Wednesday, 11 August 2010

நுனிப்புல் (பாகம் 2) 14

14. விஷ்ணுப்பிரியனின் விஞ்ஞானம்

வாசன் அதிகாலை எழுந்ததும் குளித்துவிட்டு நேராக கேசவன் வீட்டிற்குச் சென்றான். அங்கு அனைவரும் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். விஷ்ணுப்பிரியனும் தயாராக இருந்தார். மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். சுபாவும் பார்த்தசாரதியும் சற்று கவலையாகவே காணப்பட்டார்கள். பூங்கோதை வாசனிடம் நேராக வந்தாள்.

''நீங்க திருவில்லிபுத்தூர் வந்தா எங்க வீட்டுக்கு கட்டாயமா வாங்க''

''கட்டாயமா வரேன், ஆனா நீங்க இந்த ஊருக்கு வியாழக்கிழமை வந்துருவீங்களே''

''இல்லை என் படிப்பு முடியறவரைக்கும் மூணு மாசம் மேல அங்கதான் இருக்கப்போறோம்''

''ஓ யாரு முடிவு பண்ணினது''

''நாங்க இரண்டு பேரும் தான்''

கேசவன் அப்பொழுது அங்கு வந்தான். வாசன் கேசவனிடம் பூங்கோதை கூறியது குறித்து கேட்டான். கேசவன் தானும் அங்கே தங்கப்போவதாக சொன்னதும் வாசன் அமைதியாக கேட்டுக்கொண்டான். வாகனம் வந்து நின்றது.

கேசவனின் பெற்றோர்கள் மற்றும் கண்ணையன் மட்டும் உடன் செல்லத் தீர்மானித்தனர். பின்னர் பூங்கோதை குடும்பத்தினர் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். அவர்களை வழியனுப்பிட உற்றார் உறவினர்கள் என ஊரே கூடி நின்றது. வாசன் பார்த்தசாரதியிடம் ஓரிரு வார்த்தைகள் சொன்னான். பார்த்தசாரதி சரியென தலையாட்டினார்.

குளத்தூரிலிருந்து கிளம்பிய வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது. விஷ்ணுப்பிரியன் அமைதியாக அமர்ந்து இருந்தார். பார்த்தசாரதி வானத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். பூங்கோதையும் கேசவனும் இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். ஜோதியும் சுபாவும் எதிரெதிர் அமர்ந்து இருந்தனர். சுபாவின் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தது. குழந்தைகள் உறக்கம் கலையாமல் உறங்கியபடியே இருந்தார்கள். கண்ணையன் அமைதியை கலைத்தார்.

''டாக்டர் தம்பி, நீங்க உயிருள்ள பொம்மை செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க''

''பொம்மையா, உயிருள்ள பொம்மையா, புரியலையே''

''நேத்து என் மாமாகிட்ட சொல்லி இருக்கீங்க அவர் புரியாம என்கிட்ட சொன்னாரு''

''ஓ அதுவா, அது பார்த்தனுக்காக பண்ணினது''

வாகனம் குலுங்கியது. சுபாவின் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. பார்த்தசாரதி மனம் படபடத்தது.

''ம்ம் கேசவா, நீங்க பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க''

கண்ணையன் பேச்சை மாற்றினார். கேசவனும் பூங்கோதையும் புன்முறுவலிட்டனர்.

''இனி நம்ம குழந்தைதான் நமக்கு''

கேசவன் மெல்லியதாய் பூங்கோதையிடம் சொன்னான். பூங்கோதை வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.

வாகனம் நாணல்கோட்டையை அடைந்தது. பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை நோக்கி சொன்னார்.

''விஷ்ணு, நீ இங்க இறங்கிக்கோ''

''ஏன் பார்த்தா, நானும் திருமலைக்குத் தான் வரேன், அடுத்தமுறை இங்க வந்துக்கிறேன்''

சுபா விஷ்ணுப்பிரியனை கோபமாக பார்த்தாள். ஜோதி சுபாவைப் பார்த்தாள்.

''என்ன ஆச்சு சுபா?''

''என்ன மனுசன் இவரு''

''யாரு?''

''விஷ்ணுதான்''

''பேசாம இரு சுபா, ஊருல போய் பேசிக்குவோம்''

கண்ணையன் விஷ்ணுப்பிரியனை கிண்டல் பண்ணிக்கொண்டே வந்தார். விஷ்ணுப்பிரியன் எதற்கும் கவலைப்படாதவராய் அவருடன் பேசிக்கொண்டே வந்தார். வாகனம் பாதுகாப்பாக திருமலையை வந்து அடைந்தது. உணவு நிறுத்தத்திற்காக ஒருமுறை மட்டுமே வாகனம் நிறுத்தப்பட்டதால் சற்று வேகமாகவே வந்து சேர்ந்தது.

விஷ்ணுப்பிரியன் சுபாவுடனும் சுருதியுடனும் தனது வீட்டை நோக்கி நடந்தார்.

''விஷ்ணு, என் வீட்டுக்கு வந்துட்டுப் போ''

''இல்லைப் பார்த்தா, நான் பிறகு வரேன்''

''நீ வந்துட்டுப் போ''

விஷ்ணுப்பிரியன் மறுப்பேதும் சொல்லாமல் பார்த்தசாரதி வீட்டினை நோக்கி நடந்தார். அனைவரும் வீட்டினை அடைந்தனர். ஆரத்தி எடுத்து மணமக்களை அழைத்துச் சென்றனர். மதியம் மணி ஒன்றாகி இருந்தது. அனைவரும் கை கால்கள் அலம்பிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர். சாப்பாடு எல்லாம் தயாராக செய்து வைத்து இருந்தார்கள்.

விஷ்ணுப்பிரியனும் சாப்பிட அமர்ந்தார். சுபாவுக்கு கோபம் கோபமாக வந்தது. சுபாவை தனியாக அழைத்து வருமாறு ஜோதியிடம் பார்த்தசாரதி சொல்லி அனுப்பினார்.

''சுபா இந்த பிரச்சினையை இப்படியே விட்டுருரலாம்''

''என்னதான் இருந்தாலும் விஷ்ணு இப்படி பண்ணியிருக்கக் கூடாது''

''இருக்கட்டும் சுபா, எதுவும் பேச வேணாம், நீ வீட்டுல போயி விஷ்ணுவோட பிரச்சினை பண்ண வேணாம், நடக்கறது நடக்கட்டும்''

''எனக்கென்னமோ இப்போ பரிசோதனை பண்ணி பார்த்துரலாம்னு இருக்கு''

''எதுவுமே வேணாம், நேத்து வேணாம்னு சொன்னதான''

''நார்மல் செக்கப் பண்ணுவோம்''

''இல்லை வேண்டாம்''

சுபா சம்மதம் சொன்னாள். ஜோதி அமைதியாய் நின்றாள். பூங்கோதையை எந்த ஒரு காரணம் கொண்டும் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என கூறினாள் சுபா. கேசவனும் பூங்கோதையும் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார்கள். ஊர் மக்கள் மணமக்களை காண வந்தவண்ணம் இருந்தார்கள். அனைவரும் பெருமையுடன் பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் படிப்பு பற்றி கூறி இங்குதான் தங்கப்போவதாக கூறினான். கேசவன் பெற்றோர்கள் சம்மதம் சொன்னார்கள். பயத்துடன் பண்ணி வைக்கப்பட்ட திருமணம் பயமற்றுப் போனது.

விஷ்ணுப்பிரியன் தனது வீட்டினை அடைந்தார். வீட்டுக்குள் சென்றவர் சுபாவிடம் திரும்பினார்.

''சுபா என்ன பயங்கர கோபமா இருக்க''

''இல்லையே நீங்க பண்ணின காரியத்துக்கு ரொம்ப அமைதியாவே இருக்கேன்''

''ம்ம் என்னோட பிளான் எல்லாம் ரொம்ப சிம்பிள்''

''வாசன் சொன்னான்''

''என்ன சொன்னான்? அவனுக்கு எப்படித் தெரியும், இந்த பிளான் எனக்கு மட்டுமேத் தெரியும்''

''மாதவி வாசனுக்கு படம் போட்டு காட்டி இருக்கா''

விஷ்ணுப்பிரியன் சற்று அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மேலும் எதுவும் பேசக்கூடாது என தான் உறங்கச் செல்வதாக மாடிக்குச் சென்றார். சுபாவுக்கு கோபம் குறையவில்லை. ஆனால் பார்த்தசாரதியின் எச்சரிக்கை மனதை அமைதிபடுத்தி கோபம் வெளிப்படாமல் செய்தது. சுபா, பூங்கோதை பற்றிய மருத்துவ குறிப்புகளை எடுத்துப் புரட்டினாள். பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு, விஷ்ணு என கத்த வேண்டும் போலிருந்தது.

(தொடரும்)

2 comments:

ஹேமா said...

தொடருங்கள்.தொடர்ந்தும் வாசிக்கிறேன்.

Radhakrishnan said...

நன்றி ஹேமா