இறந்துவிடுவோம் என்ற எண்ணமும் அந்த இறப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய வேட்கையும் தீபக்கின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருந்த அந்த வானம் தொடும் கட்டிடத்தின் உச்சியில் தண்ணீர் முட்டிச் சென்று கொண்டு இருந்தது. கடலின் தண்ணீர் அளவானது இப்படி உயரும் என்று ஒருவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.
'என்னடா இங்கேயெ உட்கார்ந்துட்டு இருக்க, கிளம்புடா' சக நண்பன் சதீஸ் தீபக்கை அவசரப்படுத்தினான். தீபக் வாய்மூடி எதுவும் சொல்ல முடியாதவனாய் இருந்தான். தண்ணீரில் மீன்களாக மனிதர்கள்.
எவரும் இந்த தண்ணீருக்கு தப்பி இருப்பார்களாக தெரியவில்லை. நிலமாக இருந்த இந்த பூமி இப்போது ஒரே தண்ணீராய். எந்த கரையை எப்படி காண்பது? தண்ணீரில் நீந்த ஆரம்பித்தான் தீபக்.
எந்த திசை நோக்கிச் செல்வது? நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் அடிக்காமலே மிதந்து கொண்டு இருந்தார்கள். எப்படி இவ்வளவு பெரிய நிலப்பரப்பினை தண்ணீர் தனக்குள் அடக்கிக் கொண்டது.
நீர்வாழ் உயிரினங்கள் என்ன நடந்தது என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. தண்ணீரில் நாம் உபயோகித்த நச்சுப்பொருட்கள் கலந்ததால் மிச்ச மீதி எதுவும் இன்றி எல்லாம் தண்ணீருக்கு இரையாகி இருந்தன.
'கடவுளே எப்படியாவது காப்பாற்று, எங்காவது ஒரு நிலப்பரப்பினை கண்களுக்கு காட்டு' என வேண்டிக் கொண்டே தொடர்ந்து நீந்தினான். அனைவரும் அடங்கிப் போய்விட்டார்கள் என்று மட்டும் தெரிந்தது, எங்கே சதீஸ்? எங்கே தீபா? எங்கே சுற்றமும் குலமும்? சதீஸும் அடுத்த பத்து நிமிடத்தில் தண்ணீரினால் ஆட்கொள்ளப்பட்டான்.
எதிர்பட்ட உயிரற்ற சடப்பொருள்களை விளக்கிக் கொண்டு இலக்கின்றி நீந்தினான், எஞ்சிய உயிர் என்னது மட்டும்தானா? தீபக்கின் கைகள் கால்கள் அலுப்பைத் தந்தன. வயிர் பசிக்க ஆரம்பித்தது. இந்த தண்ணீரைக் குடிப்பதா?
கரைகள் இல்லா நீர்பரப்பு! இனி இங்கு வாழ முடியாது. பிற கிரகங்களில் வாயுக்கள் ஆக்கிரமித்து இருப்பதை போல் இங்கு தண்ணீர் ஆக்கிரமித்து விட்டது. இனி இந்த தண்ணீர் என்று வற்ற? மனித இனம் மட்டுமின்றி எல்லாம் முடிந்து போனதோ?
படித்தவைகள் மனதில் அழுத்தியது! வறண்ட பகுதிகள் என இருக்கையில், வறுமை கொடுமைப் பண்ணி கழிக்கையில் எல்லாம் எரித்து எரித்து வெப்பம் அதிகரிக்கிறது என சொல்லியும் கேட்காமல் பனி உருகுகிறது என புரியாமல் அடுத்த கிரகம் என நினைத்து இருக்கிறதை காக்காமல் கைவிட்டுப் போனதே என நினைத்துக் கொண்டபோது தீபக் நீந்த முடியாமல் மிதக்கத் தொடங்கினான்.
3 comments:
கதை படித்தவுடன் நிலை கொள்ளவில்லை..
நல்ல முயற்சி தொடருங்கள்
வாழ்த்துகள்
நல்லாயிருக்கு..
மிக்க நன்றி சிவா அண்ணா. மிக்க நன்றி லாவண்யா.
Post a Comment