Friday, 9 April 2010

சாதிக்கலாம்னு இருக்கு

செத்துரலாம்னு இருக்கு. எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. மாணவர்களின் நிலையை எண்ணியும், தங்களது பணியை நினைத்தும் பல ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.  முதன் முதலில் இப்படியொரு விசயத்தை பல ஆசிரியர்கள் தங்களது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கேள்விபட்டபோது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஆசிரியர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது கலக்கம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காகச் சொல்லித் தரமாட்டேன்கிறார் என மாணவர்கள் சொல்லும்போது ஆசிரியப் பணிக்கு சென்று விடலாமா என மனம் எண்ணுகிறது. ஆனால் அதே மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம்தனை பார்க்கும் போது எதற்காக ஆசிரியப் பணிக்குச் செல்ல வேண்டுமென மனம் தடை போட்டு விடுகிறது.

போட்டிகள் நிறைந்ததுதான் இந்த உலகம். இது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. சக மனிதர்களை மிதித்துதான் முன்னேற வேண்டுமெனில் அதை தைரியமாகவே செய் என்பதுதான் நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்பாடு. அடுத்தவர்களுக்கு வலிக்கும் என தயவு தாட்சண்யம் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களது வலியை பகிர்ந்து கொள்ள எவரும் வந்து நிற்க மாட்டார்கள் என்பதுதான் உலகம் கண்டறிந்த தத்துவம்.

மாணவர்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆசிரியர்கள் திணறித்தான் போகிறார்கள். பலதரப்பட்ட மனநிலை கொண்ட மாணவர்களை திறம்பட நடத்துவது என்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விசயமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களுக்கென சொல்லப்பட்ட 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை' எனும் சொல்வழக்கு இன்றும் மனதில் ஒருவித வலியைத் தந்துவிட்டேச் செல்கிறது.  எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புதனை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  படிப்பு என்பது ஒரு கடைநிலை விசயமாகவே மாணவர்களில் பலர் கருதுகிறார்கள் என்பது கண்கூடான உண்மை. இப்படிப்பட்ட மாணவர்களை நெறிப்படுத்துதல் என்பது என்ன எளிதான வேலையா? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிதான வேலையாகவேத் தெரிகிறது. ஏனெனில் வடையும், காபியும், வீட்டு சொந்த வேலையை செய்ய சொன்ன ஆசிரியர்கள் என பலர் நமது கண்களில் தெரிகிறார்கள்.

'என் தந்தை பணக்காரர், நான் ஏன் படிக்க வேண்டும்'  'பணம் சம்பாதித்த பலர் என்ன படித்தார்கள்?' என்றே மாணவர்களால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பணம் சம்பாதிக்க எந்த ஒரு பட்டமும் அவசியமும் இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் தான். அதுகூட பல நேரங்களில் அவசியமில்லை. பணம் மூலம் ஒரு கல்வியாளாரை விலைக்கு வாங்கி, உதவியாளராக வைத்துக் கொள்வது என்பது ஒன்றும் பெரிய கடினமான விசயம் இல்லை. மேலும் பணம் சம்பாதிக்க ஒரு பெட்டிக்கடை போதும். அயராத உழைப்பும், முயற்சியும், சிந்திக்கும் வல்லமையும், அதை செயல்படுத்தக்கூடிய திறனும் மூலதனமாக இருக்கும் பட்சத்தில் பணம் சம்பாதித்தல் ஒரு பெரிய விசயமே இல்லை என்றுதான் ஒரு இட்லி கடை வைத்தவர் பல ஹோட்டல்களுக்கு அதிபதியானார் என அறியலாம்.

மேலும் படித்தவர்கள் ஆயிரம் யோசனைகள் செய்வார்கள். படிக்காதவர்கள் ஒரு யோசனைதான் செய்வார்கள். ஆயிரம் குறிக்கோள்கள் உடையவர்கள் ஒரு குறிக்கோளினையாவது முறையாக அணுகுவார்களா என்பது கேள்விக்குறியே. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கென தரப்படும் சம்பளமும், மரியாதையும் சமூகத்தில் ஒரு இழிநிலை தொழிலாகவே ஆசிரியப்பணி கருதப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களது வாழ்வில் எத்தகைய காரியங்களைச் செய்யவல்லக் கூடியவர்கள் என சற்று சிந்தித்துப் பார்த்தால் மொத்த உலகத்தையே ஒரு நேர்வழிப்பாதையில் கொண்டு செல்லும் திறன் படைத்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எத்தனை ஆசிரியர்கள் தங்களது கடமையுணர்வை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்?

ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருந்தால் அதில் இருபது மாணவர்கள் நன்றாகப் படிக்கக்கூடியவர்கள், மற்ற இருபது மாணவர்கள் சுமாராகப் படிக்கக் கூடியவர்கள், அதற்கடுத்த இருபது மாணவர்கள் படிப்பை சுத்தமாக வெறுக்கக் கூடியவர்கள் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஆசிரியர்களின் நிலை என்ன? அனைவரையும் நன்றாக படிக்க வைத்து அனைவரையுமே சிறந்தவர்களாக கொண்டு வருவதுதான், ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை எதுவென அறிந்தால் தலைசுற்றல் தான் வந்து சேரும். ஆம், கடைசி இருபது மாணவர்களை கண்டு கொள்ள வேண்டாம், அனைவரும் அறிவாளிகள் ஆகிவிட்டால் ஒரு சில வேலைகள் செய்வது எவர் என்றே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். என்ன ஒரு கோட்பாடு? மாணவர்கள் தாங்கள் என்ன வேலை செய்ய விருப்பப்படுகிறார்கள் என விட்டுவிடவும் முடியாது, ஏனெனில் பலருக்கு ஒரு தெளிவான முடிவுதனை எடுக்கும் பக்குவம் இருப்பது இல்லை.

படித்துவிடுவதால் வரும் பெரும் பிரச்சினைகள் அளவிடமுடியாதவை. இவ்வளவு படித்துவிட்டு எதற்கு இந்த வேலை செய்கிறாய்? என்றே கேட்கப்படும் கேள்விகளால் மனம் உடைந்து போவோர்கள் எத்தனை பேர்? படித்தவர்கள் எத்தனை பேர் விவசாயம் பார்க்கிறார்கள்? அதே வேளையில் 'அவன் படிக்காதவன், அப்படித்தான் இருப்பான்' என்பது எத்தனை செளகரியமாக இருக்கிறது.

இந்த ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு உட்படுவது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒன்றும் அதிசயமில்லை. மாணவர்களால் மட்டுமல்ல, பெற்றோர்களினாலும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்கு உட்படுகிறார்கள். வீட்டிலிருந்தே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தர இயலுமெனில் பள்ளிக்கூடம் எதற்கு என்றே பெற்றோர்களின் மனநிலை இருக்கிறது. ஒரு ஆசிரியர் சொல்லித் தருவதை திறம்பட பின்பற்றும் மாணவரே முன்னுக்கு வருவார் என்பதை ஏன் பெற்றோர்கள் உணர்வதில்லை! தங்களது பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காமல் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?

நாம் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான். கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் என நாம் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையிலும் அறிந்து கொள்வது என்பது அளவிடமுடியாதது. இதில் ஆசிரியர்கள் என அவர்களுக்கு மட்டும் தனி பொறுப்பு என்பது எவர் போட்ட சட்டம்? ஆசிரியர்களே, உங்கள் கடமையை நீங்கள் சரி வரச் செய்து வாருங்கள், செத்துரலாம்னு இருக்கு எனச் சொல்வதை விட்டுவிட்டு இன்னும் இன்னும் சாதிக்கலாம்னு இருக்கு என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த இடுகையை அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

10 comments:

Chitra said...

/////ஆசிரியர்களே, உங்கள் கடமையை நீங்கள் சரி வரச் செய்து வாருங்கள், செத்துரலாம்னு இருக்கு எனச் சொல்வதை விட்டுவிட்டு இன்னும் இன்னும் சாதிக்கலாம்னு இருக்கு என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த இடுகையை அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். /////

...... நான் பள்ளியில் இருந்த பொழுது, ஆசிரியர்கள் அருமை அவ்வளவாக புரிந்தது இல்லை. இப்பொழுது அவர்களை மிகவும் மதித்து நேசிக்கிறேன். நான் மீண்டும் அவர்களை சந்திக்க சென்ற பொழுது, அவர்கள் என்னை வரவேற்ற விதமும் அன்புடன் அரவணைத்து கொண்ட விதமும், என்னை நெகிழ செய்து விட்டது. The teachers influence the students to a great extent. :-)
நல்ல பதிவு.

குலவுசனப்பிரியன் said...

நல்ல அலசல். ஆசிரியர் ஒருவர், மாணவனின் வீட்டாரை அழைத்தால், "வீட்டில் தகராறு செய்கிறான் என்றுதான் கல்லூரிக்கு அனுப்பினோம், நீங்களும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்கின்றனர் என்று வருத்தப்பட்டார்.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்காமல் ஆசிரியர்களை குறை கூறுவது சரி இல்லை.

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

//மாணவர்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆசிரியர்கள் திணறித்தான் போகிறார்கள். பலதரப்பட்ட மனநிலை கொண்ட மாணவர்களை திறம்பட நடத்துவது என்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விசயமாகத்தான் இருக்கிறது. //

அப்போ அது தெரியல , உண்மைதான் தல

அன்புடன் அருணா said...

ரொம்பவும் தேவையான பதிவு! அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.பூங்கொத்து!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, அருமையாக சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி பிரியன் அவர்களே, மிகவும் உண்மை. மிக்க நன்றி அமைச்சர் அவர்களே, மாணவ பருவத்தில் பல விளையாட்டாகவே இருக்கும். மிக்க நன்றி ஆசிரியை அவர்களே, பூங்கொத்து விற்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

அவசியமான பதிவு.....

Radhakrishnan said...

மிக்க நன்றி சங்கவி அவர்களே.

சசிகுமார் said...

படித்துவிடுவதால் வரும் பெரும் பிரச்சினைகள் அளவிடமுடியாதவை. இவ்வளவு படித்துவிட்டு எதற்கு இந்த வேலை செய்கிறாய்? என்றே கேட்கப்படும் கேள்விகளால் மனம் உடைந்து போவோர்கள் எத்தனை பேர்?

மிகச்சரியான ஒன்று நண்பா, அவனே கிடைத்தை செய்வோமென்று செய்து கொண்டிருக்கும் போது இது போல கேட்பதனால் அவனுடைய மனம் பகுந்த பாதிப்பு அடைகிறது

Radhakrishnan said...

மிக்க நன்றி சசி.