Thursday, 28 October 2010

எனக்கேற்ற நண்பரை காணேன்

கடலை உணர்ச்சிகள் 

மனைவியின் பிரசவ வலி என அறிந்ததும் சொல்லிக் கொள்ளாமல் எப்படி போவது என தெரியவில்லை. என்ன விசயம் என்றே கேட்டாள் மணப்பெண். எனது மனைவிக்கு பிரசவ வலி, மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்றேன். உடனே அவளை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த மனிதர் தம்பி இங்கே வா என ஒருவனை நோக்கி அழைத்தார். இந்த சாரை நம்ம காருல நீ அவர் சொல்ற இடத்தில இறக்கிவிட்டுட்டு ஏதும் பிரச்சினையில்லைன்னு தெரிஞ்ச பிறகு இங்க வா என்றார். அந்த பையனும் சரி சார் என தலையாட்டினான்.

கிளம்புங்க சார் என்றார் அந்த மனிதர். மணப்பெண் 'ஒன்னும் ஆகாது கவலைபடாதீங்க. என்னை மாதிரி பொண்ணுதான் பிறந்து இருக்கும், என்னோட பெயரை வைங்க' என்றாள். எனது மனதின் வலி இன்னும் அதிகரித்தது. 'என்னை மன்னித்துவிடுங்கள், நானும் எனது மாமாவுடன் போக வேண்டும்' என ஆங்கிலத்தில் சொன்ன எனது மாமா மகள் என்னுடன் வர தயாரானாள். 'நீ இருந்துட்டு வாயேன்' என்று எனது பரிசு பொருளை அவளிடம் திணிக்க எத்தனித்தேன். அதற்குள் சார் நீங்க போய்ட்டு வாங்க என அருகில் இருந்தவர்கள் பரிசு பொருளை என்னிடமிருந்தும், எனது மாமா மகளிடமிருந்தும் பெற்று கொண்டார்கள்.

காரினை வேகுவேகமாக ஓட்டினான் அவன். சரியாக முப்பது நிமிடங்களுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். இன்னும் திருமணம் நடந்து இருக்காது என கணித்த நான், தம்பி நீ மண்டபத்துக்கு போ என அனுப்பிவிட்டேன். அவனும் தயங்கினான். நான் சார்கிட்ட பேசிக்கிறேன், எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னேன். அவன் சென்றுவிட்டான். எனக்காக காத்திருந்தவர் போல என் தந்தை மருத்துவமனை வெளியில் நின்று கொண்டிருந்தார்.

வேகமாக பிரசவ அறைக்கு சென்றேன். நான் செல்லவும் மருத்துவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. மகாலட்சுமி பொறந்திருக்கா என மருத்துவர் சொல்லி சென்றது எனது காதில் விழுந்தது. மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. சரஸ்வதி என்றோ, வீரலட்சுமி என்றோ எதற்கு இந்த மருத்துவர் சொல்லவில்லை என மனதில் குடைந்து கொண்டிருக்கும்போதே 'மாமா, பொண்ணு பிறந்தா அவளோட பெயரைத்தான் வைப்பீங்களா' என காரில் வரும்போது எனது மாமா மகள் கேட்டது காதில் ஒலித்தது.

அங்கிருந்த பாட்டி 'பொட்ட புள்ளைய பெத்துட்டு என்ன பகுமானம் வேண்டி கிடக்கு' என முகத்தை சிலுப்பி கொண்டார். ஆனால் என் அம்மா பேத்திதான் வேண்டும் என வேண்டி கொண்டாராம். எனக்கோ என்னுடன் வேலை பார்த்த மணப்பெண் மனதில் பயமுறுத்தினாள். என்னைப் போலவே உன் பொண்ணும் கஷ்டப்படுவா பாரு என சபிப்பது போல இருந்தது.

அந்த பிரச்சினையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தாயும் சேயும் நலம் என அறிந்து மகிழ்ந்தேன். சுகப்பிரசவம் என்பதால் அன்றே செல்லலாம் என மருத்துவர் சொல்லி இருந்தார்கள். மனைவியிடம் என்ன பெயர் வைப்பது என அப்போதே கேட்டேன். வைக்கலாம் என அசதியுடன் சொன்னார். அது என்ன பேரு, வைக்கலாம் என கேட்டு வைத்தேன். அனைவரும் சிரித்தார்கள். எனக்கு பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போன்று ஒரு மகிழ்ச்சி.

மதிய வேளை நெருங்கி கொண்டிருக்க மணப்பெண் தனது கணவர் மற்றும் சிலருடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். வாங்க என வரவேற்ற எனது காலில் அவர்கள் இருவரும் விழுந்து வணங்கியபோது நான் துடிதுடித்து போனேன். பொண்ணுக்கு என் பேருதானே வைச்சீங்க என குழந்தையை லாவகமாக தூக்கி அவளது பெயரை எனது மகளின் காதில் மூன்று முறை சொன்னாள்.

தம்பி என்றார் அந்த பெண்ணின் கணவர். கையில் நிறைய பரிசு பொருட்கள். எல்லாம் இந்த குழந்தைக்கு வாங்கி வந்தோம் என அவர்கள் அந்த பரிசு பொருட்களை அடுக்கியபோது அவளை கட்டிப்பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.

முதன் முதலில், நீ ஒரு ஆணாக பிறந்து இருக்கக் கூடாதா, குறைந்த பட்சம் நான் ஒரு பொண்ணாக பிறந்து இருக்கக் கூடாதா என அவளிடம் சொல்லி கதற வேண்டும் போலிருந்தது.

நாங்கள் கிளம்பும்வரை அங்கேயேதான் இருந்தார்கள். மருத்துவமனையிலிருந்து அனைவரும் கிளம்பி செல்லும்போது அவள் என்னிடம் வந்து பெயரை மாத்தி வைச்சிராதீங்க, ப்ளீஸ் என்றாள். நான் பதில் சொல்லும் முன்னரே, இந்த பெயர் நல்லா இருக்கு, மாத்தி எல்லாம் வைக்கமாட்டோம் என எனது மனைவி சொன்னதும் எனக்கேற்ற நண்பரை காணேன் என இனிமேல் ஒருபோதும் சொல்லமாட்டேன் என மனதில் உறுதி கொண்டேன்.

(தொடரும்)

5 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

Chitra said...

எல்லா குழந்தைகளுமே - ஆசிர்வாதங்கள் தானே! நல்லா எழுதி இருக்கீங்க!

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

தமிழ் உதயம் said...

Chitra said...

எல்லா குழந்தைகளுமே - ஆசிர்வாதங்கள் தானே! நல்லா எழுதி இருக்கீங்க!
////

வேறென்ன சொல்ல.

Radhakrishnan said...

ஹா ஹா! எது எதுக்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது? மிக்க நன்றி சுதா.

ஆமாம் சித்ரா. மிக்க நன்றி

மிக்க நன்றி வித்யா.

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா.