Wednesday, 31 August 2011

அஹம் பிரம்மாஸ்மி அப்படின்னா

எதற்கு ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதற்கான பரிசோதனை ஒன்றை நடத்திப் பார்த்தோமானால் அது நமது எண்ணங்களினால் கட்டப்பட்ட ஒரு விசயம் என ஒதுக்கிவிட இயலவில்லை. அதனையும் தாண்டிய ஒரு உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்கும், அது என்னவென விளக்கவும் இயலாது. அதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு நமது முயற்சியில் வெற்றி கிடைத்தால் இந்த 'அஹம் பிரம்மாஸ்மி' வந்து அங்கே நிற்கும்.

ஒரு மனிதன் பிறந்த பின்னர் கடவுளை உணர்கிறாரா? அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா? அல்லது அந்த மனிதன் இறந்த பின்னரும் கடவுளை உணர்ந்து கொண்டிருக்கிறாரா? 

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கேள்விகளை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கடவுளை உணர்வதாகத்தான் பலரும் அறிவார்கள், பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் சொல்லானது இந்த மூன்று கேள்விக்கு பதிலாக அனைத்து நிலைகளிலும் கடவுள் உணரப்பட்டு கொண்டேதான் இருக்கிறார் என்பதாகும். 'உணர்வற்ற நிலையிலும் உன்னை உணர்வதற்கு நிகரேது' இதுதான் ஒரு கவிதையில் கடவுள் குறித்தான சிந்தனை எனக்குள் எழுந்தது. 

இதைத்தான் மாணிக்கவாசகர் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இவ்வுலகம் என்பது உயிரினங்களுடன், உயிரற்ற பொருள்களினாலும் ஆனது. ஒரு உயிர் எப்படி படைக்கப்பட்டு இருக்கும், அல்லது உருவாகி இருக்கும் எனப் பார்த்தால் நிச்சயம் உயிரற்ற பொருள் ஒன்றில் தான் இந்த உயிர் இருந்து இருக்க வேண்டும் என இந்த ஒரு விசயத்தை தெளிவுப்படுத்திக் கொண்டோமானால் 'அஹம் பிரம்மாஸ்மி' மிகவும் தெளிவாகும். 

'தோன்றாப் பெருமையனே' என கடவுளை விளிக்கும் பொருட்டு இவ்வுலகில் கடவுள் தோன்றவே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேளையில், 'தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்' எனும் வாசகமானது கடவுள் தோன்றவில்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், அதே வேளையில் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அந்த தெளிவு கொண்டுவருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

'அஹம் பிரம்மாஸ்மி' ஒருவர் தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் விதம்தனை அகந்தை என கொள்வோர் உண்டு. காரணம் கடவுள் என்பதற்கான விளக்க நிலைகள் வெவ்வேறு. ஒரு மனிதர் கடவுள் ஆக இயலாது, ஆனால் கடவுள் மனிதரில் இருப்பது என்பதை மாற்ற இயலாதது. இந்த ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் அதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

மேலே எழுதிய பல விசயங்கள் தெளிவு தருவது போல் இருக்கும், ஆனால் சில தினங்களில் அந்த தெளிவு தொலைந்து போகும், இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சூட்சுமம். 'தெளிந்த பின், தெளிந்ததில் தெளிவில்லை என திரும்புவானோ' இந்த வாசகம் ஒரு கதையில் நான் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்தது. இது எல்லாருக்கும் பொருந்தி போகக்கூடும்!

ஒரு எழுத்தாளர் எப்பொழுது வெற்றி பெறுகிறார் என்றால் வாசிக்கும் வாசகர் தன்னை அந்த எழுத்தில் தன்னை வைத்து பார்க்கும்போதுதான் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த நிலையானது ஒரு இருள் நிலை தான். ஆனால் வாசகர் தனது மனதில் அந்த அந்த சூழலாகவோ, கதாபாத்திரமாகவோ மாறுகிறார். இங்கே வருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' . வாசகர் நிச்சயமாக அந்த கதாபாத்திரமாக மாற இயலாது, ஆனால் அந்த கதாபாத்திரம் அந்த வாசகரில் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கலாம் என்பதுதான் தெளிவு. 

'அஹம் பிரம்மாஸ்மி' இதனை 'நானே கடவுள்' என அர்த்தப்படுத்துவதை விட 'என்னிலும் கடவுள் இருக்கிறார்' என்பதுதான் சரியாக இருக்கும். 

'நானே கதாபாத்திரம்' என ஒரு எழுத்தில் நம்மைப் பார்ப்பதைவிட 'இந்த கதாபாத்திரமும் என்னில் இருக்கிறது' என்பது மிகச் சரியாக இருக்கும்.

'அஹம் பிரம்மாஸ்மி'

1 comment:

Radhakrishnan said...

மிக்க நன்றி பத்மபதன்