Friday, 12 November 2010

மனித உரிமைகள் எனும் அக்கப்போர்

இது ஒரு கேடு கெட்ட சமூகம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த கேடு கெட்ட சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என்பதை மறுக்க வேண்டும் என்பது நிச்சயம் இல்லை.

ஒரு வீடு வாங்குவது என்பது எத்தனை பெரிய விசயம்? வீட்டினை கட்டிப் பார், கல்யாணம் பண்ணி பார் என்பது நமது ஊருக்கு பொருந்தும். ஆனால் லண்டன் போன்ற நகரங்களில் கட்டப்பட்ட வீடுகள் வாங்குவதே பெரிய விசயம்.

சொந்த பணத்தில் வீடு வாங்குவது என்பது பத்து சதவிகித மக்களால் முடியும். மீதி எல்லாம் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குபவர்கள்தான். அப்படித்தான் ஒருவர் வீடு வாங்கி அந்த வீட்டினை புதுபித்து கொண்டிருந்தார்.

வீட்டினை புதுப்பித்து கொண்டிருக்கும்போது அங்கேயா தங்க முடியும். தான் இருந்த வாடகை வீட்டினில் இருந்து கொண்டு புதிய வீட்டு வேலையை செய்து வந்தார். இங்கே வீடு வேலை செப்பனிடுபவர்கள் தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்து முடித்தோமா என இருக்க மாட்டார்கள். அங்கொரு வீடு, இங்கொரு வீடு என பல வீடுகளை செப்பனிட்டு கொண்டிருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது இவரது வீடு பல நாட்களாக வேலை செய்யாமல் இருந்தது.

இந்த சமயம் பார்த்து அந்த வீட்டிற்குள் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த வீடு இல்லாத நபர்கள் உள்ளே சென்று குடியேறி விட்டார்கள். விசயம் அறிந்த நபர் திடுக்கிட்டு போனார். காவல் அதிகாரிகளுக்கு விபரம் தெரிவித்ததும் வந்தார்கள். அவர்களை வெளியேற்ற மனு ஒன்று பெற்றாக வேண்டும் என சொன்னார்கள்.

இப்படி முறையின்றி குடியேறும் நிகழ்ச்சி அவ்வப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு குடியேறியவர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் எதுவும் செய்ய கூடாது, அதற்கான உரிமை கிடையாது. சட்டமே எல்லாம் செய்யும். அந்த முறையில்லா சட்டம் என்ன சொல்கிறது என்றால் வீட்டை உடைத்து செல்பவர்களை ஒன்றும் செய்யாதாம். ஏனெனில் மனித உரிமை பிரச்சினையாம்.

இந்த நாட்டில் இருக்கும் சட்டங்கள் குறித்து ஒரு சின்ன கதை ஒன்றை முன்னரே எழுதி இருந்தேன். ஒரு ஒழுங்கு முறை வேண்டும், அதற்காக அளவற்ற ஒழுங்கு முறையா?

மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என அனைவரையும் வேடிக்கை பார்க்கும் அவலம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மனித உரிமைகள் என்றால் என்ன? புரியாத விசயங்களில் இதுவும் ஒன்றாகி போனதுதான் அவலம்.

கதை இங்கே.

வரதனின் சட்டம்

வரதன் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டால் எனும் பகுதியில் நான்கு மாதங்கள் சுயமாக ஒரு சின்ன கடை வைத்து பிழைப்பினைத் தொடங்கி இருந்தான். அவனது கடைக்குள் வருவோரில் சிலர் சில பொருட்களை எடுத்துவிட்டு பணம் தராமல் ஓடிச் செல்வதை கண்டு மிகவும் கோபமுற்றான். அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க இயலாமல் உள்ளதை தொலைத்துவிடுவோம் என கடையிலே இருந்து கொள்வான். காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

வரதனின் நேர்மையான குணமும், கடைக்கு வருவோரிடம் பேசும் நல்ல பண்பும் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருந்தது. மேலும் நியாய விலைக்கே பொருட்களை விற்று நல்ல பெயர் சம்பாதித்து இருந்தான் வரதன். ஆனால் திருடர்களின் அட்டூழியத்தை அவனால் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஏழை நாடான இந்தியாவில் கூட இப்படி பொருட்கள் களவாடிச் செல்பவர்கள் இல்லையே என நினைத்து வேதனையுற்றான். 

கடையில் வருவோரிடம் ஆலோசனை கேட்டான். அவர்களால் தகுந்த பதிலைச் சொல்ல முடியவில்லை எனினும், ஒரு காவலாளி வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னார்கள். ஆனால் வரதனுக்கு காவலாளி எல்லாம் வைத்து சம்பளம் தந்து கட்டுபடியாகும் எனத் தோணவில்லை. அசைபட கருவி நிறுவியும் எந்த பலனும் இல்லை.

ஒருமுறை இப்படி திருடிச் சென்ற சிறுவனை பிடித்துவிட்டான் வரதன். அவனிடம் நல்லபடியாய் புத்திமதி கூறி, வேண்டுமெனில் பணம் கொடுத்து வாங்கிப்போ இப்படி தூக்கிச் செல்லாதே என சொன்னதும் அந்த சிறுவன் பொருளை வரதனின் முகத்தில் எறிந்துவிட்டு தகாத வார்த்தையால் திட்டிவிட்டு ஓடினான். வரதனுக்கு கோபம் அதி பயங்கரமாக வந்தது. ஆனால் துரத்திச் செல்லாமல் விட்டுவிட்டான். என்ன நாடு இது, ஒரு ஒழுங்கு, ஒழுக்கம் எல்லாம் இல்லை. இச்சின்னஞ்சிறு வயதிலே இப்படிச் செய்தால் இந்த நாட்டின் எதிர்காலம் என்னாவது என மனதுக்குள் அச்சம் கொண்டான். இந்தியாவிலோ வறுமையின் கொடுமை தாங்காமல் ஹோட்டல்களிலும், தொழிற்சாலைகளிலும் வெயில் மழை என பொருட்படுத்தாது வேலை செய்யும் சிறுவர்களை நினைத்த போது இங்கிருக்கும் சிறுவர்களின் நடத்தை மேல் அதிக கோபம் வந்தது. ஏன் இந்த நாட்டிற்கு வந்தோம் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிட்டான் வரதன். 

உதவித்தொகை என அரசிடம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருப்பவர்கள் தனது கடையில் பொருள் திருடிச் சென்றதையும் கண்டிருக்கிறான். சமூக நலன் பாதுகாவலர்கள் என சுற்றிச் சுற்றி வரும் காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எவ்வித பயனில்லை. 

ஒருமுறை நாளிதழைப் பார்க்கையில் அதில் ஒரு முதலாளியின் வீட்டில் திருட நுழைந்தவனை அந்த முதலாளி சுட்டுவிட்டார். அதற்கு சட்டம் முதலாளியை தண்டித்து இருந்தது. திருடனை ஒன்றும் செய்யவில்லை. திருட வந்தவனை ஏன் நீ தடுக்கிறாய் என்றுதான் கேட்டது. இதனைப் படித்ததும் கொதித்துப் போனான் வரதன். மனதில் ஒரு முடிவு செய்தான். இந்த கேடு கெட்ட சட்டத்திற்கு ஒரு பாடம் புகட்டுவது என தீர்மானித்தான். 

கடையில் ஒரு சின்ன கத்தியை எடுத்து வைத்துக்கொண்டான். இந்த கத்தியானது அட்டை பெட்டிகளை திறக்க அவன் பயன்படுத்துவதுண்டு. ஒரு வாலிபன் உள்ளே வந்தபோதே சந்தேகம் கொண்டான் வரதன். அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தான். வரதன் நினைத்தது போல விலையுயர்ந்த பொருளைத் தூக்கிக் கொண்ட ஓட எத்தனித்தான் அவன். ஒரே பாய்ச்சலாக கடையின் கதவு முன்னால் நின்றான் வரதன். ஓட இருந்தவன் வரதனை தள்ளிவிட்டு அடித்துவிட்ட ஓட நினைக்கையில் முகத்தில் கத்தியால் கீறல் போட்டான் வரதன். அந்த வாலிபன் வலியால் துடிதுடித்து பொருளை கீழே போட்டுவிட்டு ஓடினான்.

வரதன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வரதனின் வக்கீல் வரதன் தன்னையும், தனது வியாபாரத்தையும் காப்பாற்றிக்கொள்ளவே அவ்வாறு செய்தான் என வாதிட்டார். அங்கிருந்த மக்களும் வரதன் மேல் வழக்குப் பதிவு செய்தது முட்டாள்தனம் என சொன்னார்கள். இந்த வேளையில் கடையில் திருடிய வாலிபன் தன்மேல்தான் தவறு இருக்கிறது, வரதன் மேல் இல்லை என நீதிபதிக்கு கடிதம் எழுதினான். இதையெல்லாம் விசாரித்த நீதிபதி வரதனை விடுதலை செய்தார், ஆனால் இது சட்டத்திற்கு மீறிய குற்றம் என கண்டிக்கவும் செய்தார். 

மனித உரிமை என கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் உங்கள் நாட்டில் ஏன் மனிதர்களாக கணக்கில் வைக்கிறீர்கள் என சத்தம்போட்டுச் சொன்னான் வரதன். நீதிபதி வரதன் சொன்னதை வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார். அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே! மனிதர்கள் யார் என்பதை வரையறுக்குமா இந்தச் சட்டம்?.

15 comments:

Unknown said...

//மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என அனைவரையும் வேடிக்கை பார்க்கும் அவலம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது.//

Radhakrishnan said...

மிக்க நன்றி பாரத் பாரதி.

தமிழ் உதயம் said...

அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே! மனிதர்கள் யார் என்பதை வரையறுக்குமா இந்தச் சட்டம்?.

அவர்களால் பதில் தர முடியாத கேள்வி.
எல்லா நாட்டிலுமே நியாயமாய் வாழ நினைப்பவனை வதைக்கவே செய்கிறார்கள் போலும்.

Unknown said...

ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும் ..

Vidhya Chandrasekaran said...

\\எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும்.\\

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிறது என எங்கோ கேட்ட/படித்த ஞாபகம்.

உண்ணும் உணவு முதற்கொண்டு வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுப்பது வரை ஃபாஸ்ட் ட்ராக்கில் பயணிக்கும்போது நீதி மட்டும் ஆமை வேகத்தில் கிடைத்தால்? மனிதன் பொறுமை என்னும் குணம் மறந்து ரொம்ப காலமாகிறது.

ராஜ நடராஜன் said...

நீங்கள் சொல்லும் மேற்கத்திய பாணி மனித உரிமைகள் மனித உரிமைகளை மதித்து திகட்டல் நிலைக்கு போனவையாக இருக்கலாம்.

மொத்த ஆசிய நாடுகளுக்கும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவசியமென நினைக்கிறேன்.

அன்பரசன் said...

//எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும்.//

சரிதான்

ஹேமா said...

மனித உரிமைச் சட்டம் என்பதைச் சரியான முறையில் செயல்படுத்துகிறார்களா நமது நாட்டுச் சட்டத்தில்!

Thekkikattan|தெகா said...

வெ. இரா, கொஞ்சம் மிகை படுத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கிறதே! இங்கும் போதுமான அளவிற்கு தற்காப்பிற்கென செய்யும் செயல்களை எக்க்யூஸ் செய்து விடுகிறார்களே. உ.தா:-

* trespassing அனுமதியில்லாமல் ஒருவரின் நில propertyக்குள் நுழைவது அது துப்பாக்கியால் சுடுமளவிற்கு கூட செல்கிறது.

* வீட்டிற்குள் அது மாதிரி அத்து மீறி கொள்ளையன் புகுந்தால் கூட தற்காப்பிற்கு டுப்பாக்கியை நீட்டுகிறார்கள்.

* அது போன்ற கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு துப்பாக்கியை நீட்டினால், மேனேஜரும் தற்காப்பிற்கு வைத்திருக்கும் டுப்பாக்கியை எடுத்து நீட்டி போட்டுத் தள்ளிக்கொண்டால்... சட்டம் ஏற்றுக் கொள்கிறது போலவே...

நீங்க எந்த ஊர்ல இருந்து இந்த மாதிரி மனித உரிமைங்கிற முறையில வேறு ஒருவர் வீட்டை உடைச்சு வாழுறவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற நாட்டில இருக்கீங்க?

ராஜ நட, கூறியதை வழிமொழிகிறேன்!

ரிஷபன்Meena said...

//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும் .//

நீங்க சொல்றபடி பார்த்தா திருடன் திருடன் போது நாம பார்த்தாமேயானால், சார் ப்ளீஸ் கொஞ்சம் திருப்பிக் கொடுத்திடுறீங்களான்னு கெஞ்சிப் பார்க்கனும், அவர் தந்தா சரி இல்லைன்னா, போலீஸ்லை சொல்லிட்டு உட்கார்ந்துட்டு இருக்கனும்.

அதாவது ஒருத்தன் பலவந்தமா நம்மகிட்ட உள்ள உரிமையைச் சொத்தை புடுங்கலாம் ஆனா நாம நம்மை பாதுகாத்துக்கிட்டா அது தப்பு.

உங்களிடம் திருட வருபவனிடம் நீங்கள் சொன்னபடி நடந்தால் நீங்கள் மனிதனே அல்ல, தெய்வம்.

suneel krishnan said...

அசை படு கருவி -motion sensor ?
நீங்கள் எழுதியது கதையா இல்லை நிஜமா ? இப்படி நெறைய சம்பவங்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருப்பதால் இந்த கேள்வி

Radhakrishnan said...

//எல்லா நாட்டிலுமே நியாயமாய் வாழ நினைப்பவனை வதைக்கவே செய்கிறார்கள் போலும்.//

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா.

Radhakrishnan said...

//ஒருவன் திருடுகிறான் என்பதற்காக அவனை கொள்வதும், கத்தியால் கீறுவதும் தவறுதான், மனித உரிமைகளில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் தனிப்பட்ட மனிதர்களுக்கு இல்லை. எந்த தண்டனையாக இருப்பினும் நீதித்துறை மூலம் மட்டுமே நிறைவ்ற்றப்படல் வேண்டும். தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் இந்த உலகம் இல்லாது போகும்//

நீதியை நிலை நாட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒரு வரி அது உண்மையான வரி. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.' அல்லது திருடுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே இருக்க கூடாது. நன்றி கே ஆர் பி செந்தில்.

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா. நீதி நியாயமான முறையில் விரைவில் கிடைப்பதுதான் நல்லது.

மிக்க நன்றி ராஜ நடராஜன். நிச்சயம் நமக்கு பல விசயங்களில் விழிப்புணர்வு அவசியம்.

மிக்க நன்றி அன்பரசன்.

மிக்க நன்றி ஹேமா. சரியான முறையில் அல்ல என்பதுதான் மிகவும் கேள்விக்குறியான விசயம்.

மிக்க நன்றி தெகா. இந்த விசயங்கள் உண்மைதான். squatting என தேடி பாருங்கள். லண்டனில் புதிதாக சட்டம் மாற்றம் கொண்டு வர இருக்கிறார்கள்.

மிக்க நன்றி ரிஷபன். அடிபணிதல் மிகவும் கொடுமையான விசயமாக பல நேரங்களில் இருக்கிறது.

மிக்க நன்றி டாக்டர். வரதனின் சட்டம் உண்மையான் சம்பவத்தை பின்பற்றி எழுதிய ஒரு கதை. மேலே உள்ளது உண்மை சம்பவம்.

Radhakrishnan said...

ஆமாம், சரிதான் டாக்டர். அசை படு கருவி அதுவே.