Monday, 18 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5

ஊட்டி செல்ல வேண்டாம், மூணாறு செல்லலாம் என முடிவு எடுத்தோம். கோயமுத்தூரில் உள்ள எனது சகோதரியின் வீட்டில் தான் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்த பின்னர் கணினியை தொட்டேன். மூணாறில் எங்கு தங்குவது என்பது குறித்தான தகவல்கள் பெற முயற்சித்தேன். அரை மணி நேரம் ஆகியும் எதுவும் முடிவு செய்ய இயலவில்லை. எனது பாவா மஹிந்திராவில் தங்கலாம் என யோசனை சொன்னார். கடைசியாக மூணாறு சென்று பார்த்து கொள்ளலாம் என கிளம்பினோம்.

இந்த கோயமுத்தூர். இந்த ஊரை சுற்றி எழுத்துலகில் இருக்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். எனது உறவுக்காரர்கள் இருக்கிறார்கள். இந்த முறையும் எவரையும் பார்க்காமல் சென்றது மனதில் வருத்தம் தான். அதிலும் குறிப்பாக நாமக்கலில் வசிக்கும் தினா. சென்றமுறை நாங்கள் இந்தியா சென்றபோது நட்பின் புதிய கோணம் பற்றி எனது மனதில் விதைத்து இருந்தார். இந்த முறை நாமக்கல்லோ, சேலமோ செல்லும் வாய்ப்பை உருவாக்கி கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு அழைப்பு கூடவா என்னால் அழைக்காமல் போக முடிந்தது. என்னை நானே பல கேள்விகள் கேட்டு கொள்கிறேன். அதிலும் குறிப்பாக ஏனிந்த சோம்பேறித்தனம்? ஏனிந்த புறக்கணிப்பு?

இந்த தருணத்தில் எனது மூத்த சகோதரரின் மகன் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு இந்தி தெரியாது என்பதாலும், கோவா சற்று ஆபத்துக்குரிய பகுதி என அவன் நினைத்ததாலும் நாங்கள் கோவா செல்கிறோம் என தெரிந்ததும் மும்பையின் அருகில் வேலை பார்க்கும் அவனது அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு நாங்கள் கோவாவில் இருந்த போது எங்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தான். எனது மகனுக்கு அவன் வந்து இருந்தது மிகவும் சௌகரியமாக போய்விட்டது. செல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு சந்தோசமாக சுற்றினார்கள். எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவன் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தியது. எந்த ஒரு விசயத்துக்கும் பதட்டம் கொள்ளாமல் அவன் கையாண்டவிதம் எனக்கு வியப்பை அளித்தது. அவனது நகைச்சுவை உணர்வும், எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும் தன்மையும் அந்த விடுமுறையை மிகவும் கலகலப்பாக்கின. அவனுடன் இருந்த நாட்கள் எனது மகனின் மனதில் நிறைய சந்தோசம் கொண்டு வந்து இருந்தது. அவன் மும்பை நோக்கிய பயணம் தொடங்கிய தினம் அன்று எனது மகன் கேவி கேவி அழுதான். வாழ்க்கையின் பிரிதல் பற்றி மகனுக்கு புரிய வைத்தேன். இருந்தாலும் சில மணித் துளிகள் அழுது கொண்டேதான் இருந்தான். இப்படித்தான் சென்ற வருடமும் இந்தியாவை விட்டு நாங்கள் கிளம்பி வந்தபோது எனது மகன் அழுதான்.

இனி மூணாறு.

கோயமுத்தூரில் இருந்து மாலை நான்கு மணிக்கு கிளம்பி உடுமலைபேட்டை வழியாக பயணம். கோயமுத்தூரில் கிளம்பி கொஞ்ச தூரம் வந்தபின்னர், நாங்கள் மூணாறு செல்வது குறித்து எனது சகோதரன் மகனிடம் சொல்லி ஹோட்டல் மகிந்திராவின் விபரம் அறிய சொன்னேன். முகவரியை, தொலைபேசி இலக்கத்தை குறுஞ்செய்தி அனுப்ப சொல்லி இருந்தேன். அவனும் அனுப்பி இருந்தான். இடம் இருக்கிறது எனவும் சொன்னதாக சொன்னான். பாதை அத்தனை சீராக இல்லை. இருபுறங்களிலும் காடுகள் தென்படுகின்றன. வாகனத்தை ஓட்டிய நண்பர் யானை எல்லாம் வரும், புலி எல்லாம் வரும் என பயமுறுத்துகிறார். யானை தள்ளிவிட்ட வானகங்களை எல்லாம் நினைவுபடுத்துகிறார். பயணம் தொடர்கிறது. வாகனங்கள் மிகவும் குறைவாகவே பாதையில் தென்படுகின்றன. யாரும் அதிகமாக இந்த சாலையை உபயோக படுத்துவதில்லை என்கிறார் நண்பர்.

வாகனம் வேகமாக செல்லும் வாய்ப்பு இல்லை. பாதைகள் வளைவுகளாலும், ஆபத்துகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. இயற்கையை ரசித்த வண்ணம் பயணம் தொடர்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கின்றன. வாகனத்தில் கோளாறுதனை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களது வாகனத்தின் வேகம் மட்டுபடுகிறது. எங்களை நோக்கி 'அங்கே யானை நிற்கிறது, யானை நிற்கிறது' என்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறோம். வாகனத்தில் நான், எனது மனைவி, எனது மகன், வாகனத்தை ஓட்டும் நண்பர். பின்னர் அவர்களாகவே சொல்கிறார்கள். காட்டு அதிகாரிகள் இருக்காங்க, போங்க, பிரச்சினை இல்லை.

வாகனம் மெதுவாகவே செல்கிறது. சற்று தொலைவில் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து பயணிகள் காட்டு அதிகாரிகளின் வாகனத்துக்கு மாற்றப்படுகிறார்கள். எங்களை நோக்கி வாங்க வாங்க என சைகை செய்கிறார்கள். காட்டு அதிகாரிகளின் வாகனம் முன் செல்ல, மூன்று சக்கர வாகனம் பின் செல்ல கடைசியாக நாங்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஐந்து யானைகள் சாலையின் இடப்புறம் தென்படுகிறது. எனது மனைவி பின் இருக்கையில் இருந்தவாறு அந்த நிகழ்வினை படம்பிடித்து கொண்டிருக்கிறார். காட்டு அதிகாரிகளின் வாகனம் கடந்து செல்கிறது. மூன்று சக்கர வாகனமும் கடந்து செல்கிறது. நானும் யானைகளை கவனிக்கிறேன். சின்ன குட்டி யானைகளுடன் சில யானைகள் உணவு அருந்தி கொண்டிருக்கிறது. திடீரென ஒரு யானை.

நினைக்கும்போதே பயம் மனதில் அப்பி கொள்கிறது. எங்களை நோக்கி பாய்ந்து வந்தது. அதனுடைய சீறலை படம் பிடித்து வைத்திருந்தோம். வாகனத்தை வேகமாக செலுத்த இயலாதவண்ணம் முன்னால் மூன்று சக்கர வாகனம். அந்த யானை தொடர்ந்து வருகிறதா என்பதை கூட பார்க்க முடியாத மனநிலை. ஒலிப்பானை அழுத்துகிறார் நண்பர். என்ன செய்ய இயலும். ஆனால் யானை அப்படியே அங்கேயே நின்றுவிட்டது போல. சிறிது தூரம் சென்ற பின்னர் காட்டு அதிகாரிகள் இறங்கி வருகிறார்கள். எங்களை நோக்கி சத்தம் போடுகிறார்கள். எதற்கு ஒலிப்பானை அழுத்துகிறீர்கள் என. நிலைமையை சொன்னோம். இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என எச்சரித்து அனுப்பினார்கள். அதற்கு பின்னர் யானை பற்றிய பயம் அதிகமாகவே இருந்தது. இருட்ட தொடங்கியது. மழையும் பெய்ய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் யானை வந்துவிடுமோ என யானையை பற்றி பேசி யானை பயம் போக்கி கொண்டு இருந்தோம். மூணாறு அடைந்தோம். இனி எந்த ஹோட்டலை எப்படி தேட! மூணாறில் எந்த ஹோட்டலும் சரியாக தென்படவில்லை. ஹோட்டல் மஹிந்திரா செல்லலாம் என முடிவு எடுத்தோம். மூணாறில் இருந்து இருபத்தி மூன்று கிலோமீட்டர்கள். இரவு எட்டு மணி ஆகி இருந்தது. ஹோட்டலுக்கு அழைத்தால் எவரும் எடுக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பாதை மாறி சிறிது தூரம் கொச்சின் செல்லும் பாதையில் சென்றோம். மனதிற்கு தவறு என தோன்றியதும் நண்பரிடம் சொல்லி விசாரித்து மதுரை செல்லும் பாதையில் விரைந்தோம்.

சரியான இருட்டு. மலைபாதை. நண்பர் மிகவும் தைரியமாகவே வாகனம் ஓட்டினார். அதெல்லாம் போயிரலாம் என நம்பிக்கையுடன் சொல்கிறார். அவர் இதற்கு முன்னர் இங்கு வந்ததில்லை. எவரிடமும் கேட்க வழியும் இல்லை. தொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. சென்று கொண்டிருக்கும்போதே பாதையை விட்டு தனியாக வேறொரு பாதை சூரியகனல் (நினைக்கிறேன்) வழி என பாதை தென்படுகிறது. குறுஞ்செய்தியில் வந்த முகவரி மனதில் ஆடுகிறது. இதோ இதுதான் வழி என செல்கிறோம். சில நிமிடத்தில் மஹிந்திரா தென்படுகிறது. மிக்க நன்றி சீனி. திட்டமிடாத பயணம் படு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிறையவே தைரியம் உங்களுக்கு என வாகனம் ஓட்டிய நண்பரிடம் சொன்னேன். சிரித்து கொண்டார்.

அன்று ஒரு தினம் மட்டுமே அங்கு தங்கிவிட்டு மறுநாள் மூணாறில் சில இடங்களை சுற்றி பார்த்தோம். அருப்புகோட்டை செல்லலாம் என கிளம்பினோம். வழியில் கொச்சின் 143 என ஒரு அறிவிப்பு கல் தென்பட்டது. வாகனம் கொச்சின் சென்றதா? அருப்புகோட்டை சென்றதா?

(தொடரும்)

11 comments:

பழமைபேசி said...

ம்ம்.... எங்க ஊருக்கு எல்லாம் போயிருக்கீங்க....

Radhakrishnan said...

ஆமாம் பழமைபேசி அவர்களே. :) மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன் /r

தாயகம் வந்திருக்கிறீர்க்ளா ? மதுரை வரும் திட்டம் உள்ளதா ? நான் மதுரையில் தான் இருக்கிறேன். சந்திக்கலாமே ! 98406 24293

sathishsangkavi.blogspot.com said...

எங்க ஊருக்கு சொல்லாமையே வந்துட்டு சொல்லாமையே போய்ட்டீங்க...

Radhakrishnan said...

தாயகம் வந்து திரும்பிவிட்டேன் ஐயா. சந்திக்காமல் இந்த முறையும் போனதற்கு வருந்துகிறேன். விரைவில் தங்கள் எண்ணுக்கு அழைக்கிறேன்.

வருந்துகிறேன் சங்கவி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பயணக்கட்டுரை அருமை.
//வாகனம் கொச்சின் சென்றதா? அருப்புகோட்டை சென்றதா?//---கொச்சின்..!

Chitra said...

அருமை... படங்களும் இணைத்து இருக்கலாமே!

எம் அப்துல் காதர் said...

ஊர்களை பகிர்ந்து கொண்ட விதம் அருமையா இருக்கு சார்.

சைவகொத்துப்பரோட்டா said...

சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே! தொடருங்கள்.

சுந்தரா said...

மூணாறு பற்றிய தகவல்கள் அடுத்த வருட பயணத்திட்டத்துக்கு உதவும் :)

படங்களையும் பகிர்ந்திருக்கலாம்...

நன்றி ரங்கன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஆஷிக். மிக சரியான விடை. :)

மிக்க நன்றி சித்ரா. அடுத்த பதிவில் இணைத்து விடுகிறேன்.

மிக்க நன்றி அப்துல்காதர்

மிக்க நன்றி பரோட்டா

மிக்க நன்றி சகோதரி. அடுத்த முறை பகிர்கின்றேன்.