2. நிச்சயதார்த்தம்
கேசவனின் உறவினர்கள் பெண் அழைப்பிற்காக காலை பதினொரு மணிக்கு திருமலையை அடைந்தனர். திருமலையில் பூங்கோதையும் அவரது வீட்டாரும் தயாராகிக் கொண்டு இருந்தனர். பூங்கோதையின் வீட்டில் அனைவரும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
குளத்தூரில் இன்று இரவு நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, நாளை காலையில் பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூங்கோதைக்கு இத்தனை அவசரமாக திருமணம் அவசியமா? என கேட்டவர்களுக்கு பூங்கோதையின் பெற்றோர்கள் சோதிடத்தினை காரணமாக காட்டினார்கள். இத்திருமண விசயம் பூங்கோதையை அவரவர் வீட்டு மருமகளாக கொண்டு வர நினைத்த சிலருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்கோ போய் திருமணம் செய்கிறார்கள் எனப் பேசிக் கொண்டார்கள். விஷ்ணுப்பிரியன் ஒரு முக்கியமான திட்டத்துடன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தயாராகிக் கொண்டு இருந்தார். ஒரு திருவிழாவிற்குச் செல்வது போல் திருமலை ஊர் அசைந்தது.
கேசவனின் உறவினர்கள் நன்றாக உபசரிக்கப்பட்டார்கள். சிறிது நேரம் கழிந்த பின்னர் அனைவரும் கிளம்பிட தயாராகினர். அப்பொழுது பூங்கோதை ஏதோ நினைவுக்கு வந்தவளாக தனது தாயிடம் கூறினாள்.
‘’அம்மா ஆண்டாள் கோவிலுக்குப் போய்ட்டுப் போகலாம்’’
இதைக்கேட்டுக் கொண்டிருந்த கேசவனின் மாமா கண்ணையன் கூறினார்
.
‘’இப்பவே நேரமாச்சு, கோவிலுக்குப் போய்ட்டு போனா நிச்சயதார்த்த நேரம் கடந்திரும்’’
உடனிருந்தவர்களும் அதையே சொன்னார்கள். பூங்கோதை அண்ணி ஜோதியைப் பார்த்தாள். பூங்கோதையைப் பார்த்து ஜோதி சொன்னார்
.
‘’நேத்து தான போன கோதை, இன்னைக்கு காலையிலே போயிருக்கலாம்ல, இப்ப நாம கிளம்பிட்டு இருக்கையிலே கோவிலுக்குப் போகனும்னு சொன்னா எப்படி?
பூங்கோதை நகராமல் நின்றாள். ஜோதி யோசித்தவளாய் அத்தையிடம் கூறினாள்.
‘’அத்தை எல்லாரையும் கிளம்பச் சொல்லுங்க, அவங்கள இரண்டு பேரு மட்டும் நம்மளோட கோவிலுக்கு வரட்டும், சாமி கும்பிட்டுட்டு கோவிலிருந்து அப்படியேப் போவோம்’’
நேரமாகி விடும் என்றவர்கள் சரியான நேரத்திற்குப் போகனும் என வேண்டியபடியே ஆண்டாள் கோவிலுக்கு அனைவரும் சென்றார்கள்.
திருவில்லிபுத்தூர், கரிசல் பூமி. பல வருடங்களுக்கு முன்னால் பாம்புகள் குடி கொண்ட புற்றுக்கள் அதிகமாக இருந்த நிலமாய் இருந்தது. யாருமில்லா அந்த புதர்களும், மரங்களும் நிறைந்த அந்த நிலங்களில் வேட்டையாட இரண்டு அரசகுமாரர்கள் வந்தனர். அதில் ஒருவனை பாம்பு தீண்டி விட அவன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தான். இதனை அறிந்து கொண்ட அரசன் அங்கிருந்த பாம்பு புற்றுகளை, புதர்களை அழித்து ஒரு நகரத்தை நிர்மாணிக்க உத்தரவிட்டான். அப்படி உருவாக்கப்பட்ட அந்த நகரத்திற்கு இறந்து போன அரசகுமாரரின் பெயரை அடிப்படையாய் வைத்து வில்லிபுத்தூர் என பெயரிட்டான்.
அந்த வில்லிபுத்தூரிலே விஷ்ணுசித்தர் எனும் இயற்பெயர் கொண்ட பெரியாழ்வார் கண்டெடுத்த பெண் பிள்ளை தான் ஆண்டாள். பெரியாழ்வாரும் ஆண்டாளும் பெரும் பேறு பெற்றவர்களாயினர். ஆண்டாள் பிறந்த காரணத்தால் வில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆனது. அதே வேளையில் இந்த பெரியாழ்வாரே தன்னை பெண்ணாய் பாவித்து பாக்கள் இயற்றியதாய் கருத்துக்கள் உண்டு. அது சரி, யார் தான் உண்மையை உண்மையாக இருக்க விட்டார்கள்?
திருமலையில் இருந்து கிளம்பியவர்கள் மதிய வேளையில் திருவில்லிபுத்தூரினை அடைந்தனர். மணப்பெண் கோலத்தில் இருந்த பூங்கோதை துளசி மாலைகள் வாங்கிக்கொண்டு ஆரவாரமற்ற கோவிலுனுள் அமைதியாய் நுழைந்தாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு கோவிலுக்குச் செல்லாமல் செல்வதா என பூங்கோதையுடன் வந்திருந்தவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர்.
பூங்கோதை கோவிலில் பரிச்சயப்பட்ட ஒரு தூணிற்கு அருகில் சென்றாள். நின்ற பூங்கோதையிடம் அம்மா கேட்டார்.
‘’என்னம்மா இங்க நின்னுட்ட?’’
‘’எல்லோரையும் கூட்டிட்டுப் போம்மா, இதோ வரேன்’’
பூங்கோதைக்கு அழுகையாய் வந்தது. ஜோதி பூங்கோதையின் கைகளைப் பிடித்து அழைத்தாள்.
‘’வா கோதை’’
பூங்கோதைக்கு தெரிந்த துளசி விற்கும் சிறுமி பூங்கோதையிடம் வந்தாள்.
‘’எல்லாம் நல்லபடியா நடக்கும்க்கா, தைரியமாப் போய்ட்டு வாக்கா’’
ஜோதி மீண்டும் பூங்கோதையை அழைத்தார்.
‘’வா கோதை நேரமாகுது’’
விஷ்ணுப்பிரியன் ஒவ்வொரு நிகழ்வினையும் கவனித்துக் கொண்டே வந்தார்.
இந்த தூணிற்கு அருகில்தான் மூன்று மாதங்களாய் பெருமாள் அமர்ந்து இருந்தார். கோவில் மூடுவதற்கு முன்னர் கிளம்பிச் செல்பவர், கோவில் திறந்ததும் வந்து அமர்ந்து கொள்வார். கோவில் பிரசாதம்தனையும், அங்கு இருப்பவர்கள் தரும் உணவையும் அருந்திவிட்டு எங்கும் செல்லாமல் அந்த மூன்று மாதங்கள் மட்டும் அங்கு ஏன் வந்தார், எதற்கு செல்கள் தர சம்மதம் சொன்னார் என்பது விளங்க முடிவதில்லை.
இந்த கோவிலுக்கு வந்த பின்னர்தான் வேறு எங்கோ சென்று இருக்கிறார், அவர் அவ்வாறு செல்லும்போது பார்த்தசாரதியிடம் சொல்லிக் கொள்ளவில்லை. பெருமாள் இரவோடு இரவாக கிளம்பியவர்தான். பார்த்தசாரதி இவரை எங்கு தேடுவது என சில இடங்களில் தேடியதோடு விட்டுவிட்டார். அச்சமயம் குளத்தூர் வந்த பார்த்தசாரதி இவரைப் பற்றி விசாரிக்காமல் போனது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. ஊரைச் சொல்லாமல் பெருமாள் விட்டுவிட்டார் என்பது நாம் அறிந்ததே.
பூங்கோதை ஆண்டாளை வழிபட்டாள். தாயார் தனது அருளையெல்லாம் அவளுக்கு அள்ளித் தருவது போல் ஒரு உணர்வு அவளுக்குள் வந்து போனது. அனைவரும் அவசரப்படுத்தினார்கள். அவசரமாக ஏன் ஆண்டாளை வணங்க வேண்டும்? அமைதியாய் பக்தி செலுத்தி ஆனந்தபடத்தானே ஆலயம். ஆண்டாளை வணங்கிவிட்டு அனைவரும் கிளம்பினார்கள். கண்ணையன் கேட்டார்.
‘’பொண்ணுக்கு சாமினா ரொம்பப் பிடிக்குமோ’’
‘’எப்பவும் ஆண்டாளையே நினைச்சிட்டு இருப்பா’’
பூங்கோதையின் தாய் மோகனா சொல்லிக்கொண்டே அனைவரும் கோவில் விட்டு வெளியே வந்தனர். குளத்தூரை நோக்கி வாகனங்கள் விரைந்து சென்றது. மழை பெய்யத் தொடங்கியது. சாலையின் இருபுறங்களிலும் காற்றாலை மழையை சுழற்றிக் கொண்டு இருந்தன.
மின்சாரம் இல்லாமல் இன்று எதுவும் இல்லை என்றாகிவிட்டது. பொதுவாக மின்சாரத்தை படிம பொருட்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய், நிலக்கரி போன்றவைகளை மூலதனமான எரி பொருட்களாக பயன்படுத்தி உருவாக்குவார்கள். இப்படி இவைகளை எரிப்பதால் கரியமில வாயு அதிக அளவில் உருவாகின்றது. அப்படி உருவாகும் கரியமில வாயு அதிக அளவில் உருவாவதால் இந்த கரியமில வாயு ஒரு படிமத்தை ஓசோன் வளையத்தின் கீழ் வளிமண்டலத்தில் உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் கரியமில வாயுவின் படிமமானது சூரியக்கதிர்கள் பூமியிலிருந்து வெளிச்செல்லும்போது வெளியே விடாமல் மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி விடுகிறது. அப்படி உள்ளே வந்துவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் இந்த ஒளிக்கதிர்கள் பூமியினை வெப்பமாக்குகின்றன. இதனால் இன்று உலகில் பெரும் பிரச்சினையாக கருதப்படும் இந்த வெப்பமாதல் வினை பெரும் வினையாகத்தான் இருக்கின்றது. ஆனால் இன்று இதனை தவிர்க்க சூரிய ஒளியால் மின்சாரம் உருவாக்குவது, மற்றும் இந்த காற்றாலைகளால் மின்சாரம் உருவாக்குவது, அணைக்கப்பட்ட அதாவது அணை கட்டப்பட்ட தண்ணீரிலிருந்து மின்சாரம் உருவாக்குவது என பூமியினை பாதுகாக்க பல வழிகளை முயற்சி செய்து வருகிறார்கள். பேசாமல் விநாயகம் பெரியவர் தான் வாங்கி இருக்கும் நிலங்களில் இந்த காற்றாலைகளை நிறுவலாமே! எதற்கு திருவில்லிபுத்தூர் நெகாதம் செடி? செடியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாமோ?
வாகனங்கள் சற்று தாமதமாகவே குளத்தூரை வந்தடைந்தன. அனைவரும் அவசரம் அவசரமாக இறங்கினார்கள். பெரியவர், வாசன் மற்றும் பலர் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். வாசன் இதனை தனது வீட்டுத் திருமணமாக கருதினான். மாதவியும் தேவகியும் வந்து இருந்தார்கள். திருவிழா முடிந்து மீண்டும் ஊருக்கு வந்தது, அவர்களுக்கு ஊரிலேயே இருந்தது போல் இருந்தது.
குளத்தூரில் கால் வைத்ததும் விஷ்ணுப்பிரியன் மிகவும் தீவிரமாகத் திட்டம் தீட்டினார். எப்படி திட்டம்தனை ஆரம்பிக்கலாம் என எண்ணியவர் வாசனிடமிருந்து தொடங்க வேண்டும் என முடிவு பண்ணினார். சுபா, விஷ்ணுப்பிரியன் தீவிர யோசனையில் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. சுபா தன் அருகில் நின்று கொண்டிருந்த ஜோதியிடம் சொன்னார்.
‘’ஜோதி, விஷ்ணு பலமான யோசனையில் இருக்கறது போல இருக்கு, முகமே சரியில்லையே கவனிச்சியா’’
‘’எல்லாம் கோதையோட கல்யாண விசயமாத்தான் இருக்கும், எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாதில்ல’’
‘’இல்லை ஜோதி எனக்கு என்னமோ இவரே பிரச்சினை பண்றமாதிரிதான் தெரியுது’’
‘’என்ன சுபா நல்ல காரியத்துக்கு வந்து இருக்கறோம், நீ இப்படி யோசிக்கிற, நீ ஏதும் கேட்காத அவர்கிட்ட, நீயே இல்லாத பிரச்சினையை கிளப்பிருவ போலிருக்கே சுபா’’
‘’ஆண்டாளை வேண்டிக்குவோம்’’
அனைவரும் வாசன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். விஷ்ணுப்பிரியன் பூங்கோதையின் திருமணம் முடியும்வரை காத்திருப்பது என முடிவு செய்தார். எப்படியும் தனது திட்டத்தினை நிறைவேற்றியே தீர்வது என்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார்.
ஊர் விழாக்கோலம் பூண்டு இருந்தது. சிறுவர்கள், சிறுமியர்கள் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தனர். சுமதி விளையாடாமல் மிகவும் யோசனையில் இருந்தாள். இத்திருமண விழாவினை வெகு சிறப்பாக நடத்திட வாசன் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தான். நிச்சயதார்த்தம் வாசனின் வீட்டில் வைத்து நடத்திட முடிவு செய்து இருந்தார்கள். பூங்கோதையின் கல்லூரித் தோழர்கள், தோழிகள் திருமணத்திற்கு வந்து இருந்தார்கள்.
திருமணத்திற்கு என வெளியூரிலிருந்து இரவே வந்தவர்களுக்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. விநாயகம் தனது வீட்டில் பலர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். திருமலை மக்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஊரின் பெரியவர்களின் தலைமையில் வாசனது வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்தது. பழங்கள், மலர்கள் என ஏந்திய தட்டுகள் அணிவகுத்து அறையில் அமர்ந்திருந்தன. வீடு மிகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கேசவன் வீட்டின் வெளியில் இடப்பட்ட பந்தலில் அமர்ந்து இருந்தான். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இரவு நேர உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஊர் ஒளி வெள்ளத்தில் மகிழ்ச்சியில் குளித்து சிலிர்த்தது.
விஷ்ணுப்பிரியன் சுபாவிடம் தான் பெரியவர் வீட்டில் சென்று தங்கிக்கொள்வதாக கூறினார். சுபா எதுவும் பேசாமல் சரியென சம்மதம் சொன்னாள். வாசன் கேசவனுக்கு நன்றிதனை தெரிவித்துக் கொண்டான்.
‘’இன்னைக்கோட போறதா மாப்பிள்ளை, எந்த ஒரு பிரச்சினையும் இல்லாம வாழ்ந்து காட்டுறதலதான் இருக்கு மாப்பிள்ளே, நிச்சயம் வாக்கை காப்பாத்துவேன்’’
வாசன் நெகிழ்ந்து போனான். கேசவன் பேச்சு கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
நாடகத்தில் நடித்தவர்கள் நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டு பேசிக் கொண்டார்கள்.
‘’திருவிழாவில் பார்த்து கல்யாணம் பேசிக்கிட்டாங்க’’
‘’ரொம்ப வேகம் தான்’’
கேலியும் கிண்டலுமாய் இரவு மெல்ல நகர்ந்தது. பூங்கோதை அயர்வில் உறங்குவதற்கு வாசனின் அறைக்குச் சென்றாள்.
பூங்கோதையினைக் கண்டதும் வாசனின் அறையிலிருந்த மாதவி வரவேற்றாள்.
‘’வாங்க’’
‘’தூக்கமா வருது, அதான் இங்கு தூங்கலாம்னு வந்தேன்’’
‘’ஓ தாராளமா தூங்குங்க’’
அறையில் பூங்கோதைக்கு படுத்து உறங்கிட வழி செய்து தந்தாள் மாதவி. அலங்காரம் களைந்து விட்டு அயர்ச்சியில் கண் அயர்ந்தாள் பூங்கோதை. பூங்கோதையின் தாய், அண்ணி இருவரும், சுபா மற்றும் சிலரும் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் அங்கேயே தூங்கச் சொல்லிவிட்டு தேவகியுடன் மாதவி வாசனது அறையில் இருந்து வெளியே நடந்தாள்.
வீட்டு பந்தலில் பார்த்தசாரதி மற்றும் சிலருடன் வாசன் பேசிக் கொண்டு இருந்தான். மாதவியும் தேவகியும் செல்வதைக் கண்ட வாசன் அவர்களிடம் சென்று கூறினான்.
‘’மாதவி நீ எங்க போற, பூங்கோதை கூடவே கல்யாணம் முடியற வரைக்கும் இரு, நாங்க உங்க வீட்டுக்குப் போறோம்’’
‘’சரி மாமா’’
மாதவியும் தேவகியும் அறைக்குத் திரும்பினார்கள். பூங்கோதை மட்டும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். மற்றவர்கள் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பக்கத்து அறையை தயார் செய்து தந்துவிட்டு பூங்கோதையுடன் மாதவியும் தேவகியும் தூங்கினார்கள். நடு இரவில் திடீரென விழித்து எழுந்த பூங்கோதை அறையின் மின் விளக்கைப் போட்டுவிட்டு மாதவியை எழுப்பினாள்.
(தொடரும்)
2 comments:
நேர்த்தியாய் கதை சொல்லி வருவது, அருமையாக உள்ளது. :-)
நன்றி சித்ரா
Post a Comment