Wednesday, 5 May 2010

நுனிப்புல் (பாகம் 2 ) 1



1. பாரதி கண்ட திருமால்

‘’உண்மையும் அதன் உணர்வுதனையும்
இதுநாள்வரை அறிந்தது இல்லை
இனியும் அறியப்போவது இல்லை
இது உண்மையா? சொல்லத் தெரியவில்லை’’

அன்று சனிக்கிழமை. பாரதி அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றிவிட்டு, கிருத்திகாவை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள சிரிப்பாற்றனூரில் இருக்கும்  திருமால் வீட்டினை அடைந்தார்கள். நாற்பத்தைந்து நிமிட பேருந்து பயணம் உல்லாசமாக இருந்தது. சூரியன் சுடாமல் ஒளி தந்து கொண்டு இருந்தது. பாரதி முகவரியை மீண்டும் சரிபார்த்துக் கொண்டாள். பாரதியும் கிருத்திகாவும் பேசிக்கொண்டார்கள்.

‘’இதுதான் அந்த வீடு’’ 

‘’கதவை தட்ட வசதியில்லாம திறந்தே இருக்குய்யா, உள்ளே போவோம்யா’’

ஓடுகளால் வீட்டின் கூரை மேயப்பட்டு இருந்தது. மாடியின்றி கீழ்தளம் மட்டுமே கொண்டு அனைத்து அறைகளும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. வீட்டினைச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர்களுக்கு உள்ளே மரங்களும், பூச்செடிகளும் வளர்ந்து குளிர்ச்சியை தந்து கொண்டு இருந்தது. வீட்டின் சுற்றுப்புறம் மிகவும் அழகாக பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது.

பாரதியும் கிருத்திகாவும் வீட்டின் வாசற்படியில் சென்று நின்ற பொழுதில் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டினுள் இருந்து வெளியே வந்தார். பாரதியைப் பார்த்து திருமால் கேட்டார்.

‘’யாரைப் பார்க்கனும்?’’

‘’திருமால் பெரியவரைப் பார்க்கனும், என் பெயர் பாரதி, இவ என் தோழி கிருத்திகா’’

‘’என் பெயர்தான் திருமால்’’

பாரதியும் கிருத்திகாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘’வாசலிலேயே நிற்கிறீங்க, உள்ளே வாங்க’’

திருமால் மிகவும் திடகாத்திரமான உடலமைப்பை கொண்டு இருந்தார். முகத்தில் புன்னகை மட்டுமே தவழும் என்பது போன்ற முக அமைப்பு. சீரிய கண்கள். பேச்சில் பணிவு என மிகவும் பண்பட்ட இளைஞராக இருந்தார். ஒரு வயதான மனிதரைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வந்த பாரதிக்கும் கிருத்திகாவுக்கும் திருமாலைப் பார்த்ததும் மிகவும் வியப்பாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இவர் உண்மையிலே திருமால் தானா என ஐயம் கொள்ள வேண்டி இருந்தது. இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

இருவரும் வீட்டினுள் நாற்காலியோ, மேசையோ, கட்டிலோ இல்லாமல் இருப்பதைக் கண்டனர். திருமால் போர்வையினை தரையில் விரித்து அமருமாறு சொன்னார். இருவரும் வீட்டின் சுவர்களை வட்டமிட்டபடியே அமர்ந்தனர். சுவர்களும் தரையும் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. பூஜை அறை இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லாமல் இருந்தது.

‘’ஏதாவது சாப்பிட கொண்டு வரட்டுமா’’

‘’தண்ணீர் மட்டும் போதும்’’

‘’உங்களுக்கு என்ன வேண்டும் பாரதி?’’

பாரதி வியப்பிலிருந்து மீளாதவளாக காணப்பட்டாள்.

‘’இல்லை, ஒன்றும் வேண்டாம்’’

திருமால் அங்கிருந்து அருகில் இருந்த சமையல் அறைக்குள் சென்றார். பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள்.

‘’என்னது சம்பந்தமே இல்லாம இருக்கே’’

‘’பேசித் தெரிஞ்சிக்குவோம்யா, சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கோம்யா’’

தண்ணீரை கிருத்திகாவிடம் தந்தார் திருமால். பாரதியைப் பார்த்துக் கேட்டார்.

‘’பாரதிக்கு இன்னும் சந்தேகம் தீரலையா?’’

தண்ணீர் மிக மிகக் குளிர்ச்சியாக இருந்தது. பாதித் தண்ணீரைக் குடித்த கிருத்திகா பாரதியிடம் தண்ணீர் தந்தாள்.

‘’குடித்துப் பார்யா’’

‘’வேண்டாம் கிருத்தி, நீயே குடி’’

திருமால் பாரதியிடமும் கிருத்திகாவிடமும் கேட்டார்.

‘’என்ன விபரமா என்னைத் தேடி வந்து இருக்கீங்க’’

‘’வாசன் உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னான்’’

‘’எந்த வாசன்?’’

கிருத்திகா விபரம் சொல்லத் தொடங்கினாள்.

‘’குளத்தூர் பெருமாள் உங்களுக்கு கடிதம் போட்டாரில்லையா? அவருக்கு நீங்க போட்ட கடிதம்தனை குளத்தூரிலே இருக்க வாசன்கிட்ட கொடுத்து உங்களைப் பார்க்கச் சொல்லி இருக்கார், வாசன் இங்க வரமுடியாததால இவகிட்ட உங்ககிட்ட விபரம் கேட்டுச் சொல்லச் சொல்லி இருந்தார், அதான் நானும் இவளும் வந்தோம்’’

‘’ஓ குளத்தூர் பெருமாளா’’

‘’ம்’’

திருமாலின் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தது.

‘’போன வருசம்தான் எனக்கு கடிதம் அவர்கிட்ட இருந்து வந்தது... இப்ப அவர் எப்படி இருக்கார்?’’

‘’இப்போ அவர் உயிரோடில்லை, நீங்க அவரோட கடிதம் வைச்சி இருக்கீங்களா?’’

திருமால் மெளனத்துடன் தலையாட்டினார். தன்னிடம் கடிதம் இருப்பதாக தெரிவித்தார். சிறிது நேரம் பின்னர் பேசினார்.

‘’அவசரப்பட்டுட்டார், அவர் எழுதின கடிதம் என்னோடவே இருக்கட்டும்’’

சொல்லி முடித்தவர் எழுந்தார். பாரதியும் கிருத்திகாவும் உடன் எழுந்தனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு தான் சிறிது நேரத்தில் வருவதாகவும், வரும்வரை வீட்டிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றார் திருமால். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

‘’என்னய்யா எதுவும் புரியலையே’’

‘’இவருக்குப் பல விசயங்கள் தெரிஞ்சிருக்கு, பெருமாள் தாத்தா பத்தி தெரிஞ்சிருக்கு ஆனா இவ்வளவு சின்ன வயசானவரா தெரியறார், துறவி மாதிரி இருப்பாருன்னு பார்த்தா எல்லாம் தலைகீழா இருக்கே கிருத்தி’’

‘’இருய்யா வீட்டைச் சுத்திப்பார்த்துட்டு வரேன்’’

என்று சொல்லிக்கொண்டே எழுந்த கிருத்திகாவை கையைப் பிடித்து அமர்ந்த இடத்திலேயே அமர வைத்தாள் பாரதி. அரை மணி நேரமாகியும் திருமால் திரும்பவில்லை. இருவரும் பேசிக்கொண்டே இருந்தாலும் அவர்களுக்கு சற்று பயமாக இருந்தது.

‘’எழுந்துப் போகலாம்யா’’

‘’கொஞ்ச நேரம் இரு கிருத்தி’’

‘’என்னய்யா வந்தவங்களை இப்படி உட்கார வைச்சிட்டு வரேன்னு போனார், இன்னும் திரும்பல அதான் ஆளப் பார்த்தாச்சில நேரத்தை வீணாக்க வேணாம்யா’’

‘’நான் அவர்கிட்ட பேசிட்டுதான் வருவேன் கிருத்தி, அவர் வரப்ப வரட்டும்’’

கிருத்திகா வேகமாக எழுந்தாள். சமையல் அறையில் நுழைந்தாள். பாரதி கோபத்துடன் அவளைப் பார்த்தவாறே இடம் மாறாது அமர்ந்து இருந்தாள். சமையல் அறையில் தண்ணீர் குடித்துவிட்டு வந்தவள்

‘’இந்தாய்யா தண்ணியாவது குடி’’

‘’ஏன் இப்படி பண்ற கிருத்தி’’

‘’தண்ணி குடிக்கனும்னு தோணிச்சியா, அதான் நம்ம வீடா நினைச்சிட்டு உரிமையோட குடிச்சேன்’’

என சொல்லிக் கொண்டே தண்ணீரை கீழே வைத்துவிட்டு அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிராக இருந்த அறைக்குள் நுழைந்தாள் கிருத்திகா. பாரதி கிருத்திகாவின் செயலைக் கண்டு என்ன செய்வதெனப் புரியாமல் தலையை குனிந்து கொண்டு தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

கிருத்திகா சென்ற அறை மிகவும் வெளிச்சமாக இருந்தது. அந்த அறையில் மூடப்படாத ஒரே ஒரு அலமாரியில் சேலைகளும் வேஷ்டிகளும் தனித்தனியாய் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள். அந்த அறையில் பொருட்கள் மிகவும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவரில் படங்கள் எதுவும் மாட்டி இருக்கவில்லை. அந்த அறையிலும் கட்டில், மேசை, நாற்காலி என எதுவும் இல்லை. ஆனால் போர்வைகள், தலைகாணிகள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த அறையிலிருந்து வெளிவந்த கிருத்திகா குனிந்த தலை நிமிராத பாரதியைப் பார்த்தவாறே வீட்டின் பின்புறம் சென்றாள். கழிவறை, குளியலறை கட்டப்பட்டு இருந்தது. துணிகள் காய்ந்து கொண்டு இருந்தது. சிறுவன் சிறுமியின் உடைகள் காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள் கிருத்திகா. அச்சிறியத் தோட்டத்தில் சில்லென வீசும் காற்றில் மலர்களின் வாசனையை நுகர்ந்தவாரே தோட்டத்தினுள் நடந்தாள். தோட்டம் தாண்டி கட்டப்பட்டிருந்த வீட்டுச் சுவர் பின்னால் ஒரு பெரிய சுவர் நீளமாக கட்டப்பட்டு இருந்தது. அந்த பெரிய சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை கிருத்திகாவினால் காண இயலவில்லை. ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. திருமால் இன்னும் வரவில்லை. அறைக்குள் வந்த கிருத்திகா

‘’வாய்யா போகலாம், இவர் நாம நினைச்ச மாதிரி துறவியெல்லாம் இல்லை, இவர் குடும்பஸ்தன், குழந்தைகள் எல்லாம் இருக்குய்யா இவருக்கு’’

பாரதியின் கண்கள் சிவந்து இருந்தது.

‘’என்னய்யா ஆச்சு’’

‘’நீ ஓரிடத்தில உட்காரமாட்டியா கிருத்தி, நம்ம மேல நம்பிக்கை வைச்சி உட்காரச் சொல்லிட்டுப் போயிருக்கார், நீ என்னவோ அவரோட வீட்டை எல்லாம் சுத்திப் பாத்துட்டு இருக்கே, வாசனுக்கு இவரைப் பத்தி தகவல் சொல்லனும் அதனாலதான் இங்க இப்போ இருக்கோம்ங்கிறதை மறந்துராத கிருத்தி’’

‘’என்னய்யா இவ்வளவு டென்ஷன் ஆகிற, வீட்டுல ஒண்ணும் திருடிட்டுப் போற அளவுக்கு எதுவும் இல்லைய்யா அதான் தைரியமா நம்மளை உட்கார வைச்சிட்டுப் போயிருக்கார், இதுக்குப் போய் இப்படியாய்யா கோபப்படறது, இனி நான் எங்கயும் போகலைய்யா’’

பாரதி கிருத்திகாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். திருமால் நிதானமாக வீட்டினுள் நுழைந்தார்.

(தொடரும்)

2 comments:

Chitra said...

nice. :-)

Radhakrishnan said...

நன்றி சித்ரா.