ஊரில் இருந்தவர்கள் கதிரேசன் வீட்டுக்கு வந்து விபரம் அறிந்து போனார்கள். கதிரேசன் சாமியாராகவில்லை என்று வந்தவர்களுக்கு செல்லாயி சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களும் கதிரேசனுடன் பழங்கதைகள் பேசினார் செல்லாயி. கதிரேசன் மறுப்பேதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டான். கதிரேசன் சிங்கமநல்லூருக்கு கிளம்பினான். செல்லும்போது செல்லாயி கதிரேசனிடம் ‘’வாரம் வாரம் ஊருக்கு வந்துட்டுப் போப்பா’’ என்றார். ‘’வரேன்மா, வராம இருந்தா பதற வேண்டாம்’’ என்று சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
சிங்கமநல்லூரை அடைந்ததும் தனக்கு நேர்ந்த விசயத்தை நீலகண்டனிடம் சொன்னான் கதிரேசன். ‘’நீ எந்த காலத்தில வாழ்ந்துட்டு இருக்க?’’ என்றார் நீலகண்டன். ‘’நிகழ்காலம்’’ என்றான் கதிரேசன். ‘’கடந்த காலத்தில சிவன் பக்தர்னு ஒருத்தர் சொன்னா அவங்களுக்கு மாலை மரியாதை கிடைக்கும், ஒவ்வொரு இடத்திலும் வரச்சொல்லி கேட்பாங்க. அவங்களுடைய பாதம் பட்டாலே இடம் புனிதமாகும்னு பாடச் சொல்வாங்க. இப்ப நீ சிவன் பக்தனு சொன்னா சிரிக்கத்தான் செய்வாங்க. மனுசங்களுக்கு சிவன் மேல எல்லாம் நம்பிக்கை இல்லாமப் போயிட்டே வருது. அவங்ககிட்ட நீ சொல்லிட்டு வாழறதைவிட சொல்லாம நீ வாழ நினைக்கிற வாழ்க்கையை வாழ்ந்துரதுதான் உத்தமம்’’ என்றார் நீலகண்டன்.
‘’இல்லை தாத்தா, குடும்ப பந்தம் வேண்டாம்னு சொன்னேன் அதான் பெரிய பிரச்சினைக்கு வழிவகுத்தது’’ என்றான் கதிரேசன். ‘’உனக்கும் எனக்கும் இருக்கிறது என்ன பந்தம்?’’ என்றார் நீலகண்டன். கதிரேசன் விழித்தான். ‘’உனக்கும் எனக்கும் இருக்கிறது குடும்ப பந்தம் தான், நான் தாத்தா, நீ பேரன்’’ என்றார் நீலகண்டன். ‘’தாத்தா?’’ என கேள்விக்குறியுடன் பார்த்தான் கதிரேசன்.
‘’சைவம் குடும்ப பந்தத்திலேயேதான் இருக்கச் சொல்லுது. இப்படி குடும்ப வாழ்க்கையை விலக்கி சைவத்தை வளர்க்கச் சொல்லலை. உனக்கு திருஞானசம்பந்தர் தெரியுமா? திருநாவுக்கரசர் தெரியுமா? சுந்தரர் தெரியுமா?’’ என்றார் நீலகண்டன். கதிரேசன் ‘’கேள்விப்பட்டு இருக்கிறேன் தாத்தா, ஆனா படிக்க எனக்கு எங்க ஊர்ல லைப்ரரி எதுவும் இல்லை’’ என்று மட்டுமே சொன்னான். ‘’நீ தேடிப் போகலை, தேடி இருந்திருந்தா லைப்ரரி எங்காவது கண்ணுக்குப் பட்டிருக்கும்’’ என்றவர்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
''இது யார் பாடினது தெரியுமா?'' என்றார் நீலகண்டன். கதிரேசனுக்குத் தெரியவில்லை. தெரியாது என்றே கூறினான். ‘’இதைப் பாடினது திருஞானசம்பந்தர். இது அவர் இயற்றிய முதல் பாடல். முதல்ல சைவம்னா என்ன? அது எப்படி தோன்றினது? எப்படி வளர்ந்ததுனு? தெரிஞ்சிக்க. இதுக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்காதே. இதுபத்தி முதல்ல நல்லாத் தெரிஞ்சிக்கோ. உனக்கு நான் காட்டினேனே புத்தகங்கள், எல்லாம் எடுத்துப் படிச்சிப் பாரு. இப்படி குடும்ப பந்தம் வேண்டாம்னு நீ முடிவு எடுத்தா அதை நான் தடுக்கமாட்டேன். உன் விருப்பப்படியே நடந்துக்க. சிவன் மட்டும் தான் எனக்குத் தேவை. இவங்களைப் பத்தி எல்லாம் எதுக்கு தெரிஞ்சிக்கனும்னு நீ நினைச்சா அதுவும் உன் விருப்பம்’’ என்றார்.
‘’இவங்க எல்லாம் சிவனைத் தொழுது பாடினவங்கதானே?, அவங்களைப் பத்தி படிச்சி தெரிஞ்சிக்கிறேன் தாத்தா’’ என்றான் கதிரேசன். ‘’ஆமாம் உண்மையும் சத்தியமும் நிறைஞ்சி சிவனைத் தொழுபவங்க எல்லாம் அடியார்கள், அவங்க எல்லாம் அடியார்கள்’’ என்றார் அவர்.
‘’இதைப்பாடினது சுந்தரர். திருஞானசம்பந்தரைப் போற்றி தனது திருத்தொண்டத் தொகையில் பாடி இருக்கிறார்’’ என்றார் மேலும். கதிரேசன் மிகவும் ஆவல் கொண்டான். ‘’தினமும் இதுபோல எனக்குச் சொல்லித் தருவீங்களா தாத்தா’’ என்றான் கதிரேசன். ‘’நானும் உனக்கு எனக்கு தெரிஞ்சதை சொல்லித் தாரேன், நீயே படிச்சிட்டு வா’’ என்றார் நீலகண்டன். கதிரேசன் சரியெனக் கேட்டுக்கொண்டான். சற்று நேரம் கழித்து நீலகண்டனுடன் சிவன் கோவிலுக்குக் கிளம்பினான். சிவன் கோவிலில் அமர்ந்திருக்க புதிதாய் பலகையில் எழுதப்பட்டிருந்த பாடல் கதிரேசனின் கவனம் ஈர்த்தது.வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
‘’இது யார் பாடினது தாத்தா?’’ என்றான் கதிரேசன். ‘’திருஞானசம்பந்தர்’’ என்றார் நீலகண்டன். கதிரேசன் அளவில்லா ஆர்வம் கொண்டான்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
(தொடரும்)
1 comment:
நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment