சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (நன்றி )
1997 ல், முதன் முதலில் திருப்பாவை மனப்பாடம் செய்ய ஆரம்பித்த காலம் அது. திருப்பாவையை மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது எனத் தெரியாது. முப்பது பாடல்களையும் மனனத்தில் வைத்திருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல பத்தியும், சூடமும் ஏற்றி வைத்து சில நிமிடங்களாவது இறை வணக்கம் செலுத்தாமல் கல்லூரிக்கு சொல்லித் தர செல்வதில்லை.
இந்த பாடலை இன்று பாடினாலோ, கேட்டாலோ கூட கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். பல பாடல்கள் மறந்து போயின. ஆனால் இன்னும் மனதில் ஒரு ஆசை இருக்கிறது, எப்படியாவது என்னை மீண்டும் தேடி எடுத்து விடவேண்டும் என.
'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்' எனச் சொல்லும்போதே வாழ்க்கை இன்ன பிற ஆசைகளுக்கு அடிமையாகிவிடுமோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. அப்படி அடிமையாவதன் பொருட்டு கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் கோலோச்சத் தொடங்கிவிடுகின்றன. சாந்த நிலையை அடைய வேண்டிய மனம் தள்ளாடி திரிகிறது. காமம் அத்தனை மோசமானதா? இறைவன் மேல் வைக்கப்படும் காமம் மட்டும் என்ன தனிச் சிறப்பு உடையதா?
காமம் ஒரு உணர்வு. அது பக்குவப்படுத்தப்படாத வரைக்கும் அந்த காமத்தினால் சீரழியும் மனிதர்களை எதுவும் செய்ய இயலாது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் காதலுக்கு பெருமை சேர்க்கும், ஒரு போதும் சிறுமை சேர்க்காது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கைக்கே பெருமை சேர்க்கும். பேரின்பத் தழுவல்களில் இறைவனை பற்றி சொல்லும் போது கூட இப்படித்தான் எழுத முடிகிறது.
உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்
இதே வரிகளை வேறு கண்ணோட்டத்தில் நினைத்துப் பார்க்கிறேன். உலகமெல்லாம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளத்தில் உணர்வுகள் கிளறப்படுகின்றன. இப்போது உணர்வுகளினை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பது என்பது அவரவர் மன வலிமையை பொறுத்தே அமைந்து விடுகிறது. தவறில்லை என நினைத்து செயல்புரிவோர்கள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. 'இதிலென்ன இருக்கு' என விளையாடும் மனிதர்களை பற்றி எதுவுமே எழுதவும் முடியாது.
இந்த காமம் பற்றி மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் எழுதியதைப் படித்தபோது மனதில் பெரும் கலக்கம் ஏற்படத்தான் செய்தது. மனைவியைத் துன்புறுத்தும் கணவர்களில் ஒருவராகத்தான் காந்தி எனது கண்ணுக்கு தெரிந்தார். மகாத்மா எனப் போற்றபடுவதால் அவர் தவறே இழைத்து இருக்கமாட்டார் என்றெல்லாம் நான் நினைத்து இருக்கவில்லை ஆனால் அவரது வாழ்க்கை முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. சக உயிரை அடிமைப்படுத்தும் எண்ணமும், மிரட்டி உருட்டி வைக்கும் கொடுமையும் இன்றும் உலக அளவில் பெரும்பாலும் நடந்து வருவது கண்டு மனதில் ஏற்பட்ட கலக்கமே அது. இந்த காமம் எந்த வகையில் சேர்க்கப்படும்?
மனித இனத்தில் இனப்பெருக்கம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்தால் உருவாவது என்பதுதான் அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறாதவரைக்கும் இருந்த நிலை. இன்றைய சூழல் எத்தனையோ மாறிவிட்டது. ஆண் மற்றொரு ஆண் மீது கொள்ளும் காமம், பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் காமம் என சமுதாயம் எந்த நிலையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட காமமும் சரிதான் என ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாகத்தானா மாறிவிடப் போகிறது?
'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
7 comments:
//பக்குவப்படுத்தப்பட்ட காமம் காதலுக்கு பெருமை சேர்க்கும், ஒரு போதும் சிறுமை சேர்க்காது//
ரொம்பச் சரி
Present sir
அன்பின் வெ.இரா
தொடர்ந்து படித்து விட்டு கருத்து கூறுகிறேன் . அவசரப்பட வில்லை.
நல்வாழ்த்துகள் - தொடர்க
மிக்க நன்றி உழவன், மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா, மிக்க நன்றி சீனா ஐயா.
நன்று. இன்னமும் எழுதுங்கள். தொடர்ந்து படித்து நிறைய தெரிந்து கொள்கின்றேன். நன்றி.
:) படிக்க சுவாரசியமாய் இருக்கிறது உங்கள் எழுத்து.
மிக்க நன்றி ஐயா மற்றும் வாசுதேவன்.
Post a Comment