Friday, 30 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 8

கதிரேசனை வீட்டிற்குள் அழைத்தார் செல்லாயி. ஆனால் உள்ளே செல்லாமல் வெளியே நின்றான் கதிரேசன். கதிரேசனிடம் என்னைத் தேடி நீ வந்திருக்க அவசியமில்லை என்று செல்லாயி சொன்னார். பார்க்க வேண்டும் போல் தோணியது என்ற கதிரேசனிடம் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்றார் செல்லாயி. நான் சிவன் பக்தன் என்றான் கதிரேசன். நீ என் மகன் என்பதை யாரும் மறுக்க மாட்டாங்க என்ற செல்லாயி நீ முதலில் உள்ளே வா, வெளியே நின்னு பேசாதே என்றார்.

அதற்குள் ஊரில் இருந்த சிலர் அங்கே வந்து சேர்ந்தனர். நடந்த விசயம் உடனே தெரிந்து கொண்டனர். கதிரேசனை நோக்கி படிக்கிற வயசுல என்ன பக்தி வேண்டி கிடக்கு என்றார்கள். அதிலும் ஒரு பாட்டி ‘’கதிரேசு, புளி புளிக்கத்தான் செய்யும் ஆனா அது பதார்த்தங்களை கெடாம பாதுகாக்கும் தன்மை வச்சிருக்கு, அதுபோல இந்த குடும்பவாழ்க்கை கசக்கறமாதிரிதான் தெரியும் ஆனா சந்ததி சந்ததியா காத்து வரும்’’ என்றார். ''செல்லாயி, ஒரு கல்யாணத்தை இவனுக்குக் கட்டி வையி, எல்லாம் சரியாப் பூரும்'' என்றார் அந்த பாட்டி மேலும்.

‘’எனக்கு என்ன பண்றதுனு தெரியலை, ஒருவாரம் படிக்கப் போய்ட்டு இப்படி வந்து நிற்கிறான். யார் என்ன மந்திரம் செஞ்சாங்களோ'' என்றார் செல்லாயி வேதனையுடன். ''நீ தான் நல்லா படிச்சி வருவனு பார்த்தா இப்படி பொறுப்பில்லாம சாமியாரு ஆயிட்டேன்னுட்டு, போய் நல்லா படிச்சி முன்னுக்கு வரப் பாரு'' என பொறுப்பில்லாமல் இளைஞர்களும், தந்தையர்களும் சுற்றிவரும் ஊரில் பொறுப்புடன் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.

''வீட்டுக்குள்ள வாப்பா, மத்ததைப் பிறகு பேசிக்கிரலாம்'' என கதிரேசனை உள்ளே அழைத்துச் சென்றார் செல்லாயி. கதிரேசன் வீட்டுக்குள் நுழைந்தான். மற்றவர்கள் கலைந்து சென்றார்கள். செல்லாயியின் உறவினர்கள் கேலி பேசினார்கள். ஒரு மகனைப் பெத்து அவனை சாமிக்கு நேந்துவிடத்தான் வளர்த்தியாக்கும் என்றார்கள். கதிரேசன் வீட்டில் தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான். நாழிகை கழிந்து கொண்டே இருந்தது. ஊரெல்லாம் கதிரேசன் பற்றிய பேச்சாகிவிட்டது. 'இந்த வயசுல சாமியாரு ஆயிட்டேனு வந்து நிற்குது' என்றார்கள் சிலர்.

கதிரேசனிடம் பல விசயங்கள் சொல்லி அலுத்துப் போயிருந்தார் செல்லாயி. ''பரம்பரையே இல்லாமப் போயிரும்பா யோசிச்சி செய்பா'' என்றதோடு நிறுத்திவிட்டு அமைதியானார். ஒரு சில மணி நேரங் கழித்து வீட்டுக்கு வந்த கதிரேசனின் தந்தை வழி தாத்தா ''இவங்களுக்குத் தெரியுமா? அத்தனையும் ஒதுக்கிட்டு சிவனே கதி என இருக்கறது எத்தனை கடிசுனு இவங்களுக்குத் தெரியுமா? கதிரேசு, நீ எடுத்த முடிவு அத்தனை சாதாரணமில்ல, மனசு ஓரிடத்தில உட்காராது, கண்ணை மூடிக்கிட்டாலும் கண்டது மனசுக்குள்ள கன்னாபின்னானு சுத்தும், எல்லோரும் போல சிவனைத் தொழுதுட்டு சாதாரணமா வாழ்ந்துட்டுப் போக வழியப் பாரு அம்புட்டுதான் சொல்வேன்'' என்றார் அவர் பங்குக்கு.

செல்லாயியின் அண்ணன் விசயம் கேள்விபட்டு துவாரம்பட்டியிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ''என்ன புள்ளைய வளர்த்து வைச்சிருக்க, சாமியாரா போறான்னா அதை ஊரு பூரா பரப்பிட்டு திரியனுமா, ஏண்டா நீதான் சாமியாராப் போகனும்னு முடிவு பண்ணிட்டா என்னத்துக்கு உன் ஆத்தாளப் பார்க்க வந்த, அப்படியே அங்குட்டு போக வேண்டியதுதானே, மானம் போகுது, ஊருல பார்க்கறவனெல்லாம் உன் மருமகன் கதிர்ஈசனா மாறிட்டானு கேலி பண்றானுங்க, ஒழுங்கா இருக்கற வழியைப் பாரு இல்லை கையை காலை உடைச்சி மூலையில உட்கார வைச்சிருவேன்'' என கோபத்தின் எல்லைக்குச் சென்று கத்தினார் அவர். கதிரேசன் எந்த ஒரு சலனமுமின்றி அமைதியாகவே அமர்ந்து இருந்தான்.

செல்லாயி தனது அண்ணன் லிங்கராஜுவை தனியாய் அழைத்து ''உன் பொண்ணை என் பையனுக்கு உடனே கல்யாணம் பண்ணிருவோம்ணே, இவன் இருக்கறதப் பார்த்தா பயமா இருக்கு'' என்றவுடன் ''அவ படிச்சிட்டு இருக்கா, இப்படி மனசு இருக்கறவனுக்கு என் பொண்ணை ஒரு காலமும் தரமாட்டேன், நாளைக்கே ஓடிப் போய்ட்டான்னா என் பொண்ணு நிலைமை என்னாகிறது'' என சொல்லி முடித்த அடுத்த கணமே ''என் புள்ளைய நீ இனி திட்டாதேண்ணே, நீயும் விசயம் கேள்விபட்டு வராமலேயே இருந்திருக்கலாம்'' என்றார். லிங்கராஜு வீட்டை விட்டு வெளியேறினார்.

நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. முழு தினமும் விரதம் இருந்து இருந்தாள் செல்லாயி. அவரவர் உறங்கச் சென்று விட்டார்கள். ''உனக்கு தெரியாதாய்யா, அந்த ஈசனே குடும்பஸ்தருய்யா, சிவனைப் பத்தி நீ சின்ன வயசுல இருந்தே சொல்சிவனேனு சிலாகிச்சிப் பாடறப்ப எல்லாம் எனக்கு கேட்க சந்தோசமா இருக்கும் ஆனா இப்போ நீ இருக்கற நிலையைப் பாத்தா எனக்கு உசிருப் போகற மாதிரி இருக்குப்பா, இப்பப் பாடுப்பா'' என அழுத விழிகளுடன் சொன்னார் செல்லாயி. கதிரேசன் தனது அமைதியை கலைத்தான்.

உன்பக்தனாய் மாறிய கணம் பந்தம் வேண்டாமென
தன்நிலை தவறிய சிறுகுழந்தையை போன்றே
பெற்றது என்நிலை என்பதாய் கருதியே பேசினர்
உற்றவள் உயிரை அண்டம்தருமோ சொல்சிவனே.

செல்லாயி மயங்கி விழுந்தாள். கதிரேசன் அம்மா அம்மா என பதறியவண்ணம் எழுப்பினான். தண்ணீரை எடுத்து வந்து தெளித்தான். மயக்கம் தெளிந்த செல்லாயி பதறிய கதிரேசன் கண்டு ''மத்த உயிர் கலங்கறதைக் கண்டு காப்பாத்த துடிக்கிற உணர்ச்சியை விட எந்த உணர்ச்சியும் சிவனுக்கு உகந்தது இல்லைப்பா'' என்றார் அவர். சமையல் அறையில் செல்லாயி விரதம் முடிக்க வைத்திருந்த உணவை எடுத்து வந்து அன்னைக்கு ஊட்டி விட்டான் கதிரேசன். அவனது கைகள் நடுங்கியது.

(தொடரும்)

அடியார்க்கெல்லாம் அடியார் - 7

சிவபுராணம் படிக்க ஆரம்பித்தான் கதிரேசன். நீலகண்டன் சொன்ன வரியையும் அடுத்த வரியையும் மட்டும் பலமுறைப் படித்தான். பொருள் விளங்கியது போலிருந்தது. இருப்பினும் நீலகண்டனிடமே விளக்கம் கேட்டுவிடலாம் எனச் சென்றான்.


 ''தாத்தா எனக்கு விளக்கம் சொல்லுங்க'' என்றான் கதிரேசன். 

''புரியலையா, புரிந்தது சரிதானானு சோதிக்க வந்திருக்கியா?'' என்றார் நீலகண்டன்.



''புரிந்தது சரிதானானு தெரிஞ்சிக்க வந்துருக்கேன்'' என்றான் கதிரேசன். 


''என்ன புரிஞ்சிக்கிட்ட சொல்லு?'' என்றார் நீலகண்டன். 

''நான் எல்லாப் பிறப்பும் எடுத்தும் உன்னை உணரவில்லை; ஆனால் இம்முறை உன்னை உணர்ந்து உன் மனம் அடைந்தேன்'' என்றான் கதிரேசன்.



''இவ்வளவுதானா? இன்னும் இருக்கா?'' என்றார் நீலகண்டன்.


 ''அவ்வளவுதான் தாத்தா'' என்றான் கதிரேசன். 


''பாடல் முழுசும் படிச்சியா?'' எனக் கேட்டார் நீலகண்டன்.


 ''இல்லை தாத்தா'' என்றான் கதிரேசன்.


 ''இதுதான் வாழ்க்கையோட சூட்சுமம்'' என்றார் அவர். 

மேலும் அவர் தொடர்ந்தார்.



 ''மொத்த வாழ்க்கையை யாராலேயும் வாழ முடியாது, எல்லா விசயத்தையும் ஒரே பிறப்புல தெரிஞ்சிக்கவும் முடியாது. காலம் காலமா சொன்னவங்க, அவங்களுக்கு முன்னால சொன்னவங்கனு கருத்துக்களை எடுத்துக்கிட்டாலும் முழுசும் ஒருத்தரும் தெரிஞ்சிக்க முடியாது. ஒவ்வொன்னா அதன் அதன் நிலையில நாம பிறந்தாலும் நம்மால விசயத்தைத் தெரிஞ்சிக்கிறது கஷ்டம். ஆனா எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிட்டதுபோல நாம நடந்துக்கிறதுதான் நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு வாழுற வாழ்க்கை. இப்படியே நாமப் பார்த்தோம்னா தெளிவுதான் பிறக்கனும், ஆனா மயக்கநிலைதான் மிஞ்சும், அதனாலதான் தெரிஞ்சிக்கிறம்னுங்கிற ஆவல் தொடர்ந்துகிட்டே இருக்கு உலகத்திலே'' என நிறுத்தியவர் சிறிது இடைவெளிவிட்டு சொன்னார். ''எந்த விசயத்திலும்''. கதிரேசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். 

''இப்பப் பாடலுக்கு வரேன், எத்தனையோ பிறப்பு எடுத்தபோதும் அவரால் பெருமானை உண்மையாய் தொழ இயலவில்லை. அதுல என்ன சொல்றாருங்கிறதுதான் முக்கியம். புல், கல் என்றெல்லாம் சொல்லி மனிதனாகவும் பிறந்தேன், அசுரராகவும் இருந்தேன். முனிவராகவும் இருந்தேன். ஆனால் அப்போது கூட உனது பாதம் எனக்குத் தென்படவில்லை. இப்பொழுது உன் பாதம் தென்பட்டு உன்னை சரணடைந்தேன் என்கிறார், இது நான் அறிஞ்சது. ஒவ்வொருத்தரும் உன்னை மாதிரி பொருள் கொள்ளலாம். அதனால மனிதராக இருப்பவர்கள் சிவனை மட்டுமே தொழ வேண்டுமென்பதில்லை. ஆனால் அவர்கள் சிவனைத் தொழும்வரை அவர்களது பயணம் தொடரும், அதுவும் முந்தைய பயணம் நினைவில்லாமல். சிவனை உண்மையாய் உணரும் வரை இந்த வாழ்க்கைப் பயணம் தொடரும். உயிருள்ள பொருளிலும், உயிரற்ற பொருளிலும் சிவனே. எல்லாம் சிவமயம். அறிந்து கொள்ளும்வரை பயணம் நிற்காது. நான் அறிந்து கொண்டேனா என்பதை என்னால் மாணிக்கவாசகர் போல் சொல்ல முடியவில்லை''


கதிரேசன் கண்கள் கலங்கியபடி நன்றி சொன்னான். நீங்கள் தமிழாசிரியரா எனக் கேட்ட கதிரேசனுக்கு ஆம் என்று தலையாட்டினார் நீலகண்டன். அவருடன் தங்கி இருந்த நான்கு நாட்களும் மிகவும் நன்றாக இருந்தது. பல விசயங்கள் சொன்னார். அன்றைய தினங்களில் பாடல் எதுவும் அவன் பாடவே இல்லை. பூஜையில் அமர்ந்தபோது பாடுவான் என எதிர்பார்த்த நீலகண்டன் அவன் பாடாதது கண்டு ஆச்சரியமடைந்தார். ஆனால் அதுகுறித்து கேட்கவில்லை. ஒவ்வொரு தினமும் தீவிர யோசனையில் இருந்தான் கதிரேசன். மதுசூதனன் ஒவ்வொரு மாலையும் கதிரேசனை சந்திப்பான். தெய்வேந்திரன் பற்றி அதிகமாக சொல்லி இருந்தான். வெள்ளிக்கிழமை வந்தது. ஊருக்குச் செல்ல வேண்டும் என நீலகண்டனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். ''நிச்சயம் என்கிட்ட திரும்பி வரனும்'' என்றார் நீலகண்டன். 

புளியம்பட்டியை அடைந்தான் கதிரேசன். கதிரேசன் வரவைக் கண்டதும் கண்களில் நீர் கோர்த்தது செல்லாயிக்கு. வீட்டின் வாசல் வெளியே நின்றவன் ''அம்மா நான் சிவன் பக்தனானேன், இனி எனக்கு குடும்ப பந்தம் வேண்டாம், என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா'' என்றான் கதிரேசன். அந்த வார்த்தைகளைக் கேட்ட செல்லாயி பதறினார். எழு என தூக்கிவிடக்கூட சக்தியின்றி, செல்லாயிக்கு இருந்த பாதி உயிரும் போய்விடத்தான் துடித்தது. 



(தொடரும்) 

Thursday, 29 April 2010

எழுதுவதை நிறுத்திப் போராட்டம்

அன்பு நிறைந்த தமிழ் எழுத்தாளர்களே, பாசம் மிக்க தமிழ் பதிவர்களே, மன்னிக்கவும் பதிவர் எழுத்தாளர்களே, உங்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அந்த அமைப்பின் பெயர் என்னவெனில் ' தமிழ் தொண்டு அமைப்பு ' ஆகும்.

இந்த தமிழ் தொண்டு அமைப்பிற்கு நான் தலைவர். இந்த 'தமிழ் தொண்டு அமைப்பு' தனில் உறுப்பினராக சேருபவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன், இல்லை இல்லை,  கட்டாயப்படுத்துகிறேன்.  மேலும் எவர் எவர் துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர், கணக்காளர், என பல பதிவுகளுக்கு, மன்னிக்கவும், பதவிகளுக்கு தங்கள் பெயரை தாங்களே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பெயரை எவரேனும் பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவெனில் நமது கோரிக்கைகளை நாமே முனைந்து செயல்பட்டு நிறைவேற்றும் வரை தமிழில் எழுதாமல் இருப்பது ஆகும். இந்த அமைப்பில் இணைபவர்கள், அதாவது சேர்ந்துவிட்டீர்கள்,  இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முக்கிய நோக்கத்தை எவரேனும் மறந்து செயல்பட்டால் அவர்களை கடுமையாக இந்த அமைப்பு தண்டிக்கும் என்பதை கடுமையாகவே சொல்லிக் கொள்கிறேன். மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணையாவிட்டால் உங்களை எழுத்தாளர்கள் என்றோ, பதிவர்கள் என்றோ ஒருபோதும் நீங்களோ எவரோ அழைத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். அதையும் மீறி நீங்கள் எழுதினால் உங்கள் கணினிகள், கைகள் உடைக்கப்படும் என்பதை சற்று சீற்றத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

வருகிற மே மாதம் முதல் தினமான சனிக்கிழமை அன்று நமது போராட்டம் தொடங்குகிறது என்பதை அறிவுறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்கள் ஆகிவிட்டீர்கள் எனும் உணர்வு இப்போதே உங்களுக்கு வர வேண்டும். தமிழில் எழுதுவதை நிறுத்த நீங்கள் இப்போதே உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மொழி பெயர்ப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏதேனும் தமிழில் எழுதினால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் உள்ள இந்த தமிழ்  எழுத்தாளர்கள், பதிவர் எழுத்தாளர்கள் இந்த அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கடுமையாகவே எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் கோரிக்கைகள் என்னவெனில்

௧. உலகம் முழுவதும் அனைவரும் தமிழ் அறிந்திருக்க வேண்டும். எழுத படிக்க கட்டாயம் தெரிய வேண்டும்.

 ௨. அனைவரும் தமிழ் எண்களை உபயோகித்து பழக வேண்டும், இனிமேல் வேறு எண்களை மறந்தும் உபயோகிக்கக் கூடாது.

௩. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, ஸ்பானிஷ் இது போன்ற மொழிகள் யாவும்  தமிழ் மொழிக்கு அடிமை என அந்தந்த மொழிகள் தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மொழி புழக்கத்தால் அனைத்து பிற மொழிகள் அழிந்து போய்விட வேண்டும்.

௪. மிகவும் முக்கியமாக அனைவரும் தங்களது பெயர்களை தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முன் மாதிரியாக என் பெயரை நான் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டேன்.

௫. தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிற மொழி வார்த்தைகள் பேசக் கூடாது.

௫. உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் எனும் எண்ணம் அனைவரின் மனதில் வேரூன்ற வேண்டும்

இப்படிப்பட்ட பல கோரிக்கைகளை, மற்ற கோரிக்கைகள் பின்னர் வெளியிடப்படும்,  நிறைவேற்றும் வரை அனைவரும் இனிமேல் தமிழில் எழுதாமல் இருக்க வேண்டும் என ஆணையிடுகிறேன். தமிழில்தானே எழுதாமல் இருக்கலாம், ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ எழுதுவேன் என எவரேனும் கள்ளத்தனமாக முயன்றால் அதைப் பார்த்துக் கொண்டு இந்த அமைப்பு புளியங்காய் பறித்துக் கொண்டிருக்காது என்பதை அவசியத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதை எதை எழுத வேண்டுமோ அதை அதை இந்த இரண்டு நாட்களுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். மே மாதம் முதல் தேதி இனிமேல் எழுத்தாளர்கள் தினமாக கொண்டாடப்படும். இப்படிப்பட்ட காலவரையற்ற எழுதுவதை நிறுத்தி நடத்தப்படும்  போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------
ராசு : ஏன்டா, நம்ம அண்ணனுக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.

வாசு : தெளிவாப் பேசிட்டு போயிருக்காரு, மொக்கை, சக்கைன்னுட்டு . வாடா நாம களத்தில இறங்குவோம்

ராசு : ?????

-------------------------------------------------------------------------------------------------------------

                                              தமிழ் தொண்டு அமைப்பு

நிறுவனர் மற்றும் தலைவர் :  ராதாகிருட்டிணன்
துணைத் தலைவர் : தாமோதர் சந்துரு
செயலாளர் : ஷங்கர்
துணை செயலாளர் : சுந்தரா
பொருளாளர் : சித்ரா
துணைப் பொருளாளர்: ஹேமா
பொறுப்பாளர்கள் : கதிர் (தமிழ் மொழி மட்டும்) ஜெஸ்வந்தி (பிற மொழிகள்) சங்கவி (கலைகள் மற்றும் கலாச்சாரம்) பா.ராஜாராம் (எழுத்தாளர்கள் நலம் பேணுதல்)
எழுத்தாளர்களின் தொடர்பாளர்: ரமேஷ் (தமிழ் உதயம்)
ஒருங்கிணைப்பாளர் : தீபா (கபீஷ்)
செய்தித் தொடர்பாளர்: தர்ஷினி (தோழி)
பட்டய கணக்காளர்:                                          
வழக்கு அறிஞர் :        
வங்கித் தொடர்பாளர் :                        
வங்கி : ஸ்டேட்ஸ் பேங்க் ஆப் இந்தியா
பதிப்பகம் : நயினார் பதிப்பகம் (அனுமதி பெற வேண்டும்)

---------------------------------------------------------------------------------------------------

பனிப் பிரதேசம் - 5

குகைக்குள் செல்ல இயலவில்லையே என வருத்தத்துடன் லண்டன் நோக்கிய பயணம் தொடங்கிச் சென்றோம். நேற்று சென்ற வழியிலேயே இன்றும் செல்ல, அந்த இறக்கப் பாதையில் சென்று நேற்று தவறவிட்ட ஓரிடத்தில் காரினை நிறுத்தி விசாரித்ததில் ஒரு குகை என்ன இரண்டு குகைகள் செல்லலாம் என சொன்னார்கள். மனது மிகவும் மகிழ்ச்சி கொண்டது.

நாங்கள் மூவர் மட்டும் தான். ஒரு சிறிய கடை வைத்து அங்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த கடையில் ஒரு சிலர் மட்டும் இருந்தார்கள். நம்பிக்கையுடன் குகைக்குள் சென்றோம். 105 படிகள் தாண்டி கீழிறங்கியதும், ஸ்பீட்வெல் குகைக்குள் படகின் மூலம் பத்து நிமிட பயணம். ஏன் குகை உருவாக்கினார்கள், எப்படியெல்லாம் செய்தார்கள் என எங்களுக்கு துணையாக வந்த படகு ஓட்டியவர் சொல்லிக்கொண்டே வந்தார்.

காரீயமும், நீலக்கல் எடுப்பதற்காக கன்னிவெடிகள் மூலம் குகை உருவாக்கி இருக்கிறார்கள். படகு விலகிச் செல்ல என ஓரிடத்தில் ஒதுக்குப்புறம் எனவும் உருவாக்கி இருந்தார்கள். சித்தர்கள் என எவரும் அங்கே நடமாடவில்லை. ஓரிடத்தில் நிறுத்தி அங்கே சில விசயங்கள் காண்பித்தார். அப்படி நின்றபோது எடுத்த புகைப்படம் தான் மேலிருப்பது. அதே வழியாக திரும்பி வந்தோம். பின்னர் 105 படிகள் மேலேறி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பயணம் தொடங்கினோம்.

பத்து நிமிடங்களுக்குப் பின்னர் மற்றொரு குகையை அடைந்தோம், அங்கே நடைபயணமாக சென்றோம். எங்களுக்கு துணையாக யாரும் வரவில்லை. குகையின் இருபுறங்களிலும் வெளிச்சம் இருந்தது. ஓரிடம் தாண்டியதும் அதற்கு மேல் செல்லக்கூடாது என தடுப்பு போட்டு வைத்து இருந்தார்கள், ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லை, நான் சென்று பார்க்கலாம் என இறங்க, சகதியைக் கண்டு பயந்து திரும்பினேன். பின்னர் குகை பராமரிப்பாளரிடம் பேசியபோது 'நல்ல வேளை நீங்கள் செல்லவில்லை, அது குகையினை பற்றி அறிந்து கொள்ள, ஆராய்ச்சிகள் புரிய வருபவருக்கான இடம். பிபிசி மூலம் படம் எடுக்கவும் வருவார்கள், அதற்குத்தான் ஒரு தடுப்பு போட்டிருக்கிறோம் என சொன்னார்கள்.

அப்பாடா என மனம் சொன்னது. குகை கண்ட மகிழ்ச்சியுடன் லண்டன் நலமுடன் வந்தடைந்தோம். வந்த சில தினங்களிலேயே ஏப்ரலில் ஸ்காட்லான்ட் செல்ல வேண்டுமென திட்டமிட்டோம். பிப்ரவரி மாதத்திலேயே நல்லதொரு திட்டத்துடன் ஏப்ரல் மாதம் பயணம் தயார் செய்து வைத்தோம். அந்த பயணக் கட்டுரையை சில வாரங்கள் பின்னர் எழுதுகிறேன். அதுவரை, பயணத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்.


(முற்றும்) 

அடுத்த பயணக் கட்டுரை வெளியீடு :  ஸ்காட்லாந்து நோக்கிய கனவுகள் 

Wednesday, 28 April 2010

பனிப் பிரதேசம் - 4

ஸ்டேட்ஸ்வொர்த் எனப்படும் இடமானது பூங்காவினையும், அருமையான கட்டிடம் ஒன்றையும் கொண்டிருந்தது. அரச பரம்பரையினரால் இந்த கட்டிடம் பல வருடங்களாக பராமரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்தனை முன்னிட்டு அந்தக் கட்டிடம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர்களில் அழகாக வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. ஓவியங்கள் மிக அருமையாக வரையப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பூங்கா பகுதியில் நடக்க ஆரம்பித்தோம். வெயில் காலத்தில் வண்ண வண்ணப் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த பூங்கா எங்கும் பனியுடன் காட்சி தந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அங்கே பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதியம் அங்கேயே உணவு அருந்திவிட்டு எப்படியாவது குகை ஒன்றுக்குள் சென்று பார்த்துவிட வேண்டுமென அங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ளே ஒரு குகைதனைப் பார்க்க விரைந்தோம்.

மதிய உணவு என்றதும் நினைவுக்கு வருகிறது. காலை உணவு ஹோட்டலிலேயே தந்தார்கள். காலை உணவு, இரவு உணவு போல் அல்லாது மிகச் சிறப்பாகவே இருந்தது.

விரைந்து சென்று அந்த குகையைப் பார்க்கச் சென்றபோது சற்று பனி அதிகமாக கொட்டத் தொடங்கியது. குகை இருக்கும் இடத்திற்குச் சென்றுப் பார்த்தால் குகை மூடப்பட்டு இருந்தது, பனி மிக அதிகமாக அங்கு நிறைந்து இருந்ததால் வாகனம் செல்லவும் வழியில்லை. பனி விழுவதைக் கண்டதும் நேராக ஹோட்டல் சென்றுவிடலாம் என முடிவெடுத்தோம்.

ஹோட்டல் சென்றடைந்த போது மணி மூன்றரை ஆகியிருந்தது. ஹோட்டலிலேயே அமர்ந்து இருப்பதா என யோசித்தவாரே பனி விழும் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக தொடர்ந்து பனி விழவில்லை. தொலைகாட்சியில் செய்தியைப் பார்த்தபோது பனி விழுந்த காரணத்தினால் பலர் காரினை அப்படி அப்படியே விட்டுவிட்டுச் சென்றதாகவும், இரவெல்லாம் காரில் இருந்ததாகவும் தென் இங்கிலாந்து பகுதியில் ரெட்டிங் எனும் ஊரில் நடந்த விசயத்தைச் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் ஒரு சாலையைப் பற்றிச் சொன்னார்கள். அந்த சாலையில் தான் திங்கள் கிழமை காலையில் கிளம்பி வந்திருந்தோம், புதன் அன்று அதே வழியில் தான் செல்ல வேண்டும். எல்லாம் சரியாகிவிடும் எனும் நம்பிக்கை இருந்தது. ஹோட்டலிலிருந்து அருகில் உள்ள ஊரின் பகுதிக்குள் நடந்தே சென்றோம்.

கடைகள் எல்லாம் மூடிக் கொண்டிருந்தார்கள். இரவு என்ன சாப்பாடு என யோசித்துக் கொண்டு கடை வீதிகளில் நடந்து திரும்புகையில் இந்திய உணவுக் கடை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்று அவர்களிடம் பேசுகையில் இருபது வருடங்களுக்கு மேலாக கடை வைத்திருப்பதாகவும் மான்செஸ்டரில் இருந்து வந்து செல்வதாகவும் கடை திறந்து அரைமணி நேரம் ஆவதாகவும் கூறினார். எங்களைத் தவிர கடையில் வேறு எவரும் இல்லை. டெர்பி பல்கலைகழகத்தில் இந்திய மாணவர்கள் அதிகம் படிப்பதாகவும் கூறினார். கோடைகாலத்தில் கடை நிரம்பி வழியும் எனவும் சொன்னார். கடையில் உணவு பொருட்கள் வாங்கிச் சென்றோம். உணவு நன்றாக இருந்தது.

கார்ன்வால் எனப்படும் இடத்தில் பனியானது உறைந்து ஒரு ஊர்வலப் பேருந்து வழுக்கி தடுமாறியதில் சிலர் இறந்த செய்தி கேட்டபோது இயற்கையின் விபரீதம் வெகுவாகவே அச்சமூட்டியது. வட இங்கிலாந்து பகுதிதான் அதிகம் பாதிக்கப்படும் என்பது போலவே ஸ்காட்லாந்து அதிக குளிரிலும், பனியிலும் வாடியதாகவும் செய்தி வந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை இவ்வாறு இங்கு கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டு வந்த இடத்தில் குகைப் பகுதி பார்க்காமலிருந்தது வருத்தமாக இருந்தது. நாங்கள் சென்ற இடம் எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. புதன்கிழமை காலையில் லண்டன் நோக்கிய பயணம் ஆரம்பித்தோம். குகை கண்களுக்குத் தென்பட்டதா?




(தொடரும்) 

தமிழ் அமைப்புகள்

இதுக்குத்தான் சொல்றது, இருக்கற வேலைய ஒழுங்காப் பார்த்தோமா, தெரிஞ்சதை எழுதிட்டு, கண்ணுக்குப் படறதை வாசிச்சிட்டு அர்த்தம் தெரியுதோ, அர்த்தம் தெரியாதோ பிடிச்சா ஆஹா ஓஹோனு சொல்லிட்டு, பிடிக்கலைன்னா என்ன எழவு இதுனு தூக்கிப் போட்டுட்டு போயிரனும்.ரொம்ப ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சா பெரிய பிரச்சினைதான். அப்படி என்ன ஆராய்ச்சினு அப்புறமா சொல்றேன்.

வெளிநாட்டுக்குப் போயிட்டா உள்நாட்டு நிலவரம் ஒன்னும் புரிய மாட்டேங்குது. உள்நாட்டு விவகாரங்களில விவரம் முழுசா தெரியாம எழுதரதைப் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்படித்தான் அங்க அங்க படிச்சி யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க அப்படி ஒரு எண்ணம் வந்து சேர்ந்துச்சு, அதோட போகட்டும்னு விட்டாக்கா விவகாரமான எழுத்தாளர்கள் அப்படினு ஒரு எண்ணம் வந்து சேர்ந்துச்சு.

இதெல்லாம்  எழுதி என்ன ஆகப்போகுது அப்படினு ஒரு நினைப்பு வந்து சேர்ந்தப்ப இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது அப்படின்னு ஒரு பதிவு வேற. ஆனாலும் நானும் இடுகை எழுதுறேனு காட்டிக்க,  கதை, கவிதை, கட்டுரைகளின் ஊடே இப்படி  ஏதாவது எழுத வேண்டியதாப் போயிருச்சி.

ஆனாலும் ஒரு கொள்கை வைச்சிருக்கேன், எந்த சூழ்நிலையிலும் (சில தவறியிருப்பேன்) தனி மனிதர்  நிலை தாழ்த்தியோ, தனி மனிதரை விமர்சித்தோ பொது இடத்தில் ஒரு இடுகையும்  எழுதுவதில்லைனு. மொத்தமாத்தான் பொத்தாம் பொதுவாத்தான் எல்லாம் சொல்றது என் வழக்கம். எங்க ஊருல சொல்வாங்க, பொது இடத்துல வைச்சி தனிப்பட்ட மனுஷனுக்கு அறிவுரை சொன்னா, அறிவுரை சொல்ல வந்துட்டான்னு நினைப்பாங்க ஏன்னா தனி மனிசனோட குறைகளை மத்தவங்க முன்னால  சொன்னா கோவம் பொத்துக்கிட்டு வந்துரும், அதுவே பொத்தாம் பொதுவா சொல்லிப் பாரு, நம்மளை சொல்லலைன்னு நினைச்சிட்டு போயிருவாக. எங்க ஊருல சொன்ன  கொள்கை என்னன்னா உறைக்கிரவங்களுக்கு உறைச்சிருமாம். தனிப்பட்ட மனிசரை விமர்சிக்கிறச்சே யாருக்கும் தெரியாம தனியா கூப்பிட்டு போய் சாந்தமா இப்படி பண்ணிட்டியேனு கருசனையா பேசணுமாம். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உறைக்கிரவங்களுக்கு உறைக்கனுமே.தனியா பேசினா என்ன, பொதுவா பேசினா என்னனு ஆகிப் போச்சு ஊரு உலகம்.

அது சரி, அட தலைப்பை இப்படி வைச்சிட்டு என்ன என்னமோ எழுதிட்டு போறேன். அது வேற ஒன்னும் இல்ல. ம க இ க அப்படின்னா ஒரு கட்சினு இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன். தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்னு நான் ஊருல இருந்தப்போ ஒன்னு இருந்தது. அதுல நான் கூட உறுப்பினரா இருந்தேன். பணம் கூட வசூல் செஞ்சேன். அப்புறம் எழுதாமலேயே எழுத்தாளர் சங்கத்தில உறுப்பினரா இருக்கோம்னு விலகிட்டேன். அதுக்கப்பறம் எந்த சங்கம் இருக்கு, எந்த தமிழ் சேவை இருக்குன்னு ஒண்ணுமே தெரியாது.

அப்புறமா முதல்  புத்தகம் வெளியிட்டப்ப கூட மக்களுக்கு அறிமுகமான எழுத்தாளர்கிட்ட போய் அணிந்துரை, முன்னுரைன்னு வாங்கலை. முன்ன பின்ன பழகாத, ஆனா  எழுத்து மூலமே தெரிஞ்சவங்களை வைச்சிதான் எழுதி வாங்கி வெளியிட்டேன்.

ம  க இ க அப்படின்னா என்னனு தேடிப் பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப பேரு ம க இ க அப்படினு போட்டு இருந்தாங்க. அப்புறம் படிச்சப்பதான் மக்கள் கலை இலக்கிய கழகம்னு தெரிய வந்துச்சு. அட சாமிகளானு மனசுக்கு தோணிச்சி. இந்த இலக்கிய, தமிழ் சங்கம், கழகம் எல்லாம் எத்தனை இருக்கு என்ன செய்துனு எனக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். இவங்களோட கொள்கை என்ன? தமிழ் எழுத்துக்கு இவங்களோட தொண்டு என்னனு தெரிஞ்சிக்கணும்னு ஆசை. உரையாடல் அமைப்புனு ஒன்னு இருக்கு. கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டியில கலந்துருக்கேன். பார்த்தாக்க அது ரெண்டு நண்பர்களோட கனவுனு தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப கூட அது சரிதானு தெரியலை.

மக்கள் சேவைனு ஆனப்புறம்  எதுக்கு ஆயிரத்தெட்டு கட்சிகள்? அனைத்து கட்சிகளோட கொள்கை என்ன? மக்கள் நலன் தானே முதலா இருககனும்? எல்லா அரசியல்வாதியும் ஒன்னு கூடி நல்லது செஞ்சா என்ன, நீ செய்றது தப்பு, அவன் செய்றது தப்புன்னு சொல்லிட்டு இருக்காம? அது போலத்தான் தமிழ் சேவைன்னு இருக்கிற இந்த கழகங்கள், சங்கங்கள் எல்லாம் ஒன்னு கூடி தமிழ் வளர்க்கும் பணியை செஞ்சாத்தான் என்ன? எதுக்கு ஒரு அமைப்பு மேல மத்த அமைப்பு தாக்கிக்கிட்டு இருக்கு? இது என்ன பெரிய விஷயம், ஒரே சாமினு சொல்லிட்டு இருக்கே ஓராயிரம் மதங்களும், கோட்பாடுகளும்?!

இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்காம், அது என்னன்னா நோக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுய விளம்பரம் தேடுற வழிக்கு பாதை தேடினா எல்லார் பாதையும் தனித் தனியாத்தான் இருக்குமாம், இந்த வலைப்பூ போல!

பனிப் பிரதேசம் - 3

முதன் முதலில் குகைதனைப் பார்க்கலாம் என பயணித்தோம். வாகனம் செல்லும் வழியைத் தவிர பிற பகுதிகள் எல்லாம் பனிகள் சூழ்ந்திருந்தன. மலைகள் பனிகளால் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தது. மிகவும் கவனத்துடன் பயணித்துக்கொண்டிருந்தோம்.

அப்பொழுது இரு மலைகள் இருபுறமும் சூழ்ந்திருக்க நடுவில் சென்ற பாதையில் பயணித்தோம். இறக்கமாக பாதை இருந்தது. பயமாகப் போய்விட்டது. சற்று கவனம் சிதறினாலும் பயணம் தடைபட்டுவிடும் என்கிற நிலை. செல்லும் வழியில்  இருக்கும் குகை பற்றி அறியாததால் அதைக் கடந்து வேறு இடத்திற்கு வந்தோம்.

பாதையெல்லாம் பனியாய்  நிறைந்திருக்க காரினை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். பனி லேசாக கொட்ட ஆரம்பித்தது. பாதையில் நடந்து சென்று மலை மீது ஏறி பின்னர் குகை செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம்.

சிறிது நேரம் மேலே ஏறியதும் மனம் அதற்கு மேல் செல்ல மறுத்தது.  பனி சற்று வழுக்கவும் செய்தது. சரியான கருவிகள் துணை இன்றி செல்வது தவறு என குகையைப் பார்க்கமால் திரும்பினோம். பின்னர் அங்கிருந்து ஸ்டேட்ஸ்வொர்த் எனும் இடத்திற்குச் சென்றோம்.









(தொடரும்)


Tuesday, 27 April 2010

பனிப் பிரதேசம் - 2


அங்கே பனியில் சிறிது நேரம் விளையாடினோம். முன்னும் பின்னும் காரை நகர்த்தி ஒருவழியாக ஹோட்டல் நோக்கி காரைச் செலுத்தினேன். கரு நிறப் பாதையில் மட்டுமே வாகனம் செலுத்திய அனுபவம் உண்டு. செம்மண்ணில் டிராக்டரில் அமர்ந்து சென்ற அனுபவம் நிறையவே உண்டு. ஆனால் பனிகள் நிறைந்த வெண்ணிறப் பாதையில் முதன்முதலாக காரைச் செலுத்தும்போது காரில் எச்சரிக்கை ஒலி வந்து கொண்டிருந்தது. எதிரில் ஏதேனும் கார் வந்தால் கூட விலக முடியாத நிலை. மெதுவாக காரினைச் செலுத்தி ஒருவழியாக ஹோட்டல் செல்லும் சாலை வந்தடைந்ததும் மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.

ஹோட்டல் நோக்கிச் செல்லும்போது இருபுறமும் மலைகள் எல்லாம் இமயமலைகள் போன்றே காட்சி அளித்தன. அற்புதமான பயணத்தின் முடிவில் மலையில் அமர்ந்திருக்கும் ஹோட்டலை அடைந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. நல்லதொரு வரவேற்பினைத் தந்தார் அங்கிருந்த பெண். பின்னர் எங்கள் அறையை அடைந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு வரவேற்பறை. பின்னர் உள்ளே சென்றதும் படுக்கை அறையுடன் கூடிய குளியலறை என மிகப் பெரிய அறையாகவே காட்சி தந்தது. சிறிது நேரத்தில் அறையில் தொலைபேசி சப்தம் எழுப்ப, எனது மகனுக்கான படுக்கையை தயார் செய்வதாக கூறினார்கள். அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வரவேற்பறையில் இருந்த இருக்கையானது, படுக்கையாக மாற்றப்பட்டது. அங்கே ஒரு தொலைகாட்சி, படுக்கை அறையில் தொலைகாட்சி ஒன்று என இருந்தது. வெளியில் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து இருந்தது. மரங்கள் வெள்ளை இலையுடன் அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது.

இரவுச் சாப்பாடு என ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என சென்றால் முன்பதிவு செய்ய சொன்னார்கள். இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டு ஆறு மணியளவில் சாப்பிட சென்றோம். நாங்கள் சைவ உணவு என்பதால் சற்று சிரமமாக இருந்தது. எனினும் பசிக்கு எனச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

காலையில் எங்கு செல்வது என ஒருவழியாய் முடிவு செய்து பயணித்தோம். அந்த பயணம் சிலிர்ப்பையும், பயத்தையும் தந்தது.

(தொடரும்)

பனிப் பிரதேசம் - 1

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு (2009) என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில் உச்சிகளின் மாவட்டம் ( பீக் டிஸ்டிரிக்ட்) எனப்படும் வட இங்கிலாந்தில்  மான்செஸ்டருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். வானிலை எச்சரிக்கை எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

தினமும் வானிலை எச்சரிக்கைப் பார்த்துவிட்டு பனி எதுவும் உச்சி மாவட்டத்தில் இல்லை என முடிவு செய்து கிறிஸ்துமஸ் வாரத்தில் திங்கள் கிழமை கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புதன் கிழமை திரும்பலாம் என முடிவு செய்தோம். எங்கு தங்குவது என அதிக யோசனை. விலை மலிவாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் தங்குமிடம் மனதுக்கு திருப்தியாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது என பல இடங்களை இணையத்தில் தேடினோம்.

எத்தனை மனிதர்கள் எத்தனை விதமாக ஒரே இடத்தைப் பற்றிய அனுபவங்கள், பிரமிக்க வைத்தது. அனைவருக்கும் ஒரே மனம் இருந்துவிடக் கூடாதா எனத் தோன்றியது. கிறிஸ்துமஸ் முதல் வார வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி தாண்டியும்  எந்த ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்ய இயலவில்லை. அறைகள் ஒன்று மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு சில ஹோட்டல்கள் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.

இறுதியாக ஆனால் உறுதியாக ஒரு ஹோட்டல் பஃக்ஸ்டன் எனும் ஊரில் தேர்வு செய்தோம். விலை மலிவாகவே இருந்தது. சனி, ஞாயிறு கிழமை கடந்துவிடாதா எனும் ஏக்கத்தில் இருக்க திங்கள் கிழமையும் வந்து சேர்ந்தது. லண்டனில் பனி பெய்ததால் சின்னச் சாலைகள் வண்ணம் பூசியதைக் கலைக்க மறுத்துவிட்டன. கால்கள் வழுக்க ஆரம்பித்தன. கிளம்பும் முன்னர் எதிர்த் தெருவில் எவரோ திருடிய கார் ஒன்று சாலையில் வழுக்கி ஒரு வீட்டு முன்புறம் நிறுத்தப்பட்ட காரில் இடித்து நின்றுவிட, காரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனார் அவர். சாலையில் கவனம் தேவை என மனம் நினைத்துக் கொண்டது.

இந்த மூன்று நாட்கள் பனி இல்லை என சொன்ன வானிலை, செவ்வாய் அன்று சற்று பனி இருக்கும் என்றே சொன்னது. இதற்கு முன்னர் பனி பெய்ததா இல்லையா என்பதை மனம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு கிளம்பி மாலை மூன்று மணி சென்றடைந்தோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாலையில் பனித்தடங்களே இல்லை.

உச்சிகளின் மாவட்டம் தனில் ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே பனி நிறைந்தே இருந்தது. பனியைக் கண்ட ஆர்வத்தில் காரினை ஓரத்தில் நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்கள் எடுத்துவிட்டு காரினை நகற்ற கார் பனியில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது.

(தொடரும்)

Monday, 26 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 6


பூஜை அறையில் சென்று அமரும் முன்னர் கதிரேசன் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். உடலெல்லாம் திருநீறுடன் நிற்கும் அவனைப் பார்த்த நீலகண்டன் ''என்ன கோலம் இது?'' என்றார். ''மனம் விரும்பியது தாத்தா'' என்றான் கதிரேசன். பூஜை அறையில் அமர்ந்தார்கள். சிரத்தையுடன் வழிபட்டார்கள். தீபம் எடுத்து காண்பித்தார் நீலகண்டன். தானாகவேப் பாட ஆரம்பித்தான் கதிரேசன்.


''ஒளியது உன்னால் விளைந்தது எனில் பெருமானே
தெளிய வேண்டிட இருளும் உனதோ
பஞ்ச பூதங்களும் விரிந்துபறந்து செல்லும் வழியை
அஞ்ச வைத்து அடக்குவதோ சொல்சிவனே


நெஞ்சினில் நித்தம் உனைப்பாடும் நிலையது கொண்டேன்
கெஞ்சியும் உனை தொழுவதில்லை என்றார்
உலகோர் எல்லாம் உனைமட்டும் தொழவே
கலகம் கலங்கிப் போயிருக்காதோ சொல்சிவனே


நன்மையதை மட்டுமே நாதன் நீயும் கொண்டிட
இன்னது என்வசம் தந்திடு கேட்கிலேன்
புல்லும் புல்வளர்த்த துகளும் அகக்கண் ஆனதால்
கல்லும் உயிர் பெற்றதோ சொல்சிவனே''


பாடி முடித்தவன் பக்கத்தில் பார்த்தான். கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்தார் நீலகண்டன். தனது கண்களை இரு கைகளால் துடைத்துக் கொண்டான். கண்கள் திறந்த நீலகண்டன் கதிரேசனை நோக்கினார்.


''உன்னோட கேள்விக்கெல்லாம் ஒருநாள் பதில் கிடைக்கும், பதில் கிடைக்கலையேனு ஆத்திரமோ ஆதங்கமோ படாதே, நீ அறிஞ்சி சொல்ற பதில் எனக்கு உகந்ததா இருக்கலாம். இந்த உலகத்தார் எல்லார்க்கும் உகந்ததா இருக்கலாம், ஏன் யாருக்குமே உகந்ததாக இல்லாமலும் போகலாம். ஆனா மொத்த உலகமும் ஏத்துக்கிற ஒன்னு இருக்கு.

உனக்குத் தெரிஞ்சிருக்கும் தென்னாட்டுச் சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்படினு. இரண்டாவது வரியை எழுதினப்போ ரொம்ப அழகா அமைச்சிட்டார், அதுதான் எல்லாம் சிவமயம். நான் சொல்றதெல்லாம் நீ ஏத்துக்க வேண்டியது இல்லை. எனக்கு இது போதும்னு என்னோட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் இருந்திட்டு வரேன். என்கிட்ட படிச்சவங்க எல்லாம் என்னை இந்நிலையிலப் பார்க்கறப்போ 'சார் நீங்களா இப்படி மாறீட்டீங்கனு?' கேட்காமப் போகமாட்டாங்க. அவங்களுக்கு என்னால புன்னகையை மட்டுமே பதிலாகத் தரமுடியுது, உன்னோட பாதையை நீ எந்த ஒரு வெளி அழுத்தத்துக்கும், ஏன் உன் உள் அழுத்தத்துக்கும் அகப்பட்டு தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக்காதே, உருவாக்கிக்காதேனுதான் சொல்வேன், எதுவும் உன்னோட விருப்பம்''

மேலும் தொடர்ந்தார். ''சிவபுராணம் படிச்சிருக்கியா?'' என்றவரிடம் ''பிறர் பாடக் கேட்டு இருக்கேன், நானா எல்லாம் படிச்சது இல்லை தாத்தா'' என்றான் ஆச்சரியத்துடன் கதிரேசன். அதுல மாணிக்கவாசகர் பாடுவார்.

''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணிய''

''கேட்டு இருக்கியா?''என்றார் நீலகண்டன். ''வாழ்த்தும் போற்றியும் மட்டுமே கேட்டு இருக்கேன் தாத்தா'' என்ற கதிரேசனிடம் சிவபுராணம் எடுத்துக் கொடுத்தார். நேரமிருக்கிறப்போ இதைப் படி என்றார். ''எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேனு சொல்வார், எப்படினு நீ யோசிச்சிப் பாரு. பதில் கிடைக்கலைன்னா வந்து கேளு''' என பிரசாதம் கொடுத்தார். கதிரேசன் கைகளில் சிவபுராணம் தவழ்ந்தது.


(தொடரும்)

Sunday, 25 April 2010

அங்காடித் தெரு - டிவிடி விமர்சனம்

இந்த படத்தைப் பத்தின எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வெயில் அப்படின்னு ஒரு படத்தைப் பார்த்துட்டு அட நம்ம ஊரு அப்படின்னு ஒரு பாசம் வந்து சேர்ந்துச்சு. அதுக்கப்பறம் இப்ப வெயில் படத்தோட கதைய நினைச்சு பார்த்தா முழு கதையும் ஞாபகத்துக்கு வந்து சேர மாட்டேங்குது. இன்னொரு தரம் வெயில் படத்தைப் பார்த்துரனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த அங்காடித் தெருவுக்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்படாது.

அங்காடித் தெரு அங்காடித் தெரு அப்படின்னு சொல்றாங்களே, இந்தப் படத்தைப் பாத்துட்டு பல பேரு மனசு ரொம்ப கனமா உணர்ந்தாங்கன்னு கேள்விபட்டு படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருந்துச்சி.

ரொம்ப நாளுக்கு முன்ன இப்படித்தான் பொற்காலம்னு பொக்கிஷம்னு ஒரு படத்தை ரொம்ப பொறுமையா பார்த்து முடிச்சேன். நானும் நல்லா இருக்குனு மத்தவங்ககிட்ட சொல்லி வைக்க படத்தை பாத்தவங்க சரியான குப்பைனு சொல்லிட்டாங்க. அப்படி சொன்னாக்கூட பரவாயில்லை, என்ன ரசனை உனக்குன்னு என்னைத் திட்டிட்டாங்க. அப்புறம் கந்தசாமி படத்தை நான் பாக்காம இருந்துட்டேன். மத்தவங்க எல்லாம் கந்தசாமி படத்தைப் பாத்துட்டு ஆஹா ஓகோனு பாராட்டினாங்க. சரி போய் தொலையுதுன்னு கந்தசாமியை ரொம்ப நாளைக்கப்பறம் பாத்து வைச்சேன். அப்ப என்னைய நானே திட்டிக்கிட்டேன். இது மாதிரி ஒரு படத்தை எல்லாம் பார்க்கனுமா சாமினு நினைச்சேன்.

இது போல ஒரு படம் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு கேள்விபட்டு அதுக்கப்பறம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட பேரு உன்னைப் போல் ஒருவன். படம் நிறையவே பிடிச்சி இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த படத்துக்கு ரொம்ப பேரு சாயம் பூசிட்டாங்கனு. ஒரு படத்தை பாத்துட்டு ஐயோ அம்மான்னு கத்துற வழக்கம் நம்மளை விட்டு ஒருபோதும் மாறாது. அதக்கப்பறம் தமிழ்ப்படம்னு ஒரு படம், தன்னைத்தானே நகைச்சுவையோட விமர்சிக்கிறப்ப உண்மை நிலை தெரிஞ்சி போயிரும். அப்படிதான் இந்த படமும் இருந்துச்சி. நல்லாவே சிரிக்கத் தோணியது. அதுவும் கடைசி கட்டம் படத்தோட வெற்றின்னு சொல்லலாம்.

சரி அங்காடி தெருவுக்கு வருவோம். விருதுநகர் தெருவுல எல்லாம் இந்த அங்காடி அப்படிங்கிற வார்த்தை ரொம்ப பிரபல்யம். தெலுங்குல கூட 'அங்கடி' அப்படினு சொன்னா அது கடையைத்தான் குறிக்கும். அங்காடி அப்படிங்கிறது நல்ல தமிழ் சொல். கடைத் தெரு அப்படிங்கிறத விட அங்காடி தெரு ரொம்பவே நல்லா இருக்கு.

படம் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் நிஜமான மனிதர்கள் கண்ணுக்கு வந்துட்டே இருந்தாங்க, அதனாலவோ என்னவோ படத்துல ஒரு பிடிப்பு இல்லாம போயிருச்சி. அப்புறம் சொல்வாங்க, ஏழையின் உணர்வினை புரிந்து கொள்ளனும்னா ஏழையாவே இருந்துப் பார்த்தாத்தான் தெரியும்னு. பணத்தோட புரளுரவங்களுக்கு, என்ன பெரிய கஷ்டம்னு மத்தவங்களை ஏளனமாத்தான் பாக்கத் தோணும்.

எங்க ஊருல இருந்து கூட தீப்பெட்டி வேலைக்கு, மண் அள்ளுற வேலைக்கு, பஞ்சு ஆலைக்குனு வேலைக்குப் போய்ட்டு வரவங்களப் பார்க்கறப்போ கஷ்டமாத்தான் இருக்கும். படிச்சி நல்ல வேலைக்குப் போகலாம்னு பார்த்தா இந்த படத்துல வரமாதிரி ஏதாவது ஒரு நிகழ்வு வந்து அவகளை கஷ்டத்திலேதான் வைச்சிருக்கும். 'எங்க பொழப்பு அப்படிதான் ராசா'னு அவங்க சொல்றச்சே 'சே என்ன வாழ்க்கை இது' அப்படினு ஒரு எரிச்சல் வந்துட்டுப் போகும்.

இந்த படத்துல நல்ல நல்ல பாடல்கள் இருந்தாலும் என் வழக்கப்படி பாடல்களை படத்தோட சேர்த்துப் பார்க்கிறது கிடையாது. பாடலை தனியாத்தான் பார்க்கிறது வழக்கம். சில படங்களுல பாடலை தள்ளிவிட்டுட்டுப் பார்த்தா ஏழை பணக்காரன் ஆகியிருப்பாரு. அந்த மாதிரி அசட்டுத்தனம் எல்லாம் இந்த படத்துல இல்லை.

படத்துல கஷ்டப்படறவங்களையும், அடிமைப்படுத்துதலும், பாலியல் தொல்லைக்கு உள்ளாகிற பெண் வர்க்கம்னு காட்டி இருந்தாலும், காதலோட வலியையும், காதலோட வலிமையையும் காட்டி இருந்தது நல்லா இருந்தது. கடைக்குள்ளாறப் போய் பொருள் வாங்கறப்ப எல்லாம் அவங்களும் நம்மளைப் போல மனுசருங்கனு முகம் சிரிச்சி அவங்களோடப் பேசியே பழகிப் போன எனக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்துச்சு. முன்னால இருந்த விசுவாசம் அப்படிங்கிற வார்த்தைக்கு இப்ப எல்லாம் கொடுக்கப்படற அடைமொழி அடிமைப்படுத்துதல், சுரண்டுதல். மத்தவங்களோட பலவீனத்தைப் பயன்படுத்தித் தன்னைத்தானே உயர்த்திக்கிறது ஒரு தனிமனுசனிலிருந்து ஒரு நாட்டு வரைக்கும் இருக்கத்தான் செய்து.

திருவிழா சமயத்துல பொருள் விக்கிறவங்களப் போல அங்காடித் தெருவில பொருள் விக்கிறவங்களோட வாழ்க்கை பார்க்கிறவங்களுக்கு கஷ்டம், ஆனா அப்படி வாழுறவங்களுக்கு வாழ்க்கை ஒருவித போராட்டம். பணம் வைச்சிருக்கிறவங்க காட்டுற பரிதாபம் ஒன்னும் யாரோட வாழ்க்கையையும் உயர்த்தப் போறதில.

இப்படி கஷ்டப்படறவங்க, வாழ்க்கையில நஷ்டபடறவங்களோட வேதனையை படைப்புகளாக எழுதி, படங்களா காட்டி தங்களோட பொழப்பை நடத்துர படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் மனசாட்சினு ஒன்னு இருந்தா இந்த நிலையை மாத்துரதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரட்டும். அது மட்டும் முடியாது, ஏன்னா இவங்களும் ஜோசியக்காரங்க போலதான். உன் வாழ்க்கை இப்படி ஆகும், அப்படி ஆகும்னு சொல்லும் ஜோசியக்காரங்க போல, இதோ இப்படி இருக்கு, அதோ அப்படி இருக்குனு படம் காட்டி ப்ச் கொட்டிட்டு போற கூட்டம். இதுபோன்ற இழிநிலை வலிக்கு நாமளும் காரணம்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எல்லாம் கர்ம வினைனு கைதட்டிட்டு போற கூட்டத்துல நாமளும் இருக்கோம்னு நினைக்கிறப்போ அதனோட வலி என்னவோ அதிகம் தான்.

Wednesday, 21 April 2010

இசையும் நானும்

சின்னஞ்சிறு வயதில் மேளமும், நாதஸ்வரமும் கண்டு ரசித்த அனுபவம் உண்டு. எப்படியெல்லாம் இசைக்கிறார்கள் என ஆவலுடன் பார்த்ததும் உண்டு, ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் என்றுமே வந்ததில்லை.

கல்லூரியில் படித்த நாட்களில் மேசையில் தாளம் போட்ட சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட வைப்பான். அத்தனை அருமையாக தாளம் போடுவான்,  இனிய இசையாக இருக்கும் அது. நானும் மேசையில் தட்டுவேன், ஆனால் இசையாக அது வடிவம் பெற்றதில்லை.

இசைக்கும் எனக்கும் எட்டாத தூரமாகவே இருந்தது. ஆய்வுக்கூடங்களில் அதிகம் பாடல் பாடிக்கொண்டே ஆய்வு செய்யும் வழக்கம் உண்டு. எல்லாமே சொந்தமாக அந்த அந்த சூழ்நிலைக்கு என்னால் எழுதப்படும் பாடல்கள் அவை. பின்னர் அந்த பாடல்கள் மறந்து போகும்.

இலண்டனுக்கு வந்த பின்னர் எனது மகன் மிருதங்கம், பாடல் என கலைகள் கற்றுக்கொள்ளச் சென்றான். எந்த கலையை கற்றுக் கொள்வது என மனம் மிருதங்கம், வயலின், வீணை என அலைபாய ஆரம்பித்தது.

வேண்டாம், கதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வோம், கலையெல்லாம் எதற்கு என நினைத்தே மூன்று வருடங்கள் ஓடியேவிட்டது. 2008 ஆக்ஸ்ட் மாதம் திடீரென நான் மிருதங்கம் கற்று கொள்ளப்போகிறேன் என எனது மகனின் குருவிடமே நான் மாணவனாக சேர்ந்தேன். எனக்குள் உள்ளூர வெட்கம், கொஞ்சம் தயக்கம்.

மிருதங்க வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டே வகுப்புகள் சென்றேன். ஆகஸ்ட் விடுமுறை வந்துவிட்டது. பின்னர் இரண்டு வாரம் பின்னர் மீண்டும் தொடங்கினேன். வருட சான்றிதழ் விழா  நடைபெற்றது. என்னையும் மேடையில் மிருதங்கம் வாசிக்க சொல்லி இருந்தார் குரு. மறுக்காமல் சரி என ஒப்புக்கொண்டேன். உள்ளூர பயமாக இருந்தது.

விழாவில் மகனும் மற்றவர்களும் இணைந்து செய்தார்கள். நான் மேடையில் அமர்ந்திருக்க எனக்குச் சிரிப்பாக இருந்தது, அதேவேளையில் பயமும் கூட. மிருதங்கம் நன்றாகவே செய்தேன் என அனைவரும் சொன்னார்கள். இசை எனக்கும் வந்தது.

விழா ஆரம்பிக்கும் முன்னர் மிருதங்கம் பயிலும் மாணவன் எனது பெயர் அடிப்படை பாடத்தின் பட்டியலில் இருப்பதை கண்டு ''புலவர் போல் இருக்கிறீர்கள் அடிப்படை பாடமா' என என்னைப் பார்த்துக் கேட்டான். நான் சிரித்துக் கொண்டேன்.

நவராத்திரி முன்னிட்டு வருடா வருடம் ஸ்ரீலண்டன் முருகன் ஆலயத்தில் மகனும் மற்றவர்களும் மிருதங்கம் இசைப்பார்கள். அதைக் கண்டது உண்டு. அதே வருடம், நானும் மிருதங்கம் இசைத்தேன். அதே அச்சம், அன்று செய்த பாடத்தை செய்யாமல் பயிற்சியே இல்லாமல் புது பாடத்தை சிறு பிழைகளுடன் வாசித்தேன். நன்றாக இருந்தது என்றே சொன்னார்கள். மிருதங்க வித்துவான் ஒருவர் உங்கள் முயற்சி வெற்றியாகும் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது.

எனக்கு நுனிப்புல் புத்தக வெளியீட்டு விழாவில் சால்வை அணிவித்து பேசிய முருகன் கோவில் குருக்கள் நான் நன்றாக வாசித்தேன் என சொன்னபோது மனம் மேலும் மகிழ்ச்சி கொண்டது. அட! மனது எவ்வளவு வெட்கம் கொள்கிறது, வயதாகிவிட்டது என நினைத்து.

மிருதங்கம் கற்றுக்கொண்டு ஆறு மாதங்கள் ஆனபின்னர்  எனக்கான முதல் தேர்வு நடந்த போது மிகவும் சுலபமாகத்தான் இருந்தது. இருப்பினும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற மனோபாவம் மனதை பயமுறுத்தியது. தேர்வு எழுதச் சென்ற காலமெல்லாம் நினைவுக்கு வந்து சேர்ந்தது. நன்றாகப் படித்துவிட்டேனா, செய்முறைப் பயிற்சி செய்துவிட்டேனா என கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.

நன்றாகவே செய்தேன். அதற்கடுத்து தொடர்ந்து கற்றுக் கொண்டு இரண்டாம் நிலை தேர்வும் சென்ற வாரம் முடித்து விட்டேன். இசையினைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஐந்து வகை ஜாதிகள், அவை திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம். ஏழு வகை தாளங்கள், அவை துருவம், மத்யம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏக ஆகும்.

விவகாரமான எழுத்தாளர்கள்

யார் எழுத்தாளர்கள் எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது? புத்தகம் வெளியிட்டு விட்டால் அவர் எழுத்தாளரா? வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் மட்டும் பதிபவர்கள், எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் பெறாதவர்களா?

எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் உடையவர்கள் சொந்த வலைத்தளமோ, அல்லது வலைப்பூவோ வைத்துக்கொண்டு எழுதுவார்கள். எனவே இவர்களை பதிவர்கள் என அழைத்தல் முறையல்ல செயலோ?

எழுத்தாணி பிடித்தவர் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகி விட முடியாது என சொல்வது வழக்கம் தான். ஆனால் இப்போது பதிவர்கள் எனப்படுபவர்கள் புத்தகம் வெளியிட்டு தங்களை எழுத்தாளர்கள் எனச் சொல்லப்படும்  அங்கீகாரம் பெறத் துணிந்து விட்டார்கள், மேலும் பலர் தங்களை எழுத்தாளர்களாகவே சித்தரித்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  எனவே இனிமேல் பதிவர்கள் என இவர்கள் எவரையும் அழைப்பது முறையல்ல. எழுத்துதனை ஆள்பவர்கள் அனைவருமே எழுத்தாளர்கள். அப்படி பார்க்கையில் ஒருவகையில் இந்த பதிவர்கள் எழுத்துதனை ஆளத் தொடங்கிவிட்டார்கள்.  இதுவல்ல பிரச்சினை. 

பிரச்சினை என்னவெனில் இந்த  எழுத்தாளர்கள் மனதில் ஒரு பெரிய எண்ணம் தோன்றி இருக்கிறது. அது என்னவெனில் தங்களை சமூக நல காவலர்கள் போல் சித்தரித்துக் கொள்வது. எழுதுவதால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடும் எனும் இவர்களின் விபரீதமான கனவுதனை மிகவும் நேர்த்தியாகவே செய்கிறார்கள்.

கணினியின் முன்னர் அமர்ந்து எழுதும் உலகத்துக்கும், அதைத் தாண்டி வெளியில் இருக்கும் உலகத்துக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை இந்த  எழுத்தாளர்கள் அறிந்திருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமெனிலும் சிந்தனை செய்யலாம் என்பது சிந்திக்கத் தெரிந்த மானுடத்துக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

பலர் மனதில் இருப்பதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதுவதால் நன்றாகவே பிறரிடமிருந்து சொல்லடி படுகிறார்கள். இவர்கள் இதை எல்லாம் கணினியில் பதிவாக எழுதுவதால்தான் இந்த பிரச்சினை.   இவர்கள் நினைப்பதை எல்லாம் ஒரு புத்தகமாக போட்டுவிட்டால் படிப்பவர்களுக்கு மட்டுமே பிரச்சினை எனவும் இருந்து விட முடியாது, ஏனெனில் புத்தகம் வெளி வந்த பின்னரும் பிரச்சினையாகி விடும் நிலை இருந்துதான் வருகிறது.  

பல விசயங்களில் பலரும் எழுதி எழுதியே சிக்கித் தவிக்கிறார்கள். இது எழுதுபவர்களது பிரச்சினை என எவரும் இருப்பதில்லை, எப்படி இப்படி நடக்கலாம், சொல்லலாம் என சில காலத்திற்கு எங்கெங்குத் திரும்பினாலும் நடந்து முடிந்த விசயங்களை உலகப் பிரச்சினை போல இந்த எழுத்துகள் ஆக்கி விடுவது ஒருவித மாயை.

இதில் என்ன சுவாரஸ்யம் எனில் விசயம் சம்பந்தபட்டவர்கள் பற்றி ஒரு கண்டன அறிக்கை விடுவது வாடிக்கை. பிரச்சினை தீர வழி எதுவும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் அதிலும் மிக மிக சுவாரஸ்யம். முன்னாள் எல்லாம் தெருவுக்கு தெரு பத்திரிக்கை படித்து பேசிக் கொள்வார்கள். பெட்டிக்கடையில் ஒருவருக்கு ஒருவர் முட்டி கொள்வார்கள். இப்பொழுது கணினி பெட்டியில் தட்டி கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்திப்பது சற்று கோணலாக சிந்திக்கும் வண்ணம் தெரிவதால் எழுத்துகளும், எழுதுபவர்களும் விவகாரமானவர்களாகவேத் தெரிகிறார்கள்.   இது போன்ற சிந்தனைகளை தவிர்த்தலும், எழுதுவதும் அவரவர் சிந்தனைக்கு உட்பட்டது எனினும் சில வரைமுறைகள் உள்ளது.  மேலும் இந்த விவகாரம், பார்க்கும் கண்களில் இருக்கிறது எனும் தத்துவம் வேறு.

இப்பொழுது ஒரு பிரச்சினை தட்டப்படும், அடுத்த ஒரு பிரச்சினை வந்ததும் முதல் பிரச்சினை முடிந்துவிடும். இந்த எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தின் மர்மம எதுவோ.

வள்ளுவர் சொல்வார்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

அது சரி, எவரெல்லாம் விவகாரமான எழுத்தாளர்கள்? எவரையும் கை காட்டுவது முறையல்ல என்பதாலும் அப்படி எவரும் எவரையும் கைகாட்டுவதால் அவர்களும் விகார சொரூபமாக திகழ வாய்ப்பு  இருப்பதாலும் யானைப் போரை கண்டு களியுங்கள், சோளப்பொரிதான் எனினும்.

Monday, 19 April 2010

வேகமாக இயங்கிட மறுக்கும் வலைப்பூக்கள்

நாம இருக்கிற அவசரத்துல நமக்கு உடனே உடனே எல்லாம் கிடைச்சாத்தான் அடுத்த அடுத்த வேலையை பர்ர்த்துட்டு போக முடியும். இருந்தாலும் சில விசயங்களுக்கு பொறுமையா இருக்கணும் அப்படிங்கிற ஒரு விதி இருக்கத்தான் செய்து. அப்படி நாம பொறுமையா இல்லைன்னா நமக்குத்தான் நஷ்டம்.

அதுவும் இந்த வலைபூக்கள் இருக்கிறதே அது சில நேரங்களில் வலி தரும் பூக்கள் போல ஆகிவிடுகிறது. அது இது அப்படி இப்படினு நம்ம வலைப்பூக்கள்ல இணைச்சி வைச்சிட்டா வலைப்பூக்களோட வேகம் குறைஞ்சி போயிறது பல நாளா நடக்கிற கொடுமை.

எனக்கு சில நேரங்களில பொறுமை இருக்கும், வலைப்பூ திறக்கிற வரைக்கும் இருந்து படிச்சிட்டு போயிறது. சில நேரங்களில அந்த மாதிரி சமயத்தில எதுக்கு படிக்கணும்னு அடுத்த வலைப்பூ பக்கம் திரும்பிரது. இதெல்லாம் எதுக்கு பிரச்சினை அப்படின்னு ரீடர்ல படிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ரீடர்ல படிக்கிறது எப்படின்னா வீட்டுல உட்கார்ந்து திரைப்படம் பார்க்கிற மாதிரி. ;)

இப்படித்தான் இந்த வலைப்பூ கூட பிரச்சினையில பல நாளா இருந்துட்டு வந்தது. என்னவெல்லாம் பண்ணி பார்த்துட்டேன். ஒன்னும் புரியல. சில நேரங்களில் தமிழ்மண சேவைக்கு காத்து இருக்கிறேன் என வரும். நானும் காத்து இருக்கிறேன்னு இருந்தேன். அப்புறம் அமித் ஜெயினுக்காக காத்து இருக்கிறேன் என வர ஆரம்பிச்சது. அப்போ நான் திருமண பந்தம் அப்படிங்கிற கவிதைக்கு ஒரு படம் இணைச்சிருந்தேன். அப்பத்தான் இந்த அமித் ஜெயின் என்னோட வலைப்பூ தனில் நான் படிக்க கடவு சொல் எல்லாம் கேட்டு வைச்சது. அதற்கப்புறம் படத்தை எடுத்துட்டேன், அது மாதிரி எதுவும் வரலை. ஆனா வலைப்பூ வேகம் குறைய ஆரம்பிச்சது. சரி அப்படின்னு எல்லா உபரிகள் வெளியேற்றினேன். அப்புறம் வேகம் ஆமை வேகம் தான். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சினைன்னு நினைச்சேன். ஆனா சகோதரி சித்ரா சொன்னதும்தான் இந்த பிரச்சினையோட தன்மை புரிய வந்தது. நன்றி சித்ரா.

சரி இந்த அமித் ஜெயின் யாருன்னு தேடித் பார்த்தா ஒரு இணைய தளத்துல நான் அமித் ஜெயின் அப்படின்னு ஒரு சின்ன விளம்பரம். என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கறப்ப டெம்ப்ளேட் உள்ளார பார்த்தா இந்த அமித் ஜெயின் கோடிங் இருந்தது. அதை நீக்கினேன். இப்ப வேகமா வேலை செய்கிறது.

இது என்னன்னா நாம எத்தனை பேர் நம்ம பதிவை பார்த்தார்கள்னு பார்க்க ஒரு கோடிங் அது. எத்தனை பேர் பார்க்கிராங்கனு தகவல் பெற போய் பார்க்க வரவங்களுக்கு ஒரு எரிச்சல் தரக்கூடிய கோடிங் நமக்கு தேவைதானா? அது போல வேகமாக இயங்க மறுக்கும் வலைப்பூக்கள் எல்லாத்தையும் ஒரு நிமிஷம் சரி பார்த்துருங்க, படிக்க வரவங்களுக்கு சௌகரியமாக இருக்கும். வேற கோடிங் கிடைத்தால் அதை இணைத்துவிட்டு சரி பார்த்து கொள்ளலாம். நன்றி.

Friday, 16 April 2010

சிரிக்கத் தெரியாதுங்க, மன்னிச்சிருங்க.

எத்தனை தடவை, திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாலும், அதே நகைச்சுவை காட்சிகள் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இருப்பேன். எத்தனை தடவை நகைச்சுவை பதிவுகள் பார்த்து மனம் விட்டு சிரித்து இருந்திருப்பேன். சிரிப்பு ஒன்றுதான் மனிதர்களை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என சொல்லும் போதெல்லாம் சிரிப்புடன் சிந்தனையும் வந்து சேர்ந்து விடுகிறது.

சிரிப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா? பிறரை சிரிக்க வைப்பது என்பது என்ன அவ்வளவு கஷ்டமா? எனக் கேள்வி கேட்டால் பல நேரங்களில் ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நகைச்சுவை என்பது மிகவும் மெல்லிய கயிறு. அதை சற்று அதிகமாக இழுத்துவிட்டால் அறுந்து போகும் தன்மை உடையது. இதில் வயது வந்தோர்க்கான நகைச்சுவையும் இருக்கத்தான் செய்கிறது. அதில் வக்ர எண்ணங்கள் தலை காண்பித்தாலும் அவை நகைச்சுவை எனும் போர்வையால் மறைக்கப்பட்டு விடுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எல்லா விசயங்களையும் அணுகினால் துன்பம் விலகிப் போய்விடும் என்பது சத்தியமான உண்மை, ஆனால் அந்த நகைச்சுவைதனை எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்ப்பது இயலாத காரியம்.

நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நகைச்சுவைதனை உற்று நோக்கும் போது தோன்றுவது என்னவெனில் ஒருவரின் முட்டாள்தனத்தை கண்டு சிரிக்கிறோமா அல்லது ஒருவரின் சமயோசித புத்தியை நினைத்து ரசிக்கிறோமா என பாகுபாடு பார்க்க இயல்வதில்லை.

ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படை.  பிறரது நம்பிக்கைகள் கேலிக்குரியதாகத் தெரியலாம். பிறரின் செயல்பாடுகள் அர்த்தமற்றதாகத் தெரியலாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களுக்கு ஒரு விசயத்தை தன்மையுடன் புரிய வைக்காமல் நகைச்சுவை செய்தால் சிரித்துவிட்டுத்தான் போகத் தோன்றும், சிந்திக்கத் தோன்றாது.

நான் மிகவும் கோபக்காரனாகவே தெரிகிறேன், முகத்தை கடுகடுவென வைத்திருக்கிறேன் என பலரும் சொல்லும்போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். 'இஞ்சி தின்ன குரங்கு' எனும் பழமொழியை 'உர்ராங்கொட்டான்' எனும் அடைமொழியை என்னால் மிகவும் ரசிக்க முடிகிறது.

கலகலப்பாகவே பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஆனால் பேசி முடித்து கிளம்புகையில் ஒரு வெறுமை உணர்வு எட்டிப் பார்க்கிறது. துயரப்படுபவர்கள் கண்களில் வட்டமிடுகிறார்கள். அடுத்தவர்களை பாவம் என்று எண்ணாதே, நீதான் பாவம் என என்னை நோக்கிச் சொல்லும்போதெல்லாம் என்னால் சிரித்து மகிழ்ந்திருக்க இயலவில்லைதான்.

பொது நல வாழ்க்கைக்காக வசதியான வாழ்க்கையை துறந்துவிட்ட பல தலைவர்களை கோமாளிகள் என பிறர் சொல்லக் கேள்விபடும் போதெல்லாம் இனம் புரியாத வலி வந்து சேர்ந்துவிடுகிறது. இலங்கையில் துயரப்படும் தமிழ் உறவுகளை கண்டு ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பேசிப் பேசியே அந்த கொடிய நிகழ்வுகளை நகைச்சுவையாக்கும் தன்மை கண்டு சிரித்து மகிழ எப்படி முடியும்?

என் சட்டைப் பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது, அழுத பையன் அழுதபடியே எனும் வரிகள் என்னை வாட்டும் போதெல்லாம் எப்படி என்னால் மகிழ்ந்து இருக்க இயலும்?

இப்படி எத்தனையோ வாழ்வியல் கசப்புகளை மறந்துவிட்டு எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்திருங்கள் எனச் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும். இருப்பினும் எதையும் மாற்ற இயலாது, ஏன் வீணாக மனதையும் உடம்பையும் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கல்யாண வீட்டில் அழுது கொண்டிருப்பது எத்தனை அசெளகரியமோ அது போல சாவு வீட்டில் சிரித்துக் கொண்டிருப்பது அத்தனை அசெளகரியம். இந்த பூமியானது கல்யாண வீடாகவும், சாவு வீடாகவும் மாறி மாறி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கெங்கு அழ வேண்டுமோ அங்கங்கு அழுது விடுவதும், எங்கெங்கு சிரிக்க வேண்டுமோ அங்கங்கு சிரித்து விடுவதும் செளகரியமான ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு பட்டிமன்றம் பார்த்த போது நான் மிகவும் ரசித்த நகைச்சுவை ஒன்று:

மனைவி: 'இன்னைக்கு சாம்பார் வைக்கவாங்க, இல்லைன்னா ரசம் வைக்கவாங்க'

கணவன்: 'நீ ஏதாச்சும் ஒன்னு செஞ்சி வைச்சிரு, அப்புறம் பேரு வைச்சிக்கலாம்'

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். உலக உயிரினங்கள் யாவும் எப்போதும் மகிழ்ந்திருக்க நல்லதொரு வாய்ப்புதனை நல்குவாய் பரம்பொருளே.

Thursday, 15 April 2010

தண்ணீர் கண்ட பின்பு மரம் ஆனேன் - தொடர் பதிவு.


அடுத்த கட்ட அழையா தொடர் பதிவு. தண்ணீரும் மரம் வளர்ப்பதின் பயன்பாடும்.

இந்த பூமியில் மட்டும் எப்படி இவ்வளவு தண்ணீர் வந்ததுனு புது புது கதையா அறிவியலுல படிச்சேன். அட எதுக்கு மத்த கிரகத்தில எல்லாம் இந்த மாதிரி தண்ணி இல்லைன்னு நினைச்சப்போ ஒன்னும் புரியல. வியாழன் கிரகத்தில மீத்தேன் வாயு நீர் மாதிரி ஓடி திரியுதாம். கொமேட்டு கூட பனியாத்தான் இருக்குதாம். செவ்வாயில கூட பனி உறைஞ்சி இருக்காம்.

இப்படி மொத மொதல எல்லாம் கிரகங்களும் சூரியனிலிருந்து வெடிச்சி சிதறி வந்தப்ப எரிமலை குழம்பாக இருந்த இந்த பூமியில எப்போ பார்த்தாலும் அம்மோனியா, மீத்தேன் வாயு தான் இருந்துச்சாம், அதோட நிறைய கரியமில வாயுவும் கூட, கொஞ்சம் நீராவியும் இருந்துச்சாம் . அப்புறம் பூமி குளிர்ந்தப்ப மெதுவா நீராவி எல்லாம் தண்ணியா மாறி பூமியில கொட்டிச்சாம். அப்போதான் முதல் தண்ணீர் இந்த பூமியில உருவானதாம். அதோட மட்டுமில்லாம இந்த கொமேட்டு வந்து மொத்தமா பூமியில தண்ணிய கொட்டிட்டு போச்சுன்னு சொல்றாங்க.

அப்போ முத முத உருவான தண்ணி நல்ல தண்ணியா, உப்பு தண்ணியா அப்படின்னு யாருக்குத் தெரியும். இப்படி இருக்கறச்சே கடலு எல்லாம் உருவாகி இருக்கு. கடலு உருவாகி இருக்குன்னு சொன்னதும் தான் உப்பு தண்ணிதான் முதல வந்துருக்கணும் அப்படின்னு நினைக்க தோணுது. அந்த உப்பு தண்ணியில இருந்துதான் உயிரினங்கள் தோன்றி இருக்கும்னு ஒரு கதை படிச்சேன்.

மெல்ல தாவரங்கள் வர ஆரம்பிச்சதாம். அந்த தாவரங்கள் இந்த தண்ணியையும், கரியமில வாயுவையும் சேர்த்து வைச்சி உணவு தயாரிக்க ஆரம்பிச்சதாம். அப்படி இருந்த சமயத்தில்தான் கரியமில வாயு எல்லாம் குறைய ஆரம்பிச்சி, ஆக்சிஜன் அதிக அளவில உண்டாச்சாம். அப்புறம் தான் மத்த உயிரினங்களும் தோன்ற ஆரம்பிச்சதாம். அதோட வான் படலம் ஒன்னு உருவாச்சாம். இப்படி உருவான தண்ணி, மலைகள் இருக்கிற மூலிகைகள் மேல உரசி ரொம்ப நல்ல தண்ணியா இருந்துட்டு வருதாம். தாவரங்கள் தான் நல்ல தண்ணீர் வர காரணம்.

எல்லா ஒரே நிலபரப்பா இருந்த பூமிய இந்த தண்ணி தான் வந்து பிரிச்சி போட்டுச்சுனு சொல்வாங்க. எங்க பார்த்தாலும் கடலு. ஆனாலும் கடலு உப்பாத்தான் கிடக்கு, அதுக்கு முக்கிய காரணம் சோடியம்னு சொல்றாங்க. நம்ம கிணத்துல குளத்துல இருக்கற தண்ணியில கால்சியம், மெக்னீசியம் எல்லாம் அதிகம் இருந்தா அந்த தண்ணி உப்பு தண்ணி. அது இல்லாம இருந்தா நல்ல தண்ணி.

ஊருல நல்ல தண்ணி கிணறு, உப்பு தண்ணி கிணறுனு இருக்கும். ஊருல தண்ணித் தொட்டி எல்லாம் அப்போ கட்டாமதான் இருந்தாங்க. அதனால எங்கனயாவது போய் நல்ல தண்ணி எடுத்துட்டு வருவாங்க. அப்புறம் ஊருல குழாய் எல்லாம் போட்டாங்க. ஆனா தினமும் தண்ணி விடமாட்டாங்க. காசு வைச்சிருக்கவங்க அவங்க அவங்க வீட்டுக்கு தனியா குழாய் இணைப்பு வாங்கி வைச்சிட்டாங்க. இந்த தண்ணிக்காகவே குழாயடி சண்டை எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். தண்ணீர்தனை  அதிகமா அனாவசியமா செலவழிக்கக் கூடாதுனு எல்லாருக்கும் தெரியணும். .

அப்புறம் ஊருக்கு பொதுவா போர்வெல் எல்லாம் போட்டு வைச்சிட்டாங்க. அது என்னமோ நல்ல தண்ணியா அமைஞ்சிருச்சி. போர்வெல் போட்டு போட்டு இப்போ எல்லாம் உப்பு தண்ணியா மாறிட்டு வருதாம். இப்படி தண்ணி ஒரு பக்கம் இருக்கறப்ப மரமும் எங்க பார்த்தாலும் ஊருல இருந்துச்சி. நான் படிச்ச பள்ளி கூடத்தில மரக் கன்று எல்லாம் நட்டு வைப்போம். ஊரு ரோட்டோரமா புளிய மரம் எல்லாம் இருந்தது.

மரங்களே இல்லாதப்ப வந்த தண்ணி, மரங்கள் வந்ததும் மழையா பொழிய ஆரம்பிச்சி இருந்துச்சு. மரங்கள் குளிரிச்சியை தருதுன்னு சொன்னாங்க. மலைகள் இருக்குற பக்கம் எல்லாம் நல்ல மழை விழுமாம்ல. எங்க பக்கத்து ஊருல தொடங்கி மெதுவா மரங்களை வெட்ட ஆரம்பிச்சாங்க. மழை பெய்யாம போயிருச்சி. அப்போ அப்போ மழை கஞ்சி எல்லாம் எடுத்துருக்கோம். யாருமே மரத்தை நடுங்கனு சொன்னதில்லை. வேப்ப மரம் மாரியாத்தாவுக்கு சொத்துன்னு சொல்லி வைச்ச ரகசியம் புரியலை.

மரத்தை வெட்ட வேணாம்னு சொன்னா யாரு கேட்கறா. தானா வளருற  மரத்தை மனிசருங்க பண்ணுன காரணத்தால ஒவ்வொருத்தரும் நட்டு வைச்சி வளர்க்க வேண்டியதா போச்சு. அசோக மன்னர் சாலை இருபுறங்களிலும் மரத்தை நட்டு வைக்க சொன்னார். இப்போ ஊருக்கு போயிருந்தப்ப ரோட்டோரம் மரத்தை எல்லாம் காணோம். சாலை விரிவாக்கம் செய்றாங்களாம். மரத்தை நட்டு வைச்சிருவாங்க தானே. அப்படி மரம் இல்லாம பாக்கறப்போ வெறிச்சினு எதையோ பறி கொடுத்ததை போல இருந்துச்சி.


மரம் வளர்ப்போம், மழை பெற வைப்போம். மரம் வளர்ப்போம் மனிதம் வளர்ப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சாமல் மழை நீரை சேமித்து மேலும் மேலும் மரம் வளர்ப்போம். உலக வெப்பமயமாதல் பத்தி எல்லாரும் கவலை படறாங்க. கவலைபட்டா போதாது, ஒரு செடி என்ன ஓராயிரம் செடி வளர்க்கணும். பயோடீசல் உருவாக்கணும். இந்த தாவரங்கள் நமக்கு மருந்து. நீர் தரும் ஆதாரம்.

எப்பவோ எழுதின கவிதையில கடைசி வரி எனக்கு எப்பவுமே பிடிச்சது. 'எதிர்கால இருளுக்கு நிகழ்கால வெளிச்சம் விதையுங்கள்' தாவரங்கள் இல்லைன்னா எந்த உயிரினமும்  இல்லை. எனவே தாவரங்கள்  பாதுகாப்போம். நீர் சேமிப்போம்

Wednesday, 14 April 2010

கதை கதை கேளு - தொடர்பதிவு

சில தொடர் பதிவுகளை எழுத வேண்டும் என்பதின் முதல் கட்டமாக முதல் அழையாத் தொடர் வரிசையில் நுனிப்புல் நாவலில் பங்கு பெற்ற ஒரு கதை மட்டுமே இங்கே அளிக்கப்படுகிறது.  இனி கதையை கேளுங்க, படிங்க. 

வாசன் சாப்பிட்டு முடித்துவிட்டு சுமதியிடம் விபரம் கேட்டான். சுமதியும் தனக்கு பரீட்சை வருவதாகவும் வெளியில் சிலர் காத்துக் கொண்டு இருப்பதாகவும் படிப்பு சொல்லித்தர வேண்டும் என சொன்னாள். ‘’ இன்னைக்கு தோட்டத்தில அதிக வேலை இருந்தது அதனாலதான் வரமுடியல, பாடம் மட்டும்தான இன்னைக்கு’’ என்றான் வாசன். ‘’இல்லை மாமா, பாடத்தோட கதையும் வேணும்’’ என்றாள் சுமதி.

வெளியில் தலைமை சீடரை அனுப்பிவிட்டு என்ன இனியும் காணவில்லை என காத்துக் கொண்டு இருந்தார்கள் செல்வங்கள். அவர்கள் சத்தம் போடாமல் அமைதியாய் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. வாசன் வந்ததும் பாலு ‘’எனக்கு பாடத்தில பெயிலாப் போய்ருவோம்னு பயமா இருக்கு’’ என்றான். வாசன் ‘’இன்னும் பரீட்சைக்கு நாள் இருக்குத் தான, படிச்சிரலாம்’’ என்றதும் சிறு நம்பிக்கை வந்தவன் போல சரியென தலையாட்டினான். வீட்டின் வெளியில் வெளிச்சம் இருந்தது, அனைவருக்கும் பாய் விரித்து அமரச் சொன்னான் வாசன். அனைவரும் அமர்ந்தனர். பாடங்கள் சொல்லித் தந்தான். ‘’எவ்வள படிச்சாலும் மறக்குது’’ என பாலு தன் நிலையை வாசனிடம் சொன்னதும் ‘’ஒண்ணோட ஒண்ணு ஒப்புமை படுத்தி படிச்சா மறக்காது, இலகுவா ஞாபகம் வைக்க உதவும், நாம மனனம் செய்துதான் படிக்கனும் அதே வேளையில் புரிஞ்சி மனனம் செஞ்சா நல்லது’’ என்றதும் ‘’பரீட்சை முடிஞ்சிட்டா ஜாலிதான்’’ என்றான் பாலு.

வாசன் அதற்கு ‘’பரீட்சை முடிஞ்சாலும் படிச்சிக்கிட்டே இருக்கனும் இல்லைனா 'நூறு நாள் கற்ற கல்வி ஆறு நாள் விடப்போம்' மாதிரி ஆயிரும், இதற்கு அர்த்தம் தெரியுமா’’ என்றான். சுமதி சொன்னாள் ‘’நூறு நாள் படிச்சி ஆறு நாள் படிக்காம விட்டா நூறு நாள் படிச்ச கல்வி மறந்துரும்’’ என்றதும் ‘’ஆமா’’ என்றான் வாசன். ‘’அப்படின்னா படிச்சிகிட்டே இருக்கனுமா’’ என்றான் பாலு. ‘’விசயங்கள் தெளிவுபடுத்திக்கிற படிச்சிட்டுத்தான் இருக்கனும். வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உபயோக்கிறோம் அப்படிங்கிறது இரண்டாவது பட்சம்’’ என்றான் வாசன்.

‘’படிப்பு அப்படிங்கிரது ஒவ்வொரு விசயத்திலும் இருந்து படிக்கிறது, வெறும் புத்தகப் படிப்பு படிப்பாகாது. விசயம் தெரிய விசயங்கள் படிக்கனும் ஆனா எப்படி நடைமுறையில நடந்துக்கனுமோ அதுக்கு நமது விவேக புத்தியை உபயோகிக்கனும், அதுதான் சிறந்த கல்விக்கு வரைமுறை’’ என்றதும் பழனி ‘’இதை எங்க வாத்தியார் சொல்லமாற்றாரு, புத்தகத்தை படிங்கடா மனப்பாடம் பண்ணுங்கடான்னு சொல்றார்னே’’ என்றான். ‘’நீ எவ்வளவு விசயம் தெரிஞ்சவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்தில நீ எடுக்குற மதிப்பெண்கள் வைச்சித்தான் உன்னை எடை போடுவாங்க அதனால அவர் சொல்றதுதான் சரி, ஆனா உலக நடப்பு அப்படி இல்ல’’ என்றான் வாசன். பாடங்களை படித்து முடித்தார்கள். வாசன் நாளைக்கு பார்க்கலாம் என்றதும் சுமதி ‘’மாமா கதை’’ என்றாள். வாசன் சற்று யோசித்தவாறே இதோ நான் கேள்விபட்ட கதை சொல்றேன் என ஆரம்பித்தான்

‘’ஒருத்தன் மற்றவர்களுடைய மனசை படிக்கிற படிப்பை எடுத்து நல்லவிதமா படிச்சு முடிச்சான்’’ என்று வாசன் ஆரம்பிச்சதும் ‘’அது என்ன படிப்புன்னே’’ என்றான் பழனி. ‘’அதை ஆங்கிலத்தில சைக்காலஜினு சொல்வாங்க தமிழ்ல மன உளவியல்னு சொல்வாங்க’’ என்றதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘’ சாமி கதை இல்லையா, நம்ம ஊருக்கு வந்தாரே ஒரு தாத்தா அவர் பத்தி இல்லையா’’ என்றான் பாலு. ‘’இல்ல இது வேற கதை’’ என்றான் வாசன். ‘’கதைய சொல்ல விடுங்கள்’’ என்றாள் வேணி.

வாசன் தொடர்ந்தான். ‘’அப்படி அவன் படிச்சி முடிச்சதும் தனது நண்பனோட கிராமத்தை விட்டு தள்ளி தனியா ஒரு வீடு எடுத்து தங்கினான்’’ ‘’அவர் நண்பன் என்ன படிச்சிருக்கார்னே’’ என்றான் பழனி. வாசன் சிரித்துக் கொண்டே ‘’அவன் நண்பன் சட்டம் படிச்சி இருந்தான், இப்படி இவங்க தங்கி இருந்தப்ப படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போகாத ஒருத்தர் இவனோட தனியான வீட்டை பார்த்து வந்தார்’’ ‘’யாருனே நம்ம முத்துராசு மாமா மாதிரியா’’ என்றான் பழனி. ‘’அப்படியெல்லாம் இல்லை’’ என்று சொல்லிய வாசன் ‘’கதைய கேளு’’ என்றான். ‘’நீங்கதான அண்ணே ஒப்புமை படுத்தி படிக்கச் சொன்னீங்க’’ என்றான் பழனி. மற்றவர்கள் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

‘’அந்த நேரம் பார்த்து அவனது சட்டம் படிச்ச நண்பன் வெளியூருக்கு போயிருந்தான், முன்ன பின்ன தெரியாதவர் இவன்கிட்ட வந்து எனக்கு பசிக்குது ஏதாவது கொடுன்னு கேட்டார்’’ அந்த நேரம் பார்த்து ஏதொ சொல்ல வாயெடுத்த பழனியின் வாயினை மூடினான் பாலு. வாசன் புன்னகைத்துக் கொண்டே ‘’உள்ள வாங்க அப்படின்னு அவரை வரவழைச்சி உணவு தந்தான், அவர்கிட்ட நிறைய நேரம் பேசிகிட்டு இருந்தான், அவரும் நிறைய விசயங்கள் பேசினார் அப்படி பேசிட்டு இருக்கறப்ப நேரம் போறதே தெரியல இருட்டிருச்சு, உடனே அவர் இங்க தங்கிட்டு காலையில போறேன்னு சொன்னதும் சரி அப்படின்னு சம்மதம் தந்து படுக்கச் சொன்னான். புதுசா வீடு போனதால நிறைய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் வங்கி வைச்சி இருந்தான், சரின்னு தூங்கினாங்க’’ என நிறுத்தினான் வாசன்

‘’என்ன அண்ணே ஆச்சு’’ என்றான் பழனி இம்முறை வாய் மூட வந்த பாலுவின் கைகள் விளக்கி. வாசன் தொடர்ந்தான். ‘’காலையிலே எழும்பி பார்த்தப்ப வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாம் காணோம் அந்த ஆளையும் காணோம், அய்யோ ஏமாந்துட்டுமேன்னு தலையில கை வைச்சி உட்காந்துட்டான்’’ என்றதும் ‘’அவன் தான் பிறர் மனசை படிச்சிருக்கிறாரே மாமா பின்ன எப்படி’’ என்றாள் சுமதி. ம்ம் எனச் சொல்லிவிட்டு ‘’அவன் நண்பன் வந்தவுடன் இதை பார்த்து பதறிப் போய் என்ன ஆச்சுனு கேட்டான், அதுக்கு அவன் நேத்து ஒருத்தர் வந்தார் நல்லா பேசினார் பிறகு தூங்கனும்னு சொன்னார் இப்படி பண்ணிட்டு போய்ட்டார்னு’’ சைக்காலஜி படிச்சவன் சொல்ல சட்டம் தெரிஞ்சவனுக்கு கோவம்னா கோவம் ‘’அறிவு இருக்காடானு திட்டினான் முன்ன பின்ன தெரியதவங்களை எப்படி நம்பலாம் உன் படிப்பை உபயோகிக்க வேண்டியது தான’’ அப்படினு சொன்னான். அவன் சொன்னான் ‘’படிப்பை உபயோகிச்சு அவர்கிட்ட பேசினப்பறம் அவர் நல்லவருனு முடிவு பண்ணித்தான் தங்க விட்டேன்னு சொன்னதும் அவனையும் அவன் படிப்பையும் திட்டிக்கிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்னு’’ அந்த நண்பன் சொன்னான்.

இங்க வந்து பொருள் எல்லாம் திருடிட்டு போனவரை அவர் வீட்டுல பார்த்த அவரோட மனைவி ‘’எப்படி இவ்வளவு பொருள்னு கேட்டாங்க அதுக்கு அவர் சிரிச்சிக்கிட்டே ஒருத்தனைப் பார்த்தேன் அவன் தலையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டாத குறைதான் பேசி தூங்கறாப்ல நகர்த்திட்டேன்னு சொன்னார்’’ இதில இருந்து என்ன தெரியுது என்றான் வாசன். ‘’ஏமாத்துறவங்க ஏமாத்திட்டே இருப்பாங்க’’ என்றான் பாலு. ‘’கற்றது கையளவு கல்லாதது உலகளவு’’ சுமதி சொன்னாள். வாசன் சிரித்துக் கொண்டே ‘’ம்ம், எதிலயும் சமயோசிதமா சிந்திச்சு வாழனும், வெறும் புத்தகப் படிப்பை நம்பக் கூடாது’’ என்றதும் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள் .