Wednesday, 3 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 5

கிராக்கஸ் பெபியுப். இவருடைய வாழ்நாள் காலம் முப்பத்தி ஏழு வருடங்கள் மட்டுமே. இவருடைய சிந்தனைகள் எல்லாம் கம்யூனிசம் என்றோ சோசியலிசம் என்றோ இவரது காலத்தில் குறிக்கப்படவில்லை. இந்த கம்யூனிசம் என்ற வார்த்தை பின்னாளில் தான் வந்தது. ஆனால் இந்த கம்யூனிச சிந்தனைகள் பல்லாண்டு காலமாக மனிதர்களில் மனதில் உலவிக் கொண்டுதான் இருந்தது.

 உடோபியா எனும் ஒரு கற்பனை சமூகத்தை, நிலப்பரப்பை  தாமஸ் மோர் எழுதிய வருடம் 1516. இந்த சமுதாயம் அமையக்கூடிய சாத்தியமற்ற சூழலே இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலவுகிறது. இந்த தாமஸ் மோர் எனக்கு அறிமுகமானது எனது தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் தாரா கணேசன் அவர்கள் பேசியதை கேட்டபோதுதான்.  உடோபியா என்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் என்னுள் எழுந்த சிந்தனைகளில் சில உடோபியாவில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது உண்டு. இதே போல் பலரும் உலகில் சிந்தித்து கொண்டிருக்க கூடும். தாமஸ் மோர் எழுத்தில் வைத்தார், பலர் எண்ணங்களை தங்களுடன் புதைத்து கொண்டார்கள் என்றே கருதுகிறேன். தாமஸ் மோர் அவர்களுக்கு முன்னாலேயே இதே சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள், அவருக்கு பின்னால் வந்தவர்களும் அதே சிந்தனைகளை கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் எழுதவும் செய்து இருக்கிறார்கள்.

உலகம் எல்லாம் ஒரே நாணயம். உலகம் எல்லாம் ஒரே மதம். உலக நாடுகள் எல்லாம் ஒன்றே ஒன்று என்கிற கற்பனை கோட்பாடு, எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லாது இருத்தல், உலக நாடுகள் பிரிவினை பாராட்டாது ஒன்றாகவே இருத்தல் போன்ற பல கற்பனைகள் மனதில் வைத்தும் அதை எப்படியாவது உலகில் நிலைநிறுத்திட வேண்டும் எனும் முயற்சி அற்ற  எண்ணங்கள் என்னுள் எழுவது உண்டு. ஆனால் இவை எல்லாம் சாத்தியமற்று போய்விடும் என்கிற நிதர்சன எண்ணங்களும் என்னுள் இருப்பதுண்டு. இனி வரப்போகிற உலகத்தில் இதுபோன்ற எண்ணங்கள் எல்லாம் சாத்தியமா? காலம் பதில் சொல்லும் என சொல்வது அவசியமற்றதாகிறது. உலகம் தோன்றியபோது எந்த நாகரிகம் வீட்டினை கட்டி இருந்தது? எந்த நாகரிகம் பணத்தை அறிந்து இருந்தது? எந்த நாகரிகம் தங்களை பிரித்து வைத்து கொண்டிருந்தது? காடுகளில் சுற்றி திரிந்தவர்கள் தானே இந்த மனிதர்கள். இன்று கம்யூனிச சிந்தனைகளை உலகில் நிலை நிறுத்த நினைப்பவர்கள் காடுகளில்தான், காடுகளில் மட்டுமேதான் சுற்றி திரிய வேண்டும். இவர்களுக்கு நாடு, நகரம் என்பதெல்லாம் அவசியமில்லாத ஒன்று. அப்படி பார்த்தால் சந்நியாசம் என காடுகளை நோக்கி பயணித்தவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள் என சத்தமிட்டு சொல்லிவிடலாம். புரட்சி என வன்முறைகளை கையாளும் இந்த சிந்தனைவாதிகள் எல்லாம் பேசாமல் தவம் செய்துவிட செல்வது சால சிறந்தது.

இத்தனை தொழில் நுட்ப வளர்ச்சியும், சமுதாய மாற்றங்களும் ஏற்பட்ட பின்னர் கம்யூனிசம் என்கிற அழகிய சிந்தனையை நோக்கி மனிதம் செல்லும் என்பதெல்லாம் வீணான கற்பனை சித்திரங்களாகவே வரையப்படும்.

பெபியுப் சொல்கிறார் 'ஒரு சமூகமானது, மனிதர்கள் தாங்கள் பிறரை விட பணக்காரர்களாகவோ, அறிவுடையவர்களாகவோ, பலம் பொருந்தியவர்களாகவோ உருவாவதை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் உருவாகவேண்டும்'

இந்த வாசகம் திடுக்கிட செய்யும் வண்ணம் இருந்தாலும் இதனுடைய நோக்கம் என்னவெனில் 'ஈடு இணையற்ற ஒரு சமுதாயம் என்பது, அதாவது ஏற்ற தாழ்வுகள் அற்ற, அனைவரும் பணத்திலும், அறிவிலும், பலத்திலும் சமம் பொருந்தியவர்களாக இருப்பதுதான் என்கிறது' இது எப்படி சாத்தியம்? அன்றைய கால கட்ட சிந்தனைகளில் மரபியல் விசயங்கள் முதலான பிற அறிவியல் விசயங்கள் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

சாத்தியமற்ற விசயங்களை, விபரங்களை உலகின் உயிர்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் ஒரு சமூகம் வேண்டும் என விரும்பினால் அது எப்படி சாத்தியம். முன்னர் எழுதிய பதிவினில் குறிப்பிட்டதுதான். வீட்டினில் கம்யூனிசத்தை நிலைநிறுத்த திராணியற்றவர்கள் சமூகத்தில் கம்யூனிசத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசுவது அறிவீனம்.

உயிரினங்களின் தேவை என்ன? வாழ்வது என்பதுதான் குறைந்த பட்ச ஆசையாக இருக்கக் கூடும். உயிரினங்கள் இருப்பிடத்திற்காக, உணவுக்காக, கலவிக்காக போராடும் தன்மை உடையவை. தனது நிலையை நிலை நிறுத்தி கொள்ள தனக்கு போட்டியாக இருப்பவைகளை அடிமைபடுத்தும் குணம் உயிரினங்களிடம் உண்டு. இந்த போட்டி தன்மையை ஒழித்து கட்ட வேண்டும் என கூக்குரல் இடுவதுதான் கம்யூனிசம் என்றால் அந்த கம்யூனிசத்தை எந்த உயிரினம் ஏற்று கொள்ள தயாராக இருக்கும். ஆனால் இதுவல்ல கம்யூனிசம் என்றால், எதுதான் கம்யூனிசம்?

கம்யூனிசம் என்ற வார்த்தையை முதலில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் குட்வின் பாம்பி என்பவரே என சொல்லப்படுவதுண்டு. இவர் பெபியுப் கொள்கையை பின்பற்றியவர்கள் பிரெஞ்ச்சு மொழியில் உபயோகித்த கம்யூனிஸ்டே என்ற வார்த்தையை இரவலாக பெற்று கொண்டார். இவர் தான் இங்கேல்ஸ் அவர்களை கம்யூனிஸ்டேவிற்கு அறிமுகப்படுத்தியவர். இவர்தான் கம்யூனிஸ்ட் போராட்ட அமைப்பினை 1841ல் உருவாக்கினார். அந்த வருடமே உலக கம்யூனிஸ்ட் அமைப்பும் தோன்றியது.

நிலச்சுவான்தார்கள் மனிதர்களை கொத்தடிமைகளாக நடத்தியது கண்டு, அரசர்கள் மக்களை அடிமைகளாக நடத்தியது கண்டு பொங்கி எழுந்த மக்கள்தான் புரட்சிக்காரர்கள் என அறியப்பட்டார்கள். ஆனால், அவர்கள் புரட்சியை கையாண்ட விதம் வன்முறை! இவர்களை அரசு படைகள் ஒடுக்கிவிடுவது வாடிக்கையாக நடந்துவருவதுதான். மக்களிடம் புரட்சி ஏற்படாதவரை, தனி அமைப்புகளில் ஏற்படும் புரட்சி நசித்து போவதுண்டு. உண்மையான கம்யூனிசம் உலகில் நிலவிட மக்கள் போராட்டத்தில் முழுமையாக தங்களை அர்பணித்து கொள்ள வேண்டும். இது எவ்வகையில் சாத்தியம் என்பதை போராளிகளும், புரட்சியாளர்களும் தான் சொல்ல வேண்டும்.

மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் போன்றோர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் அலசப் போவதில்லை இந்த கட்டுரை. அது தேவையில்லாத விசயங்களும் கூட. ஆனால் சில விசயங்கள் மட்டும் இங்கே கட்டுரையின் பொருட்டு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். மார்க்ஸ் கூலி தொழிலாளி நிலையில் இருந்தவர். இங்கேல்ஸ் பணக்கார வர்க்கத்தை சார்ந்தவர். இங்கேல்ஸ் மார்க்ஸ் அவர்களுக்கு நிறைய உதவிகள் புரிந்தார். இப்படி ஒரு தனி மனிதன் மற்றொரு மனிதனுக்கு உதவும் பட்சத்தில் எதற்கு ஒரு சமூகமே அப்படி இருக்கக் கூடாது எனும் சிந்தனை மார்க்ஸ் அவர்களுக்கு வந்திருந்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த சிந்தனையை உலகெங்கும் நிலைநிறுத்த வேண்டும் என நினைத்ததுதான் தவறாகிப் போனது. இங்கேல்ஸ் போன்ற மனிதர்கள் உலகம் எல்லாம் நிறைந்திருந்தால் மட்டுமே மார்க்ஸ் போன்ற மனிதர்கள் சுகமாக இருந்திருக்க இயலும். இங்கேல்ஸ்களை உருவாக்குவது எப்படி? என்பதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால் புரட்சிகள் எனும் பெயரில் நாச வேலைகள் உலகில் நடப்பது இயல்புதான். மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் உருவாக்கிய கம்யூனிச சித்தாந்தம் பிரசித்து பெற்றது என சொல்ல இயலாது.

கம்யூனிச கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே இந்த கம்யூனிச சித்தாந்த சிந்தனைகளை பற்றி அறிந்து இருக்கிறார்கள் என அறிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.

கம்யூனிச சித்தாந்தம் 1848l ல், முன்னர் குறிப்பிட்டது போல பிரெஞ்ச்சு தொழிலார்களால் 1836ல் கம்யூனிச அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் விருத்தியாக உருவான கம்யூனிச அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முக்கிய விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் எப்படிபட்ட கம்யூனிச அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதை பற்றி இந்த சித்தாந்தம் எதுவும் சொல்லவில்லை என்பதுதான் சிறப்பு. அதன் காரணமாகவே கம்யூனிச சித்தாந்த அடிப்படை என சொல்லிக் கொண்டு லெனினிசம் முதற்கொண்டு எல்லாம் உருவாகின.

இனி கம்யூனிச சித்தாந்தம் பற்றி இங்க்கேல்சும், மார்க்சும் என்னதான் சொன்னார்கள் என்பதை பார்ப்போம். இந்த கம்யூனிச சித்தாந்தம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதலில் ஒரு முகப்புரையுடன் தொடங்குகிறது. அந்த முகப்புரை மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்த தொடரில் இனி வரும் சில  பதிவுகள் கார்ல் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் எனும் அற்புத மனிதர்களுக்கு சமர்ப்பணம்.

(தொடரும்)

11 comments:

VJR said...

கம்யூனிசம் காலாவாதியானதுன்னு சொல்றாங்களே, உங்கள் அபிப்ராயம்?

தமிழ் உதயம் said...

என்னுள் எழுந்த சிந்தனைகளில் சில உடோபியாவில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது உண்டு. இதே போல் பலரும் உலகில் சிந்தித்து கொண்டிருக்க கூடும். /////

இது உண்மை தான். '/////


கம்யூனிசம் என்பது மறைமுக சர்வாதிகாரம் தானே. இந்தியாவில் இருந்து கொண்டு, நாம் கம்யூனிசமே சிறந்தது என்று சொல்லமுடியும். காஷ்மீர் குறித்து மாறுபட்ட கருத்து சொல்ல முடியும். சீனாவில் இது சாத்தியமா. திபெத் குறித்து பேச முடியுமா. இதை வாசியுங்கள். http://thiagu1973.blogspot.com/2010/10/blog-post_4612.html

Radhakrishnan said...

மிக்க நன்றி விஜேஆர். கம்யூனிசம் காலாவதியானது என்பது ஒப்புக்கொள்ள முடியாத விசயம். கம்யூனிசம் என்பது எங்குமே எப்போதுமே நிலை நாட்டப்படவில்லை. கம்யூனிச சிந்தாந்தம் கூட கம்யூனிசத்தினை நிலைநாட்டிட சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை எனலாம். வெறும் சிந்தனைகளில், எழுத்துகளில் மட்டுமே நின்றுபோன ஒன்றுதான் கம்யூனிசம். இதில் காலாவாதியாகிப் போவது என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிசம் (பலரால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் கம்யூனிசம் அல்ல) உலகம் எல்லாம் நிறுவப்பட வேண்டும் என்பதில் எனக்கு அளவுகடந்த ஆசை உண்டு.

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா. கம்யூனிசம் நிச்சயம் சர்வாதிகாரம் அல்ல. கம்யூனிசத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாகவே பரப்பியும், செயல்படுத்தியும் வருகிறார்கள். கம்யூனிசத்திற்கும் கடவுளுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி கடவுள் என்கிற வேதாந்தம் முறையின்றி மனிதர்களால் செயல்படுத்தப் படுகிறதோ, அதைப்போலவே கம்யூனிசம் எனும் சித்தாந்தம் முறையின்றி செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டுமே மனிதர்களின் செயல்பாட்டினால் பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்து இருக்கிறது எனலாம். இணைப்புக்கு நன்றி, நிச்சயம் வாசித்து பயன் அடைகிறேன்.

suneel krishnan said...

எளிய நடையில் புரியும் வண்ணம் உள்ளது .நான் இதன் முந்தைய பகுதிகளை வாசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது .நீங்கள் அடுத்த பகுதி எழுதும் போது முந்தைய பகுதிகளின் சுட்டிகளையும் இணைத்து அளித்தால் நன்றாக இருக்கும் .
யுடோபியா - இது எனக்கும் நேர்ந்தது - எந்த வாசிப்பும் ,இலக்கிய அறிமுகம் இல்லாத பள்ளி பருவத்தில் எனக்கு சில எண்ணங்கள், கோட்பாடுகள் தோன்றியது , அது என் சொந்த எண்ணம் என்றே எண்ணி இருந்தேன் , இணையம் வந்த பின் பார்த்தால் அதை போல் எனக்கு முன்னாள் ஆயிரம் ஆயிரம் பேர் சிந்தித்துள்ளார்கள் .
சில நேரம் எனக்கு தோன்றுவது உண்டு- உலகத்தில் புதிதாக சொல்லுவதற்கு எதுவுமே இல்லை என்று, நாம் இன்று சிந்திக்கும் எல்லா விஷயங்களுமே என்றோ உருவாக்கப்பட்ட சிந்தனையின் நீட்சியோ என்று

VJR said...

தங்களின் பதிலில் மிக்கத் திருப்தியடைந்தேன். என் ஸ்டேண்டும் அதே. கம்யூனிசம் சிறந்த ஒன்று. ஆனால் இதுவரை நம்மைக் கடந்தது போலி கம்யூனிஸ்ட்டுகளே என்பது என் அபிப்ராயம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி டாக்டர் சுனில் கிருஷ்ணன். ஆம். அடுத்த முறை நிச்சயம் இணைப்புகள் தந்துவிடுகிறேன்.

மிக்க நன்றி விஜெஆர்

ராஜ நடராஜன் said...

//உலகம் எல்லாம் ஒரே நாணயம். உலகம் எல்லாம் ஒரே மதம். உலக நாடுகள் எல்லாம் ஒன்றே ஒன்று என்கிற கற்பனை கோட்பாடு, எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லாது இருத்தல், உலக நாடுகள் பிரிவினை பாராட்டாது ஒன்றாகவே இருத்தல் போன்ற பல கற்பனைகள் //

அய்யோ!இந்தக் கற்பனைக்கு சொந்தக்காரன் நான் என்று இதுவரை நினைத்து வந்தேன்.1516ல் தாமஸ் மோர் தாத்தாவுக்கு வந்துருச்சா?அவ்வ்வ்வ்வ்.....

ராஜ நடராஜன் said...

நம்ம தாத்தா கணியன் பூங்குன்றனாரும் ஒண்ணும் சும்மாயில்ல.

யாதும் ஊரே!யாவரும் கேளிர்.

ராஜ நடராஜன் said...

//இன்று கம்யூனிச சிந்தனைகளை உலகில் நிலை நிறுத்த நினைப்பவர்கள் காடுகளில்தான், காடுகளில் மட்டுமேதான் சுற்றி திரிய வேண்டும். இவர்களுக்கு நாடு, நகரம் என்பதெல்லாம் அவசியமில்லாத ஒன்று. அப்படி பார்த்தால் சந்நியாசம் என காடுகளை நோக்கி பயணித்தவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள் என சத்தமிட்டு சொல்லிவிடலாம். //

புதுவிதமான சிந்தனை.படிக்கவே பரவசமூட்டுகிறது எனக்கு.

கம்யூனிச சித்தாந்த தியரிகள் படிக்கவும்,சிந்திக்கவும் நன்றாக இருக்கிறது.யதார்த்த்தில் தோற்றுப்போய் விடுவது வருத்தத்தை தருகிறது.

ராஜ நடராஜன் said...

//கம்யூனிசம் காலாவாதியானதுன்னு சொல்றாங்களே, உங்கள் அபிப்ராயம்?//

சீனா,ரஷ்ய கம்யூனிசத்துக்கும் அப்பால் Liberty,Fraternity,Eqaulity என்று பறைசாற்றிக்கொள்ளும் பிரான்சில் இன்னும் கம்யூனிச விதைகள் சிதறிக்கிடக்கின்றன என்பேன்.
(அதாவது ஆட்சிபீடம் என்பதே குறிக்கோளாக இல்லாமலிருக்கும் பட்சத்தில்)

Radhakrishnan said...

மிக்க நன்றி ராஜ நடராஜன். மிகவும் சரியான விசயங்கள். எல்லா நாட்டிலும் கம்யூனிச விதைகள் சிதறித்தான் கிடக்கின்றன, ஆனால் அவை விருட்சமாக மாற வழியின்றி கிடக்கிறது.