Friday, 8 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 27


சமணர் கோவிலுக்குள் சென்றதும் அங்கே கருவறையின்றி இருந்தது. கோவிலில் ஒரு சுவருக்குப் பக்கத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தது. நூலகம் போலல்லவா இருக்கிறது என மனதில் நினைத்தான் கதிரேசன்.

கதிரேசன் தன்னை அறிமுகப்படுத்தி வைஷ்ணவியையும் அறிமுகப்படுத்தினான். அவரும் தன்னை ஆதிராஜன் என அறிமுகப்படுத்திக் கொண்டவர் வைஷ்ணவியை ஏற்கனவேத் தெரியும் என்றார். சமணர்கள் பற்றி நேரடியாய் அறிந்து கொள்ளவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தான் கதிரேசன். ஓரிடத்தில் மூவரும் அமர்ந்தார்கள். சிலர் அங்கே புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என அமைதியான குரலில் பேசுமாறுக் கேட்டுக்கொண்டார். 

''
சமணர்களைப் பற்றித் தெரிய வேண்டுமா, ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன். எல்லா உயிர்களும் சமணர்களே'' என்றார். புரியாது விழித்தான் கதிரேசன். ''எல்லா உயிரும் எப்படி சமணர்களாகக் கூடும்'' எனக் கேட்டான் கதிரேசன். ''சமணம் என்பதற்கு முயற்சியாளர், வெற்றியாளர் என்பது பொருள், எனவே இங்கே உள்ள எல்லா உயிர்களும் வெற்றியாளர்கள் தான்'' என பதிலளித்தவர் அங்கே இருந்த மண்பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருந்தது.

''
நீங்க வணங்கும் தெய்வமான ஆதிநாதர்?'' என்றான் கதிரேசன். ''எல்லா இடத்திலும் இருக்கும் பேரருளானை இங்கே மட்டும் நிறுவிட முடியுமா?'' என்றார். அதற்கு கதிரேசன் ''அதில்லை, கோவில் என்றால் தெய்வம் இருக்க வேண்டும், தீபம் எரிய வேண்டும், கோவில் சுவர்கள் அலங்காரம் கொண்டிருக்க வேண்டும், சிலைகள் வடித்திருக்க வேண்டும்'' என்றான். ''யார் வைத்த சட்டம்? எங்கேனும் எழுதப்பட்டிருக்கிறதா?'' என்றார். வைஷ்ணவி அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.

''
சம்பிரதாயங்கள், நாகரிங்கள் என இருக்கு! சமணர்கள் நிர்வாணமாகத்தானே இருந்திருக்கிறாங்க, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எல்லாம் நிர்வாணமாக இருந்தன, அதனால அவர்கள் சமணர்கள்னும் ஆதிநாதர் சமணக்கடவுள்னும் அவரது சிலையும் நிர்வாணமாகத்தான் கண்டு எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறதே'' என்றான்.

''
நீ வைணவம் தானே?'' என்றார். ''இல்லை நான் சைவம்'' என்றான். வைஷ்ணவி பேசினாள். ''இவனுக்கு சமணர்களை சைவர்களும் வைணவர்களும் சேர்ந்து என்ன பண்ணினாங்கனுத் தெரியனுமாம், அதனால எதுவும் தப்பா எடுத்துக்க வேணாம்'' என்றாள் வைஷ்ணவி. ''இதுல என்ன தப்பா எடுத்துக்க வேண்டியிருக்குமா, ஒரு ஊரில அந்த காலத்தில நடந்த விசயத்தினால மொத்த சமணர்களும் தப்புனு ஆயிருச்சி'' என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர் ''நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா இருந்தா மொத்தக் கோவில்களுமே சமணர் கோவில்கள் தான்! கோவிலுல வடிக்கப்பட்ட சிலைகள் எல்லாம் நிர்வாணமாகத்தானே இருக்கு. கோபுரத்தில பார்த்தா எல்லாமே நிர்வாணம்தான், அதைக் கலைனு சொல்லிட்டாங்க, ஆனா அது சமணத்தைக் காட்டுற அடையாளம். அப்புறம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமணக் குழந்தைதான்'' என்றார். ''அப்படியெனில் கற்காலத்தில் அறிவே இல்லாமல் ஆடையின்றி விலங்குகளை கொன்று தின்று திரிந்த அந்த முதல் மனிதர்களும் சமணர்களா'' என்றான் கதிரேசன் கேள்வியில் இருந்த பிரச்சினையை உணராமல்.

''
அன்பை மட்டுமே எல்லா உயிர்களிடத்தில் போதிப்பவர் நாங்கள், இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டாம், இதோ நாங்கள் எல்லாம் ஆடையுடன் தானே இருக்கிறோம். சமணர்கள் என்றால் ஆடையுடுத்தாதவர்கள் என்றில்லை, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காதவர்கள் என பொருள் கொள்ளலாம். துறவற வாழ்க்கையை வழிக்கொண்டவர்களும் உண்டு, எங்களைப் போல இல்லற வாழ்க்கையிலும் இருப்பவர்களும் உண்டு'' எனக் கூறினார் அவர். 

''
சமணம் மட்டும் தானா அன்பை போதித்தது?'' என்றான் கதிரேசன். ''ஆக்கல் காத்தல் அழித்தல் என்பதை கடவுள் செய்யவில்லை, கடவுள் அன்பின் அருளாளன் என்பதை மட்டுமே சொல்லத்தழைப்பட்டது, 24 தீர்த்தங்காரர்களால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது'' என்றார் அவர். ''அப்படி இருந்தவற்றில் பிரச்சினை வந்து அந்தத் தீர்த்தங்காரரில் ஒருவர் பிரிந்து சமணத்திற்கு எதிராக போனதாக வரலாறு சொல்கிறது'' என்றான் கதிரேசன். ''நீ பிரச்சினை பண்ண வேண்டுமென்றே இங்கே வந்திருக்கிறாய்'' என்றார் அவர். 

''
வாதத்தில் சமணர்களால் வெற்றி பெற முடியறதில்லைனு அந்தக் காலத்திலேயே திருஞானசம்பந்தர் நிரூபணம் பண்ணியிருக்கிறாரே'' என்றான் கதிரேசன். ''கதிரேசா, நீ ஏன் இப்படி பேசுற'' என்றாள் வைஷ்ணவி. ''நான் பிரச்சினை பண்ண வரலை, பல விசயங்களைத் தெரிஞ்சிக்கத்தான் வந்துருக்கேன், சில நேரங்களில உண்மை என்னனு கேட்கறப்போ அது கசப்பாத்தான் தெரியும், சாதாரணமா நான் பேசுறது கூட பிரிவினைவாதத்தை உண்டாக்குறமாதிரிதான் இருக்கும், ஆனா இப்படி நடந்துக்கிறவங்ககிட்டயும் அன்பைத்தானே போதிக்கனும்'' என்றான் கதிரேசன். 

கதிரேசனைப் பார்த்தார் அவர். '' என் தப்பு தான்பா, அன்புதான் அடிப்படைனு சொல்லிட்டு நீ இப்படி கேட்கறதெல்லாம் தப்புனு சொல்லி என் அன்பைத் தவறவிட்டுட்டேன், நீ கேட்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்றேன், வாங்க வீட்டுக்குப் போகலாம்'' என ஆதிராஜன் அவர்களை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தார். 


ஆதிராஜனின் வீடு மிகவும் அழகாக இருந்தது. வீட்டின் வாசலில் கால் கைகள் அலம்பிட வேண்டி தண்ணீர் நிறைந்த பாத்திரம் மூடி வைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் இவர்கள் நுழைய உள்ளே புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஆதிராஜனின் மனைவி ஆதிரை வைஷ்ணவியுடன் வந்த கதிரேசனை வரவேற்றார். ''இதுதான் நாங்கள் தங்கியிருக்கும் வீடு'' என சுற்றிக்காட்டினார். வீடெல்லாம் சுற்றிப் பார்த்தனர். ''பூஜை அறை இல்லையா?'' என்றான் கதிரேசன். ''அவசியமில்லைனு விட்டுவிட்டோம்'' என்றார் ஆதிராஜன்.

நாற்காலிகள் எடுத்துப் போட்டு அவர்களை அமரச் சொன்ன ஆதிராஜனிடம். ''உங்க குழந்தைகள்'' என்றான் கதிரேசன். ''எங்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லை, இனிமேலும் அப்படி ஒரு பாக்கியம் அமையப் போவதில்லை'' என்றார் ஆதிராஜன். தண்ணீரும் பலகாரங்களும் கொண்டு வந்து வைத்தார் ஆதிரை. சிறிது நேரம் பிற விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

''
சமணர்களாகவே நீங்கள் இருக்கிறீர்களா?'' என்றான் கதிரேசன். ''எனக்கு விபரம் தெரிந்தவரை எனது முப்பாட்டன்கள் முன்னரே எங்களை சமணர்கள் என்றே அனைவருக்கும் தெரியும். இப்படி சமணர்கள் நிறைந்த ஊராகத்தான் இந்த ஊர் இருந்து வந்திருக்கிறது. சமணபுரம் என்றுதான் முன்னர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது, பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்பொழுது இந்த ஊரில் எட்டு குடும்பங்கள் தான் சமணர்கள்'' என நிறுத்தியவர் ''இதோ என் மனைவியின் குடும்பம் மொத்தமும் இப்பொழுது வைணவர்கள்'' எனச் சொன்னவர் ''எனக்கு இதில் எல்லாம் கவலையில்லை, ஆனால் அன்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமூகமாக போனதில் தான் அதிக கவலை, அதற்கு நானும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறேன்'' எனச் சொல்லும்போதே அவரது குரல் தழுதழுத்தது.

''
அன்பை போதிக்கத்தானே சமயங்கள்'' என்ற கதிரேசனிடம் ''ஆம் எல்லா சமயத்தாரும் அதைத்தான் சொல்லி வந்தார்கள், சிலர் வாழ்ந்து காட்டினார்கள், பெரும்பாலோனோர் அன்பை முன்னிறுத்தி வாழ தழைப்படவில்லை. சமணம் தோன்றியதே அன்பு எங்கும் நிறைந்திருக்க வேண்டும் எனும் அடிப்படையில்தான். அன்றைய காலத்தில் கோவில்கள் கட்டி வாழ்ந்த சைவர்கள், வேதத்தின் அடிப்படையில் தோன்றிய வைணவர்கள் எல்லாம் பிற உயிர்களுக்கு தீங்கிழைப்பதை வழக்கமாகவே கொண்டு வந்தனர். அனைவரும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற கடவுளர்களுக்கு விலங்கினங்களை உயிர்ப்பலியிடுவது என்பது அதிகமாகவே இருந்துவந்தது. மொத்தத்தில் சைவர்கள் எனச் சொல்லப்படும் இன்றைய சைவர்கள் அன்று சைவர்களே அல்லர்''  என்றார். 

 ''
ம்'' என்றான் கதிரேசன். ''இப்படி அன்பில்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு அன்பினைப் போதிக்கத்தான் சமணம் உருவானது. பிற உயிர்களிடத்தும் அன்பு கொண்டிராத வேத மதத்தையும், சைவர்களையும் எதிர்த்தது. இவர்கள் எதற்கெடுத்தாலும் போர் எனும் கொள்கையைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் வேதங்களில் உள்ளது. பஞ்சபூதங்களையும் அன்பின் வழியில் பார்க்காமல் அனைத்தையும் கொடூரமாகப் பார்க்கப்பட்டது மனிதர் தோன்றிய முதலே. ஆனால் அன்பின் வழியில் சென்று கொண்டிருந்த சமண மதம் நாளடைவில் தனது கொள்கையை நிலைநாட்ட அன்பின் வழியில் இருந்து  தவறியது, அங்குதான் பிரச்சினை வந்தது

அன்பு ஒன்றுதான் எல்லாம் என வாழ்ந்த சமணர்கள், சைவர்களின் முன்னேற்றத்தைப் பொறுக்க இயலாமல் தவித்தனர். தமிழில் தலைசிறந்து விளங்கிய சமணர்கள் தலைகுனியத் தொடங்கிய காலம் தான் வைணவப் புலவர்களும், சைவப் புலவர்களும் கோலோச்சிய காலம். தொல்காப்பியம், நன்னூல் என இலக்கணங்களை தமிழுக்குச் சொன்ன சமணர்கள் வாழ்க்கை இலக்கணத்தை மறக்கத் தொடங்கினார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தத்தம் இறைவனை பாடிய பாடல் ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் கொள்கையுடைய இந்த வேத மதச்சாரர்களைக் கண்டு சமணம் வெதும்பியது

ஊர் ஊர் சென்று சிவனைப் பாடி மகிழ்ந்த சம்பந்தரிடம் நேரிடையாய் போட்டிக்கு அழைத்தனர் ஒரு ஊரைச் சேர்ந்த சமணர்கள். அப்படிப் போட்டியில் தோற்பவர்கள் வெற்றி பெற்றவர்களுடன் இணைய வேண்டும், அல்லது மரணிக்க வேண்டும் என்பதே போட்டியின் அரச நீதி. இதில் அரசுக்குத்தான் சம்பந்தமேயன்றி சம்பந்தருக்கு அல்ல, சமணம் அன்பைத் தொலைத்ததால்தான் திருநாவுக்கரசரும் தன்னை மாற்றிக்கொண்டார்.  இங்கே அன்பைத் தொலைத்து நின்றது சைவம் மட்டுமல்ல, சமணமும் தான்.

போட்டியில் வென்றார் சம்பந்தர், மாறினார்கள் சிலர், சிலர் தங்களை மாய்த்துக் கொண்டார்கள். விதிக்கு உட்படாதவர்கள் அரச நீதிப்படி மாய்க்கப்பட்டார்கள். இப்படிப்பட்டத் தவறை அவ்வூர் சமணர்கள் செய்யாமலிருந்திருந்தால் இன்று சமணம் அழிக்கப்பட்டது, பழிக்கப்பட்டது என்பதுத் தெரிந்திருக்க வழியில்லை. வழித் தவறிச் சென்ற சமணர்களைத் தண்டிக்கச் சொல்லி இதைப் பாடலில் வைத்தார்கள் ஆழ்வாரும், நாயன்மாரும். இப்படித் தங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ள அவர்கள் பாடியிருக்க அவசியமில்லை, ஆனால் உண்மையை உள்ளதைப் பகர்வதில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்கள், மொத்தத்தில் அன்பில் இருந்து விலகியதால்தான் சமணம் தன்னை சைவத்திடம், வைணவத்திடம் தொலைக்கத் தொடங்கியது. அன்பே சிவம் என அழுத்திச் சொன்னது இந்த சமணர்கள் அழுந்திப்போகத்தான் என அறியாமலே நடந்தேறியது

அதற்குப் பின்னர் எழுதியவர்கள் சமணர்களின் பால் அன்புகொண்டு வரலாற்றைத் திரிக்க ஆரம்பித்தார்கள். சைவர்கள் அழித்தல் தொழிலில் வல்லவர்கள் எனப் பட்டம் சூட்டப்பட்டார்கள், இப்படி பல அவதூறுகளைக் கிளப்பிச் சென்றனர் சமணர்கள். சைவர்கள் நினைத்திருந்தால் ஒன்று கூட இல்லாமல் அழித்திருக்கக் கூடும், ஆனால் அழிப்பது அவர்களின் வேலையன்று. இப்படி அந்தக்காலத்தில் நடந்த ஒரு விசயத்தை தவறான நோக்கத்தில் பார்க்கத் தொடங்கியவர்கள், தவறாகவே பரப்பத் தொடங்கினார்கள். மொத்த வரலாறும் பழித்துக்கொண்டுதானிருக்கிறது, இப்போதும் பழிக்கப்பட்டுதான் வருகிறது. அன்பைச் சொல்வாரில்லை எவரும்! சமணர்கள் இன்னும் இருக்கிறார்கள், ஆனால் அன்பை ஆதாரமாகக் கொள்ளாமல் எல்லாப் பிரிவினரும் வாழப் பழகிக்கொண்டார்கள், இனி அன்பைப் போதிக்க சமயம் தேவையில்லை, அன்புடன் வாழ மனிதர்கள் தான் தேவை'' என நிறுத்தியவரின் கண்கள் குளமாகி இருந்தது.  கதிரேசன் அப்படியே உறைந்து இருந்தான்.

(
தொடரும்)

9 comments:

pichaikaaran said...

good story... update soon

Radhakrishnan said...

விரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன். நன்றி பார்வையாளன் அவர்களே.

ம.தி.சுதா said...

நான் எதிர் பார்த்து ஆரம்பித்ததை விட அரமையாக இருக்கிறது... அடுத்த பதிவு எப்பொது காத்திருக்கிறென்... என் தள வருகைக்கு மிக்க நன்றி..

ஹேமா said...

வாசிக்க ஆர்வமாக இருக்கிறது.சமயங்கள் போதிப்பது அனபு.மனதில் பதிகிறது டாகட்ர்.அடுத்த பதிவுக்கு ஆவல் !

டாக்டர்...நேற்று உங்கள் பதிவுக்கு "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் எனக்குக் பிடிக்கலன்னு சொல்லியிருந்தேன்.அதைப் பார்த்த யாரோ tamil என்கிற பெயரில் வந்து என்னைத் திட்டிவிட்டு என் மொக்கைக் கவிதைகளைப் பாக்கவேண்டியிருக்கேன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.பாவம்தான் அவங்களும் !

மோகன்ஜி said...

சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம்.. அடுத்த பதிவை பார்க்கும் வரை.. BYE!

அப்பாதுரை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
'பிறிதொரு சமயம் வேண்டேன்' என்ற கருத்தில் சமண மதத்தைக் குறிப்பாகவும் நேரடியாகவும் சைவ இறையிலக்கியங்களில் அடியார்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பாடியிருக்கிறார்கள். வைணவ இறையிலக்கியங்களில் அத்தனை குத்துக்கள் காணப்படவில்லை என்று தோன்றுகிறது.
இங்கே அன்பைத் தொலைத்து நின்றது சைவம் மட்டுமல்ல, சமணமும் தான்/// insightful

Radhakrishnan said...

மிக்க நன்றி சுதா.

Radhakrishnan said...

அடடா! இப்படியெல்லாம் கூட நடக்கிறதா? வருந்துகிறேன் ஹேமா.

Radhakrishnan said...

மிக்க நன்றி மோகன்ஜி மற்றும் அப்பாதுரை.