Friday, 13 May 2011

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அரசியல் பண்ண வேண்டிய இடத்தில் அரசியல் பண்ணாமல் வேறு  பல இடங்களில் அரசியல் பண்ணுவது நமது வாடிக்கை.

வீட்டில் இருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது. 'நாக்கில்லாத நரம்பு எப்படின்னாலும் பேசும்' என்பது உலகம் அறிந்த உண்மைதான். 

'சீ சீ இந்த பழம் புளிக்கும்' எனும் கதையாய் பல நேரங்களில் நிகழ்வது தவிர்க்க இயலாதது. 

அ தி மு க எனும் கட்சியும் இரட்டை இலை எனும் சின்னமும், தி மு க கட்சியும், உதயசூரியன் எனும் சின்னமும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டிருக்கலாம். நகரங்களில் பல மாற்றங்கள் வந்த பிறகும் அதே கட்சி, அதே சின்னம், அதே 'இல்லாத கொள்கைகள்' என இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதும் ஏதாவது ஊழல் வெளித் தெரிவதும் என இந்த கட்சிகளின் செயல்பாடுகள் மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இல்லை. 

அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என வாய் சவுடால் விடாமல் மக்களின் குறை தீர்க்கும் அரசு என்பது வெறும் கனவு. 

அமெரிக்காவின் ஒபாமா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். பொய்த்து போனது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு அரசு செய்வதை விட மக்கள் நினைத்தால் செய்யலாம் என்பதுதான் அமெரிக்காவில் நடக்கும் தேர்தலும் சரி, தமிழகத்தில் நடக்கும் தேர்தலும் சரி காட்டுகின்றன. 

எனவே இந்த அரசு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட மக்களை எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட விட வேண்டும் என்பதில் தான் இந்த அரசின் வெற்றி உள்ளது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே பெரிதும் மாற்றம் ஏற்படுத்த முடியும். மக்களின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் அரசு என்பதெல்லாம் நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் கூட  சாத்தியம் இல்லை. 

அதே குண்டும் குழியும் நிறைந்து கிடக்கும் சாலைகள். எந்த ஒரு வசதிகளும் இல்லாத பள்ளிகள், ஊழல் நிறைந்த மனிதர்கள், வியாபாரிகள் என இவர்கள், இவைகள் எல்லாம் ஒரு அரசு மாறுவதால் மாறுவதில்லை. மனிதர்கள் மாறினால் மட்டுமே மாறும்.

அந்த பெரும் மாற்றத்தினை முதலில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா அவர்கள் தனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறாரா என்பதுதான் இன்று முதன்மை கேள்வி. 

இந்த வெற்றியின் உற்சாகத்தில் பேசும் பேச்சுகள் அடுத்த நொடிகளில் மறந்து போகும். மக்கள் மீண்டும் மறக்கப்படுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். 

ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் எனும் கனவு எந்த முதல்வருக்கும் இருந்தததில்லை, இருப்பதும் இல்லை. 

சிறு வயதில் இந்த கட்சிக்கு கொடி தூக்கிய காலம், தொண்ணூறுகளில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெரும் என கணித்தபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் தொலைந்த காலம். அ தி மு க ஏனோ மனதில் இருந்து கொண்டிருக்கிறது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல். 

வாழ்த்துகள் அ தி மு க தலைமைக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும். 

ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எவர் சோதிடம் பார்ப்பது இனி? ஒரே சாலையில் பயணித்து பழக்கப்பட்டுத்தான் போனோம். வழியில் பார்க்கும் மனிதர்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கிறார்கள் ஒரே குணத்துடன். 




No comments: