வைஷ்ணவி தனது பெற்றோர்களை மறுதினமே ஊருக்கு அனுப்பிவிட்டாள். சில தினம் பின்னர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றவள் மிகுந்த சந்தோசத்துடன் மாலை நேரம் இனிப்புகளை வாங்கிக்கொண்டு ஈஸ்வரியின் வீட்டில் கொடுத்துவிட்டு கதிரேசன் வீட்டிற்கு வந்தாள். அந்த சில நாட்களும் ஈஸ்வரியின் வீட்டில்தான் வைஷ்ணவி தங்கி இருந்தாள்.
''ஸ்வீட் எடுத்துக்கோ? எனக்கு வேலை கிடைச்சிருச்சி'' என ஈஸ்வரியிடம் தந்தாள் வைஷ்ணவி. ''வாழ்த்துகள்'' எனச் சொல்லிக்கொண்டு இனிப்புகள் எடுத்துக் கொண்டாள் ஈஸ்வரி. வெளியே சென்றிருந்த செல்லாயி வந்ததும் அவரிடமும் இனிப்புகள் தந்தாள் வைஷ்ணவி. அவரும் வாழ்த்தினார். காபி போட்டு வருவதாகச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் வரட்டும் என சொன்னாள் வைஷ்ணவி. கதிரேசன் வரும் வரை ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டிருந்தாள். கதிரேசன் பற்றியும் மதுசூதனன் பற்றியும் பேச்சு வந்தது.
''எப்படியெல்லாம் நம்மை ஒருத்தர் இருக்கனும்னு நினைக்கிறாரோ, அவரை நாம எதிர்பார்க்கிறமாதிரி இருக்க வைச்சிரனும் அதுதான் அன்போட வெற்றி. நான் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தா இவர் என்னை கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டார், இவரை என்னைத் தேடிவர வைச்சேன். நீ இப்படி இங்க வேலைப் பார்த்தா மதுசூதனன் எப்படி உன்னைத் தேடி வருவார், உனக்கும் அவருக்கும் எப்படி அந்நியோன்யம் உருவாகும். எண்ணங்களால் காதலிக்கிறது எல்லாம் கற்பனைகாலக் காதல், இப்ப எல்லாம் உடல் ஸ்பரிசமும் வேணும்'' என்றாள் ஈஸ்வரி.
''பார்க்கலாம்'' என வைஷ்ணவி சொல்லும்போதே கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசனை கண்ட சந்தோசத்தில் ''எனக்கு வேலை கிடைச்சிருச்சி கதிரேசா, இந்தா ஸ்வீட்'' என எடுத்துத் தந்தாள் வைஷ்ணவி.
''வாழ்த்துகள், நன்றி'' என இனிப்பு எடுத்துக் கொண்டான் கதிரேசன். கை கால்கள் முகம் அலம்பிவிட்டு வந்து அமர்ந்தான். ஈஸ்வரி காபி போடச் சென்றாள். ''நிறைய கேள்வி கேட்டாங்க. எம் டி ஒரே கேள்விதான் கேட்டார்'' என்றாள் வைஷ்ணவி. ''ஓ என்ன கேட்டார்'' என்றான் கதிரேசன். ''சென்னை, பெங்களூருனு போகாம ஏன்மா இங்க வந்திருக்கனு கேட்டார்?, அதுக்கு நான் இப்படி நகரத்தையே முன்னேத்திக்கிட்டே இருந்தா இந்த ஊரு எல்லாம் எப்ப முன்னேறுரதுனு சொன்னேன், அந்த பதில் பிடிச்சி இருக்குமோ என்னவோ?'' என்றாள் வைஷ்ணவி.
''நீ சங்கரன்கோவிலை முன்னேத்த வந்தியாக்கும்?'' என சிரித்தான் கதிரேசன். வைஷ்ணவி உடன் சிரித்தாள். ''உண்மையிலேயே நீ எதுக்கு இந்த ஊருக்கு வந்தேனு எனக்குத் தெரியும், அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் ஃபோன் போட்டு சொல்லிட்டேன், ரொம்ப சந்தோசப்பட்டாங்க, நான் ஹாஸ்டலுல தங்கிக்கிறப் போறேன், ரொம்ப நாள் ஈஸ்வரி வீட்டுல தங்க முடியாது கதிரேசா'' என்றாள் வைஷ்ணவி. ''எங்களோட தங்கிக்கோ'' என்றான் கதிரேசன். ''ம் அதெல்லாம் சரிப்பட்டு வராது, நான் ஹாஸ்டலுக்கேப் போறேன்'' என சொல்லும்போதே காபியுடன் வந்தாள் ஈஸ்வரி.
''இங்கேயே தங்கலாமே, அத்தையோட ரூமுக்குப் பக்கத்தில ஒரு ரூம் இருக்கு'' என்றாள் ஈஸ்வரி. செல்லாயியும் சம்மதம் சொன்னார். ஆனால் வைஷ்ணவி மறுத்துவிட்டாள். ஈஸ்வரி வைஷ்ணவியை தங்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தினாள். கதிரேசனிடமும் சொன்னாள். ஆனால் வைஷ்ணவி வேண்டாம் என சொல்லிவிட்டு மகளிர் விடுதி ஒன்றில் அன்றே இடம் பார்த்தாள்.
அன்று இரவு ஈஸ்வரி கதிரேசனிடம் வைஷ்ணவி இங்கு வேலை பார்க்க வர காரணம் என்ன என கேட்டாள். ''வைஷ்ணவி மதுசூதனனை விட்டு சற்றுத் தள்ளி சென்றுவிடலாம் என நினைத்துத்தான் இங்கே வந்திருக்கக்கூடும், சென்னை, பெங்களூர் எனும் நகரமெனில் அவனும் அங்கே வேலைக்குச் செல்ல வாய்ப்பு உண்டு, இங்கே அவன் வர வாய்ப்பில்லை என்பதால் இருக்கும்'' என சொன்னான்.
''அருகில் இருந்தும் நான் தள்ளியேதானே இருக்கிறேன்'' என்றாள் ஈஸ்வரி. ''சிவனே! சற்று பொறுத்துக்கொள்'' என்றான் கதிரேசன். ''இன்னும் எத்தனை நாட்களுக்கு?'' என்றாள் ஈஸ்வரி. ''என் மனம் சிவனை உட்கிரகித்துக் கொள்ளும் வரை'' எனச் சொன்னான் கதிரேசன். ''என் சீவன் அகலும் முன்னர் நடந்துவிடும் அல்லவா ஈசனே'' எனச் சொல்லிச் சிரித்தாள் ஈஸ்வரி. ''கோபம் இல்லையா?'' என்றான் கதிரேசன். ''கோபமா?, அன்பில் இடைபுகுமோ கோபம்'' என கதிரேசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
''ஏமாத்துறேனு நினைக்கிறியா, உன்னோட குடும்பம் நடத்துவேனு சொல்லிட்டு...'' என கதிரேசன் சொல்லும்போதே ''செய்ற செயலை தப்பா சரியானு யோசிச்சிட்டே செய்ய வேணாம், இப்போதைக்கு இப்படி எண்ணம் இருக்கறப்ப அப்படியே இருக்கட்டும்'' என இடைமறித்துச் சொன்னவள் ''தனியாப் போய் படுனு என்னை சொல்லலையே'' என்றாள். ''இவ்வளவு புரிஞ்சி வைச்சிருக்க'' என்றான் கதிரேசன். ''இருபக்கமும் புரிதல் இருக்கனுமே'' என கண் சிமிட்டினாள். கதிரேசன் சிரித்தான்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்தான் கதிரேசன். ஈஸ்வரியும் உடன் அமர்ந்தாள். கதிரேசன் பாடினான்.
''உன்னை அருகில் வைத்துக் கொண்டே இல்லையென
கண்ணை மூடியிருத்தல் சுகம் தருமோ ஈசனே
உயிரால் உணர்வால் எனக்காகிய இவள் வாழ்க்கை
வயிறும் காணுமோ சொல்சிவனே''
பூஜை முடிந்ததும் சாப்பிட்டான் கதிரேசன். அலுவலகத்திற்குக் கிளம்பும் முன்னர் கதிரேசனிடம் ஈஸ்வரி சொன்னாள். ''இனி சிவன்கிட்ட பாடறப்ப, மாயமும் மந்திரமும் தராது, தாயத்தும் வழியும் சொல்லாது, உன் தாரம் தானாய் உருவாக்கிய பிள்ளையார் போல் என் தாரமும் ஒரு பிள்ளையை தானாக உருவாக்குவாரோ சொல்சிவனேனு கேட்கலாமே'' என்றாள் ஈஸ்வரி. ''மனசுக்குள்ள வெறுப்பு உருவாகுதுல்ல'' என்றான் கதிரேசன். ''எப்பவுமே அதுக்கு நான் இடம் தரமாட்டேன், என்னோட விருப்பத்தையும் கேட்கச் சொன்னேன், வெறுப்பை வளர்க்கிறோமோ என நினைக்கிறிங்களோ'' என்றாள் ஈஸ்வரி. இல்லை என தலையாட்டிவிட்டு நடந்தான் கதிரேசன்.
''எப்பதான் அவனுக்கு சிவன் பைத்தியம் தெளியுமோ?'' என்றார் செல்லாயி. ''என்ன அத்தை?, அதெல்லாம் தெளிஞ்சிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'' என்றாள் ஈஸ்வரி. ''நானும் ஒரு பொண்ணும்மா'' என்றார் செல்லாயி. ''அத்தை நான் பக்கத்து ஸ்கூல டீச்சரா வேலைக்கு சேரப் போறேன், ஸ்கூல் அப்பாவோட பிரெண்டோடது. அவர் முன்னமே சொல்லிட்டு இருப்பார், படிச்சி என் ஸ்கூலுக்குத்தான் வேலைக்கு வரனும்னு'' என்றாள் ஈஸ்வரி. ''ம் சரிம்மா'' என்றார் செல்லாயி.
ஈஸ்வரி கதிரேசனிடம் அன்று மாலையில் பள்ளி வேலை விசயத்தைக் கூறினாள். கதிரேசனும் சரியென சொன்னான். அன்று மாலை வைஷ்ணவி கதிரேசனின் வீட்டுக்கு வந்தாள். 'கதிரேசனிடம் ''மதுசூதனன் ஃபோன் பண்ணினான்'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன விசயம்?'' என்றான் கதிரேசன். ''அவனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சாம்'' என்றவளின் கண்கள் கலங்கியிருந்தது. ''உட்கார்'' என சொன்னவன் ''ஈஸ்வரி இங்கே வா'' என்றான்.
(தொடரும்)
2 comments:
உங்கள் எழுத்து நடை, காட்சிகளை கண் முன்னால் கொண்டு வருகின்றது. அருமை.
மிக்க நன்றி சித்ரா.
Post a Comment