Sunday, 30 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 14

நீலகண்டனின் வீட்டினுள் நுழைந்த மதுசூதனன் அனைவரையும் கண்டு தயங்கி நின்றான். கதிரேசன் மதுசூதனனை வா மதுசூதனா என அழைத்தான். வந்தது மதுசூதனன் என அறிந்த சிவசங்கரனும், பார்வதியும் அவனுக்கு நன்றி சொன்னார்கள். மதுசூதனன் பதில் நன்றி சொல்லிக்கொண்டான். நீலகண்டனை அவர்கள் அழைத்துச் செல்ல இருப்பதை அறிந்தான் மதுசூதனன். எல்லாம் தயாரான நிலையில் இருந்தது. 

கதிரேசனை வேறு இடம் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். பார்வதி மிகவும் கண்டிப்பாக இந்த வீட்டினை பரமேஸ்வரனிடம் பேசி வாடகைக்கு விடலாம் என கூறிவிட்டதால் நீலகண்டன் எதுவும் பேசவில்லை. ஈஸ்வரிக்கு கதிரேசனைப் பார்க்கையில் பாபமாக இருந்தது. கதிரேசனும் வேறு வீடு பார்த்துக் கொள்வதாக சொன்னான். 

நீலகண்டன் தனது அறைக்குச் சென்று கிளம்ப தயாரானார். அவர் பின்னாலேயே சென்ற மதுசூதனன் தாத்தா என அழைத்ததும் திரும்பிய அவர் ‘’சொல்லுப்பா’’ என்றார். ‘’உங்களுக்கு போக விருப்பமா?’’ என்றான். ‘’என் பொண்ணு பேச்சை எனக்கு மீற இப்போ விருப்பமில்லை, என் உடல்நிலையை பத்தி இப்பத்தான் ரொம்ப கவலைப்படுறா, கிளம்பிப் போறதுதான் நல்லதுனு மனசுக்குப் படுது, நான் போய் இருக்கிற இடத்திலும் சிவன் இருப்பார், பார்க்கலாம்’’ என்றவர் கிளம்பினார்.


கதிரேசனுக்கு ஈஸ்வரியைப் பார்த்ததில் சந்தோசம் இருந்தாலும் நீலகண்டன் பிரிந்து செல்வது மனதில் பெரும் துயரத்தை தந்து கொண்டிருந்தது. தாத்தா என அழுதுவிட்டான். நீலகண்டனின் கண்களும் கலங்கியது. ‘’அந்த சிவன் தான் இனிமே உனக்கு அடைக்கலம்,  பரமேஸ்வரன்கிட்ட நான் சொல்றேன், தங்க இடம் தருவார்’’ என்றார். அனைவரும் வீட்டிலிருந்து சென்றார்கள். கடைசியாய் சென்ற ஈஸ்வரி கதிரேசனிடம் ‘’தைரியமா இரு’’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.  பரமேஸ்வரன் வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். பரமேஸ்வரனிடம் நீலகண்டன் விபரம் சொன்னதும், நான் பாத்துக்குறேன் ஐயா என்றார்.
நீலகண்டனின் வீட்டினை பரமேஸ்வரனிடமே பேசி வாடகைக்கு விட்டு சென்றார்கள். மருத்துவரிடம் சென்று மருத்துவ முடிவுதனை சங்கரன்கோவிலுக்கு அனுப்பச் சொன்னார்கள்.  

கல்லூரியில் காலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது. வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்தான் கதிரேசன். ஈஸ்வரி மனதில் நடனமிட்டுக் கொண்டிருந்தாள். மதுசூதனன் ஒருநாள் கதிரேசனிடம் வந்து தான் தன்னுடன் படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணை காதலிப்பதாக சொன்னான். கதிரேசன் ''அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா?'' எனக் கேட்டான். ''தெரியும், ஒரு பாடல் பாடினேன், அந்த பெண் காதலுக்கு சம்மதம் சொன்னாள், அவளும் வைணவம், நீ கூடப் பார்த்திருப்ப, பெயர் வைஷ்ணவி. அவள் வைணவம் என முன்னரேத் தெரியும் அதனால்தான் காதலிக்கவேத் தொடங்கினேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் சமயம் பார்த்து காதலிக்கிறியோ என சொல்லி சிரித்தவன் என்ன பாட்டு என்றான். பாடிக் காட்டினான் மதுசூதனன்.
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரேரே ஆயர்தம் கொழுந்தே எண்ணும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

''ம்ம், அருமையான பாட்டு, நீ சமணசமய வரலாறுப் படிச்சியா?'' என்றான் கதிரேசன். ''உனக்கு என்ன பைத்தியமா எப்பப் பார்த்தாலும் சமண சமயம், சமண சமயம்னுட்டு என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வைணவம் மட்டும் தான் தெரியும். சமண சமயம் சைவ சமயம் எல்லாம் வெறும் கற்பனை'' என்றவனிடம் ''அன்னைக்கு அன்பும் சிவமும் பாடலைக் காட்டினாய்'' என்றான் கதிரேசன். ''அது அப்போ'' என வேகமாகச் சொன்னான் மதுசூதனன். அதற்கு கதிரேசன் ''நீ எதுக்கும், நீ பாடினியே, இந்த ஆழ்வார் எழுதின பாட்டைப் போய் பாரு, சமண சமயம் கற்பனையா இல்லையானு தெரியும்'' என்றான். ''எனக்கு காதலிக்கவே நேரம் போதலை, சும்மா வெறுப்பேத்தாதே'' என்ற மதுசூதனன் உடனே கிளம்பினான். கதிரேசன் மனதில் ஈஸ்வரி கண்ணை சிமிட்டினாள். மதுசூதனன் சென்றதும் கதிரேசன் பாடினான்.

‘’
தாயாய் நீயிருக்க வேண்டிய என்னை தவிக்கும்
சேயாய் பிறர் பார்க்க விட்டுநின்றாய்
காலம் தொடங்கும் முன்னரே மங்கையும் மனதில்
கோலம் போட்டதன்காரணம் சொல்சிவனே!''

(
தொடரும்)

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நன்றாகப் போகிறது ..
தொடர்கிறோம் ராதா ...

Radhakrishnan said...

மிக்க நன்றி தோழர் நியோ.