சனிக்கிழமை காலையில் எழுந்து தனது மிதி வண்டியில் வெகுவேகமாக தன்னிடம் இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், மனோகரின் வீட்டிற்குப் போனான். வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனோகரின் செல்பேசிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து அழைப்பு விடுத்துப் பார்த்தான். செல்பேசியின் அழைப்பு சத்தம் மறுமுனையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும் எவரும் எடுத்து பேசவில்லை. கையில் வைத்திருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவாறே நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.
மீண்டும் செல்பேசியில் மனோகரை தொடர்பு கொண்டான் ரமேஷ். மனோகர் செல்பேசியை எடுத்தான்.
'டேய் மனோகர், எங்க இருக்க? சீக்கிரமா வீட்டுக்கு வரியா, நான் உன் வீட்டு பக்கத்துலதான் இருக்கேன்'
'என்னடா அவசரம், இப்பதான் கடைக்கு சாப்பிட வந்தேன்'
'எந்த கடையில இருக்க'
'விஷ்ணு ஹோட்டல், மேலப்புதூர்.
'ஏண்டா, இங்க இருக்கறது எல்லாம் கடையா தெரியலையா, அங்க சாப்பிட போகனுமா?'
'நீயும் வாடா, உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்றேன்'
'சரி பூரியும், பொங்கலும் சொல்லு'
ரமேஷ் விஷ்ணு ஹோட்டல் சென்று அடையும் போது ஹோட்டலின் வெளியில் மனோகர் காத்துக் கொண்டிருந்தான்.
'என்னடா ஆர்டர் பண்ணலையா?'
'ஆறிப்போகும்னு ஆர்டர் பண்ணலை, என்ன என்னை தேடி வந்திருக்க என்ன விசயம்?'
'சொல்றேன், சாப்பிடலாமா?' ஹோட்டலைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் எனும் வேகம் ரமேஷிடம் அதிகமாகவே இருந்தது.
'சரி வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'
விஷ்ணு ஹோட்டல் மிகவும் பளிச்சென இருந்தது. இங்கே அசைவம், சைவம் பரிமாறப்படும். இந்த ஹோட்டலுக்கு மனோகர் அவ்வப்போது வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ரமேஷ் ஹோட்டலை வெளிப்புறம் மட்டுமே பார்த்து சென்று இருக்கிறான். அருகில் ஒரு அருமையான மைதானம் இருக்கிறது, அங்கே சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.
ஹோட்டலுக்குள் நுழைந்ததும் ஒரு ஓரமாக இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தான் மனோகர்.
'உட்காருடா, இதுதான் நான் வந்தா எப்பவும் உட்காருற இடம், அதுவும் காலியா இருந்தா'
ரமேஷ் மனோகருக்கு எதிராக அமர்ந்தான். அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடம் என்ன சாப்பிட வேண்டும் என பணியாளர் வந்து நின்றார். ஒவ்வொன்றாக சொல்லி அவரை அனுப்பினான் மனோகர்.
'இன்னைக்கோட உன்னோட பழகி ஆறு மாசம் ஆகப்போகுதுடா மனோகர், இந்த மதுரைக்கு வந்து இறங்கின மறு நிமிஷம் பணத்தை தொலைச்சி நின்னப்ப, யாரு என்ன அப்படினு விசாரிக்காம பணம் கொடுத்து உன்னோட செல்பேசி, அட்ரஸ் எல்லாம் கொடுத்து பழகினதை இன்னும் மறக்கமுடியலை, அந்த ஐநூறு ரூபாய நிச்சயம் திருப்பி கொடுத்துருறேன்'
'நானே இந்த ஊருக்கு வந்து ஒன்றரை வருஷம்தான் ஆகுது, ஏண்டா பாக்கறப்ப எல்லாம் இதைப் பேசி என்ன பெரிய தியாகி லெவலுக்கு கொண்டு போற, அந்த பணத்தை விடுடா, நீ என்னைய பாக்க வந்த காரணத்தை சொல்லு'
'இந்தாடா இந்த புகைப்படத்தைப் பாரு'
'அட, ரொம்ப நல்லா இருக்கே, யாருடா அந்த படத்துல, நீயா?'
'இல்லைடா, இந்த படத்தில இருக்கறதை வைச்சி கதை எழுதனுமாம், எழுதி தருவியா?'
'இதுக்குத்தான் இந்த காலையிலே என்னை தேடி வந்தியா'
'டேய் எழுதிக் கொடுடா, முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்டா'
பணியாளர் தண்ணீர் கொண்டு வைத்து போனார்.
'இந்த படத்தைப் பாக்கறப்ப யாரோ ஒருத்தனை அவனுக்கே தெரியாம படம் எடுத்து இருக்காங்கடா'
'டேய் மனோகர், இது கதை எழுதுரதுக்காக எடுத்த படம்டா'
'இருக்கட்டும்டா, ஆனா இந்த படத்துல இருக்கற விசயம் சிலிர்ப்பா இருக்குடா, கவலை வேண்டாம் அப்படினு எப்பவும் உபயோகிப்பான் போலடா அந்த ஆளு'
'ஒரு கிரைம் கதை எழுதுடா, அதுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு அப்படினும், Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவ விஷ்ணு அப்படினு போட்டுருக்குலடா'
அப்பொழுது பணியாளர் பூரி, இட்லி பொங்கல் என கொண்டு வந்து வைத்துப் போனார்.
'சரி எழுதி தரேன், சாப்பிடு'.
ரமேஷ் இரட்டிப்பு சந்தோசத்துடன் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு கடையில் பணத்தை கட்ட சென்றபோது கல்லாவில் இருந்த முதலாளி அதுக்கென்ன இப்போ கவலை வேண்டாம் என முன்னால் பணம் கட்டியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
'இந்த படத்துக்கு நீ கதை எழுதி கொடுத்து முத பரிசு எனக்கு கிடைச்சா, ஊருக்கு அனுப்பி வைச்சிருவேண்டா' என்றான் ரமேஷ்.
'சரிடா, கவலைய விடு' என்றவன்
'விஷ்ணு ஹோட்டல் அப்படின்னு பேரு வைச்சிருக்கீங்க, என்ன காரணம் சார்' என ஹோட்டல் முதலாளியிடம் கேட்டான் மனோகர்.
'என் பேரைத்தான் வைச்சிருக்கேன், அதைப்பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்' என்றார் ஹோட்டலின் முதலாளி.
'இந்தப் படத்தை பாருங்க' என்றான் மனோகர்.
'இந்தப் படம் எங்க கிடைச்சது, நீங்க யாரு' என்றார் ஹோட்டல் முதலாளி.
'நாங்க சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலைப் பாக்கறம். இண்டர்நெட்டுல இருக்கிற இந்தப் படத்தை வைச்சி ஒரு கதை எழுதணுமாம்' என்றான் மனோகர்.
'முத்து வந்து கல்லாவைப் பாத்துக்கோடா, யாராச்சும் வந்தா நான் வெளிய போயிருக்கேன்னு சொல்லு ' என்றவர்
'நீங்க ரெண்டு பெரும் என்னோட வாங்க' என ஹோட்டலில் மேலிருந்த மாடிக்கு அவர்களை அழைத்து சென்றார், ஹோட்டல் முதலாளி விஷ்ணுவரதன். கணினியை இயக்கினார்.
'இது ஒரு எழவு, ரொம்ப மெதுவாத்தான் திறக்கும், அந்த எஸ் பி கோகுல் எப்போ வருவானோ, சிக்கலுல மாட்டிகிட்டேனே'
'என்ன சார் சிக்கலு, சொல்லுங்க'
'இரண்டு வருஷம் முன்னாடிதான் இந்த ஹோட்டலை எஸ் பி கோகுல்கிட்ட நான் வாங்கினேன்.'
'எந்த ஊரு எஸ் பி சார்?
'அவன் எஸ் பி இல்லை, அவன் பேரு எஸ் பி கோகுல், சாத்தூர் பாலசுப்ரமணி கோகுல் அதைத்தான் அவன் சுருக்கி எஸ் பி கோகுல் அப்படினு வைச்சிகிட்டேனு சொல்வான், அதைப்பத்தி இப்போ கவலை வேண்டாம்'
கணினி திறந்தது. மின்னஞ்சல் பக்கத்துக்கு சென்றார்.
'அப்பாடா, குறியீடு பத்தி ஒன்னும் பதில் காணோம்'
'ஒன்னும் புரியலையே சார், என்ன சார் குறியீடு?'
'நீங்க பாத்த இண்டர்நெட்டு பக்கத்தை காட்டுங்க, படத்தை யார் எடுத்தது, எங்க எடுத்தது எல்லாம் தெரியணும், இந்த படத்தை நீக்க சொல்லணும்'
'சார் மொத்த விபரமும் சொன்னா நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்' என்றான் மனோகர்.
'என்கிட்டே கடைய வித்துட்டுப் போன எஸ் பி கோகுல் அப்போ அப்போ இந்த கடைக்கு வருவான். ஆறு மாசமா தல்லாகுளம் குமாரோட சேர்ந்து தங்கம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். வர கஷ்டமர்கிட்ட பேசி கலப்பட தங்கம் வித்துருவேன் நாக்கு குழருது என எச்சில் விழுங்கியவராய் கலக்கலா ரொம்ப தங்கம் வித்துருவேன். இதனால குமாருக்கு என் மேல மரியாதை. ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் ஒரு குறியீடு கொடுப்பேன், அதை சொன்னாத்தான் குமார் நல்ல தங்கம் முக்கால்வாசி விலைக்குத் தருவான்' இதை தெரிஞ்ச இந்த எஸ் பி கோகுல் போன வாரம் தங்கம் வேணும்னு கேட்டான். நான் சரினு சொன்னேன், ஆனா எனக்கு இந்த எஸ் பி கோகுல் கொஞ்சம் கூட பிடிக்காது.
நேத்துதான் நான் எஸ் பி கோகுலுக்கு, Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவலை வேண்டாம் அப்படினு அனுப்புனேன். அதை அப்படியே குமாருக்கும் அனுப்பிட்டு, அடுத்த மெயிலுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் அப்படினு அனுப்பிட்டு குமாருக்கு போன் போட்டேன். அவன் 'விஷ்ணு இன்பார்மர்' அப்படினுதான் என் பேரை அவன் மொபைலுல போட்டுருப்பான்.
இந்த இரண்டு விசயத்தையும் அவன் பாத்துட்டு இருந்தப்பதான் யாரோ அவனை படம் எடுத்து இப்படி செஞ்சி இருக்காங்க. இப்ப காட்டுங்க எங்க அந்த பக்கம்'.
'ரமேஷ் காட்டுடா'
ரமேஷ் இணையம் திறந்தான். 'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க சார், எல்லாத்தையும் அழிச்சிரலாம்' என்றான் மனோகர்.
'எதுக்கு அவ்வளவு பணம்?'
'தாங்க, இல்லைன்னா பிரச்சினை பெரிசாயிரும், சார் பாலாவை எனக்கு தெரியும், அவன்தான் இந்த இணையதள உரிமையாளர், இருங்க கூப்பிடுறேன் என செல்பேசியில் அழைத்தான் மனோகர். பாலா அப்பொழுதே வருவதாக சொன்னான்.
விஷ்ணுவரதன் பணத்தை எண்ணி கொடுத்தார். பின்னர் மூவரும் கீழே வந்தார்கள்.
இவர்கள் கீழே வருவதற்கும் பாலா அங்கே நிற்பதற்கும் சரியாக இருந்தது.
'ஐ ஆம் எஸ் பி கோகுல், சாரி ஐ ஆம் எம் எல் பாலா' என கையை நீட்டினான். விஷ்ணுவரதன் 'நான் தான் விஷ்ணு' என கையை நீட்டினார்.
மனோகர் எல்லா விபரங்களும் சுருக்கமாக சொன்னான். 'கவலை வேண்டாம் சார், எல்லாத்தையும் அழிச்சிருவோம்' என விஷ்ணுவரதன் முன்னரே அனைத்தையும் அழித்தான் பாலா.
பின்னர் வெளியில் வந்தார்கள்.
'எப்படிடா அந்த படம் உனக்கு கிடைச்சது' என்றான் மனோகர்.
'எல்லாம் தல்லாகுளம் குமாரும், எஸ் பி கோகுலும் நானும் சேர்ந்து செஞ்சதுடா. இந்த விஷ்ணு ரொம்ப மோசமானவன், இவனால குமாருக்கு ரொம்ப கெட்ட பேரு. இவனாலதான் இந்த ஹோட்டலையே விற்கிற நிலைமைக்கு எஸ் பி கோகுலு போனான். இவனை எப்படி பிஸினஸ்ல இருந்து கழட்டி விடலாம்னு யோசனை பண்ணினப்ப நாங்க சேர்ந்து தீட்டின திட்டம் இது. நல்லாவே வொர்க் அவுட் ஆயிருச்சி. இனி குமார் மத்ததைப் பார்த்துப்பான்' என்றான் பாலா.
'படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி?' என்றான் ரமேஷ்.
'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.
'இந்தாடா ரமேஷ், பத்தாயிரம் வைச்சிக்கோ, கதை எழுதாமலேயே உனக்கு பரிசு கிடைச்சிருச்சி' என்றான் மனோகர்.
அருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 'சரியான போங்காட்டம்டா' என மற்ற சிறுவர்களை நோக்கி சத்தம் போட்டு கொண்டிருந்தான்.
5 comments:
சரியான போங்காட்டம்டா..
என்னோட சரியான ஆட்டம் இங்க வந்து பாத்துட்டுப் போங்க..
என்னோட சரியான ஆட்டம் here http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html
மிக்க நன்றி மாதவன்.
((படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி?' என்றான் ரமேஷ்.
'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.)))
சிரிக்க வைத்துவிட்டீர்கள்
கதைக்கேற்ற தலைப்பு,நல்லாருக்கு!
மிக்க நன்றி. கதையின் நெடியை புரிந்து கொண்டமைக்கு மீண்டும் நன்றி. :)
Post a Comment