பயணம் 6
துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தபோது வெயில் கொஞ்சம் வாட்டி எடுக்க ஆரம்பித்தது. இருபத்தி நான்கு வருடங்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமி. கடுமையான வெயில் எனப் பார்க்காமல் களத்து மேட்டுகளிலும், ஒவ்வொரு ஊரின் நிலங்களைத் தரிசு நிலங்களாக்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருந்த பூமி. 'வேகாத வெயிலுல இப்படியா விளையாடி கருத்துப் போவ' என அன்பினால் திட்டு வாங்கியும் சலிப்பு ஏதுமில்லாமல் சுற்றித் திரிந்த பூமி. வெயிலுக்கு உகந்த அம்மன் என மாரி வேண்டுமென மாரியம்மனிடம் மழைக்கஞ்சி கேட்டு திரிந்த பூமி. அம்மனை மனம் குளிரச் செய்ய ஐந்து நாட்கள் திருவிழா என அக்கினிச் சட்டியும், பூக்குழியும் கண்டு வணங்கி இருந்த பூமி. உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டு ஊரில் அக்கினிச் சட்டி ஏந்தி வரும் மனிதரைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்திருந்த பூமி. பழக்கப்பட்ட வெயில் ஒவ்வொரு முறையும் ஊரில் கால் வைக்கும்போது ஏதோ குளிர்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவன் போல நினைத்துக் கொண்டு அப்பப்பா வெயில்... என்னா வெயில்... என உடலும் மனமும் அலட்டிக்கொள்ளும்போதெல்லாம் கண்களில் நீர் பொங்கத்தான் செய்கிறது. இப்போதெல்லாம் உடல் உள்ளூர் வெயிலுக்குத் துவண்டு போகிறது.
சென்னையில் இறங்கியதும் இலண்டனில் திட்டமிட்டபடி அன்றே திருவண்ணாமலை சென்றோம். எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை சென்ற இரமணரின் பூர்விக இடமான திருச்சுழியைச் சென்ற முறை இந்தியா சென்றபோது பார்த்தேன். இம்முறை திருவண்ணாமலை செல்லும் ஆர்வம் சகோதரி ஒருவரின் வலைப்பூவினைப் படித்ததும் மேலும் அதிகமானது, இந்தியா செல்ல முடிவெடுத்த பொழுதே திருவண்ணாமலை பற்றி முடிவு செய்தோம். அதன்படியே சென்றோம். அடியார்க்கெல்லாம் அடியார் கதை எழுதிக் கொண்டிருக்க உன் ஆலயம் பார்க்க என்னை வரச் செய்தாயோ என எண்ண வைத்தது. சிறப்பு தரிசனம் கிடைத்தது. ''பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'' என அவனிடம் அருள் பிச்சைக் கேட்டு வைக்க ஆலயத்தின் வெளியே பொருள் பிச்சை கேட்டு பலர். மனம் கனத்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ?
ஆசை துறந்த, ஆடையும் துறந்த இரமணரின் ஆசிரமத்தில் பணம் வேண்டாம் எனச் சொன்ன இளைஞனைக் கண்டு மனம் மெச்சிய வேளையில் ஆடை வேண்டும் எனக் கேட்டு பின்னர் பணமும் அதே இளைஞன் கேட்டபோது சேவையுள்ளம் என்னுள் தேவையற்றுக் கிடந்தது. சென்னையில் இறங்கிய மறுகணமே ஏதுமே செய்யாமல் பணம் கேட்ட இருவரையும் இந்த இளைஞரையும் பார்த்த எனது மகன் என்னிடம் கேட்டான். ''அவர்கள் என்ன வேலை செய்தார்கள்? பணம் கேட்டு நின்றார்கள்?'' என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இருப்பவர் இல்லாதவருக்குத் தரவேண்டும் என நான் சொன்னால் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேள்வி வந்தாலும் வரும், எனவே அமைதியானேன். ''அவர்கள் ஏதாவது வேலை செய்ய வேண்டும், பணம் வரும்'' என தானாகவே பதில் சொன்னான். உழைத்தால் தான் ஊதியம் என அறிந்து வைத்திருக்கும் இச்சின்னஞ்சிறு சிறுவனே, சில வருடங்கள் முன்னர் ஒருமுறை உதவி என வீட்டின் வாசலில் வந்து நின்றவருக்கு ஓடிச்சென்று தனது சேமிப்பில் இருந்து ஒரு நாணயம் எடுத்துக் கொடுத்து இருக்கிறான். அன்றைய தின செய்தி கேட்டு கண்கள் கலங்கியது, இன்றைய தின சேதி கேட்டு மனம் விழித்தது. மிகவும் வித்தியாமான அனுபவத்தை அந்த திருவண்ணாமலைத் தந்ததோ இல்லையோ எனது மகன் தந்து கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்து சேர இரவு பத்து மணிக்கும் மேலாகியது. மறுநாள் காலை தம்பி முரளியையும், சுதாகர் அண்ணனையும் தொடர்பு கொண்டேன். சுதாகர் அண்ணனை அன்று சந்திக்கலாம் என இருந்தேன் ஆனால் சொந்த விசயங்களால் சந்திக்கமுடியாமல் போகும் என கொஞ்சமும் நினைக்கவில்லை. இரவு பத்து மணியானாலும் பார்க்கலாம் என மனம் நினைத்தது.
முகப்பேர் சென்று அங்கிருந்து கிஷ்கிந்தாவில் விளையாடிவிட்டு சென்னை கடற்கரையில் சிறிது நேரம் கழிக்க மொத்த நாளும் கழிந்திருந்தது. அங்கிருந்து சுதாகர் அண்ணனின் வீட்டுக்குச் செல்லலாம் என நினைக்க ஐசிஎப் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட நான்கு மணிக்கெல்லாம் அழைக்க வேண்டிய சுதாகர் அண்ணாவை அழைக்கவே வழியின்றிப் போனது. ஒன்பது மணிக்கு மேல் சுதாகர் அண்ணன் சிரமப்பட்டு எங்கள் எண்ணைக் கண்டுபிடித்துப் பேச இனிமேல் சந்திக்க காலதாமதமாகிவிடும் என அவர் சொல்ல, 16ம் தேதி நிச்சயம் சந்திக்கலாம் என சூழ்நிலை புரிந்து கொண்டு அவர் சொன்னபோது அந்த நாளை மனதில் அச்சடித்து வைத்தேன். எப்படியாவது இந்த அன்புக்குரிய அண்ணனை சந்தித்துவிடுவது என்று மனதில் எண்ணிக்கொண்டேன்.
எனக்கே மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது, எப்படி சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் யாரையுமே சந்திக்காமல் செல்கிறோம் என. இதற்கான ஒரு வித்தியாசமான விசயத்தைப் பின்னர் எழுதுகிறேன். அந்த ஒரு விசயம்தான் என் வாழ்வில் என்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது என்பதையும் அறிந்தேன், ஆனால் அதற்காக எந்த ஒரு வருத்தமும் இல்லை.
காலை ஏழு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பியபோது கிரி அவர்களைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து இருந்தேன். அவருடன் அன்று தொடர்பு கொள்ள இயலவில்லை. வெயில் அதிகமாக இருந்தது. பலவருடங்கள் பின்னர் ஊரில் அதே ஐந்தாம் திருவிழா என மாரியம்மன் திருவிழா கொண்டாட்டத்தை அன்று இரவு கண்டது வித்தியாசமாக இருந்தது. முதல் இரண்டுநாள் கடும்வெயிலாக இருக்க அடுத்த இரண்டு நாள் நல்ல மழை பெய்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் மழை பெய்து மனம் மகிழச் செய்தது.
தினா தொடர்பு கொண்டார், நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக பேசினார். அவரது மன உறுதி கண்டு அதிசயித்தேன். அவரது உடல்நலம் முழுதும் குணமாகிட இறைவனை வேண்டுகிறேன். சுதாகர் அண்ணனும் அவ்வப்போது பேசினார். கிரி அவர்களுடன் 'நான் கடவுள்' படம் உட்பட பல விசயங்கள் அலசினோம், இந்தமுறை கிரி அவர்களை சந்திக்க வாய்ப்பே ஏற்படுத்திக்கொள்ளாமல் போனேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முதல் நாளன்று அவரைத் தொடர்பு கொண்டு சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தலாம் என இருக்க அவரது செல்பேசி தனித்து விடப்பட்டுப் போக சந்திக்க வாய்ப்பின்றி போனது. இது ஒரு விசயத்தை உணர்த்தியது. நான் மேற்கொண்ட திருச்சி, நாமக்கல், சேலம் ஏற்காடு மற்றும் கோயம்புத்தூர் பயணம்.
ஒரு உறவினர் வீடு எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது. நடந்தால் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கும். ஊர் வந்த அன்றே வீட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்கள், நாளை வருகிறேன் என சொல்லி இருந்தேன். ஊருக்குக் கிளம்புவரை அவர்கள் வீட்டிற்குச் செல்லவே இல்லை. கிளம்பும் முதல் நாள் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன் அதுவும் இரவு ஒன்பது மணிக்கு மேல். அப்பொழுது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தது மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. ஒன்றைச் செய்ய நினைத்தால் அதை உடனடியாகச் செய்ய வேண்டும், மேலும் ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை எனும் விசயம் மனதில் தோன்றியது. இப்படி மற்றவர்களைத் திருப்திபடுத்த வேண்டும் எனும் எண்ணம் இல்லாமல் போகும் காரணத்தினாலேயே நான் கொஞ்சம் தனிமையாகிறேன் என கருதுகிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணம் காட்டியே நமது வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்வதற்கு நிர்பந்தப்படுத்திக் கொள்கிறோம் ஏதேனும் ஒருவகையில்.
''நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் தவறாக நினைக்கமாட்டோம்'' என உறவினர் சொல்ல ''நீங்கள் தவறாக நினைத்துவிடுவீர்களோ என நான் வரவில்லை, இந்த நேரமும் என்னால் ஒதுக்க முடியாவிட்டால் நான் வந்திருக்கவும் மாட்டேன், இப்படிச் சொல்வதால் பிறர் என்னை வேறு விதமாக நினைக்கக் கூடும், அதற்காக நான் சொல்லாவிட்டாலும் நினைப்பது மாறாதுதானே'' என்றேன். புரிந்து கொள்ளும் நபர்களிடையேப் பிரச்சினை இல்லை, மேலும் முக்கியத்துவம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என கருத்து பரிமாறிக்கொண்டபோது பல விசயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் முனைப்பாக இல்லாது போயிருக்கிறேன் என எண்ணம் மேலிட்டது.
ஏழாம் தேதி செல்ல இருந்த திருச்சிப் பயணம் பன்னிரண்டாம் தேதி மாற்றம் ஆனது. கோயம்புத்தூரில் இருக்கும் எனது சொந்த சகோதரியை எப்படியாவது சென்றுப் பார்த்துவிட்டு வரவேண்டும் எனும் தீராத ஆர்வமே இந்தப் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது. இந்த பயணத்தின் காரணமாக தினாவையும், முரளியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வேணு ஐயாவை சந்திக்க வாய்ப்பின்றி போனது. அந்தப் பயணம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வித்தியாசமான பயணமாக அமைந்தது.
3 comments:
'வேகாத வெயிலுல இப்படியா விளையாடி கருத்துப் போவ' என அன்பினால் திட்டு வாங்கியும் சலிப்பு ஏதுமில்லாமல் சுற்றித் திரிந்த பூமி.
.....
''நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் தவறாக நினைக்கமாட்டோம்'' என உறவினர் சொல்ல ''நீங்கள் தவறாக நினைத்துவிடுவீர்களோ என நான் வரவில்லை, இந்த நேரமும் என்னால் ஒதுக்க முடியாவிட்டால் நான் வந்திருக்கவும் மாட்டேன், இப்படிச் சொல்வதால் பிறர் என்னை வேறு விதமாக நினைக்கக் கூடும், அதற்காக நான் சொல்லாவிட்டாலும் நினைப்பது மாறாதுதானே'' என்றேன். புரிந்து கொள்ளும் நபர்களிடையேப் பிரச்சினை இல்லை, மேலும் முக்கியத்துவம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என கருத்து பரிமாறிக்கொண்டபோது பல விசயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் முனைப்பாக இல்லாது போயிருக்கிறேன் என எண்ணம் மேலிட்டது.
.............எதார்த்தமான சங்கதிகளை, அழகாக தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
முதல் ஐந்து பகுதிகளைத் திரும்பவும் படித்துவிட்டேன். :)
சுவாரசியங்கள் தொடரட்டும்.
மிக்க நன்றி சித்ரா மற்றும் சகோதரி.
Post a Comment