Friday, 10 December 2010

வதந்திகள்

சத்தமாகவே அவர் சொன்னார்.

மிக முக்கியமான பதவியில் இருக்கும் எண்பது வயதான ஒருவர் தான் மென்மேலும் நீண்ட காலம் வாழ வேண்டுமென சமீபத்தில்ஒரு இளம் பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக

சத்தமாகவே அவர் சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு அங்கே குழுமியிருந்த கூட்டத்தினர் 'யார் உங்களுக்கு சொன்னது' என ஒரு சேர கேட்டார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு இந்த ரகசிய விசயம் எல்லாம் தெரியும், ஆனால் யார் இந்த விசயத்தை முதலில் வெளியே சொல்வது என திணறி கொண்டிருக்கிறார்கள் என மீண்டும்

சத்தமாகவே அவர் சொன்னார்.

இவர் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது என புரியாமல் கூட்டத்தினர் விழித்தார்கள்.

எதற்கு இப்படி வதந்தி கிளப்புகிறீர்கள்? இதன் மூலம் நீங்கள் அடைய போகும் லாபம் என்ன என கேட்டு வைக்க அதற்கு அவர்

எவராவது இதை எழுதட்டும், உடனடியாக எப்படி சாதகம் பார்க்கப்பட்டது, எங்கு திருமணம் நடந்தது என எல்லா உண்மைகளும் வெளிவரும் என்றே மீண்டும்

சத்தமாகவே அவர் சொன்னார்.

இது யார் உங்களுக்கு சொன்னது என மீண்டும் ஒருவர் கேட்டதற்கு அவர்

என்னிடம் ஒருவர் சத்தமாகவே சொன்னார், அதைத்தான் உங்களிடமும் நானும் சொல்கிறேன் என

சத்தமாகவே சொன்னார்.

ஆம், பல நேரங்களில் பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதற்கு சத்தமாகவே சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த விசயம் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எத்தனை மன உளைச்சல் தரும் என்பதை தாங்கள் சொல்ல வந்ததை சத்தமாக சொல்ல முயற்சிப்பதில் மறந்து போகிறார்கள்.

மீண்டும் அவரிடம் கேட்டபோது

சொன்ன விஷயத்தை மீண்டும் சத்தமாகவே சொல்லி உறுதி படுத்தினார்.

இப்படி பிறர் மீது அவதூறு கிளப்புவது சட்டப்படி குற்றமாகும் என்பதை எழுதுபவர்கள், பேசுபவர்கள் ஒருபோதும் நினைவில் வைத்து கொள்வதில்லை. சுதந்திரம் என்பது எழுத்தில் இருப்பது, பேச்சில் இருப்பது சரிதான், ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிப்பது சரியா? ஆதாரம் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த நடவடிக்கைதான் அவசியமே அன்றி செய்திகள் பரப்புவது அல்ல. ஆனால் வதந்திகள் என்றுமே வாசம் இழந்ததில்லை. வதந்திகளின் மீதான மோகம் மனிதர்களுக்கு ஒருபோதும் குறைவதுமில்லை.

அவர் சத்தமாகவே சொன்னாலும் இது வெறும் கூச்சல் தான் என்பதை தெரிந்து கொள்ள அந்த முக்கியமான பதவியில் இருக்கும் நபரை கேட்டுவிடலாம். ஆனால் அந்த முக்கியமான நபர் யார் என்பதுதான் கேள்வி? இத்தனை சத்தமாக சொல்லியும் பெயரை மட்டும் சத்தமின்றி மறைத்துவிட்டார்.

வதந்திகளுக்கு விசா, பயண சீட்டு என எதுவும் தேவை இல்லை தான்.

ஒரு விசயத்தின் தன்மையை இந்த வதந்திகள் முழுவதுமாக மறைத்து விடுகின்றன. சில வதந்திகள் காலத்துக்கும் அழியாமல் நிலைத்து விடுகின்றன.

வதந்திகளால் வாழ்க்கை தொலைத்தோர் அதிகம் என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

சிலர் சத்தமாகவே பேசி கொண்டு இருக்கிறார்கள்.

7 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

ம.தி.சுதா said...

ஃஃஃஃவதந்திகளால் வாழ்க்கை தொலைத்தோர் அதிகம் என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?ஃஃஃஃ

ஆமாங்க..

அருமை..

pichaikaaran said...

தந்தியை விட வேகமாக பயணிப்பது வதந்தி

தமிழ் உதயம் said...

ஒரு விசயத்தின் தன்மையை இந்த வதந்திகள் முழுவதுமாக மறைத்து விடுகின்றன. சில வதந்திகள் காலத்துக்கும் அழியாமல் நிலைத்து விடுகின்றன.///


முத்தாய்ப்பாக மூணு வரிகளில் சொல்லி விட்டீர்கள், வதந்தியின் வீரியத்தை.

Chitra said...

வதந்திகளால் வாழ்க்கை தொலைத்தோர் அதிகம் என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?


......வேதனையான உண்மை. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றும்.

Unknown said...

நல்ல பதிவு. நன்றிகள்..
வதந்தி பேசுவர்களுக்கு சில நிமிட சந்தோஷம், சம்பந்தப்பட்டவர்களுக்கோ எப்போதும் மரண வலி.
தனக்கு நேரும் போது தான் வலிக்குமோ?

"உழவன்" "Uzhavan" said...

அப்படினா அது வதந்தியா? :-)