3. திரும்பிய திருமால்
நிதானமாக வீட்டினுள் திருமால் நுழைந்ததும் பாரதியும் கிருத்திகாவும் எழுந்தனர்.
‘’என்ன எழுந்துட்டீங்க, உட்காருங்க, என்னை மன்னிக்கனும், இப்படி உங்களை அதிக நேரம் காக்க வைச்சதுக்கு’’
‘’பரவாயில்லை சார், நாங்க இப்படி நின்னுகிட்டே பேசிட்டு கிளம்பறோம் எங்களுக்கு படிக்கிற வேலை இருக்கு சார்’’ என்றாள் கிருத்திகா.
‘’தப்பா எடுத்துக்க வேணாம், போன இடத்திலே கொஞ்சம் தாமதமாயிருச்சி, மதிய உணவு சாப்பிட்டுட்டு போங்க, இனி உங்களை தனியா உட்கார வைச்சிட்டுப் போக மாட்டேன்’’
‘’இன்னொரு நாளைக்கு வர்றோம் சார்’’
கிருத்திகாதான் பேசினாள். திருமால் பாரதியினைப் பார்த்தார். பாரதி கிருத்திகாவை அமரச் சொன்னாள். இருவரும் மீண்டும் அமர்ந்தார்கள். பாரதி திருமாலிடம் கேள்வி கேட்டாள்.
‘’உங்களைப் பத்தி சொல்ல முடியுமா’’
‘’என்னைப் பத்தியா’’
‘’அதாவது உங்க குடும்பம், பெருமாள் தாத்தா பத்தி விபரங்கள் சொல்லுங்க’’
திருமால் சிரித்தார். அப்பொழுது பெண்மணி ஒருவர் வீட்டினுள் நுழைந்தார். பாரதியையும் கிருத்திகாவையும் நோக்கி வணக்கம் சொன்னார். யாராக இருக்கும் என யூகித்துக் கொண்டவர்கள் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள். அவரும் வணக்கம் தெரிவித்தவாறே சமையலறையில் நுழைந்தார். அவரை திருமால் அறிமுகப்படுத்தினார்.
‘’இவங்கதான் என் மனைவி யோகலட்சுமி’’
திருமால் தனது குடும்ப விபரங்களைக் கூறிக் கொண்டே வந்தார். தனக்கு நான்கு வயதில் தீபக் என ஒரு பையனும், இரண்டு வயதில் தீபா என ஒரு பொண்ணும் இருப்பதாக கூறினார். திருமால் தான் சாத்திரம்பட்டியில் பிறந்து வளர்ந்ததாகவும், சென்னைக்கு பல வருடங்களுக்கு முன்னால் வந்து விட்டதாகவும், இங்கு ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். பாரதி அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டாள். பாரதிக்கு திருமால் கூறிய ஊர் கேள்விப்பட்டது போல் இருந்தது, ஆனால் நினைவிற்கு வரவில்லை. இதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பின்னர் கிருத்திகா சமையலறைக்குள் நுழைந்தாள்.
‘’பெருமாள் தாத்தா பத்தி சொல்லுங்க’’
மெளனமானார் திருமால். வீட்டின் சன்னல் வழியே வானம் பார்த்தார். மிகவும் யோசிப்பது போல் தென்பட்டது.
‘’அவரைப் பத்தி உங்களுக்கு விபரம் தெரிஞ்சா சொல்லுங்க’’
‘’சொல்றேன்’’
‘’அப்படின்னா சொல்லுங்க’’
‘’பெருமாள் போன வருசம் சாத்திரம்பட்டி போயிருக்கார், அங்க என்னைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கார் ஆனா அவரால என்னை சென்னைக்கு வந்து பார்க்க முடியாத சூழ்நிலை போல, எனக்கு கடிதம் போட்டிருந்தார். அவர் எங்க எங்க என்ன பண்ணினாருன்னு எல்லா விபரத்தையும் எழுதி எனக்கு அனுப்பி இருந்தார், அதுல அந்த சாத்திரம்பட்டி முகவரியை குறிப்பிட்டு இருந்தார், எனக்கு மிகவும் முக்கியமான வேலை இருந்ததால நானும் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிட்டேன். கிருத்திகா சொன்னதிலிருந்து அவருக்கு கடிதம் கிடைச்சிருச்சி, ஆனா என்னைப் பார்க்க வர விருப்பமில்லை போல’’
‘’அவரைப் பத்திய விபரமெல்லாம் எதுக்கு உங்களுக்கு அவர் எழுதனும்’’
‘’அங்க யாராச்சும் என்னை முக்காலம் உணர்ந்த ஞானினு சொல்லு இருப்பாங்க’’
‘’நாங்களும் அப்படித்தான் நினைச்சோம், ஆமா உங்க குழந்தைங்க எங்க’’
‘’நாங்க வேலை பார்க்குற இடத்தில விட்டு வந்துருக்கோம்’’
திருமால் கூறிய அந்த வேலை விபரங்கள், இட அமைப்பு பாரதியை மிகவும் வியப்புக்கு உள்ளாக்கியது.
‘’எப்படி இவ்வளவு எளிமையா இருக்க முடியுது’’
‘’இது கூட ஒருவகைக்கு ஆடம்பரம் தான்’’
திருமாலிடம் இருந்து பல விசயங்கள் சேகரித்தாள் பாரதி. எல்லாம் குறித்துக் கொண்டவள் ஒரு காகிதம்தனை தந்து வாசனுக்கு ஒரு கடிதம் எழுதித் தாருங்கள் என விண்ணப்பம் வைத்தாள்.
‘’என்ன எழுதனும், நீங்க என்னை வந்து பார்த்தீங்கனு சாட்சி கடிதமா, ஓ தாராளமா எழுதி தரேன்’’
அழகாக ஆறு வரிகள் எழுதி தனது முகவரியையும் குறிப்பிட்டு பாரதியிடம் தந்தார். பாரதி படித்துப் பார்த்தாள்.
‘’நீங்க தேதி எழுத மாட்டீங்களா’’
‘’எழுதற வழக்கமில்லை’’
பாரதிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆஸ்ரமத்திற்கு மதிய வேளையில் செல்லலாமா என கேட்டதற்கு திருமால் இன்று வேண்டாம், மற்றொரு முறை பார்க்கலாம் என்றார்.
அப்பொழுது சமையல் அறையில் இருந்து வெளிவந்தாள் கிருத்திகா.
‘’என்னய்யா, நேர்காணல் முடிஞ்சதா’’
‘’உன் தொந்தரவு இல்லாம எல்லாம் நல்லபடியாவே முடிஞ்சது’’
பாரதியின் பதிலை கேட்டுச் சிரித்துக் கொண்டே கிருத்திகா திருமாலிடம் கேட்டாள்.
‘’சார் நீங்க உண்மைதானே சொன்னீங்க, ஏன்னா இவ கனவை நம்பி கண்ணீர் விடுவா, கவலைப்படுவா பாவம் என் சிநேகிதி’’
‘’எனக்கு உண்மையா பட்ட விசயங்கள் சொன்னேன்’’
பாரதி குறுக்கிட்டாள்.
‘’கிருத்தி சமையலுக்கு உதவி பண்றேன்னு எல்லாம் சாப்பிட்டாச்சா’’
சமையல் தயாராக இருப்பதாக திருமாலின் மனைவி கூறினார். பாரதியும் கிருத்திகாவும் சாப்பிட்டார்கள். உணவு மிகவும் வித்தியாசமாக இருந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு நன்றி கூறிவிட்டு கிளம்பினார்கள்.
திருமால் அவர்களிடம் அவர்களது முகவரியைக் கேட்டார். பாரதி பதில் சொன்னாள்.
‘’எங்க முகவரியா, உங்களைப் பார்க்க வேண்டி வந்தா நாங்களே வந்து பார்த்துக்கிறோம், அப்படியே தேவைனு பார்த்தா பெருமாள் தாத்தா எழுதின கடிதம்தான் வேணும், ஆனா நீங்க கண்ணுல கூட காட்ட மாட்றீங்க, ஆஸ்ரமத்துக்கும் கூட்டிட்டுப் போக மாட்றீங்க அதனால வாசனே வந்து நேரில வாங்கிக்கிரட்டும்’’
யோகலட்சுமி கிருத்திகாவைப் பார்த்தவாறே கூறினார்.
‘’எல்லா விபரமும் கிருத்திகா என்கிட்ட சொல்லியாச்சு’’
பாரதி கிருத்திகாவை அர்த்தமுடன் பார்த்தாள். கிருத்திகா புன்னகைத்தாள்.
‘’வாசன் முகவரி தரலையே’’
திருமால் சிரித்துக்கொண்டார்.
‘’குளத்தூருக்கு எதுக்கு முகவரி, கடிதம், தேவைனு மட்டும் வர வேண்டாம், எப்பவும் வாங்க, வரதுக்கு முன்னாடி விபரம் சொல்லிருங்க’’
பாரதியும் கிருத்திகாவும் நன்றி கூறிவிட்டு கிளம்பினார்கள்.
‘’கிருத்தி, நீ எதுக்கு நம்ம முகவரி எல்லாம் தந்த’’
‘’என்னோட முகவரி மட்டும்தான் தந்து இருக்கேன்யா, என்னய்யா பண்ணிடப் போறாங்க, நீ ஏன்யா இப்படி பயப்படற, பதட்டப்படற அவங்க ரொம்ப நல்லவங்கய்யா, யோகலட்சுமி அக்கா சில விசயங்கள் சொன்னாங்கய்யா’’
‘’ம் சொல்லு’’
‘’அந்த அக்கா ரொம்ப அறிவாளிய்யா, நாம பார்த்தோமே திருமால், அவருக்கு முக்காலமும் தெரியுமாம்யா, ஆனா தெரிஞ்சது போல நடந்துக்கிர மாட்டாராம்யா ஒரு சாதாரணமான மனுசரைப் போலத்தான் வாழ்வாராம்யா’’
.‘’உன்னுடைய விளையாட்டுக்கு அளவே இல்லை கிருத்தி’’
‘’அந்த அக்காதான்யா சொன்னாங்கய்யா’’
பாரதி கிருத்திகாவை முறைத்தாள். கிருத்திகா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பேருந்து நிறுத்துமிடத்தில் வந்து நின்று கொண்டார்கள். வில்லிவாக்கம் வழி செல்லும் பேருந்து வந்து நின்றது.
(தொடரும்)
No comments:
Post a Comment