நுனிப்புல் பாகம் 1 நாவல் எழுதி புத்தகமாக வெளியிட்ட பின்னர் நண்பர்களிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்டு இருந்தேன். அப்பொழுது நாவலை முழுமையாக படித்து மூன்று பக்கங்கள் மிகாமல் நுனிப்புல் பாகம் 1 பற்றி லண்டனில் வசிக்கும் கணித ஆசிரியர் ஒருவர் பாராட்டி இருந்தார். அதற்கு பின்னர் இந்தியாவில் ராஜபாண்டி என்பவர் புத்தக வெளியீட்டுவிழாவில் வெகுவாக பாராட்டி இருந்தார். அதற்கு பின்னர் இங்கொன்று அங்கொன்று என அவ்வப்போது பாராட்டுகளும், திட்டுகளும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தது.
புத்தகம் எழுதி வெளியிட்டு இப்பொழுது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. திடீரென நண்பர் ரத்தினகிரி அவர்களிடம் இருந்து இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நான்காம் தேதி அன்று உங்கள் பெயரில் ஒரு கடிதம் வந்து இருக்கிறது என்ன செய்வது என முத்தமிழ் மன்றத்தில் தனிமடல் அனுப்பி இருந்தார். நான் செப்டம்பர் ஏழாம் தேதி வரை இந்தியாவில் தான் இருந்தேன். ஆனால் முத்தமிழ்மன்றம் நான் சென்று பார்த்தபோது தனிமடல் எனக்கு வந்து இரு வாரங்கள் ஆகி இருந்தது. அவருக்கு அதை அப்படியே எனக்கு அனுப்பி வையுங்கள் என சொல்லி வைத்தேன். அவரும் அனுப்பி வைப்பதாக சொன்னார்.
நுனிப்புல் பாகம் 1 பற்றிய கடிதமாகத்தான் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. மாதங்கள் உருண்டோடியும் எனக்கு கடிதம் கைக்கு வந்து சேரவில்லை. அடடா ஒரு கடிதம், அதில் என்ன எழுதி இருக்கும் என தெரியாமலே போய்விட்டது என நண்பரிடம் தகவல் சொன்னேன். அவர் விசாரிக்கிறேன் என்றார். இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டது. கடிதம் கைக்கு கிடைக்கவே இல்லை. மனதின் ஓரத்தில் சிறு ஆசை கடிதம் கிடைத்து விடாதா என்று. திடீரென ஒரு முக்கியமான வேலை வந்து சேர்ந்ததால் எனக்கு கடிதம் விசயமே மறந்து போனது.
திடீரென நான்கு தினங்கள் முன்னர் வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. எனக்கு எழுதப்பட்ட கடிதத்தை நண்பர் அனுப்பி வைத்து இருந்தார். ஆவலுடன் திறந்து பார்த்தேன்,
சென்னை பூங்கா நகர்தனை சேர்ந்த வி வி சுந்தரம் என்பவரால் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை படித்ததும் அவர் கொடுத்திருந்த அலைபேசி தொடர்பு மூலம் அவரிடம் பேச நினைத்தேன். இதோ நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவரிடம் பேசவில்லை. நாளை நிச்சயம் அவரிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட வேண்டும்.
கடிதம் அனுப்புவர் என அவரின் முகவரியுடன், தொடர்பு எண்ணுடன் ஆரம்பிக்கிறது. அதற்கு பின்னர் பெறுபவர் என திரு ராதாகிருஷ்ணன், முத்தமிழ்மன்றம், சிவகாசி என தொடர்கிறது.
உயர்திரு ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். 2007 ஆகஸ்ட்டில் எழுதி வெளியிட்ட நுனிப்புல் பாகம் 1 என்ற அருமையான நாவலைப் படித்தேன். (கன்னிமாரா நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தேன்) 2வது பாகம் அங்கு கிடைக்கவில்லை. தாங்கள் எழுதி வெளியிட்டீர்களா? அது சென்னையில் எங்கு கிடைக்கும், என்பதை தெரிவித்தால் எனக்கு வாங்கி படிக்க உதவியாக இருக்கும், என்று கருதி இந்த கடிதத்தை எழுதுகின்றேன். பதில் கொடுத்து உதவவும்.
நன்றி
இப்படிக்கு வி.வி. சுந்தரம்
என கடிதம் முடிகிறது.
இதயம் படபடவென அடிக்கிறது. நுனிப்புல் பாகம் 2 தனை வெளியிட ஒரு மாதம் முன்னர் தான் பொன் வாசுதேவனிடம் விசாரித்தேன். வெளியிடலாம் என சொன்னார். ஆனால் பல புத்தகங்கள் தனது அறையில் குவிந்து இருப்பதாக சொன்னபோது புத்தகம் வெளியிட்டு விற்காமல் போகும் புத்தகங்கள் நிலையை நினைக்கும்போது கவலையாகத்தான் இருந்தது.
சுந்தரம் அவர்களின் கடிதம் படித்ததும் நினைத்தேன். உடனடியாக நண்பர் ரத்தினகிரியிடம் சொல்லி நுனிப்புல் நாவலை தமிழகத்தில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் இலவசமாக தந்து விடுவது என. அதே போன்று வெறும் வார்த்தைகள் கவிதை தொகுப்பை நூலகங்களுக்கு அனுப்ப சொல்லி இஷாக் அவர்களிடம் சொல்லிவிடலாம். தொலைக்கப்பட்ட தேடல்களும் நூலகங்களுக்கு இலவசமாக போகட்டும் என வாசுதேவனிடம் சொல்லிவிடலாம் என மனம் நினைத்தது. அதை இன்னும் செய்யவில்லை. விரைவில் செய்ய வேண்டும்.
நுனிப்புல் நாவல் இரண்டாம் பாகத்தை வெளியிட வேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்திய சுந்தரம் அவர்களின் கடிதம் எனது எழுத்து பயணத்திற்கான ஒரு வெற்றிதான் என்பதில் எனக்கு இருவேறு கருத்தில்லை.
நாவல் படிக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சி தான். விரைவில் வெளி வருகிறது நுனிப்புல் பாகம் இரண்டு.
அகநாழிகை பதிப்பகம் கை கொடுக்குமா?
7 comments:
நுனிப்புல் நாவல் இரண்டாம் பாகத்தை வெளியிட வேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்திய சுந்தரம் அவர்களின் கடிதம் எனது எழுத்து பயணத்திற்கான ஒரு வெற்றிதான் என்பதில் எனக்கு இருவேறு கருத்தில்லை.
......கண்டிப்பாக சார். எழுத்தாளர்களுக்கு உற்சாக டானிக் வேறு இல்லை. இந்த பதிவு வாசிக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
//நாவல் படிக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சி தான். //
நானும் அந்த வகைதான்.
ஆனால் பல புத்தகங்கள் தனது அறையில் குவிந்து இருப்பதாக சொன்னபோது புத்தகம் வெளியிட்டு விற்காமல் போகும் புத்தகங்கள் நிலையை நினைக்கும்போது கவலையாகத்தான் இருந்தது.//
நுனிப்புல் நாவல் இரண்டாம் பாகத்தை வெளியிட வேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்திய சுந்தரம் அவர்களின் கடிதம் எனது எழுத்து பயணத்திற்கான ஒரு வெற்றிதான் என்பதில் எனக்கு இருவேறு கருத்தில்லை.///
ஒன்று வருத்தத்தை தருகிறது. ஒன்று மகிழ்ச்சியை தருகிறது. இரண்டுமானது தான் எழுத்துலகம்.
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்..
மிக்க நன்றி பாரத் பாரதி.
Post a Comment