Friday, 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது. 


7 comments:

இராஜராஜேஸ்வரி said...

சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

வவ்வால் said...

//கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது//

i asked the same question to one blogger ,he not even published my comment!he rates himself as popular blogger so he will release comments if he likes it!

Unknown said...

இப்படி ஓவராய் பில்ட் அப் பண்ணும்போதே தெரியும். ஊத்திக்கபோதுண்ணு. இப்ப சரியாய்ப் போச்சு.

Unknown said...

ஏசு நாதர் கூடத்தான் இந்தியாவுக்கு வந்து கற்றுக் கொண்டு போய் அங்கே சொல்லிக் கொடுத்தது பெரிய மதமாய் ஆயிருச்சு. பஞ்சாங்கத்தை சரியாய் கற்றுக் கொள்ள முடியாததால முஹமது நபி சந்திரன் தெரியும் மூன்றாம் பிறையை முதல் நாளாய் வைத்து ஒரு காலண்டரை உண்டாக்கினார். (அவர் அப்பா,தாத்தா எல்லாம் மகேஷ்வர் கோவிலில் குருக்கள்தான்). இந்த இரண்டு செய்தியுமே நெட்டில் கிடைத்ததுதான். இந்தியாவின் மதம்தான் எல்லா மதங்களுக்குமே தாய் என்பதுதான் உண்மை.

Radhakrishnan said...

மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி

Radhakrishnan said...

//i asked the same question to one blogger ,he not even published my comment!he rates himself as popular blogger so he will release comments if he likes it!//

சில நேரங்களில் கருத்துகள் படித்து வெளியிட கால தாமதமாகலாம். தாங்கள் குறிப்பிட்டது போல தனக்கு பிடித்த ஒன்றை மட்டும் வெளியிடுபவர்களாக இருக்கலாம். இது அவரவர் வீடு அல்லவா. யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்க கூடாது என்பது அவர்களின் விருப்பம். எழுதுபவர்களின் கருத்தை எல்லாம் படித்து பார்க்காமல் வெளியிடும் என்னை எச்சரித்தவர்கள் உண்டு. பிறரின் கருத்துகளின் மூலம் பல விசயங்கள் கற்று கொள்ளலாம் என்பது எனது எண்ணம். சில நேரங்களில் இந்த வாய்ப்பை தவறாக உபயோகப்படுத்துபவர்களால் பிரச்சினைகள் வருவது உண்டு. எனவே நீங்கள் உங்கள் கேள்வியை சற்று வித்தியாசமாக கேட்டு மீண்டும் அனுப்பி பாருங்கள். பதில் கிடைக்கலாம். நன்றி.

போதி தர்மரிடம் கற்று கொண்ட அனைத்து சீனர்களுக்கும் போதி தர்மரின் மரபணுக்கள் போலவே இருந்தன என கதையும் சொல்லி இருக்கலாம். வில்லனாக வந்த சீனருக்கும் போதி தர்மரின் மரபணுக்கள் இருந்தது என கதை கட்டி இருக்கலாம். ஜூராசிக் பார்க் திரைப்படம் எடுத்தவர்கள் மக்களை முட்டாளாக்க வேண்டும் என எடுக்கவில்லை. ஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு நூலின் பிரதிபலிப்பு. வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமாக சொல்லப்பட வேண்டும். அறுபத்தி நான்காம் மொழி எனும் எனது சிறுகதை மக்களை முட்டாளாக்க வேண்டும் என எழுதவில்லை. மிங்கி மிங்கி பா எனது நண்பர்களுக்கு பிடித்துதான் இருந்தது.

Radhakrishnan said...

விளம்பர படுத்துதல் மிகவும் அவசியம் ஆகிறது. குப்பையை கோபுரமாக்கும் தன்மை இந்த விளம்பர யுத்திக்கு உண்டு. இந்த படம் பற்றிய பேச்சு அதிகம் எழாமல் இருந்து இருந்தால் பலரும் இத்தனை எதிர்பார்ப்புகளோடு இருக்க மாட்டார்கள். இது அறிவியல் உலகில் உண்டு. அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என ஆரம்ப நிலையில் ஆய்வு இருக்கும்போதே விளம்பரம் செய்வது, அதன் மூலம் பணம் ஈட்டலாம் என்பதுதான் குறிக்கோள். எனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதை தக்க வைத்து கொள்ளாதபோது பெரும் ஏமாற்றம் மட்டுமே நிகழும். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது.

ஆம், ஒப்புக்கொள்ள வேண்டிய விசயம் தான். இந்து மதத்தை தோற்றுவித்தது யார் என்பது கூட தெரியாது. மனிதர்களுடன் உடன் வந்த மதம் இந்த மதம் இந்து மதம். நெட்டில் கிடைக்கும் பல செய்திகள் ஆதாரமற்றவையாக இருக்க கூடும்.

நன்றி அசோகா