Thursday, 8 July 2010

எழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.

எப்படித்தான் ஆரம்பிப்பது இந்த தொடர்பதிவுதனை. இப்படி தொடர்பதிவு எழுதுவதற்கு சுனிதா கிருஷ்ணனை பாராட்டி எழுதலாமே என நினைத்தால், சுனிதா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் அவசியமில்லை, அவரைப் போல வாழ முற்படுபவர்கள்தான் அவசியம்.  அந்த அக்கறை எல்லாம் இம்மண்ணில் உள்ளவர்களுக்கு மிகவும் குறைவு.

மீண்டும் ஒரு அழையா விருந்தாளியாய் இந்த தொடர்தனை ஆரம்பித்துக் கொள்கிறேன். இப்படித்தான் அழையா விருந்தாளியாய் பலரின் மனதில் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டுவிட்டார். இவரை எப்படியாவது துரத்தி அடித்து விடவேண்டும் என ஆதி காலத்தில் இருந்தே ஒரு சாரர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனதிலும் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு விட்டார். எப்படி இந்த கடவுளை துரத்தி அடிப்பது என்பதுதான் அவர்களின் சிந்தனை. அசைந்து கொடுக்கமாட்டார் கடவுள்.

எனக்கு எப்படி இந்த கடவுள் அறிமுகமானார், எப்படி பரிச்சயமானார்.

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்

சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

இதோ மேலே எழுதபட்டிருக்கிற தெய்வங்கள் எங்கள் ஊரில் இருப்பவைதான். அய்யனார் எங்கள் தோட்டத்தில் இருக்கிறார். தெற்கே சுடுகாடு செல்லும் வழியில் இருக்கும் முனியாண்டிக்கு பயந்தது உண்டு. கிழக்கே சூரிய நமஸ்காரம் செய்யும் பெருமாளுக்கு கனிந்தது உண்டு.

முனியாண்டி கோவில் பூசாரியிடம் பேய் ஓட்ட வருபவர்கள் மிகவும் அதிகம். அந்த பூசாரி வீடு எங்கள் வீட்டுக்கு அருகில்தான். அடிக்கப்படும் உடுக்கை சப்தமும், பூசாரியின் சப்தமும் என்னை கண்கள் மூடியே இருக்க செய்தது உண்டு.

இதையும் தாண்டி இரு கடவுள்கள் என வணங்கப்படும் கடவுள்கள் எனது ஊரில் உண்டு.  சிறு குழந்தையாக இருக்கும்போதே தவறிப்போன  நாச்சாரம்மாள். இவருக்கென ஒரு வீடு கோவிலாக இருப்பது உண்டு. எனது நாவலில் இவரையும் எழுதியது உண்டு சற்று மாறுதலுடன். இவருக்கு  பூஜைகள் உண்டு.  மற்றொன்று எனது அம்மாவின் அப்பா சமாதி இருக்கும் தோட்டத்து கோவில்.  குரு பூஜை என நடத்தப்படும் அந்த பூஜையில் அத்தை ஒருவர் சொல்லும் அருள் வாக்கு கண்டு நடுங்குவது உண்டு.

இவர்கள் எல்லாம் கடவுள் என ஒருநாள் கூட மறக்காமல் திருநீர் வைத்து செல்லும் வாழ்க்கை மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது, கோவில்களில் தரப்படும் பிரசாதங்கள் போல.

மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி பாலாஜி கோவில், திருமோகூர் கோவில், அஷ்டலட்சுமி கோவில்  என பல கோவில்கள் என்னுள் கடவுளை உறுதிபடுத்தி கொண்டன. இந்தியாவில் இருந்தவரை கோவிலில் இருக்கும் சிலைகள் எல்லாம் கடவுளாகவே தெரிந்தார்கள். அந்த நம்பிக்கை கூட ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது. எதையும் கேள்வியுடன் பார்க்க வேண்டும் எனும் அக்கறை இல்லை.

இப்படியாக என்னுள் இருந்துவிட்ட கடவுள் மெதுவாக மாற ஆரம்பித்தார். இலண்டன் முருகன் கோவிலுக்கு எதிராக தோன்றியதுதான் இலண்டன் மகாலட்சுமி கோவில். அப்பொழுதுதான் இந்த சிலைகளை கடவுள் எனும் பார்வை விலக ஆரம்பித்தது. ஈ.வெ.ராமசாமி எப்படி கோவில் நிர்வாகத்தில் இருந்தபோது அறிந்து கொண்டாரோ அப்படித்தான் நானும் கோவில் நிர்வாகத்தில் இருந்து பல விசயங்கள் அறிந்து கொண்டேன்.

கடவுள் தண்டிப்பார் எனும் அக்கறை தொலைந்து போனது. கடவுள் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை சிதறிப் போனது. மக்களின் நம்பிக்கையை கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. இதே மக்களின் மனம் குறித்த பார்வை கடவுளை வித்தியாசப்படுத்தியது. எனக்குள் இருந்த நம்பிக்கை விலகி ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இருப்பதே இல்லை. கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி மக்களுக்கு அவர் அவரின் கடமையை உணர்த்துவதுதான் எளிதாக எனக்குத் தெரிந்தது.

அன்பினை வளர்க்கும் பக்குவம் அவசியம், வெறுப்பினை வளர்ப்பதல்ல. மற்றவர்களை முட்டாள் என சொன்னால் முட்டாளுக்கு கூட கோவம் வரத்தான் செய்யும். அதைத்தான் இந்த கடவுள் மறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள், அதனால் தங்கள் கொள்கை வெற்றி பெற இயலாமல் மிகவும் தடுமாறுகிறார்கள்.

இப்பொழுது எனக்குத் தெரிந்த கடவுள் இப்படித்தான் எழுதினார் என சொல்வது எத்தனை எளிது.

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல மனிதனே.

நான் எழுதிய எழுத்துக்களில் அதிகம் விமர்சனத்திற்கு உட்பட்டவர் கடவுள் தான். இதுவரைக்கும் அவர் எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை. ஒருபோதும் தெரிவிக்கப் போவதுமில்லை. இந்த மனிதர்கள்தான் தேவையில்லாமல் அல்லாடுகிறார்கள்.

சுனிதா கிருஷ்ணன் ஒரு கடவுளாகத் தெரியலாம். நாம் இன்னலுக்கு உட்பட்ட வேளையில் எதிர்பாரா உதவி செய்பவர்களும் கடவுளாக தெரியலாம், அதை எல்லாம் மறுத்து பேசி கொண்டிருக்க மனமும் இல்லை.

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது

கடவுள் பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறது. அந்த ரகசியம் காப்பாற்றப்படும்.

சொல் என சொல் அதில்
மனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்
இரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது
ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது

எப்படிப்பட்ட தெளிவு கொண்டபோதிலும் கடவுள் பற்றிய மனிதரின் சிந்தனைகளில் பல எனக்கு விளங்குவதே இல்லை.

முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.

அவதாரம் இனிமேல் வருமெனில் அதை ஆதாரத்துடன் காட்டிடும் பண்பு நம்மிடம் இருப்பதால் கடவுள் இனிமேல் அவதாரம் எடுக்காமல் போகலாம். ஆனால் கடவுள் மனிதர் மனதில் எப்போதும் இருப்பார்.

2 comments:

ஆர்வா said...

அர்த்தமுள்ள விஷயங்கள். நைஸ்

Radhakrishnan said...

நன்றி கவிதை காதலன்.