Monday, 8 March 2010

பெண்களைக் கண்டாலே எரிச்சல்

ஒரு ஆண் வெற்றி பெற்றுவிட்டால் கிடைக்கும் மரியாதைக்கும், அதே வேளையில் ஒரு பெண் வெற்றி பெற்றுவிட்டால் கிடைக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம் மிக மிக அதிகம். பெண் என்பவர் வீட்டு வேலை தவிர வேறு எதையும் செய்ய திறனில்லாதவர் என்கிற மனோபாவம் பரவலாக இருப்பது உண்டு. பெண்கள் எதையும் செய்ய திறனில்லாதவர்கள் என்கிற எண்ணம் இருந்தது என்பதாலாயே ஒரு பெண் ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது ஆச்சரியத்துடன் பார்க்கும் பார்வை நிலைத்துவிட்டது.

பெண்களுக்கு என விதிக்கப்பட்ட கட்டுபாடுகள், தடைகள் அவர்களை முன்னேறவிடாமல் செய்துவிட்டது என பொதுவாகச் சொல்லிவிடலாம். ஆனால் தேவதாசிகளாகவும் பெண்கள் வாழ்ந்தார்கள் என்பதை அன்றைய சமூகம் எப்படி ஏற்றுக்கொண்டது? எப்படி பெண்கள் அடங்கிப் போனார்கள் என்பதை அன்றைய சமூகம்தான் சொல்ல வேண்டும். இதே சூழல் பரவலாக நிலவும் இந்த காலகட்டத்திலும் இன்றைய சமூகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பெண்களுக்கு என இருக்கும் சமூகத் தடைகள் எல்லாம் தாண்டியே பெண் என்பவர் வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக அவலங்களில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பெண்ணுக்கு ஏற்பட்டதால் வீட்டோடு இருக்கும் தைரியத்தை வெளியில் கொண்டு வர வேண்டியிருந்தது. ஊரினில் மட்டுமே வேலை பார்க்கும் சூழல் பெண்களுக்கு பொருந்திப் போனது.

பொருளாதார ரீதியாகப் பார்த்தோமெனில் ஆண்கள் சம்பாதிப்பதற்கும், பெண்கள் அதை பராமரிப்பதற்கும் என்றே ஒரு விதி செய்யப்பட்டு இருந்தது. வெளி உலகுக்குச் செல்லும் பெண்கள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுவார்கள் என்கிற கண்ணோட்டமே அடக்கம், ஒடுக்கம் என்பதையெல்லாம் பெண்களுக்கு அணிகலன்களாகப் பூட்டி அழகு பார்த்தது.

'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் சட்ட திட்டங்களை பெண்களுக்கென வகுத்து வைத்ததைக் கண்டு பெண்கள் சமூகம் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டிருப்பதை சகித்து கொள்ள முடியாமல் தவித்தது. சங்கங்கள் தோன்றின. பெண்களுக்கென போராடும் அமைப்புகள் எல்லாம் பெண்களை மறைமுகமாக கேலி செய்து கொண்டிருப்பதை பெண்களால் உணர இயலாது. பெண்கள் தங்களுக்கென இட ஒதுக்கீடுகள் கேட்டு போராடுவதைப் பார்த்தால் பெண்கள் எந்தவொரு வேலையும் செய்ய திறனில்லாதவர்கள் என்பதை அவர்களாகவே உணர்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம். திறமைசாலிகளை உலகம் ஒருபோதும் ஒதுக்கி புறந்தள்ளிக் கொண்டிருந்து கொண்டே இருக்க இயலாது.

உடல் பலத்தில் பலவீனமாக பெண்கள் இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஒரு பெண்ணின் மனதிடம் ஆணின் மனதிடத்தை விட பலமடங்கு அதிகமாகவே உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தனி நபர்கள் பொருத்து வேறுபாடு அடையும். பெண் கவிஞர்கள், பெண் எழுத்தாளர்கள், பெண் சாமியார்கள், பெண் முதல்வர்கள், பெண் வீராங்கனைகள் என இவர்களுக்கென 'முதன் முதல் பெண்மணி' எனும் பட்டங்கள் அவர்களின் சாதனைகளில் கிடைக்கப் பெற்று இருந்தது.

அதீத திறமையுடைய பெண்கள் தங்களது குடும்ப வளர்ச்சிக்காக தங்களது திறமைகளை பரண் மேல் வைத்து பூட்டினார்கள் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆண் தனது குழந்தைகளை வளர்த்தால் அந்த குழந்தைகள் பொறுப்பில்லாமலே வளரக் கூடும் என்கிற ஒரு எண்ணம் பரவலாகவே இருப்பதுண்டு. பெண்கள் மிகவும் பொறுப்பானவர்கள் என்கிற மனப்பக்குவம் வீட்டோடுதான் சரி, வெளி நிர்வாகத்தில் எல்லாம் பெண்கள் தங்களை முன்னிறுத்தக் கூடாது என்பதே பலரின் எண்ணம். பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாகவே வாழ வேண்டும் என்பது எவரோ சொன்ன நியதி. பெண்களுக்கு மரியாதை தருகிறோம் என முழங்குவோர்களைக் காணும் போதெல்லாம் இவர்கள் மரியாதைக் கொடுத்துத்தான் பெண்கள் தங்களது மரியாதைகளை நிலைநாட்ட வேண்டும் எனும் அடக்குமுறை இன்னுமா தொடர்கிறது என்றே எண்ணம் ஏற்படக் கூடும்.

வாசுகி அம்மையார் திருவள்ளுவர் அழைத்தார் என்பதற்காக நீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை அப்படியே விட்டுவிட்டு திருவள்ளுவர் சொல்வதைக் கேட்க ஓடி வந்ததாகவும், அந்த வாளியானது அவரது கற்பு காரணமாக அப்படியே நின்றதாகவும் சொல்லப்பட்டிருந்ததை கேள்விபட்டபோது என்னவெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடியது. பெண் அன்பினால் செய்தார் என்றே மனம் விளக்கம் சொன்னாலும் இதே சூழல் திருவள்ளுவருக்கு ஏற்பட்டிருந்தால் திருவள்ளுவர் என்ன செய்திருப்பார் என்றே மனம் கேட்கிறது.

பெண்களைப் பற்றி பெருமை பேசும் உலகம் அதே பெண்கள் சிறுமையாக நடத்தப்படும் நிகழ்வுகள் கண்டு என்ன செய்து கொண்டிருக்கிறது. புதுமைப் பெண்கள் என்று தங்களுக்கு பட்டம் சூட்டியவர் ஒரு ஆண் என்பதை ஏன் பெண்கள் உணர்ந்து கொள்வதில்லை. காலம் காலமாகவே பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறார்கள், இது ஒரு காலமும் மாறப்போவதில்லை.

பெற்றோருக்கென வாழும் வாழ்க்கை, கணவனுக்கென வாழும் வாழ்க்கை, பிள்ளைகளுக்கென வாழும் வாழ்க்கை என ஒரு பெண் தனது மொத்த வாழ்க்கையில் தனக்கென வாழாமல் போவதைக் காணும்போது மனம் பரிதாபம் கொள்ளும்.  இதைத் தாண்டிய வாழ்வை எவரேனும் வாழ்ந்து காட்டினால் மனம் எரிச்சலில் கிடந்து அழுந்தும்.

என் மனைவிக்கு நான் முழு உரிமை கொடுத்து இருக்கிறேன் என சொல்வோர் உளர் எனில் அங்கே ஆதிக்க உணர்வு தென்படும். எவரொருவர் தனது உரிமையை தானாக எடுத்துக் கொள்ளும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வருமோ அப்போது ஆதிக்கம் மறைந்துவிடும். பெண் என்பவருக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணராமல் போய்விடும் சமூகம். பெண்களுக்கென பரிந்து பேசினால், பெண்களுடன் பேசினால் கிடைக்கும் பட்டங்கள் வேறு.

பெண்களைச் சுற்றியே பெருங்காவியங்கள் வரையப்பட்டன. பெண்கள் சக்தியின் இருப்பிடம் என போற்றப்பட்டார்கள். பெண்மை உலகில் பெருமளவில் பேசப்படுகிறது. காதலில் கூட காதலி தான் சுகம். அழகு என்றாலே பெண்கள் தான். அழகு கவர்ச்சியானது, ஆபாசமும் ஆகிப் போனதால் எல்லா குறைகளும் பெண்களை நோக்கியே.

ஒரு பெண்ணாக பிறந்திருக்கக் கூடாதா எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. நான் செய்யும் காரியங்கள் எதுவும் 'இவன் ஆண்' என்கிற மனக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் எதுவுமே பெரிதாகத் தெரிவதில்லை. எனது இந்த ஆசையைச் சொல்லும்போதெல்லாம் பெண்கள் படும் வேதனைகளை ஒரு பெண்ணாக பிறந்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள இயலும் என்றே எச்சரிக்கப்பட்டு இருக்கிறேன்.

சிறு வயதில் எனது கை ரேகையைப் பார்த்துவிட்டு 'பெண்ணாக பிறந்து இருந்தால் இந்த ஊரையே உனது வசம் வைத்திருப்பாய்' என ஜோசியர் சொல்லி முடித்ததும் ' என்ன மாப்பிள்ளே, விபச்சாரம் பண்ணி இருப்பியா' என ஏளனமாகவே கேட்ட சீனிவாசனின் வார்த்தைகள் இன்னும் வலிதனை தந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் என்றால் அப்படித்தான் வாழ்க்கையில் சாதிக்க இயலுமா? வேலை இடத்தில் போராடி வலியுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்து முன்னுக்கு வரும் பெண்களை வக்கிரமாகவே ஒரு வசனம் மூலம் சொல்லும் சமூகம் கொடியதுதான்.

'தாயோடு அறுசுவை உண் போம்'. 'மனைவியோடு எல்லாம் போம்'. பெண் வாழ்க்கையின் ஆணி வேர், வளைந்து கொடுத்துவிடும் நங்கூரம். வேர்களுக்கோ, நங்கூரங்களுக்கோ பிறர் மனமுவந்து பெருமை சேர்ப்பது இல்லை. வேர்களும், நங்கூரங்களும் தங்களுக்குள்ளே பெருமிதம் கொள்வதில் தவறேதும் இல்லை. இப்படி பெண்களை புகழ்ந்தும், துதிபாடியும் வெளியில் நடித்துக் கொண்டிருக்கும் சமூகம் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதானிருக்கிறது.

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' அதிலும் 'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்' மனதில் நினைத்த்துக் கொண்டேன், நானும் பெண்ணாய் பிறந்திருந்தால் என்னைப் பார்த்து பலர் எரிச்சல் அடைந்திருப்பார்கள்.

2 comments:

தனி காட்டு ராஜா said...

//ஒரு பெண்ணாக பிறந்திருக்கக் கூடாதா எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. //

பரவாயில்லையே ...ரொம்ப வெளிப்படையாய் பேசுறேள் ....

Radhakrishnan said...

வெளிப்படையா பேசினாலும் தப்பா பேசத்தான் கூடாது. மத்தவங்களுக்கு தப்பா தோணினா கண்டுக்கக் கூடாது. :) நன்றி தனி காட்டு ராஜா.