அழகிய கட்டுரையை எழுதியமைக்கு பாராட்டுகளுடன்.
முழு விசயத்தையும் எழுதி மறுமொழி அனுப்பினேன். மிகவும் பெரிதான மறுமொழி என கூகிள் மறுத்துவிட்டது. எனவே அதை இங்கே வெளியிடுகிறேன்.
கவிதா அவர்களின் கட்டுரையில் (முழு கட்டுரை படிக்க) நான் நினைக்கும் முரண்பாடுகள்.
௧. //அவளே முதல். அவளே முடிவும்.//
இந்த வார்த்தைகள் மூலம் கட்டுரையின் மொத்த சாரமும் தொலைந்து விடுவதாக கருதுகிறேன்.
௨. //ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை//
இதுவும் கூட ஒரு விதத்தில் மிகவும் பொய்யான பிரச்சாரம். ஒரு ஆண் கூட இதை எளிதாக செய்துவிட முடியும். எத்தனை மனைவிமார்கள் கணவனை புரிந்து கொண்டு வாழ்க்கையை திருத்தி அமைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு படம் எடுத்துதான் சொல்ல வேண்டும்.
௩ //பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை//
ஆதிக்கம் என்பதற்கும், அன்பின் வெளிப்பாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. பொதுவாக ஒரு விசயத்தை சொல்லும்போது இது போன்ற 'இதுதான் முடிவு' என்பது போன்ற வாசகங்கள் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. பல வேளைகளில் வாழ்வில் அன்பின் வெளிப்பாடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எங்கிருந்து ஆதிக்கம் வந்தது? புரிதலை தொலைத்து நிற்கும் கூட்டங்கள் நாம்.
௪ //ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி.//
இதுவும் ஒரு போலியான பார்வைதான். உலகில் இந்த விசயம் பரவலாகவே பேசப்படுகிறது. ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும சரி. அவரவர் அவரவருக்கு எதிரி. இதில் எந்த பாகுபாடும் இல்லை.
௫. //பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான்.//
இங்கே பெண்ணுக்கு எனப்படும் சுதந்திரமும், ஆணுக்கு எனப்படும் சுதந்திரமும் தொலைந்து விடுகிறது. ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வாழும் சூழல் பழக்க வழக்கங்கள் எனும்போது சில முரண்பாடுகள் எழும்.
௬. //குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.//
இதுவும் ஒரு பொது காரணி தான். எனக்கு தெரிந்த பலர் அவரவர் மனைவியை பற்றி சொல்வது உண்டு. உங்கள் விசயம், பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது பதில்.
ஒரு கணவன் மனைவி என்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை அவர்களே தீர்த்து கொள்ளும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இதை யார் வலியுறுத்துவது? தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வெளி காரணிகள் அதிகம்.
கவிதா,
//ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து... எனும் வரியில் இருந்து
பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள். முடிக்கும் வரை//
இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா?
இதற்கு ஒரு காரணம் நம்பகத்தன்மை. மறைத்து செயலாற்றுவது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இந்த ஆண்கள் படும் பாட்டிற்கு பெண்கள் காரணம் அல்ல, ஆண்களே காரணம். வெளிப்படையாக வாழும் எந்த ஆணும் சரி, பெண்ணும் சரி பிரச்சினைக்கு உட்படமாட்டார்கள் எனக் கொள்ளலாம். வேசம் கட்டும்போதுதான் வாழ்க்கை நாசமாகிறது.
௬. //பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது.//
இது சரியில்லாத புரிதல் என்றே கருதுகிறேன். நான் பெண்ணியம் பற்றியோ, ஆணாதிக்கம் பற்றியோ எழுதாதற்கு காரணம் ஒன்று தான். உயிரினங்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எது வேண்டுமெனினும் செய்து தொலைக்கும். இதில் பாகுபாடு பார்ப்பது எவ்வாறு.
சற்று சிந்தித்து பாருங்கள்.
பெண் எல்லா நேரத்திலுமா புலம்பி கொண்டே இருக்கிறார்.
ஆண் எல்லா நேரத்திலுமா அமைதியாக இருக்கிறார்.
௭. //பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும்.//
நீச்சல் குளம் விசயம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. முதலில் உயிரை காப்பாற்ற குதித்தது ஒரு பெண் தானே!
பெண்ணாலும் முடியும் என்பது தொலைந்து போன நம்பிக்கையா?
இதை இதை பெண்கள் செய்தல் கூடாது என வரையறை வைத்து கொள்ள சொன்னது யார்?
எனக்கு தெரிந்த பெண்கள் பலர் சாமர்த்தியசாலிகள், தைரியசாலிகள்.
--------------------------------
நான் பல விசயங்களை இந்த கட்டுரையில் ரசித்தேன். குறிப்பாக
//ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு//
//பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது//
இருவரும் என்பதில் அனைவரும் என்று சொல்லி இருக்கலாம் தான். :)
நன்றி கவிதா.
கடைசியாக
முரண்பட வேண்டும் என எண்ணினால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் முரண்பட்டு கொள்ள முடியும். ஏற்று கொள்ளும் பக்குவம் வரும்போது, எதுவுமே செய்ய இயலாது என்கிற பொது எல்லாமே சரி என்றுதான் போக தோன்றும். வாழ்வில் நாம் இரு நிலைகளிலும் வாழ்ந்து விடுகிறோம் என்பதுதான் கொடுமை.
23 comments:
உங்க பேரு ரொம்ப பெருசா இருக்கு எனக்கு, அதனால முதல்ல அதை குட்டியாக்கிகிறேன்..சரியா :)
ராகிஜி... நேரம் எடுத்து பொறுமையாக முரண்பாடுகளை சுட்டியதற்கு மிக்க நன்றி.. கடைசியா சில வரிகள் மட்டும் தான் வரல..மிச்சம் எல்லாம் வந்து இருக்கு... அங்க பதில் போட்டுட்டு உங்களுக்கு இங்க காப்பி செய்யறேன் சரியா..
இனி வரும் காலங்களில் இந்த வாதிகள் ஒழிந்து போகும் ...
அடடா, அவசரப்பட்டு இங்கே வெளியிட்டு விட்டேனே. ராகி, வைராகி எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. :)
தங்களுடைய பதிலை அங்கேயே படித்து கொள்கிறேன் கவிதா அவர்களே. மிக்க நன்றி.
மிகவும் சரியே செந்தில். மிக்க நன்றி.
ஒரு சின்ன கணக்கெடுப்பு. இந்தியாவில் ஃப்ரொபஷனல் படித்த மொத்த பெண்களில் 70 சதவீதமும், ஆர்ட்ஸ் படித்த பெண்களில் 85 சதவீதமும் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்துக் கொண்டோ அல்லது சும்மா இருக்கும்படியான சூழலிலோ இருப்பதாக சொல்கிறார்கள். இது குறிக்கும் கருத்து புரியவில்லை.
நன்றி விஜெஆர்
௧. வேலைக்கு செல்லும் வாய்ப்பு இருந்து இருக்காது.
௨. வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.
பெண்கள் அடிமைபடுத்தபட்டு இருக்கிறார்கள் என இந்த கணக்கெடுப்பு மூலம் கருத்து பரவினால் அதுதான் தவறு.
வேலைக்கு செல்ல வேண்டாம் என பெண்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் எனும் கணக்கெடுப்பு வரட்டும். உண்மையான ஒன்றாக இருக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் படிக்காவிட்டாலும் வேலை பார்க்கும் பெண்கள் மிக அதிகம்.
இதே மாதிரி ஆண்களை பற்றியும் கணக்கெடுப்பு இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் எனக்கு தெரிந்து நன்றாக படித்துவிட்டு வேலைக்கு போகாமல் வெறும் கதைகள் பேசி திரிபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
பெண் சிசுக்கொலை கேட்டதுண்டு, ஆண் சிசுக்கொலை கேட்டதில்லை காரணம் என்னவாய் இருக்குமென்று தெரியவில்லை.
நன்றி வியார்,
பெண்கள் நுழையக் கட்டுப்பாடுள்ளக் கோயிலுண்டு, ஆண்கள் நுழையக் கட்டுப்பாடுள்ள கோயிலைக் கேள்விப்படவில்லை, விவரமிருந்தால் சொல்லவும்.
பெண் சிசு கொலை நடத்தப்பட்ட இடங்கள், நடத்தப்பட்ட விதம் குறித்து முழு தகவல்கள் தெரியவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சொன்னார்கள். வேறு எங்கெல்லாம் பெண் சிசு கொலை நடந்தது என தெரியவில்லை. இப்பொழுதும் தொடர்கிறதா எனும் விசயமும் அறிந்து கொள்ள இயலவில்லை.
ஆண் சிசு கொலையை பற்றிய செய்திகளே இல்லைதான்.
ஒரு ஊரை சேர்ந்த சமூகம், பெண்கள் என்றாலே பிரச்சினை எனும் பார்வையை எடுத்து கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் சொந்த உயிரையே கொள்ளும் அளவுக்கு மதி இழந்த, போராட தெரியாத மனிதர்களால் நிகழ்த்தப்பட கொடூரம் எனவும் கொள்ளலாம்.
நன்றி விஜேஆர்.
பதில் போட்டுட்டேன்... :) நன்றி..
ஆஹா விஜெஆர். மிக்க நன்றி.
பெண்களுக்கென கட்டுப்பாடு விதித்த சமூகத்தை என்னவென்று சொல்வது.
தங்களுக்கென கட்டுபாடுகளை விதித்து கொண்ட பெண்களை எப்படி மாற்றுவது.
பெண்களை எதற்கு கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்பது குறித்து கோவியார் எழுதி இருந்ததாக நினைக்கிறேன். தேடி பார்த்து இணைப்பு தருகிறேன்.
மிக்க நன்றி கவிதா. விரைவில் படித்து தெளிந்து கொள்கின்றேன்.
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மனைவிகள் உள்ள கணவர்களைக் கண்டதுண்டு, ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணவனுடைய பெண்களை கேள்விப்பட்டதில்லை. பெண்களும் அப்படியிருக்கலாமென்பது ஆதங்கம் இல்லை. அப்படி இருக்கும் ஆண்களை (கலைஞர் !!!??? ஹஹ) என்ன சொல்லலாம்.
மிக்க நன்றி சார். உங்கள் பதில் சுவையாகவே இருக்கிறது.
பெண்களை முக்கியப்படுத்தி எடுக்கும் திரைப்படங்கள் எண்ணக்கூடிய அளவில் இருப்பதற்கும் ஆணின் வீரதீரங்களையேக் காட்டும் படங்கள் அதிகமாக இருப்பதற்கும் எதாவது விசேசம் உண்டா?
தாசிகள் கண்ட நம் சமூகம் ஏன் ஒரு தாசிகனைக்கூட காண முற்ப்பட்டதில்லை?
ஹா ஹா. இது போன்ற கணவர்களை இங்கே குற்றம் சொல்ல முடியாது. எதையும் சகித்து போகும் தன்மையுடைய குணநலன்கள் உடையவர்களைதான் குற்றம் சொல்ல வேண்டும்.
ஐந்து ஆண்களை மணமுடித்த பாஞ்சாலிக்கு மகாபாரதத்தில் இடப்பட்ட பெயர் தெரிந்து இருப்பீர்கள். சமூகம் அவ்வளவுதான்.
தற்போது ஒரு சின்ன சர்ச்சை கிளம்பியது உண்டு. அதாவது ஒரு படத்தில் ஒரு பெண் இரண்டு ஆண்களை மணமுடித்து கொள்வது போல கடைசி காட்சி அமைத்துவிட்டார்கள் என்பது.
இது ஒரு கலாச்சார சீரழிவு என்று அந்த இயக்குனர் மீது பாய்ந்தார்கள். அவரோ அந்த இருவரில் யாரை தேர்ந்தெடுக்கிறார் என்பதுதான் கதை என முடித்துவிட்டார்.
ஒரு மணமுடித்த பெண் மற்றொரு ஆணை திருமணம் செய்ய நினைத்தால் முதல் திருமணத்தை விவாகரத்து செய்துவிட்டுதான் திருமணம் செய்கிறார்.
புரட்சிகரமாக நான் ஏதாவது எழுதப் போய் பெரியாரிடம் கேட்டது போல என்னிடம் கேட்டு தொலைக்க போகிறார்கள்.
குழந்தைகளுக்கு அப்பாவின் இனிசியலை நுழைத்த நம் சமூகம் அம்மாவின் இனிசியலை அழித்த மர்மம் பற்றி தங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்ற யோசனையில்,
சார் சும்மா தோனுச்சுன்னு கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கும் தெரிஞ்சுக்க ஆசைதான்.
மிக்க நன்றி விஜெஆர்.
ஆண்கள் பெண்களை பார்க்கும் விதத்திற்கும், பெண்கள் ஆண்களை பார்க்கும் விதத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு.
சுருக்கமாக ஒரு ஆண், பெண்ணை அடக்க ஒடுக்கமாக அடங்கி போக கூடியவராக பார்க்கிறார்.
ஒரு பெண், ஆணை புஜ பலம் நிறைந்தவராகவும், தன்னை காப்பாற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இது ஒரு பொதுவான தீர்மானம்.
இதன் காரணமாகவே பெண்களுக்கு 'தீயணைப்பு படை வீரர்களை' அதிகம் பிடிக்கும் என ஒரு கணக்கெடுப்பு வந்து தொலைந்தது.
மேலும் படங்களிலும் இதே போக்கினை கடைபிடித்தார்கள். இது போன்ற எண்ணம் உடைய பெண்களிடம் சிக்கி கொள்ளும் கணவர்களின் பாடு என்னவோ அதோ கதிதான்.
எங்களை எப்படி இப்படி நீ சொல்லலாம் என மகளிர் அமைப்புகள் என் மீது பாயாமல் இருந்தால் அதுவே நான் செய்த பெரிய புண்ணியம்.
//தாசிகள் கண்ட நம் சமூகம் ஏன் ஒரு தாசிகனைக்கூட காண முற்ப்பட்டதில்லை//
பலரிடம் செல்லும் ஒரு ஆண் நிச்சயம் தாசிகன் தான். இதை ஏற்க மறுத்த சமூகத்தை என்னவென சொல்வது. இதுவேதான் வைப்பாட்டி எனும் சொல்லுக்கும் பொருந்தும். அந்த பெண்ணுக்கு இரண்டு பேர். இவருக்கும் இரண்டு பேர். எனவே இவரை வைப்பணன் என அந்த பெண் அழைக்காமல் விட்டது அந்த பெண்ணின் பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த சமூகத்தின் ஓரவஞ்சக பார்வையை காட்டுகிறது.
ஓகே சார். உங்கள் சுவையான பதிலுக்கு நன்றி. ஆணாதிக்கமோ அல்லது பெண் அடங்குதலோ தெரிஞ்சோ தெரியாமலோ நடந்துகிட்டுதான் இருக்கு. அது சீக்கிரம் மாறனுமுன்னா,
1. ஆண்கள் பெண்களை சமமாக நடத்துவது பெருமை அல்ல, அது பெண்களின் உரிமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
2. தங்கள் ஒருவரை மட்டும் கருத்தில் கொண்டு பெண்கள் எல்லோரும் சுபிட்சம் அடைந்ததாக எண்ணிக்கொள்ளும் பெண்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்.
//குழந்தைகளுக்கு அப்பாவின் இனிசியலை நுழைத்த நம் சமூகம் அம்மாவின் இனிசியலை அழித்த மர்மம் பற்றி தங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்ற யோசனையில்
சார் சும்மா தோனுச்சுன்னு கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கும் தெரிஞ்சுக்க ஆசைதான்//
உங்கள் சாதுர்யமான கேள்விகளை நினைத்து வியக்கும்போதே எனக்கு முதலில் பாராட்டு வேறு தந்து இருக்கீங்க. நன்றி விஜெஆர்.
இது எண்ணங்களின் பரிமாற்றங்கள். முடிந்தவரை எனக்கு தெரிந்ததை எழுதி விடுகிறேன். இது சரியோ தவறோ என்பதை நாம் நிர்ணயிக்க இயலாது.
ஒரு கணக்கு உண்டு. அதாவது பெண்மையை இழிமை படுத்தும் கணக்கு. அன்னை சொல்லாமல் குழந்தைக்கு தந்தை எவரென தெரியாது என. இது உண்மையான கருத்தாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் என்பவர் வழி தவறி போகமாட்டார் என்பதற்கான சாத்திய கூறுகளோ நம்பிக்கைகளோ இவ்வுலகில் இருந்திருக்கவில்லை என்பதால்தான் இந்த கூப்பாடு. ஒரு பெண் மணமுடித்து விட்டால் அந்த பெண் பெறும் குழந்தைக்கு தகப்பன் அந்த பெண்ணின் கணவன் என்பதில் என்ன வேறுபாடு வேண்டி இருக்கிறது. ஆனாலும் பெண்களின் மேல் சந்தேகப்பட்டது சமூகம். அதன் காரணமாகவே தந்தையின் பெயர் சூட்டி கொண்டது, அன்னையின் பெயர் இல்லாமலே, பெற்றவர் இவர் என தெரிந்து போவதால் இனிசியல் அவசியமற்று போய் இருக்க கூடும்.
ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. இதெல்லாம் உண்மையா என கதை சொன்ன என் பெரியம்மாவிடம் கேட்டால் ஆமாம் என அலட்டாமல் சொல்கிறார்.
எங்கள் கிராமத்தில் சராசரியாக நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு உண்டு. நினைத்தவர்களுடன் பிள்ளை பெற்று கொள்ளும் பெண்கள் இருந்தார்களாம். இந்த கதையை கேட்டபோது எனக்கு 'திக்' என்று இருந்தது. இதன் காரணமாகவும் இனிசியல் தோன்றி இருக்கலாம். எவர் கண்டது. இந்த சமூகத்தின் பார்வை மிகவும் வஞ்சகம் நிறைந்தது.
//ஓகே சார். உங்கள் சுவையான பதிலுக்கு நன்றி. ஆணாதிக்கமோ அல்லது பெண் அடங்குதலோ தெரிஞ்சோ தெரியாமலோ நடந்துகிட்டுதான் இருக்கு. அது சீக்கிரம் மாறனுமுன்னா,
1. ஆண்கள் பெண்களை சமமாக நடத்துவது பெருமை அல்ல, அது பெண்களின் உரிமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
2. தங்கள் ஒருவரை மட்டும் கருத்தில் கொண்டு பெண்கள் எல்லோரும் சுபிட்சம் அடைந்ததாக எண்ணிக்கொள்ளும் பெண்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்.//
கருத்து பரிமாற்றத்திற்கும் நல்லதொரு அறிவுரைக்கும் மிக்க நன்றி விஜெஆர். வணக்கங்கள் பல.
நல்ல கருத்து பறிமாற்றம் ..
நன்றி ஐயா
Post a Comment