இந்த வலைப்பக்கம் வந்ததும் வந்தேன், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிட்டு இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் உதவி செய்றாங்க. எத்தனை விதமான தொடர் பதிவுகள். ஆச்சரியம் தருது. பல பதிவுகளுக்கு எழுத நினைச்சி இருக்கேன். நான் பொதுவா தமிழ்மணத்துல இருந்துதான் பல பதிவுகளை தேடி பிடிச்சி படிக்கிறது. அப்பப்போ தமிழிஷ் தமிழ் 10 பாக்குற வழக்கம் உண்டு. பின் தொடர்கிறேனு நூத்து ரெண்டு வலைப்பக்கங்களை நான் சேர்த்து வைச்சிருந்தாலும் உண்மையா பின் தொடருறது என்னவோ கொஞ்சம் தான். ஒவ்வொருத்தரும் எழுதறதை படிக்க இப்போ பாக்கிற வேலையை விட்டுரனும், அதோடு மட்டுமா குடும்பம் பிள்ளைக எல்லாரையும் மறந்துரனும். அவ்வளவு பேரு எழுதுறாங்க.
ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தர் பார்வையிலும் படிக்க நல்லாத்தான் இருக்கு. எல்லாரையும் நல்லவங்கதானு நம்பி ஏமாந்து போறதை விட எல்லாரும் அவங்க அவங்க அளவுல நல்லவங்கன்னு நினைச்சிட்டு பழகிட்டு போகலாம். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.
நான் பழகினவங்க எல்லாரும் நல்லவங்கதான். எனக்கு என்னைப் பொருத்தவரை நான் எப்படி ஒருத்தர்கிட்ட நடந்துகிறேனோ அதுபோலவே அவங்களும் என்கிட்டே நடந்துக்குவாங்கனு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. ஒரு சில எழுத்துகளை படிக்கும் போது எழுதுரத மட்டும் செய்வோம்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது. ஆனாலும் ஏதாவது பதிவை படிச்சா மனசில நினைக்கிறத எழுத வேண்டி வந்துருது. நாம எழுதுறதை சரியா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்கனு மனசுல நினைக்க முடியறதில்ல. எதுக்குன்னா எழுதுனவங்க மனசை புரிஞ்சா நாம படிச்சி மறு மொழி போடுறோம்?
எழுத்துக்கள் ஒரு மனிசரோட குண நலத்தை சொல்லுமானு தெரியல. சொந்த உறவுகள்கிட்ட சில காரணங்களால பகை பாராட்டும் நாம எழுத்துக்கள் மூலம் பழகினவங்களோட எப்பவுமே நட்பு பாராட்டுவோம்னு தெரியாது. ஏதாவது மன கசப்புகள் வரத்தான் செய்யும். எனக்கே சிலரது எழுத்துகள் பிடிக்கிறது இல்ல இருந்தாலும் எழுதினவங்க பார்வையிலும், என் பார்வையிலும் அந்த எழுதப்பட்ட விஷயத்தை பார்த்துட்டு அத்தோட விட்டுருவேன், எனக்கு பிடிக்காததை எழுதிட்டாங்கன்னு எழுதுரவங்களை வெறுக்க முடியுமா? எதை எழுதினாலும் அந்த எழுத்துல என்ன இருக்குன்னு ஒரு பார்வை பாக்குற பழக்கம் இருக்கு.
இப்படியே இருந்தாலும் தெரியாத்தனமா சிலரது எழுத்துல ஒரு பிடிப்பு வந்துரத்தான் செய்யுது. அது தப்புன்னு சொல்ல முடியாது. அப்படியே நட்பு வட்டம் அப்படி இப்படினு வளரத்தான் செய்யுது. இப்போ அமைப்பு அது இதுன்னு ஆரம்பிக்கிறாங்க. ரொம்ப நல்ல விசயம் தான். ஒரு சிறந்த அமைப்பா கொண்டு வரணும்னு முன்னமே வேண்டுகோள் விட்டுட்டேன். ஆனா அந்த அமைப்பில இப்போதைக்கு சேர வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில இருந்து ஆதரவு தரதுதான் என்னோட முடிவு. உண்மையிலே சொல்றேன் அமைப்பின் நோக்கம் எதுவுமே எனக்குப் புரியல. உள்நாட்டுல இருக்கிறவங்களுக்கு அது சரியா இருக்கும், எனக்கு சரிப்பட்டு வராது. எழுதுறது என்னோட தொழில் இல்ல! எழுதினா மட்டுமே வலைப்பதிவர் அப்படிங்கிற தகுதி கிடைக்குது, சந்தோசம் தான்.
சக வலைப்பதிவருக்கு என்ன மரியாதை இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படியெல்லாம் மாத்தி மாத்தி தனிப்பட்ட அளவுல தாக்கி எழுதறாங்க. அதை படிக்க்கும் போது ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து போறது என்னவோ உண்மைதான்.
உலகத்துல யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்கனு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்? யாருமே நல்லவங்க இல்லை, யாருமே கெட்டவங்க இல்லைன்னு சொன்னாலும் என்ன செய்ய முடியும். ஒவ்வொருத்தரும் மாறி மாறி நடந்துக்கிறாங்க அதுதான் உலகம், இதுல எழுதுறவங்க மட்டும் நல்லவங்களாகவே இருக்கனும்னு எந்த ஊர் நியாயம்னு கேட்டாலும் ஒரு வரைமுறை இருக்கத்தான் செய்கிறது எதற்கும்.
எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.
இதோ நான் விபரீதமான எழுத்துகளில் இருந்து என்னை விடுவித்து கொள்ள முடிவு செய்து விட்டேன். எங்கேனும் தென்படாவிட்டலும் இதோ இங்கே எப்போதும் தென்பட்டு கொண்டுதான் இருப்பேன். யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க என்பதில் சரி பாதியாய் மனிதர்கள் இங்கும் அங்கும் என அலைந்து கொண்டிருக்கிறார்கள், ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை.
13 comments:
நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொம்ப குழப்பம் தான்.
நீங்க நிறைய ப்ளாக் படிக்கறீங்கன்னு தெரியுது.:):)
நான் வலைப்பூ வாசித்த ஆரம்ப காலத்தில், அவங்க எழுதறத வச்சு பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு ரெண்டு லிஸ்ட் இருந்திச்சு. இப்போவெல்லாம், ஆளுங்கள வச்சு இல்லாம, எழுதினது எனக்கு ஓகேவா இல்லியான்னு மட்டும் தான் பாக்கறேன். ரெண்டு லிஸ்ட் இல்லாம ஆகிடுச்சு.
டைம் பாஸூக்கு மட்டும் படிச்சா நல்லவங்களா கெட்டவங்களான்னு யோசிக்கத் தேவையிருக்காது
ஒருவருடைய ஒரு சில கருத்துக்கள் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் அது அவரது பார்வை என்றும், அவருக்கும் கருத்து உரிமை இருக்கிறது என்றும் தான் நினைத்துக் கொள்வேன். மற்றபடி அதை வைத்து அவரை எடை போடுவதில்லை. எழுத்தாளர்கள் கதையில் (கதையை அல்ல) கொலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் கொலைகாரர்களோ, கொலை (வெறி) பிடித்தவர்கள் என்றோ நினைக்கத் தேவை இல்லை என்பது என் எண்ணம். கற்பனைகளில் ஓரளவுக்கு வன்முறைகளும் சில சமயங்களில் வக்கிரங்கள் கூட அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கவும் தோன்றுகிறது
//ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை. //
முடித்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்...
இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.
மிக உண்மை. இந்த தெளிவு நம்மிடம் இருக்கும் வரை நாம் எழுதி கொண்டே இருக்கலாம். நான் உங்கள் கட்சி.
//நீங்கள் சொல்வது போல் இந்த floating population ரொம்ப குழப்பம் தான்.//
எட்டி நின்று பார்க்கும் வரை குழப்பம் இல்லை, சற்று நெருங்கும் போது அந்த குழப்பம் ஏற்படுகிறது. நன்றி உமா அவர்களே.
//டைம் பாஸூக்கு மட்டும் படிச்சா நல்லவங்களா கெட்டவங்களான்னு யோசிக்கத் தேவையிருக்காது//
சரியே, இருப்பினும் எழுத்தை தாண்டி பரிமாணம் வரும்போது சற்று சிந்திப்பது அவசியமாகிறது. நன்றி கபீஷ் அவர்களே.
//கற்பனைகளில் ஓரளவுக்கு வன்முறைகளும் சில சமயங்களில் வக்கிரங்கள் கூட அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கவும் தோன்றுகிறது//
செயல் வடிவம் பெறாதவரை பிரச்சினை இல்லை தான். நன்றி கோவியாரே. சரியாக புரிந்து வைத்திருப்பதால்தான் உங்களால் மிகவும் எளிதாக அனைவருடன் பழக முடிகிறது.
மிக்க நன்றி வசந்த் மற்றும் தமிழ் உதயம் அவர்களே.
100% நல்லவர்களும் இல்லை. 100% கெட்டவர்களும் இல்லை. எது நல்லது, எது கெட்டது என்பதும் ஆள் ஆளுக்கு மாறு படும் விஷயம்.
சரியாக சொல்லி இருக்கீங்க.
யாரும் நல்லவங்க இல்ல, யாரும் கெட்டவங்க இல்ல.... இது தான் உலகம்....
சரியாாத்தான் சொல்லியிருக்கறீங்க....
//எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.//
Absolutely.
அனுபவங்களை, மனசில் பட்டதை யதார்த்தமா சொல்லி இருக்கீங்க
http://www.virutcham.com
நல்ல கருத்துகளுக்கு நன்றி.
போலியாய் யாருக்கோ என்று எழுதாதவரை எல்லோர் கருத்தும், எழுத்தும் மதிக்கப்பட வேண்டியதே...இன்று நீங்கள் உண்மை என்று நினைக்கும் ஒரு விஷயம்/கருத்து நாளை உங்களால் வேறு விதமாய் பார்க்கப்படலாம்...ஆனால் அவ்வாறு பார்க்கப்படுதல் ஆதாயத்திற்காகவும், அவதூறுக்காகவும், யாரோ ஒருவருக்காகவும் நிகழ்ந்தால் அவ்வெழுத்து அவமதிக்கதக்கதாகவும், அருவருக்கதக்கதாகவும் காலத்தால் செய்யப்படும்......பாரதியின் கருத்துக்களை பாரதியே பலமுறை மாற்றியும், மறுதலித்தும் அவன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றமைக்கு அவனது கருத்தின் உண்மையும், நேர்மையும் அவன் எழுத்தில் வெளிப்பட்டமைதான்
Hari
www.harish-sai.blogspot.com
:) மிகவும் அற்புதமான கருத்து
Post a Comment