Wednesday, 16 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 17

சிலநாட்கள் தங்கியிருந்த கதிரேசன் மனதில் சங்கரன்கோவில் செல்ல வேண்டும் என ஆசை வந்தது. செல்லாயியிடம் சொல்லிக்கொண்டு சங்கரன்கோவில் சென்ற கதிரேசன் நீலகண்டனின் வீட்டிற்குச் சென்றான். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் நீலகண்டனுக்கு உடல்நலம் சரியில்லை என செந்தூரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொன்னார்கள். செந்தூரம் மருத்துவமனை முகவரியைக் கேட்டு அங்கு சென்றான் கதிரேசன். வரவேற்பறையில் விசாரித்துக்கொண்டு அறைக்கு விரைந்தான் கதிரேசன். அங்கே பார்வதி முதலானோர் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள். நீலகண்டன் படுக்கையில் இருந்தார்.

நீலகண்டனுக்கு சில மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாது போனதாலும், மருத்துவமனைக்கு வந்து செல்வதுமாகவே இருந்ததாக கூறினார்கள். இந்த முறை மருத்துவமனையிலேயே வைத்துப் பார்க்க வேண்டும் என சொன்னதாக கூறினார்கள். நீலகண்டனை அருகில் சென்று பார்த்தான் கதிரேசன். கண்கள் மூடியிருந்தவர் தாத்தா என கதிரேசன் அழைத்ததும் கண்கள் திறந்துப் பார்த்தார். அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. படுத்தவாரே எப்படி இருக்க எனக் கேட்டார். கண்களில் நீர் கோர்த்த வண்ணம் தலையை மட்டுமே ஆட்டினான் கதிரேசன்.

மருத்துவர் வந்து பார்த்துவிட்டு 'ஈஸ்வரா' என சொல்லிக்கொண்டார். சிவசங்கரனை அழைத்து நாடித் துடிப்பு ரொம்ப மெதுவாக இருப்பதாகவும், ஒரு ஊசி போடுவதாகவும் சொன்னார். அனைவரது கண்களும் கலங்கி இருந்தது. மருத்துவர் ஊசி போட்டுவிட்டுச் சென்றார். கதிரேசன் நின்று கொண்டே இருந்தான். அனைவரையும் அருகில் வருமாறு அழைத்தார் நீலகண்டன். ''எல்லோரும் சந்தோசமா இருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருங்க, எல்லாம் சிவமயம். யாராவது மனம் நோகுறமாதிரி நடந்துக்கிட்டா அன்புதான் ஆதாரம்னு தைரியமா இருங்க, எல்லாம் சிவமயம்'' என சொன்ன நீலகண்டன் ஈஸ்வரியை அழைத்தார். 'பாடுவியாம்மா' என அவர் சொன்னபோது தாத்தா என அவரது கைகளைப் பிடித்து அழுதுவிட்டாள் ஈஸ்வரி. கண்ணீரைத் துடைத்துவிட்டார் நீலகண்டன். ஈஸ்வரி பாடினாள். ஒவ்வொரு வரியையும் நிறுத்திப் பாடினாள்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

பாடி முடித்தவள் தாத்தா என அவர் மேல் சாய்ந்து அழுதாள். ஈஸ்வரியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார் பார்வதி. கதிரேசனிடம் இது யார் யாருக்காக எழுதினது தெரியுமா? என்றார். தெரியாது  என தலையை ஆட்டினான் கதிரேசன். ''சேக்கிழார், காரைக்கால் அம்மையாருக்குப் பாடினது. நான் இங்குட்டு வந்தப்பறம் சிவனை, தமிழை மறந்துட்டியோ''' என்றார். ''இல்லை தாத்தா'' என்றான் கதிரேசன். பின்னர் அமைதியாய் இருந்தார் சில மணி நேரங்கள். அனைவரும் அங்கேயே இருந்தனர். நீலகண்டன், நீ பாடு என்றார் கதிரேசனை நோக்கி.

ஈஸ்வரியைப் பார்த்தான் கதிரேசன். பின்னர் பாடினான்.
யானே தவமுடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்- யானேயக்
கைம்மா உரி போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்

முகம் மலர்ந்தார் நீலகண்டன். இன்னுமொரு பாட்டுப் பாடு என்றார் நீலகண்டன். பாடினான் கதிரேசன்.

எண்ணிய எண்ணமெலாம் நீயென இருந்தார் எம்பெருமானே
பண்ணிய புண்ணியம் எடுத்துக் கொண்டனையோ
இப்பிறப்பில் அடியாராய் இவரை ஆட்டுவித்துக் கொண்டோனே
எப்பிறப்பிலும் இவர்அடியாரோ சொல்சிவனே.

நீலகண்டன் கைகள் எடுத்துக் கும்பிட்டார். அருகிலேயே இருந்தார்கள். ஒரு சில வார்த்தைகளே பின்னர் பேசினார் அவர். சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிந்தது. கதறினார்கள் அனனவரும். தனது அன்னைக்கு தகவல் சொன்னான் கதிரேசன்.

(தொடரும்)

2 comments:

Chitra said...

தமிழ் பாடல்களையும் இறுதி நேர தருணங்களையும் பின்னி இருக்கும் விதம் ...... அருமை.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.