காமம் - 4
எந்த ஒரு ஆணும் சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.
எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.
தாய், சகோதரி என வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.
பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும் காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.
இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு. உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள் தருவதை மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.
இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?
(தொடரும்)
4 comments:
பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?
..... ..... சரியான கேள்விகள்.
நன்றி சித்ரா
//தாய், சகோதரி என வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.//
பெண் என்பவள் அன்னியமாக தோன்றும் போது முதலில் பாலியல் ரீதியாகத்தான் எதாவது தோன்றும்.? ஏன்? உடல் உருவாக்கமே காமத்தில் தான் நிகழ்கிறது. உடல் உணவு பசியை போல் காமத்திற்காகவும் தவிக்கிறது என்பது தான் உண்மை .
//சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது//
சிந்தித்து பசியை அடக்கும் வழி உங்களுக்கு தெரியுமா ?
ஓஷோவின் "காமத்திலிருந்து கடவுளுக்கு" படியுங்கள்.
ஆஹா, நிச்சயம் ஓஷோவை படித்து விடவேண்டியதுதான்.
சிந்தித்து பசி அடக்கும் வழி தெரியாது, ஆனால் பசியை மறந்துவிடும் அளவுக்கு சிந்திக்க தெரியும். :) பசியை மறந்து விடும் அளவுக்கு வேலை பார்க்க இயலும்.
பசிக்கிறது என்பதற்காக திருடி சாப்பிடுவது தவறு. பசிக்கிறது என வீடுகளில் கேட்டு வாங்கி உண்பதை தவறாக எவரும் சொல்லவில்லை. இது உணவு பசி.
இதையே உடல் பசிக்கு எப்படி ஒப்பு சொல்ல இயலும்?
காமம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு என்கிறது அறிவியல். காமம் ஒரு மன உந்துதல் என்கிறது மனோதத்துவம். நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிடும் போது விலங்குதன்மை வரத்தான் செய்யும்.
தனது தவறுகளுக்கு களங்கப்படாத நெஞ்சம் எதையும் சரி என்றுதான் சொல்லும்.
பாலியல் ரீதியாக தோன்றுவதற்கு காரணம் நமது சிந்தனைகளின் தேக்கம். நம்மை எப்படி நாம் செழுமைப்படுத்துவதை ஒட்டியே நமது சிந்தனைகள் இருக்கும்.
காமத்திற்கு உடல் தவிக்கிறது என்பது நாம் பிறரிடம் இருந்து கற்றுக் கொண்டது. எதிர் பாலினம் என்கிற எண்ணமே அதற்கு காரணம். பெண்கள் அவ்வாறு இருக்கிறார்களா என்ன!
நல்ல கருத்து.
Post a Comment