இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. இது போன்று ஒரு திரைப்படம் வருமா என எண்ண வைக்குமளவுக்கு அமைந்து விட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலகின் ஒரு மைல் கல் எனத் தைரியமாகச் சொல்லலாம்.
நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் அனைவருமே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.
தமிழ் திரைப்படங்களில் கதை இல்லை எனும் குறையை தீர்த்து வைத்தப் படம் என சொல்லலாம். மசாலாவாக இருக்கட்டும் என நடிகையர்களை குழுவாக அரைகுறை ஆடையுடன் ஆட விடாமல், யதார்த்தம் இருக்க வேண்டும் என கிழிசல் உடையுடன் திரிபவர்கள் என எவரையும் காட்டாமல் இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்கலாம் கொஞ்சமும் மசாலா இல்லாமல் மிகவும் அழகாகவே ஒரு திரைப்படம் எடுத்து விட வேண்டும் என துணிந்து படம் எடுத்த இயக்குநர் அவர்களுக்கு ஒரு பாராட்டு.
பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஐந்து நிமிட பாடல்கள் என தனி இடம் பெறாமல் படத்தோடு ஒரு சில நிமிடங்கள் என அந்த கிராமத்தில் பாடித் திரிபவர்கள் பாடியதை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கெனவே பாடலை மிகவும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தை கலக்காமல் அழகிய தமிழில் எழுதிய பாடலாசியருக்கு ஒரு பாராட்டு.
இசை. இதைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். எத்தனை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இந்த இசை அமைப்பாளர் இயற்கையாய் ஏற்படும் ஓசையை மட்டுமே பதிவு செய்து அதை படத்துடன் மிகவும் சாதுர்யமாக இணைத்து இருக்கிறார். கடமுடவன அதிர்வு சத்தங்களோ, காதினை குடையும் இரைச்சல் சத்தங்களோ படத்தில் எங்குமே கேட்க இயலவில்லை. நம்மை சுற்றி ஏற்படும் சப்தங்களையே இசையாக்கி தந்திருக்கும் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.
நடிகர்கள், நடிகைகள் புதுமுகம் எனினும் படத்தின் கதைக்கு அருமையாக ஒத்துப் போகும் அழகிய முக பாவனைகள். முகத்தில் எவ்வித சாயமும் எவரும் பூசவில்லை. இது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே இல்லாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் யார் கதாநாயகன் எனக் கேட்டால் கதைதான் கதாநாயகன் என சந்தோசமாக சொல்லலாம்.
படத் தொகுப்பு செய்தவரையும், ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதிக வெளிச்சம், கும்மிருட்டு, செயற்கை மழை என எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இணைந்து அந்த அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வறண்டு போன பூமி என்பதாலோ என்னவோ மழை காட்சி என படத்தில் இல்லவே இல்லை.
இந்த படமானது அனைத்தும் ஒரே ஒரு முறைதான் எடுக்கப்பட்டதாம். இப்படி நடி, அப்படி நடி என எந்த ஒரு காட்சியும் திரும்ப எடுக்கப்படவே இல்லையாம். இது திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை என சொல்லலாம்.
படம் முழுக்க ஒரு கிராமத்தை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமே படமாகி இருக்கிறது.
இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. குடிசைக்கு அலங்காரம் அவசியமில்லை.
இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.
4 comments:
இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கா ?
:(
http://vaarththai.wordpress.com
நிஜம்மாவா???
இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. மிக்க நன்றி வழிப்போக்கன், செளந்திரபாண்டியன், மற்றும் கபீஷ்.
Post a Comment