Tuesday, 16 February 2010

காதல் தினம் பேட்டி

1,
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பெனும் உறுதி நிலையில் பெண்ணிருந்தால் பெண்ணைவிட மேலானது ஏது..?

கூடுதலான இடங்களிலும், சமூகத்திலும் கற்பு என்பது பெண்ணுக்குரிய ஒன்றாகவே காட்டப் பட்டு வருகின்றது, ஆணிற்கும் கற்பொழுக்கம் அவசியம் என்பதனை எவ்வாறு வலியுறுத்தலாம்...?
இதையெல்லாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது, கற்காலத்திலா இருக்கிறோம்! பொற்காலம் கண்டிட விரைந்து கொண்டிருக்கையில் கற்பு பற்றிய எண்ணம் அவரவர் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். ஒரு விசயத்தைச் செய்யும் முன்னர், இது எவ்விதத்தில் சரியாக இருக்கும் என சிந்திக்கும் மனம் நிச்சயம் தவறிப் போகாது. தவறு செய்யும்போது இது தவறு ஏன் எவருக்குமேத் தோன்றுவதில்லை, செய்துவிட்டு அடடா தவறு செய்துவிட்டோம் என வருந்துவதில் ஒரு லாபமுமில்லை.

மனதின் விகாரங்கள் எல்லாம் அவரவர் உணர்ந்து அழித்துக்கொள்ள வேண்டியவை. கற்புடன் இருக்க வேண்டும் என சொன்னால் எள்ளி நகையாடும் கூட்டமே அதிகம், ஏனெனில் ஆண்களில் எவரும் ராமன் இல்லை எனும் சொல்வழக்கு கடுமையாகவே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பத்தினிப் பெண்கள் என பெரிய பட்டம் எல்லாம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் உலகில் எவர்தான் தவறு செய்யவில்லை என்கிற கண்ணோட்டம் அதிகமாகவே இருக்கிறது. எந்த ஒரு பெண்ணும் ஆணும் அவரவர் சம்மதத்துடன் உடல் உறவு வைத்துக்கொண்டால் அது தவறில்லை என்றே சமூகம் அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. விபச்சாரம் செய்வது தவறில்லை, அந்த விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் தவறில்லை என சொல்லிவிட்டு கற்பு பற்றி பேசுவது எல்லாம் ஒரு சாரருக்கேச் சரியாக வரும். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ்க்கை என தீர்மானம் செய்வதெல்லாம் அவரவர் தீர்மானித்து வாழ்வது. எனக்கு வலிக்கும்போது மட்டுமே அழுவேன் என வாழும் சமூகம் இது.

எத்தனை கதைகள் தான் எழுதி வைப்பது! எத்தனை மனிதர்களின் வாழ்க்கைதான் உதாரணத்துக்கு இருப்பது. கற்பு நெறி தவறாமல் வாழ்வது அனைத்து உயிர்களின் மொத்தக் கடமை, ஆனால் கடமை தவறுவதில் நமக்கு ஈடு இணை ஏதுமில்லை. எனவே ஆண்களுக்கு கற்பு அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை, அவரவர் உணர்ந்து செயல்பட்டால் அதுவே கோடி புண்ணியம் ஆகும்.


2,காதல், காமம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்கின்றார்கள், இது பற்றிய தங்கள் விளக்கம் என்னவாக இருக்கும்..?


இது குறித்து புதிய தொடர் எழுதி வருகிறேன், அது நமது மன்றத்தில் இலக்கியப் பகுதியில் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் காதல் வேறு; காமம் வேறு. காமத்தை காதல் கொச்சைப்படுத்தாது, காதலை காமம் கொச்சைப்படுத்தும். மேற்கொண்டு விபரங்கள் தெரிய வேண்டுமெனில் இலக்கியப் பகுதியில் ஒருமுறை வலம் வாருங்கள்.


3, காதல் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்கும் சொல்தானா..? அல்லது காதல் என்றால் என்ன என்பதற்கு சிறு விளக்கம் தரமுடியுமா..?

காதல் புரிந்து கொள்ளும். இதுதான் நான் தரும் விளக்கம். காதலுக்காக உயிர்த் தியாகம், காதல் தியாகம் என்றெல்லாம் சொன்னபோது, அடடா தவறே இல்லாத காதலைக் கூட, தவறாகப் பார்க்கிறதே சமூகம், தவறான விசயத்தை விதைக்கிறார்களே என்கிற எண்ணமே காதல் புரிந்து கொள்ளும் என எண்ண வைத்தது. காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இது அன்பை குறித்தச் சொல் அல்ல. புரிந்துணர்வினை குறித்தச் சொல். காதல் காலமில்லாதபோதும் இருந்தது, காலம் வந்தபோதும் தொடர்கிறது.



4,ஆணுக்குப் பெண் சமம் (நீ பாதி நான் பாதி என்பது போல்) இது எந்தளவு சாத்தியமாக இருக்கின்றது ...?

ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்! எதற்கெடுத்தாலும் ஒரு அளவுகோல். இந்த வாழ்க்கையை ஏன் அளந்து வைத்துக் கொண்டு வாழப் பார்க்கிறார்கள். ஆண் இனத்தை அடிமைப்படுத்தும் பெண் இனம், பெண் இனத்தை அடிமைப்படுத்தும் ஆண் இனம் என எவர் கற்றுக்கொடுத்தார்கள். ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமில்லை, வீணாக சங்கங்கள் அமைத்து வேடிக்கை மனிதர்களாக வாழ்வதை எப்போது தவிர்க்கப் போகிறார்கள். நான் எவருக்கும் சமம் இல்லை. நான் எவருக்கும் சமமாகவும் இருக்கவும் முடியாது. என்னளவில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவரவர் உரிமைகளை அவரவர் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஒரு தாய் தனது அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாசத்தை ஊட்டி வளர்க்க இயலாது. ஆனால் வார்த்தை நயங்களுக்காக ஒரு தாய் அனைவரையும் ஒன்றாகவேப் பாவிக்கிறார் என சொல்லிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் சமமாக நடத்த முடியாது, ஆனால் சமமாகவே நடத்துகிறார் என மேடை போட்டு பேசலாம். வாழ்க்கையின் நியாய தர்மங்களை, நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்போதுதான் நமக்கு வரப்போகிறதோ, அது எனக்கேத் தெரியாது.

உள்ளிருக்கும் மனம் ஒன்று, வெளி நடத்தையில் ஆடும் மனம் ஒன்று என வாழும் மனிதர்கள் உள்ள உலகமிது. இதில் எல்லோரும் சமம், ஆணும் பெண்ணும் சமம், நீயும் நானும் சமம் என பேதம் இல்லாமல் வார்த்தைக்காகச் சொல்லி சமாதனமாகிப் போவோர்கள் அதிகமுண்டு, ஆனால் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருப்போர்களை எவருமே உணர்ந்து கொள்ள இயலாது, சமமாக பாவிக்கவும் முடியாது. ஒருங்கிணைந்த சமூகம் சாத்தியமில்லை என்பதல்ல என் மொழி, சாத்தியத்திலும் சத்தியமில்லை என்கிறது என் மொழி.


5,உங்கள் காதல் அனுபவத்தில், மறக்க முடியாத சம்பவம் ஏதும் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாமா..? (பெற்றோர் நிட்சயித்த திருமணம் எனில் திருமணத்தின் பின்னான அனுபவம் ஒன்று)

:) முதன் முதலில் தொலைபேசியிலும், கடிதத்தின் மூலமும் பழகிக்கொண்ட காதலியை நேரில் பார்த்த சம்பவமே மறக்க முடியாத சம்பவம் எனச் சொல்லும்போது அடுத்தடுத்த நிகழ்வுகள் என கிட்டத்தட்ட 15 வருட வாழ்க்கையும் மறக்க முடியாத சம்பவங்களாகவே ஞாபகத்துக்கு வருகிறது.

7 comments:

Thekkikattan|தெகா said...

// காமத்தை காதல் கொச்சைப்படுத்தாது, காதலை காமம் கொச்சைப்படுத்தும்.//

இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்கே கொடுத்த பேட்டி இது?

Chitra said...

/////உள்ளிருக்கும் மனம் ஒன்று, வெளி நடத்தையில் ஆடும் மனம் ஒன்று என வாழும் மனிதர்கள் உள்ள உலகமிது. இதில் எல்லோரும் சமம், ஆணும் பெண்ணும் சமம், நீயும் நானும் சமம் என பேதம் இல்லாமல் வார்த்தைக்காகச் சொல்லி சமாதனமாகிப் போவோர்கள் அதிகமுண்டு, ஆனால் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருப்போர்களை எவருமே உணர்ந்து கொள்ள இயலாது, சமமாக பாவிக்கவும் முடியாது.///////

.............. உங்கள் கருத்துக்களில் நிஜங்களின் நிறம் உள்ளது. பேட்டி முழுவதும், உண்மை நிலை. நல்ல பேட்டி.

புலவன் புலிகேசி said...

ஒரு ந்ல்ல தேவையான பேட்டி..உண்மைதான் காமம் என்பது ஒரு பொழுதும் கொச்சைப்படுத்தப்பட்டதில்லை..காதலில் கலக்கும் போது கூட..ஆனால் அந்தக் காமம் காதலை விஞ்சும் பொழுது அங்கு காதல் மரணிக்கிறது.

Unknown said...

ஆமா.. கற்ப்புனா என்ன ???

Unknown said...

// காமத்தை காதல் கொச்சைப்படுத்தாது, காதலை காமம் கொச்சைப்படுத்தும் //

படிக்க நன்றாகவே உள்ளது.. இதில் கொச்சை என்று எதை சொல்லுகிறீர்கள் விளக்கம் தேவை

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா, இந்த எழுத்துப் பேட்டி முத்தமிழ்மன்றத்தில் கொடுக்கப்பட்டது.

மிக்க நன்றி சித்ரா.

மிக்க நன்றி புலிகேசி.

மிக்க நன்றி பேநா மூடி, உங்கள் கேள்விகள் குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

காதலைப் பற்றிய இப்பேட்டி மிக நன்று.