அதிகாலை எழுந்து காங்கேயனத்தம் பயணம் செய்தோம். எனது மாமா வழியினர் கும்பிடும் குல சாமி என சொன்னார்கள். எனக்கு இதற்கு முன்னர் இந்த ஊருக்கு சென்றதாக நியாபகம் இல்லை.
இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பார்த்தாலும் புது கோவில் கட்டி கும்பாபிஷேகம் என ஒரு பக்கம். சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன கும்பிடரதுக்கு நாங்க இருக்கோம் என மனிதர்கள் இருக்கும் வரை இறைவனுக்கு அழிவே இல்லை. இந்த சடங்குகள், சம்பிராதயங்கள் எல்லாம் கடந்துவிட்டேன் என சொன்னாலும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்லை. மனிதர்களுடன் மனிதராய் கலந்து கொள்வதில் சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. பலருடன் சிரித்து மகிழ்ந்து பேச ஒரு வாய்ப்பாக அமைந்தது என சொல்லலாம்.
அந்த திருவிழாவில் பல உறவினர்களை சந்தித்தேன். எவரது வீட்டுக்கும் சென்று பார்க்க வேண்டிய சூழல் தேவையற்று போனது. பலருக்கும் அன்னதானம் இடப்பட்டது. கும்பாபிஷேகம் முடித்த மறு கணம் பெங்களூர் செல்ல வேண்டுமென அருப்புகோட்டை வந்து மதியம் மதுரை அடைந்தோம். மதுரையில் இருந்து நேராக பெங்களூர் விமான பயணம். விமான பயணம் மிகவும் நன்றாகவே இருந்தது.
பெங்களூர் இறங்கியதும் லண்டன் போன்ற தட்பவெப்ப நிலை. விமான நிலையத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் அருமையாக இருந்தது. பெங்களூரில் அன்றே கடைகளுக்கு சென்றோம். பெரிய பெரிய கடைகளாக இருந்தது. மறு தினம் மைசூர் பயணம். செல்லும் வழியில் கைவினை பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் கடைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது.
பெங்களூரில் இரண்டு நண்பர்களை சந்திக்கலாம் என நினைத்து இருந்தேன், ஆனால் மைசூர் செல்லும் பயணம் அமைந்ததால் அந்த வாய்ப்பு ஏற்படுத்த இயலவில்லை. பிருந்தாவன், மைசூர் அரண்மனை, சாமுண்டி கோவில், திபெத்தியர்கள் வாழும் பகுதி என பல இடங்களை இரண்டு தினம் சுற்றி பார்த்தோம்.
தமிழர்களை மிகவும் ஏளனமாகவே கன்னடர்கள் நடத்துவதுண்டு, பார்ப்பது உண்டு என எனது மாமா மகளின் கணவர் சொன்ன போது தமிழர்களை தமிழர்களே ஒழுங்காக நடத்துவதில்லை என்பதை நினைவு படுத்தினேன். எதற்கு வெளிநாட்டில் சென்று வாழ்கிறீர்கள், இங்கே வந்து பலரது வாழ்க்கையை உயர்த்தலாமே ஏன் எல்லாரும் வெளிநாடு வெளிநாடு என சென்றுவிடுகிறார்கள் என அவருடனான உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது. படித்தவர்கள் பறந்துவிடுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எப்போதும் இந்தியாவில் உண்டு. படிக்காதவர்களும் பறந்துவிடுகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது. பொருளாதார விசயத்துக்காக இடம் மாற்றம் நிகழ்ந்துவிடுவதுண்டு. பொருளாதாரம் என வரும்போது தன்னிறைவு என்பது நிகழ வாய்ப்பே இல்லை. எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.
பெங்களூர் சுற்றி பார்க்கவே இல்லை. ஒரு சில இடங்கள் மட்டுமே பார்த்தோம். கிருஷ்ணர் ஆலயம் செல்லலாம் என சொன்னார்கள். கடைகள் செல்வோம் என பல பொருட்கள் வாங்கினோம். அங்கிருந்து கோவா விமானத்தில் சென்றோம். கோவா.
கற்பனை ஊர். வடக்கு கோவா, தெற்கு கோவா என பிரிக்கப்பட்டிருக்க நாங்கள் பார்க் ஹையட் ஹோட்டலில் தங்கி இருந்தோம். அது மத்திய கோவாவில் இருந்தது. கொங்கனி பேசும் மொழியாம். ஆனால் ஆங்கிலம் அதிகம் பேசுகிறார்கள். அற்புதமான ஹோட்டல். நூறு ஏக்கர் பரப்பளவில் கடற்கரையுடன் அமைந்து இருந்த அருமையான ஹோட்டல். எங்கும் செல்ல வேண்டியதில்லை என்பதுபோல் இருந்தது.
இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். முதல் வடக்கு கோவா சென்றோம். செல்லும் இடமெல்லாம் கடற்கரை. மற்றும் சின்ன சின்ன ஆலயங்கள். தேவாலயங்கள் சில சென்றோம். போர்ச்சுகீசியர் அடையாளங்கள் சில இருந்தன. பம்பாய் படத்தில் எடுக்கப்பட்ட கோட்டை ஒன்று சென்றோம். சாலைகள் எல்லாம் அருமையாக இருந்தது. சுற்றியும் நல்ல இயற்கை வளங்கள்.
அடுத்த தினம் முற்றிலும் வித்தியாசமான கோவா பார்த்தோம். ஜன நெருக்கடி. பழைய கட்டிடங்கள் என தெற்கு கோவா காட்சி அளித்தது. மீண்டும் கடற்கரை. கோவா மறக்க முடியாத இடம் தான். ஹோட்டலில் மட்டுமே தங்கி இருந்துவிட்டு வரலாம் என்பது போன்ற ஊர் தான்.
அங்கிருந்து பெங்களூர் வந்து கோயமுத்தூர் அடைந்தோம். பெங்களூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் விமானம் மாற சரியாக நாற்பது நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் பிரச்சினை இன்றி சென்றது மகிழ்வாக இருந்தது. கோயமுத்தூரில் இறங்கினோம். எங்களது வாகனம் வந்து இருந்தது. எனது சகோதரி வீட்டில் மூன்று மணி நேரமே தங்கி இருந்தோம்.
ஊட்டி செல்வதா, வேண்டாமா என யோசனையில் இருக்க திடீர் திட்டம் உருவானது.
(தொடரும்)
10 comments:
இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் அதிகமாக வருவதில்லை. அதுவும் தேவைதானே பிற ஊர்களை, நாடுகளைப் ப்றறி அறிந்து கொள்ள..கோ..வா போய் வந்ததை பகிர்ந்தது கோவாவுக்கு அழகு சேர்க்கிறது.
அருமையான பயண கட்டுரை. :-)
super
இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பார்த்தாலும் புது கோவில் கட்டி கும்பாபிஷேகம் என ஒரு பக்கம். சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன கும்பிடரதுக்கு நாங்க இருக்கோம் என மனிதர்கள் இருக்கும் வரை இறைவனுக்கு அழிவே இல்லை. ///
மனிதனுக்கு கடவுள் எப்போதும் தேவை. ஒரு வடிகாலுக்காக, ஒரு வேண்டுதலுக்காக,
அருமையான பயணகட்டுரை..
என்னோட பதிவை பாருங்க..
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..
மிக்க நன்றி ஆதிரா.
மிக்க நன்றி சித்ரா.
மிக்க நன்றி பார்வையாளன்
மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா.
மிக்க நன்றி தேனம்மை. பெண்கள் மட்டுமே எழுதுவது என நினைத்து இருந்தேன். விரைவில் படைப்புகளை அனுப்புகிறேன்.
பயணக் கட்டுரைகளை எழுதுவது சற்று சிரமமான வேலை. கொஞ்சம் பிசகினாலும் அலுப்பு தட்ட வாய்ப்புகள் அதிகம்.. நீங்கள் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//
இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.
வாஸ்கோ-டா-காமா, மார்காவ், எல்லாம் ரொம்ப அழகான ஊர்கலாமே!! அங்கெல்லாம் போனீங்களா சார்!!
மிக்க நன்றி மோகன்ஜி
மிக்க நன்றி ராஜ நடராஜன். பல விசயங்கள் அலசினோம், அதை எழுதினால் தனி கட்டுரை ஆகிவிடும். நீங்கள் சொல்வதும் உண்மைதான். இது குறித்து விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என் பார்வையில் இருந்து.
மிக்க நன்றி அப்துல் காதர். சரியாக நியாபகம் இல்லை. பல ஊர்களில் இறங்கி பார்க்கவில்லை. சாலைகள் வழியாக சென்றதோடு சரி.
Post a Comment