Wednesday, 7 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 21

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரி, சிவன் கோவில், வீடு என்றே நேரம் கடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சின்னச் சின்ன விடுமுறை வந்தபோதெல்லாம் சில காரணங்களால் தனது ஊருக்கேச் செல்ல வேண்டியிருந்தது.  மதுசூதனன் கதிரேசனை மாறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் சில சமயங்களில் வைஷ்ணவி சற்று எரிச்சல் அடைந்தாள். ஒருமுறை வைஷ்ணவி கண்டிப்புடன் சொன்னதும் மதுசூதனன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். சிவன் கோவிலுக்கேச் செல்லாத மதுசூதனன் சிவன் கோவிலுக்கு வரத் தொடங்கினான். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்படித்தான் ஒருமுறை சிவன் கோவிலுக்கு வந்த மதுசூதனன் மெதுவாகப் பாடல் பாடினான். என்ன பாடல் என அருகில் இருந்த கேட்ட கதிரேசனுக்கு மனதில் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அந்த பாடல் கதிரேசனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மதுசூதனன், ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இருந்துப் பாடினான்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

 சிவன் கூட இவன் கண்ணுக்கு திருமாலாகத் தெரிகிறாரே என நினைத்துக் கேட்டான் கதிரேசன். ''எனக்குப் பிடித்தபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மதுசூதனன். ''திருப்பிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''எனக்குப் பிடிச்சபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மறுபடியும். கதிரேசனுக்கு மதுசூதனன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. கோவிலிலிருந்து வெளியே வந்து அதே கேள்வியைக் கேட்டான் கதிரேசன்.

''என் இஷ்டத்துக்கு இந்த சிவன் இருப்பார்'' எனச் சொல்லிய மதுசூதனனை ''திருமாலுக்கும் சிவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா, சிவன்கிட்ட அந்த பாடலைப் பாடினியே'' என்றான் கதிரேசன். ''வித்தியாசம் பண்ணினேன், சிவன் கோவிலுக்கு வரலை, இப்போ இந்த சிவன் என்னோட இஷ்டம், வித்தியாசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான் மதுசூதனன். மேலும் ''நான் மாறிட்டேனு நீ நினைக்காதே, அந்த சிவன் தான் இப்போ எனக்காக மாறிக்கிட்டார்'' என்றான் அவன். கதிரேசன் மதுசூதனன் சொன்ன விசயத்தை மிகவும் பலமாக யோசிக்க ஆரம்பித்தான். சிவன் மாறிக்கொள்வாரா? என எண்ணம் வந்து சேர சில நாட்கள் பின்னர் வைஷ்ணவியிடம் கேட்டான்.

''இப்படியெல்லாம் அவன் பேசினானா? நானா அவனை சிவன் கோவிலுக்குப் போக சொல்லலை. ஒருநாள் நான் சிவன் கோவிலுக்குப் போகனும்போல இருக்குனு சொன்னேன், அதுக்கு அவன் சரி தாராளமாப் போனு சொன்னான், கொஞ்ச நாளுல அவனும் வர ஆரம்பிச்சிட்டான், ஏன் இப்படி சொன்னானு தெரியலையே, எப்படியோ சிவன் கோவிலுக்கு வரானே அதுவே சந்தோசம் தான் எனக்கு'' என்றாள் அவளும்.

''சிவன் மாறுவாரா?'' என்றான் கதிரேசன். ''அவனுக்குத்தான் மாறிட்டாரே'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அமைதியானான். ''உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு இருந்தேன்'' என ஆரம்பித்தவள் ''திருமாலுடைய மார்புல அவரோட மனைவி இருக்கிறதாகவும், சிவனோட உடம்புல பாதிய அவரோட மனைவிக்கு தந்ததாகவும் இருக்கிறத பத்தி என்ன நினைக்கிற'' என்றாள்.

''திருமால் பத்தி தெரியலை, ஆனா சிவன் தன்னோட உடம்புல பாதிய மனைவிக்கு தரலை, மனைவியோட உடம்புலதான் பாதிய தான் போய் எடுத்துக்கிட்டார், அப்படித்தான் அவரோட மனைவியும் விரும்பினாங்க'' என்றான் கதிரேசன். ''என்ன சொன்ன?'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் தான் சொன்ன வார்த்தைகளை அசைபோடும் முன்னர் வைஷ்ணவி சொன்னாள். ''மனைவி விருப்பத்திற்கு தன்னை மாத்திக்கிட்டார்ல'' என்றாள். கதிரேசன் அமைதியாக இருந்தான். அவன் வாயிலிருந்தே வந்த வார்த்தைகளை அவனால் நம்ப இயலவில்லை. அன்றெல்லாம் யோசனையாய் இருந்தது.

''திருமாலும் மனைவி விருப்பத்திற்காகத்தான் தன் மார்புல வைச்சிக்கிட்டாருனு நினைக்கிறேன்'' என சொன்ன வைஷ்ணவி ''மொத்த ஆண்குலமும் பெண்கள் விருப்பத்திற்கேற்பவே வாழப் பழகிக்கிட்டாங்க, காதலின் உச்சம் அது'' என்றாள். ''அப்ப நீங்க?'' என்றான் கதிரேசன். ''எங்க பெருமையை நாங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்'' எனச் சிரித்தாள், கதிரேசனும் சிரித்தான். ஆனாலும் கேள்வியில் மனம் நின்றது.

ஒவ்வொரு முறையும் இதே யோசனையாய் இருக்க பூஜை அறையில் கூட பாடத் தோன்றவில்லை. நாட்களும் நகர்ந்து சென்றது. சமணர் கோவில் சென்றுப் பார்க்க வேண்டும் எனும் ஆசையும் வற்றிப் போனது.

இரண்டாம் வருட கோடை விடுமுறையில் சங்கரன் கோவில் சிறிது நாட்கள் சென்றான். நீலகண்டனின் ஒரு வருட காரியத்தில் கலந்து கொண்டான். அங்கே ஈஸ்வரியிடம் சிவன் குறித்து பேசினான். ''இதிலென்ன சந்தேகம்?'' என்றாள் அவள். மேலும் ''உன்னோட வாழவே விருப்பம், இதுக்கு எங்க வீட்டுல யாரும் தடையா இருக்க மாட்டாங்க'' என்றாள். சிவனே கதியென இருந்த கதிரேசனுக்கு ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. கதிரேசன் சந்தோசமாக அன்று பாடினான்.

''எமக்காக உம்மை மாற்றிக் கொள்ளும் பெருமானே
உமக்கொன்றும் சுமையென ஏதும் இல்லையன்றோ
பிட்டுக்கு மண் சுமந்த கோலம் கொண்டே
பாட்டுக்கு பதில்சொன்னாயோ சொல்சிவனே''

(தொடரும்)

No comments: