உனது நண்பனை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன் என ஒரு வழக்கு சொல் இருக்கிறதாம். எனக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உன்னை பற்றி சொல், உன்னை பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பதுதான் எனது கோட்பாடு.
இப்படித்தான் நான் கல்லூரியில் படித்தபோது கல்லூரிக்கு அதிகம் வரவே மாட்டான் ஒருவன். பாடங்களை முறையாக படிக்கவும் மாட்டான். அவனை ஒழுங்காக படி என அவனுக்கு அறிவுரை சொல்லுவதோடு, கல்லூரிக்கு சரியாக வர வேண்டும் என அவனிடம் சொல்ல நான் தவறியதே இல்லை. இத்தனைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான் என்பதை தவிர தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியது இல்லை.
அவன் ஒரு முறை தவறிழைத்துவிட கல்லூரி முதல்வரிடம் அனுப்பபட்டான். அவர் அவனிடம் யார் உனது நண்பன் என கேட்டு இருக்கிறார். அவன் எனது பெயரை சொல்லி இருக்கிறான். அந்த கல்லூரி முதல்வர் சரி போ என அவனை அனுப்பிவிட்டார். ஒரு நாள் கல்லூரிக்கு போகவில்லை எனின் அது மாபெரும் குற்றம் என மனதில் நினைத்து இருந்தேன்.
கல்லூரி முதல்வர் என்னை வகுப்பறையில் பார்த்து 'என்னய்யா உன்னைத்தான் பிரேன்டுனு அவன் சொல்றான்' என்றார். புன்முறுவல் செய்தேன். அவன் தவறிய போதெல்லாம் தவறு என திருந்த சொன்ன என்னை அவன் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டாலும் அவன் படிப்பை தொடர முடியாமல் செல்லும் நிலைதான் அவனுக்கு ஏற்பட்டது.
ஒரு நண்பன்/ நண்பி என்பவர் யார்? இதற்கு திருக்குறளில் எழுதப்பட்ட பாடலுக்கு விளக்கம் கேட்ட முத்து 'அட போய்யா' என நான் சொன்ன விளக்கத்தை கேட்டு ஏளன பார்வை பார்த்தது மறக்க முடியாது. சாமிக்கு அடிக்கிற உடுக்கையை கீழே தவறவிட்டா அதை தாங்கி பிடிப்பதுதான் நட்பு என சொல்லி இருந்ததாக நினைக்கிறேன். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பின்னர் சரியாக விளக்கம் தந்தார் முத்து.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
ஊரில் இருந்தவரை என்னுடன் விளையாடித் திரிந்தவர்கள். படித்தபோது உடன் படித்தவர்கள். வேலை பார்த்த இடத்தில் உடன் வேலை பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இந்த எழுத்து எழுதுமிடத்தில் உடன் எழுதுபவர்கள். எவரையுமே எனது நண்பர்கள் என என்னால் தொடர்ந்து அடையாளம் காட்டவே இயலவில்லை.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
எனக்கு எவரையும் தெரிந்து எடுக்க வேண்டிய சூழல் அமையாமல் போனது. தேவையின் அடிப்படையில் மட்டுமே பலர் பழக்கமானார்கள். பழக்கமானவர்கள் என்பதற்காக எனது நண்பர்கள் என சொல்லிக் கொண்டாலும், நட்பு என்கிற பார்வை வெறும் பார்வையாகத்தான் இருந்து வருகிறது.
ஒரே கருத்துடையவர்கள் எளிதாக நண்பர்கள் ஆகிவிடலாம் என சொன்னால் வேறுபட்ட கருத்துள்ளவர்கள் நண்பர்கள் ஆக இயலாதா? எனும் கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
நட்பு பற்றி சிலாகித்து எழுதியது உண்டு.
நட்பு தினத்தில் நட்பு பாராட்ட எவருமில்லாமல் இருந்த நிலையையும் எழுதியது உண்டு.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
'இவன் என் நண்பன்டா' என என்னை எவரும் உரிமையோடு சொன்னதுமில்லை. 'இவர் என் ஆருயிர் நண்பர்' என எவரையும் நான் சொன்னதாக நினைவில் இல்லை.
எனது மனைவிக்கு நிறையவே நண்பிகள், நண்பர்கள் இருந்ததுண்டு. ஆனால் திருமணம் ஆன பின்னர் அந்த நண்பர்கள் நண்பிகள் என எவரும் தொடர்பில் இருந்தது இல்லை. நண்பராக என்னை மட்டும் கருதுவதாக சொல்லும் போதெல்லாம், இப்பொழுது இருக்கும் இந்த உலகில் இழந்த நண்பர்களை அடையாளம் காண்பது எளிது, எனவே தாராளமாக தேடலாம் என சொன்னாலும் காலம் கடந்துவிட்டதாகவே சொல்கிறார். இதே தேடல் இவரது நண்பர்கள், நண்பிகளிடம் இருக்குமா? எனக் கேட்டால் பதில் இல்லை.
பல வருடங்கள் தொடர்பில் இல்லாமல் பத்து வருடங்கள் பின்னர், இருபது வருடங்கள் பின்னர் சந்தித்து பழைய நட்பு பற்றி பேசுவது நட்பிற்கு தரும் மரியாதையா? அவர்கள் நண்பர்களா? அவரவர் தேவை என ஓடிவிடும் உலகில் இந்த நட்பு பெறுகின்ற இடம் எது?
வழியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுவிட்டு குத்துதே குடையுதே என எதற்கு சொல்ல வேண்டும் என எச்சரிக்கை மொழி இருக்கத்தான் செய்கிறது. நட்பில் எவையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என மிகவும் அருமையாகவே குறளில் சொல்லப்பட்டு இருக்கிறது.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற பாற்று.
இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்
ஆனால் நட்பு காதலைப் போன்று அத்தனை சுகமானது. காதலை சேர்த்து வைக்கும் நண்பர்கள். புதிய வேலைக்கு என வழி செய்யும் நண்பர்கள். துன்பத்தில் எப்போதும் உடனிருந்து துணையாய் நின்று நல்வழி படுத்தும் நண்பர்கள் என இந்த நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
எனக்கு எதுதேவை எனினும் உடனே செய்து தர பலர் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் தந்து இருக்கிறார்கள். நட்பு என அவர்களை சொந்தம் கொண்டாட எனக்கும் ஆசை தான். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நான் தொடர்ந்து தயாராக இருக்கிறேனா? என எனக்குள் எழும் கேள்வியில் என்னை தொலைத்து விடுகிறேன்.
3 comments:
இந்த இடுகைக்கு வரும் பின்னூட்டங்கள் தான் நட்பின் இன்றைய காலகண்ணாடி.
எனக்கு எதுதேவை எனினும் உடனே செய்து தர பலர் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் தந்து இருக்கிறார்கள். நட்பு என அவர்களை சொந்தம் கொண்டாட எனக்கும் ஆசை தான். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நான் தொடர்ந்து தயாராக இருக்கிறேனா? என எனக்குள் எழும் கேள்வியில் என்னை தொலைத்து விடுகிறேன்
.... There is conditional love/friendship - and there is unconditional love/friendship!
பிரதிபலன் எதிர்பார்த்து - ஆதாயம் தேடி அமைவது சிறந்த நட்பு என்று நான் கருத மாட்டேன்.....
எனக்கு கடவுள் அருமையான நட்பு வட்டம் தந்து ஆசிர்வதித்து இருக்கிறார்... அவர்கள் நடுவில், நான் நானாக இருக்க முடிகிறது.... :-)
பின்னூட்டங்கள் மட்டுமே நண்பர்கள் என அடையாளம் காட்டுவதில்லை. நன்றி செளந்திரபாண்டியன்.
மிகச் சரியாக எழுதி இருக்கீங்க சித்ரா. இப்படிப்பட்ட பிரதிபலன், ஆதாயம் தேடாத நட்புதனை அடையாளம் கண்டு கொள்வதில் தான் மிகவும் சிரமப்படுகிறேன். பிரதிபலன், ஆதாயம் தேடும் நட்புகளை எல்லாம் உதறிவிடுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அப்படி பிரதிபலன், ஆதாயம் தேடாமல் நட்பு இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கூட ஒருவிதத்தில் சிக்கல்தான். நட்பு வட்டத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் நீங்களாக இருக்க இயல்வதுதான் நட்பிற்கு வெற்றி.
Post a Comment