Thursday, 25 February 2010

அடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்

//சமுதாயம் என்பது என்ன? யார் அந்த நாலு பேர்? உறவினரா, உற்றாரா, ஊரில் பழக்கமானவர்களா, உழைக்கும் தளத்தில் உடன் இருப்பவர்களா? காணாதும் வாழ்வில் அறியாதும் சுற்றி இருக்கும் அநாமதேயங்களா? யார்தான் அந்த முக்கியமான நாலு பேர்? அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?//  படிக்க

தனிப்பட்ட பதிவாகவே எழுதிவிட விழைகின்றேன், இருப்பினும் இது குறித்து ஒரு சில வரிகளில் சொல்லிவிடலாம் என்ற நோக்கத்துடனே இங்கேயே எழுதுகிறேன் என்றுதான் எழுத ஆரம்பித்தேன், பதில் நீண்டு கொண்டே சென்றதால் ஒரு தனிப்பதிவாகவே இங்கே வெளியிடுகிறேன். அவரது மற்ற இரு கேள்விகளுக்கும் அவரது தளத்திலேயே பதிவிட்டுவிட்டேன். அவை வெளிவந்ததும் இங்கே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் இணைத்துவிடுகிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய கேள்விகள்.

1. சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு. நமது செயல்பாடுகள் மட்டுமே இந்த சமுதாய கூட்டமைப்பில் ஒரு அங்கத்தினராக நம்மை கொண்டு சேர்க்கும். நமது வேலை உண்டு, நமக்கு என்ன செய்ய வேண்டும், நமது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என சமுதாய சூழலில் சிக்காமல் செயலாற்றும்போது சமுதாயத்தில் நாம் சிக்கிக்கொள்வதில்லை. அவரவர் வேலை அவரவருக்கு என்கிற கோட்பாடு நமக்கு இருக்கும் பட்சத்தில் சமுதாயத்தில் நம்மால் ஒரு பெரும் தாக்கம் கொண்டு வர இயலாது. மணிக்கணக்கில் நின்றாவது நமக்கு வேண்டுமென்பதை சாதித்துக்கொள்வோம், இதுகுறித்து ஆதங்கப்படுவதுடன் நிறுத்திக்கொள்வோம். போராட்டம் எல்லாம் செய்ய மாட்டோம் எனில் அங்கே நமது சமுதாய பங்களிப்பு குறைந்துவிடுகிறது.

2. அந்த நான்கு பேர்கள், தாய், தந்தை, இறைவன், இறைவனற்ற, அதாவது மனசாட்சியாகிய நமது மன எண்ணங்கள், மற்றும் நல்லாசிரியர், அதாவது நமக்கு நல்வழிகளென பகுத்தறிந்து சொல்பவர்கள்.

இதில் முதல் இருவரும் அன்பை முன்னிறுத்தி அவர்கள் மனதில் எது சரியென நமக்குப்படுமோ அதைச் சொல்லக்கூடியவர்கள். நமது சரி என்பதெல்லாம் பலரிடம் இரண்டாம் பட்சமே, மேலும் அன்பின் காரணத்தால் உனக்கு எது சரியென எது படுதோ அதைச் செய் என நாம் நன்றாக இருக்க வேண்டும் எனும் உயரிய நோக்கம் மட்டுமே உடையவர்கள்.

மூன்றாவது நாம், இங்கேதான் ஒரு தனிமனிதரின் சுயசிந்தனை, சுயசெயல்பாடு மிகவும் அவசியமாகிறது. எந்த சூழலில் எப்படி செயலாற்றவேண்டும் என்கிற பக்குவமும், செயல்பாடும் தீர ஆராய்ந்து வரவேண்டும், அப்படி வரும்போது தவறு களையப்பட்டு விடும், இது தேவையா, அது தேவையா? என்கிற ஒரு அலசல் பல விசயங்களில் தேவையின்றி பேசுவதை, செயல்படுவதை குறைத்துவிடும்.

கடைசியாக ஆம், நல்லாசிரியர்கள், நாம் நன்றாக கற்றுக்கொள்ளும் மாணவனாகவே இங்கே செயல்பட வேண்டும். ஒருவர் சொல்கிறார் என்பதை நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும். நமக்கென சிலர் இருப்பார்கள், ஆங்கிலத்தில் 'வெல் விஷ்ஷர்ஸ்' என சொல்வார்கள். நமக்கு நன்மை தீமை என நேரும்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து தூக்கி விடுவார்கள், திருமணமானவர்களுக்கு இதில் மனைவியோ கணவனோ பெரும் பங்கு வகிக்கக்கூடியவர்களாக இருப்பது மிகவும் அவசியமாகும். நண்பர்கள், அநாமதேயங்கள், உற்றார், உறவினர்களும் இதில் சேர்த்தி எனில் வாழ்க்கை சகல செளகரியங்கள் கொண்டதாகும்.

3. வாழ்க்கைச் சூழலானது மிகவும் அசெளகரியங்களையும், செளகரியங்களையும் கொண்டது. பிறர் சொல்கிறார்களே என நாம் நடந்து கொள்வது என்பது அந்த சூழலில் பிறர் மனம் வருந்தக்கூடாதே எனும் எண்ணம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

 நம்மை நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோமெனில் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டு வாழும் ஒரு சமூக அங்கத்தினராகவே நாம் இருக்கிறோம். நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாவதில்லை, அப்பொழுது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிடுவதை தவிர்க்க இயலாது.

இப்பொழுது தாய், தந்தை, நமது மனசாட்சி, நல்லாசிரியர்கள் என அவர்கள் சொல்வது எல்லாமே ஒன்றாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் நடந்து கொள்வதில் இருக்காது, அதே வேளையில் ஒன்றுக்கொன்று முரணாகப் போகும்போது வேறுபாடுகள் முளைத்து குழப்பம் விளைகின்றது, அந்த குழப்பத்திற்கான தீர்வு காணும்போது ஒரு தெளிந்த மனமே அதாவது மனசாட்சி, மனதில் எழும் எண்ணங்கள், ஒரு முடிவாக அமைந்து விடுகிறது.

தவறு எனத் தெரிந்தும், சரி என நமது மனம் கட்டுப்பட்டு விடுகிறது. பிற பெண்களுடன் தகாத உறவு, ஆண்களுடன் தகாத உறவு, சமூக ஒழுக்கீனங்கள், திருடுதல், கொள்ளையடித்தல், ஏமாற்றிப் பிழைத்தல், மக்களை புறக்கணிக்கும் அரசு, மக்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் அரசு என்பன போன்றவைகள் எல்லாம் அவரவர் மனதில் அவையெல்லாம் சரியெனத் தோன்றுவதும் மேலும் ஒரு தவறுக்கு அடிமைப்படும் அந்த எண்ணங்களும் ஆகும். எனவே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும், இருப்பினும் பல சங்கடங்கள் இருக்கின்றன. நால்வர் சொல்வதை மட்டுமேக் கேட்டு நடப்பதைக் காட்டிலும் எது நன்மை பயக்கும் என செயல்பாடுகளை வாழும் காலங்களில் மாற்றியமைத்தல் மிகவும் சிறப்பு.

எவருமே தவறாகப் போக வேண்டுமென முடிவு எடுப்பதில்லை. ஒரு விசயத்தில் எடுக்கப்படும் முடிவானது, அல்லது நாம் நடந்து கொள்ளும் விதமானது சரியாகவேப் போக வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. பொதுவாகப் பார்த்தால் அடுத்தவங்க பார்க்கிறாங்க என நம்மை நாம் வழிநடத்தினாலும், பல நேரங்களில் நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச் செய்து விடுகிறோம், அது தவறாகவே இருந்தாலும் சரி, ஒழுக்கம் கெட்ட செயலாக இருந்தாலும் சரி.

நன்றி மருத்துவர் அவர்களே.

4 comments:

Dr.Rudhran said...

thank you for thinking about this

தமிழ் உதயம் said...

நமது அடிப்படை சரியாக இருப்பின், நமது துவக்கம் சரியான முறையில் பெற்றவர்களால் அமைக்கப்பட்டு இருப்பின், நாம் செய்யும் எந்த காரியமும் தவறிப் போக வாய்ப்பில்லை.

Chitra said...

/////பொதுவாகப் பார்த்தால் அடுத்தவங்க பார்க்கிறாங்க என நம்மை நாம் வழிநடத்தினாலும், பல நேரங்களில் நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச் செய்து விடுகிறோம், அது தவறாகவே இருந்தாலும் சரி, ஒழுக்கம் கெட்ட செயலாக இருந்தாலும் சரி./////


.........யோசிக்க வேண்டிய விஷயம்தான். சிலர் சரியென்று தோன்றுவதால் மட்டும் எல்லாவற்றையும் செய்வதில்லை. அந்த நேர உணர்வுகளின் வெளிப்பாடாகவும் ஏதாவது செய்து விடுகிறார்கள் - கோபம், வருத்தம், ஏக்கம், .... இப்படி.....

..... good write-up.

Radhakrishnan said...

நன்றி டாக்டர், அருமை தமிழ் உதயம், மிகச் சரியாகச் சொன்னீங்க சித்ரா.