ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாத ஒரு உலகத்தை
உண்டாக்குவது என்பது வெறும் கனவு. அரசனும் ஆண்டியாவான், ஆண்டியும் அரசனாவான் என்பது
கேட்பதற்கு மிகவும் நன்றாகவே இருக்கும். பணத்தின் அடிப்படையில் இயங்கும் உலகத்தில்
பணத்தை பெருக்கி கொள்ள தெரிந்தவரே மிகவும் புத்திசாலி என்கிறார்கள். கண்ணாடியானது
கல்லை உடைக்கும் தந்திரம் பணத்திடம் உண்டு.
இந்த பணத்தின் பெரு மதிப்பு என்பது ‘காசேதான்
கடவுளடா’ என ஒரு இரு வார்த்தைகளில் அடக்கி விடலாம். இந்த காசு பற்றிய
சிந்தனையும், காசு பற்றிய எண்ணங்களும் மட்டுமே முதன்மை வகித்து வருகிறது. பணத்தை கொண்டு
எதையும் வாங்கலாம், ஆனால் சில விசயங்களை வாங்க இயலாது என சொன்னாலும், பணத்தின்
முக்கியத்துவம் அறியாதவர்கள் துறவற வாழ்க்கைக்கு செல்வது சிறந்தது என்கிற பகட்டான
வாழ்க்கை அத்தியாவசிய வாழ்க்கையாகி இன்று நிற்கிறது.
கடன் பட்டோர் நெஞ்சம் போல் கலங்கினான்
என்பது அன்றைய வாக்கு. கடன் கொடுத்தோர் நெஞ்சம் கலங்குகிறது அது இன்றைய வாக்கு.
கேட்பவர்களுக்கு, கேட்காதவர்களுக்கு என இந்தா பணம் வந்து வாங்கி கொள், நன்றாக
செலவழி என சொன்ன வங்கிகள் முதற்கொண்டு தனிப்பட்ட நபர்கள் வரை இந்த பொருளாதார
சரிவுக்கு முதல் புள்ளி வைத்தவர்கள்.
வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற போக்கில்
உலகத்தில் கடன் வாங்காத நாடே இல்லை எனலாம். எல்லா நாடுகளும் இந்த கடன் தொல்லையால்
கண் விழி பிதுங்கி நிற்கிறது. எப்படி செலவினை குறைப்பது என்பது ஒவ்வொரு நாட்டிற்கும்
திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு நாட்டின் கடன், அந்த நாட்டின் குடிமகன் பட்ட கடன்
என்கிற நிலை தான். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் இந்த கடன் தொல்லையால்
தவிப்பது தவிர்க்க இயலாமல் ஆகிவிடுகிறது.
இதெற்கெல்லாம் என்ன காரணம், பொருளாதார
கட்டமைப்பு சரிவர இல்லாமல் இருப்பதே. ஒரு பொருள் விற்பதை பொறுத்தே அந்த பொருளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது, அல்லது அந்த பொருளின் தேவையை பொருத்து, இருப்பை
பொருத்து எனவும் கொள்ளலாம். இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது. பணம் பற்றாகுறை
ஏற்படும்போது ஒரு அரசு பணம் பற்றாகுறையை போக்க பணம் அச்சடித்து வெளியில் விடலாம்,
அப்படி செய்யும்போது அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.
ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்,
வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன. வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அது
முழுக்க முழுக்க மக்களின் பணம். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க முடியாத
பட்சத்தில் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என வைக்கிறார்கள். இந்த மக்களின்
பணத்தை வங்கிகள் பிற பொருள்களின் மீது செலுத்தியோ முதலீடு செய்தோ அதன் மூலம் லாபம்
பார்க்கின்றன. மிக குறைந்த அளவே இந்த வங்கிகள் தரும் பணம் மக்களுக்கு பெரிதாக
தெரியலாம் அதனால் ஏற்படும் இழப்புகளையும் இந்த மக்களே தாங்கி கொள்ள வேண்டும் எனும்
போதுதான் நாட்டின் பொருளாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மிக முக்கியமானது போட்டியாளர்களின்
நம்பகத்தன்மை. வியாபார உலகத்தை எப்பொழுது அடியோடு ஒழித்துக் கட்ட நாம் செயல்பட
முயல்கிறோமோ அப்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர் பெறும். இத்தனை காலமாக
பொருளாதார சீர்கேட்டில்தான் எல்லா நாடுகளும் இருந்தன. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு
இருந்தன. கிட்டத்தட்ட இதே பொருளாதார சரிவு எண்பது வருடங்கள் முன்னர் ஏற்பட்டது எனவும்,
இருபது வருடங்கள் முன்னால் ஏற்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கடன் பட்ட நாடுகள்
என்றுதான் இருந்து வந்தது.
எனது நிலத்தில் விளைந்த தக்காளியும்,
மற்றொருவர் நிலத்தில் விளைந்த தக்காளியும் ஒரே விலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தில்
உருவாகும் வாகனமும், மற்றொரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும் விலை வெவ்வேறு.
இதுபோன்ற போட்டியாளர்களின் செயல்பாட்டினால் பொருளாதாரம் சீர் குலைகிறது.
இந்த விசயத்தை மிகவும் எளிதாக சொல்லிவிட
இயலாது. எப்படி குவாண்டம் மெக்கானிக்ஸ் இயற்பியலில் பெரிதாக பேசப்படுகிறதோ, எப்படி
இந்த பூமியில் மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த விசயங்கள்
விவாதிக்கப்படுகின்றனவோ அது போல இந்த பொருளாதாரம் குறித்த விசயங்கள் பல
நிபுணர்களால் அலசி ஆராயப்படுகிறது.
குவாண்டம் கொள்கையும், உயிர் தோன்றியது
எவ்வாறு என்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த பொருளாதாரம் அத்தனை கடினமானதா?
இந்த பொருளாதாரம் குறித்த முழு சிந்தனையும்
அலசுவோம், வாருங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது
யார், எது?
No comments:
Post a Comment