4 திருமண வைபவம்
தேவகி உறங்கிக்கொண்டு இருந்தாள். பூங்கோதை மீண்டும் மாதவியை எழுப்பினாள். உறக்கம் கலையாதவளாய் விழித்தாள் மாதவி.
‘’என்னங்க பூங்கோதை’’
‘’எனக்கு வாந்தி வரமாதிரி இருக்கு, என்கூட வர முடியுமா’’
மாதவி அவசரமாக எழுந்தாள். பூங்கோதையினை அழைத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். வீட்டில் மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட வழியின்றிப் போனது.
மாதவி பூங்கோதையின் தலைப்பகுதியினையும், கழுத்துப் பகுதியினையும் தொட்டுப் பார்த்தாள். சூடாக இருந்தது. பூங்கோதை வாந்தி எடுத்தாள்.
‘’அலைச்சல்னால வந்து இருக்கும் பூங்கோதை, யார்கிட்ட ஒண்ணும் சொல்லிக்கிற வேணாம்ங்க பூங்கோதை’’
‘’இது அலைச்சல்னா வந்த வாந்தியோ, என்னவோ மாதவி எனக்கு பயம்மா இருக்கு, தாலி கட்டறப்ப ஏதாவது நடந்திருச்சின்னா என்ன பண்றது மாதவி’’
‘’கவலைப்படாதீங்க பூங்கோதை, மணி இப்போ ஒன்னுதான் ஆகுது, நல்லா தூங்கினா சரியாயிரும், இதுதான முதல் தடவை வாந்தி’’
‘’ம்’’
‘’அலைச்சல்னாலத்தான் இருக்கும்’’
கருவினை கருப்பையில் வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. கருவினை வைத்ததும், திருவிழா நடந்ததும், கல்யாணப் பேச்சு பேசியதும், திருமணம் நடக்கும் வேகமும் வாரங்கள் பல கடந்துபோல் தெரிகிறது. காலத்தின் வேகம்தனை யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆனால் காலம் ஒரே சீரான வேகத்தில்தான் சென்று கொண்டு இருக்கிறது, என்றாவது பூமி தன்னைத் தானே சுற்றும் நாட்களும், சூரியனை சுற்றும் நாட்களும் குறைந்ததாக, அதிகரித்ததாக ஏதேனும் கணக்கு இருக்கிறதா? இல்லை கணக்குப் பார்க்கத் தவறிவிட்டார்களா? பழைய பஞ்சாங்கத்தையேப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் நமக்குச் சொல்லத் தெரிகிறது.
பூங்கோதையை பத்திரமாக அழைத்து வந்து உறங்க வைத்தாள் மாதவி. உறங்க முடியாமல் தவித்தாள் பூங்கோதை. தைரியமான பெண் எனினும் சில நேரங்களில் மனம் சஞ்சலம் தவிர்க்க முடியாததுதான். மாதவி பூங்கோதையில் தலையை தடவிக்கொண்டே சொன்னாள்.
‘’தூக்கம் வரலைங்களா பூங்கோதை, நாளைக்குக் கல்யாணத்துக்கப்பறம் என்ன கவலை, உங்க மனசை புரிஞ்சவர்தான் உங்களுக்கு கணவனா வரப்போறார் அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிக்குவார், தைரியமா தூங்குங்க, அப்படியே எது நடந்தாலும் வாசன் மாமா எதுக்கு இருக்கார்’’
வாசனால் என்ன அப்படி செய்து விட முடியும்?, இது பூங்கோதையும் கேசவனும் அவரவர் குடும்பத்தாரும் சம்பந்தபட்ட வாழ்க்கை. இருப்பினும் மாதவியின் அந்த ஆறுதல் மொழி கேட்டபின்னர் பூங்கோதை கண் அயரத் தொடங்கினாள்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பின்னர் ஊர் அடங்கி அயர்ந்து இருந்தது. வாசன், பார்த்தசாரதி மற்றும் பலர் மாதவியின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனர். சேகர் அய்யாவோ, சுந்தரனோ, அருணோ திருமணத்திற்கு வர இயலாத நிலை என கூறிவிட்டார்கள். சாரங்கன் திருமணத்திற்கு முதல்நாளே வந்திருந்தார், குரு வீட்டில் சாரங்கன் தங்கி இருந்தார். அந்த இரவு நேரத்தில் சாரங்கனிடம், குரு சொன்ன விசயங்கள், சாரங்கனுக்கு விபரீத ஆசையை உருவாக்கியது.
நடு இரவில் வாசன் திடுக்கிட்டு விழித்தான். திருமண முன்னேற்பாடுகளில் திருமால் பற்றி விசாரிக்க வாசன் மறந்தே போனான். திருமால் பற்றிய தகவல்கள் பாரதியிடம் இருந்து வராதது அந்த இரவில் வாசனுக்கு மிகவும் கவலையை அதிகரித்தது. அதுவும் இன்று காலையில் சென்று திருமாலைப் பார்த்து வருவதாக பாரதி நேற்று தகவல் சொல்லி இருந்தாள். இந்த நினைவுகள் வாசனது உறக்கத்தை கலைத்து இருந்தது. விஷ்ணுப்பிரியனின் நடவடிக்கைகளும் வாசனுக்கு ஒருவித அச்சத்தை தர ஆரம்பித்து இருந்தது.
அதிகாலைப் பொழுது விடிந்ததும், அனைவரும் திருமண விழாவிற்கு தயாராகிக் கொண்டு இருந்தனர். வாசன் உறங்காமல் பல வித சிந்தனைகளில் நேரம் போக்கிய பின்னர் திருமண விழாவிற்கு தயாரானான். சற்று அயர்ச்சியாக காணப்பட்டான். வாசன் தனது வீட்டிற்கு சென்று சில விபரங்களை எடுத்துக் கொண்டான். பூங்கோதைக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். மாதவியிடம் ஒரு சில விசயங்கள் பேசினான். மாதவி தைரியம் சொன்னாள்.
வாசன் பின்னர் விநாயகம் பெரியவர் வீட்டிற்குச் சென்றான். அங்கு விஷ்ணுப்பிரியன் தங்கவில்லை என்பதை அறிந்தான். ஆனால் இது குறித்து அங்கு அவன் மேலும் பேசவில்லை. விநாயகம் பெரியவர்தான் விசாரித்தார்.
‘’வா வாசா, எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்குல்ல, முதல்ல பொண்ணு கோவிலுக்குப் போகட்டும், அப்புறம் மாப்பிள்ளைப் போகட்டும் நீயே முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்து’’
‘’நீங்களே நடத்தி வைங்க அய்யா’’
நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. திருமால் குறித்தும் பெரியவரிடம் பேசினான் வாசன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வாசனது வீட்டில் இருந்து மேள தாளங்களுடன் பூங்கோதை பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மாதவி பூங்கோதையின் அருகிலேயே இருந்தாள். பூங்கோதை மாதவியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
சற்று நேரம் பின்னர் கேசவன் மேள தாளங்களுடன் பெருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வாசன் கேசவனுடன் இருந்தான். பூங்கோதை கோவிலின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள். கேசவன் கோவில் வாசல் அடைந்ததும் பூங்கோதை கோவிலுக்குள் நுழைந்தாள். கோவிலுக்குள் நுழைந்த மறுகணம் பூசாரி சொன்னார்.
‘’தாயா வந்து நிற்கிறியேம்மா’’
இந்த வார்த்தைகள் கேட்ட விஷ்ணுப்பிரியனும் பார்த்தசாரதியும் கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பூங்கோதைக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.
‘’ஆமாம், தாய்க்கும் தாயானவருக்கு தாயா வந்து நிற்கிறாங்க, நாங்கதான் இந்த உடை அலங்காரம் பண்ணினோம் பூசாரி அய்யா’’
மாதவி பதில் சொன்னதை கேட்டதும் விஷ்ணுப்பிரியன் மனதுக்குள் சிரித்தார். வாசன் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தான்.
கேசவன் பூங்கோதையின் இடது பக்கத்தில் வந்து நின்று கொண்டான். கோவிலுக்குள் மிகவும் குறிப்பிட்டவர்களே இருந்தனர். கோவிலுக்கு முன் இடப்பட்ட பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. புதிதாக எழுப்பபட்டிருந்த மண்டபத்தில் இருந்த குழந்தை வடிவ சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வாசன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான். வாசனின் உடல் முக பாவனைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்தார் விஷ்ணுப்பிரியன். மாதவி வாசனைப் பார்த்து கண்களால் பேசினாள். வாசனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. மாதவி பூங்கோதையிடம் பேசிக் கொண்டே இருந்தாள். பூங்கோதையின் கவனமெல்லாம் தான் மயக்க நிலை அடையக்கூடாது என்பதிலும் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்பதிலும் தான் இருந்தது.
மணப்பெண்ணும், மணமகனும் அமரவைக்கப்பட்டார்கள். அனைவரின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்காக மஞ்சள் கயிறு மகுடம் சூட்டிக் கொண்டது. அர்ச்சனை செய்திட மங்கலகர வண்ணம் பூசிய அரிசிகள் தரப்பட்டது. பூக்கள் தனது பிரிவை எண்ணி வருந்தாது மலர்ந்து சிரித்துக் கொண்டு இருந்தது. வளர்ந்து இருந்த நெருப்பின் முன்னமாய் வாய்மை வாயடைத்து நின்றது. ஓரிரு மந்திரங்கள் உபசரித்தார் பூசாரி. பெரியவர் நடத்தி வைத்தார். கேசவன் தாலியை கையில் வாங்கினான். தாலியை பூங்கோதையின் கழுத்தில் கட்டாமல் புதிய சிலையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மேளத்தின் சப்தம் அதிகரித்தது.
‘’தாலியைக் கட்டுங்க’’
வாசன் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. முதலில் கைகள் ஆடின, பின்னர் தலையும் உடலும் சேர்ந்து ஆடியது. மாதவி பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தாள். விஷ்ணுப்பிரியன் மனதில் திட்டம் நிழற்படமாக ஓடியது. பூசாரியின் குரலைக் கேட்ட கேசவன் பூங்கோதையின் கழுத்தில் தாலியைக் கட்டினான். மணமக்களை அனைவரும் வாழ்த்தினார்கள். வாசன் மயங்கி விழுந்தான். பூங்கோதை பயந்து போனாள். மயக்கம் தெளிவிக்கப்பட்ட வாசன் கோவிலினை விட்டு வெளியே வந்து நின்றான். ஊரின் வழக்கப்படி தயார் செய்யப்பட்டு இருந்த திருமண படிவத்தில் வாசன் கையொப்பமிட்டான். மூன்று படிவங்களில் ஒன்றை மணமகளிடமும், ஒன்றை மணமகனிடமும் தந்துவிட்டு மூன்றாவதை கிராமத்திற்கும் என எடுத்துக்கொண்டான். வாசனின் மயக்கம் பற்றி ஊரே பேசியது. முத்துராசு பொன்னுராஜூவிடம் கூறினார்.
‘’வாசுவை அப்படியே உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்ல வேண்டியதுதான்’’
‘’இரண்டு வருசம் போகட்டும்’’
அப்பொழுது பொன்னுராஜூக்கு ஒரு யோசனை தோன்றியது. வாசனின் பெற்றோர்களிடம் சொன்னார் பொன்னுராஜ். இப்பொழுதா என யோசித்தவர்கள் சரி போய் வரலாம் என மூவரும் திருமணச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கிளம்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.
மணமக்கள் கோவிலில் இருந்து வீடு நோக்கி நடந்தார்கள். அப்பொழுது பெரியவர் வாசனை அழைத்தார்.
‘’நீ இப்படி பலவீனமா இருக்கறது நல்லதில்ல, உடம்பைப் பார்த்துக்கோ வாசா, நாம புதன்கிழமை திருவில்லிபுத்தூர் போறோம்’’
‘’உடம்பு நல்லாத்தான் அய்யா இருக்கு, ஆனா மனசுதான் ஆட்டி வைக்குது’’
கூட்டத்துடன் கெட்டி மேளம் கொட்டிச் சிரித்து நகர்ந்தது. கல்யாணச் சாப்பாடு இனிதே நடைபெற்றது. வாயார வாழ்த்தி வயிறார உணவருந்தி திருமணத்திற்கு வந்தவர்கள் விடைபெறத் தொடங்கினர். அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றவாரே கேசவனின் வீட்டில் மணமக்கள் அமர்ந்து இருந்தனர். கண்டெடுக்கப்பட வேண்டியவைகள் என மணமக்களைத் தேடச் சொன்னார்கள். தொலைத்து விடாத வாழக்கையை இருவரும் தேடிக்கொண்டார்கள். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த வாசன், மாதவியிடம் பேசினான்.
‘’நல்ல வேளை நீ கல்யாணத்துக்கு வந்த’’
‘’மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்க மாமா, ஆனா பூங்கோதைக்கு வர இருந்த மயக்கத்தை எப்படி மாமா உடனே மாத்த முடிஞ்சது’’
‘’ம், பேசுவ, அப்படியே அந்த பெருமாள் தாத்தாவை நான் சுமக்கலாம்னு இருக்கேன்’’
‘’அதுக்கு நீங்க தேவையில்லை மாமா, ம், நானும் தேவகியும் இன்னைக்கு சாயந்திரமே கிளம்பறோம் மாமா, முதல்ல எங்க வீட்டுக்குப் போய்ட்டு பிறகு உங்க வீட்டுக்கு வர்றோம்’’
வாசனிடம் கூறிவிட்டு கேசவனிடமும் பூங்கோதையிடமும் விடைபெற்றுக் கொண்டு தேவகியுடன் கிளம்பினாள் மாதவி.
வாசனது பெற்றோர்களும், பொன்னுராஜும் சோலையரசபுரத்திற்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்வதாக கேசவன் வீட்டிலிருந்த வாசனிடம் வந்து சொல்லிவிட்டு தேவகியையும் மாதவியையும் பாதுகாப்பாக சென்று வருமாறு கூறிவிட்டு சோலையரசபுரம் சென்றார்கள். சிறிது நேரத்தில் கேசவன் வீட்டில் இருந்து வாசன் தனது வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் அருகில் சென்றதும், விஷ்ணுப்பிரியன் தனியாய் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். வாசனுக்கு ‘திக்’கென்றது.
(தொடரும்)
2 comments:
கதை நல்லா இருக்குதுங்க.....
கொஞ்சம் பத்தி பத்தியா இடம் விட்டு (space விட்டு பிரிச்சி) இருந்தால், வாசிக்க இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். :-)
மிக்க நன்றி சித்ரா, நல்லதொரு ஆலோசனை, அவ்வாறே செய்துவிடுகிறேன்.
Post a Comment