாம் படிச்சவங்கதான. ஆனா இந்த காலத்துல விவாகரத்து பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்களே. அது பிடிக்கலை, இது பிடிக்கலைன்னு காரணம் சொல்லி பிரிஞ்சி போறவங்களை பார்த்து வருத்தம் மட்டுமே மிஞ்சுது. அதுதான் முத வாக்கியம்'  

'வாழ்க்கைய வாழற பொறுமை இல்லை சார் எங்களுக்கு, அந்த பொறுமை தொலையறப்போ, சகிப்பு தன்மை அழியறப்போ எதுவுமே கண்ணுக்கு தெரியறது இல்லை சார். விவாகரத்து பண்றவங்க மன வலியோட தான் பண்ணிகிறாங்க, யாரும் விருப்பபட்டு செய்றது இல்லை சார். அது அத்தனை ஈசியான விசயம் இல்லை சார், உங்க பொண்ணுகிட்ட பேசலாமா சார்' 

'ம்ம்' 

வாழ்க்கையில் எதற்கு விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாதது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி எனவும் சொல்லி முடிக்கிறார்கள். சிலர் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது இல்லை. வறட்டு பிடிவாதம் பிடிக்கிறார்கள். விட்டு கொடுத்து போவது என்பது கடினமாகிப் போகிறது. ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு வலி. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. 

அந்த வயதானவருடன் சென்றேன். அவரின் மகளைப் பார்த்தேன். திருக்குறளை சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சினையோ, அதையெல்லாம் மனம் விட்டு பேசுவாளா என சந்தேகத்துடன் அவளிடம் பேசினேன். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என நான் ஆரம்பிக்கும்போதே அவள் 'இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என முடித்தாள். 

'இங்க பாருங்க, கல்யாணம் பண்றது சேர்ந்து வாழத்தான், எந்த பிரச்சினைனாலும் பேசி தீர்த்துக்கோங்க, எதுக்கு இப்படி அடம் பிடிகிறீங்க' 

அவளிடம் நிறைய பேசினேன். அவளும் புரிந்து கொண்டவளாய் தலையாட்டினாள். 

'நீங்க உங்க கணவர் கிட்ட நிறைய பேசுங்க. என்கிட்டே சொன்னது போல அவர் கிட்டயும் மனசு விட்டு பேசுங்க. அவர் புரிஞ்சிக்கிரனும்னு எதிர்பார்க்காதீங்க, இப்படியெல்லாம் சொல்லணும், அப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்காதீங்க. புதுசா வாழ்க்கைய தொடங்குங்க' 

எனது பேச்சை அவள் கேட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வயதானவர் மிகவம் சந்தோசம் கொண்டார். அவர்களிடம் விடைபெற்ற மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். 

'இன்னைக்கு ஒரு பொண்ணு விவாகரத்து பண்ண போறதை நிறுத்திட்டேன் தெரியுமா'

'யாரு அது, உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. கண்ட கண்ட பொண்ணுகளோட பழகாதீங்கனு. பேசமா அவளோட போய் தொலைய வேண்டியதுதானே'

சே, இவளை போய் கட்டிகிட்டோமேன்னு மனசு கிடந்து அலை பாயத் தொடங்கியது. விவாகரத்து என்பது அத்தனை எளிதா என்ன?