சுய மதிப்பீடு மெதுவாக விரிவடைந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு இளைஞன் மிகவும் நன்றாகப் படித்தவன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என ஒவ்வொரு தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரு சிறிய பிரச்சினை என்னவெனில் பேசுவது. எவரேனும் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதிலைத் தராமல் சுற்றி வளைத்து விளக்கம் சொல்வதையே பழகி இருந்தான். இப்படி இருந்த இளைஞனின் குடும்பமோ மிகவும் ஏழ்மையானது.
அந்த இளைஞனின் தந்தையும், தாயும் கூலி வேலைக்கு விவசாயம் பார்ப்பவர்கள். எப்படியாவது மகனை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பும் கனவும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. அவர்களின் கனவினை நிறைவேற்றும் பொருட்டு அந்த இளைஞனும் நன்றாகவே படித்து கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு அடைந்தான். அவனது குடும்பச் சூழல் காரணமாக அவனால் மருத்துவருக்கோ, பொறியியல் வல்லுநருக்கோ படிக்க இயலவில்லை.
வேலை எனத் தேடிச் சென்றபோதுதான் அவனுக்குள் இருந்த அந்த பேசும் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தது. எந்த ஒரு நிறுவனமும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மிகவும் மனமுடைந்தவனாகவே தாய் தந்தையருடன் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்தான். இவ்வளவு படிக்க வைத்தும் இப்படி விவசாய வேலை செய்கிறானே, இதை இவனை சிறுவனாக இருந்தபோதே செய்யச் சொல்லி இருக்கலாமே என பெற்றோர்கள் மனம் நொந்தனர்.
வேலைக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான், அப்போதுதான் அவனுக்கு ஒன்று புரிந்தது. தான் பேசுவதை சரி செய்ய வேண்டுமென ஒரு முறை ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ஒருவர் அவனுக்குச் சொன்னதும் எப்படி சரி செய்வது என மிகவும் முயற்சி செய்து தன்னை ஒரு தெளிவு படுத்திக் கொண்டான். தன்னில் இருக்கும் குறைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது பல வேளைகளில் எளிதாக நடப்பதில்லை, அதன் காரணமாக பிறர் ஒருவர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டும் போது உடனே உதாசீனப்படுத்தாமல் என்ன ஏதுவென சில மணித்துளிகள் செலவிட்டு சரிபார்த்துக் கொள்வதன் மூலம் எதுவும் நாம் இழந்துவிடப் போவதில்லை.
மேலும் சில நேர்முகத் தேர்வுகளுக்குப் போனான், ஆனால் அவன் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அவனுக்கு வேலை கிடைத்தபாடில்லை. வீட்டில் வறுமையின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டேதான் போனது. இப்படியாக இருந்தபோது அந்த இளைஞன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது வழியில்
ஒருநாள் ஒரு ரூபாய் தாளினைப் பார்த்தான்.
மற்றொரு நாள் ஒரு ஐநூறு ரூபாய் தாளினைக் கண்டான்.
மற்றொரு முறை இருபதாயிரம் ரூபாய் கட்டுகளைப் பார்த்தான்.
ஒவ்வொரு முறையும் அந்த பணம் தனை பார்த்தபோது அவன் செய்தது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.
இப்பொழுது சுயமதிப்பீடு என்பது எத்தனை வலிமையானது என்பது உங்களுக்கேப் புரியும். இதே சூழல் வந்தால் அப்போது எப்படி நடந்து இருப்பீர்கள் என்பதை அந்த நேரத்தில் மட்டுமே உங்களால் தீர்மானிக்க முடியும் என நீங்கள் இருந்துவிடாதீர்கள், மேலும் இது ஒரு கற்பனையான விசயம் தானே எனவும் கற்பனையாக பதிலை உருவாக்க வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு சூழல் வந்தால் என்ன செய்வீர்கள் என்று மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் அந்த பணம் தனை கண்டெடுக்கும் போதெல்லாம் எவரும் உங்களை கண்காணிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது சிந்தித்து வைத்துக் கொண்டுவிட்டு மேற்கொண்டு படியுங்கள்.
இப்படித்தான் நான் ஒரு முறையல்ல பலமுறை கடைக்காரர் தவறுதலாக பணம் தந்தபோது அவரிடம் சென்று திரும்பிக் கொடுத்துவிட்டு தவறுதலாக கொடுத்து விட்டீர்கள், கொஞ்சம் கவனமாக இருங்கள் என சொல்லியே வந்து இருக்கிறேன். இதை கேள்விபட்ட பலர் 'சரியான ஏமாளியாக' இருக்கிறாயே என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். நான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.
இதே போன்று சாலையில் பணம் இருந்தால் (இதுவரை அதிக தொகை பார்த்தது இல்லை, மிஞ்சிப் போனால் ஒரு ஒரு பென்ஸ், ஐந்து பென்ஸ் அவ்வளவுதான்) அதை எடுக்காமலேச் சென்று இருக்கிறேன், கவனக்குறைவோ, குறைந்த பணமோ என்கிற உதாசீனம் என்றெல்லாம் இல்லை. ஏன் எடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மையே. ஆனால் சுயமதிப்பீடு சொல்லித் தரும் பாடம் மிகவும் அசாத்தியமானது.
அது சரி ஒவ்வொரு முறையும் அந்த பணம்தனை பார்த்தபோது என்னதான் செய்வதாக சிந்தித்து இருந்தீர்கள்.
ஒரு ரூபாய் தாள் தானே என பையில் வைத்துக் கொள்ளவில்லை அந்த இளைஞன். பணத்தை எடுத்தான் நேராக அவனுக்குத் தெரிந்த மிகவும் நல்ல திறமையான ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த பணத்தைச் சேர்த்தான். அதே போலவே ஐநூறு ரூபாயையும், இருபதாயிரம் ரூபாயையும் கொண்டு போய் அதே தொண்டு நிறுவனத்திடம் கொடுத்தான்.
இங்கே அவன் அந்த பணத்தை காவல் நிலையத்தாரிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஒருவிதத்தில் முறை என்றிருந்தாலும், அந்த பணமானது காவல் அதிகாரிகளால் பங்கு போடப்பட்டுவிடும் எனும் ஒருவித அச்ச உணர்வு அவனுக்கு இருந்திருக்கலாம். மேலும் பணம் தொலைத்தவர் காவல் அதிகாரிகளிடம் புகார் தந்தாலும் அந்த பணம் காவல் அதிகாரிகளிடம் கிடைத்தாலும் அவர்கள் உரிய முறையில் அந்த பணத்தைச் சேர்ப்பார்களா என்பது தெரியாது எனவும் அவன் நினைத்து இருக்கலாம். எனவே அவன் சமயோசிதமாக தொண்டு நிறுவனத்திடம் சேர்த்தது சரியே என்கிறார்கள் சுயமதிப்பீடு பற்றி சொல்பவர்கள். இது சரிதானா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், மேலும் காவல் அதிகாரிகளைத் தவறாக சித்தரிக்க வேண்டுமெனும் எண்ணம் இந்த எழுத்துக்கும் இல்லை என்பதையும் குறித்துக் கொள்கிறேன்.
இதே போன்ற ஒரு கேள்வி அவனின் நேர்முகத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்டபோது தான் செய்ததை சொன்னதும் அவனது நேர்மையை பாராட்டி அவனுக்கு வேலையும் தரப்பட்டது. வேலையில் நேர்மை மிக மிக அவசியம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோமா?
8 comments:
நான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.
......... very nice! :-)
அருமையான சிந்தனை; அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது..
நல்ல கட்டுரை ராதாக்கிருஷ்ணன் சார்...
Very nice..
வெ. இரா! அவ்வாறு திரும்பக் கொண்டு போயி தவறுதலாக கொடுத்தவரிடம் சேர்க்கும் பொழுது அவருக்கு ஏற்படும் நல்லெண்ணத்தை கொண்டு போய் சேர்ப்பவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே வின் வின் சூழ்நிலைதான். பெற்றுக் கொள்பவர் - பின்பொரு நாளில் தன்னையே சுய மதிப்பீடு செய்து கொள்வதற்கு உங்களின் செயலும் ஒரு வாய்ப்பை அமைத்திருக்கக் கூடும். இரண்டாவது, உங்கள் மனத்தினுள் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணம் - ரொம்ப முக்கியம். பதிவு - அருமை!
very nice.....................
good...essay.........
Yes. I too agree with Chitra....
nice think..........
அனைவருக்கும் மிக்க நன்றி. ஆம் தெகா நீங்கள் சொல்வது உண்மைதான்.
Post a Comment