Monday, 22 February 2010

பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு

நண்பர் தெகா அவர்களின் தொடர் அழைப்பிற்கு எனது நன்றிகள். பதின்ம காலம் என்றதும், என்னவெல்லாம் நினைவுக்கு வந்து சேரும் என எண்ணிக் கொண்டபோது தனியாக எங்கேனும் அமர்ந்து அழுதுவிடலாமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனது அந்த பதின்ம காலங்கள் எனக்குத் திரும்பவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் எனது மகனின் பதின்ம காலங்கள் எப்படியெல்லாம் இருந்துவிடப் போகிறது என்பதை ரசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

காலத்தை மிகவும் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்கையில் எனது பதின்ம காலங்கள் நடைபெற்ற ஆண்டுகள் எனப் பார்த்தால் 1987லிருந்து 1993வரை எனக் கொள்ளலாம். 1987ல் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1993ல் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.

தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் பலவீனங்களும், பலங்களும், வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்துதான் அந்த காலகட்டங்கள் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தாலாவது எதனையும் மறக்காமல், மறைக்காமல் அப்படியே எழுதி வைத்துவிட முடியும். இப்பொழுது மனதில் எதுவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை மட்டுமே தொகுத்திட விழைகிறேன்.

எனது சகோதரர் ஒருவர் கவிதை, தத்துவம் என குறிப்பேடுகளில் எழுதி வருவார், அதைப் பார்த்ததும் நானும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒலிபெருக்கி நிறுவனமான கே.ஜி.சேகர் 90 சக்தி 80 என மதிப்பிட்டது உண்டு. திருவள்ளுவர் பஸ் 80, பாண்டியன் பஸ் 60 என மதிப்பீடு போட்டது உண்டு. விளையாட்டாகவே எதையும் செய்யும் பழக்கம் அதிகமாகவே உண்டு. இப்படி எழுதியதைப் பார்த்ததும் திட்டு வாங்கிய தினம் முதல் குறிப்பேடு அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது, இன்று வரை.

எனது பதின்மகாலத் தொடக்கத்தில் நான் மட்டும் தனியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றாகிப் போனது.  என்னுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஏழாம் வகுப்பு முடித்ததும் சென்னை சென்றுவிட்ட வாசு, ஸ்ரீராம், அழகியநல்லூருக்குப் பயணித்துவிட்ட ரமேஷ். எனது நண்பர்கள். அன்று விலகியதைப் போலவே இன்றும் ஏனோ வெகு தூரத்தில் விலகி நிற்கிறோம். ஆனால் இவர்களை என்னால் ஒருபோதும் மறக்க இயல்வதில்லை, மனதில் ஓரத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தமான சுப்புலட்சுமி, கவிதா. இவர்கள் உடன்பிறவா சகோதரிகளின் மகள்கள் .மனதின் ஓரத்தில் இவர்களுக்கென ஒரு தனி இடம் எப்போதும் உண்டு.

பதின்ம காலத்தில் அதிகம் பழகியது கவிதாவுடன் மட்டுமே. தட்டாங்கல்லு, பல்லாங்குழி, தாயம் என எங்கள் ஊருக்கு கவிதா வரும்போதெல்லாம் கவிதாவுடன் சேர்ந்து விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

எவரையேனும் திருமணம் பண்ணுவதாக இருந்தால் காதலித்துத்தான் திருமணம் பண்ணிக்கொள்வேன் என என்னிடம் கவிதா சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் மறக்காது, அதுபோலவே மண வாழ்க்கையும் அமைத்துக்கொண்டாள். அடுத்த வருடம் பதின்ம காலங்களின் தொடக்கம்.

சுப்பு பாட்டி வீட்டில் இருந்து படித்ததால் விடுமுறைக்கு மட்டுமே வந்து போவாள், ஆனால் அவளது படிப்புத் திறமை, பேச்சுத் திறமை இன்றும் மனதில் நினைவுதனை விட்டு நீங்கா சுகங்கள்.

பதின்ம காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் என்னை உலுக்குகின்றன. காமிக்ஸ் புத்தகக் கடை போட்டு பத்து பைசாவுக்கும், இருபது பைசாவுக்குமாய் வாடகைக்கு விட்ட ஸ்ரீதர், வீட்டினில் திட்டுகள் வாங்கினாலும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வந்த கொண்டப்பன், வயது அதிகம் என பாராமல் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரங்கசாமி, அழகர்சாமி என ஒரு கூட்டம். இவர்களை எல்லாம் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, கொண்டப்பனைத் தவிர.

களத்து மேட்டுகளிலும், தோட்டத்து வரப்புகளிலும் மணலில் உருண்டு விளையாடியபோது உடனிருந்த கண்ணன், கோலிக்குண்டு, பம்பரம், செதுக்கு முத்து விளையாட்டில் சூரனான பாண்டி, நட்புடன் பழகும் முருகேசன், சமீபத்தில் துர்மரணமடைந்த பெருமாள்... பதின்ம காலம் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்துகிறது, பாண்டியை நினைத்து சமீபத்தில் ஒரு கவிதை எழுதியது உண்டு. என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது  கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.

இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்... இன்னும் தொடர்வேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் எனக்காக அழுது விடுங்கள்.

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நண்பர்களை நினைத்துப்பார்த்து கண்ணீர் உகுக்கிறீர்கள்.. மீண்டும் சந்திக்க ஏதேனும்வாயப்பு அமைகிறதா பாருங்கள்

Thekkikattan|தெகா said...

//இந்த அர்த்தமற்ற பேச்சுகளால் கவிதா ஒரு தோழியாகக் கூட எனக்கு இல்லாமல் போனது எனக்கு மனவேதனைதான். //

சில வேளைகளில் அப்படியும் ஆகிவிடுவதுண்டு, வெ.இரா.

//காமிக்ஸ் புத்தகக் கடை போட்டு பத்து பைசாவுக்கும், இருபது பைசாவுக்குமாய் வாடகைக்கு விட்ட ஸ்ரீதர்//

இப்படியான நணபனெருவன் எனது வீட்டிற்கு பக்கத்திலும் அமைந்ததுண்டு.

//என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.//

விலகிப் போய்விட்டதாக நினைப்பது ஒரு மனப் பிரமை மட்டுமே! புதுப்பித்து கொள்ள முடியுமென்றே கருதுகிறேன்.

அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி, வெ. இரா. நீங்கள் யாரையும் தொடர அழைக்கவில்லையா?

Radhakrishnan said...

மிகவும் நன்றி முத்துலெட்சுமி அவர்களே, மிகவும் நன்றி தெகா, தொடரை இன்னும் முடிக்கவில்லை, தொடர்ந்து எழுதிவிட்டு அழைக்கலாம் என எண்ணி இருக்கிறேன். நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டாலும் அந்த பதின்ம காலங்கள் போல் இருக்கப்போவதில்லை என்பது என்னவோ இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.

மதுரை சரவணன் said...

அருமையான பதிவு. எழுத்து அருமையாக வருகிறது. தொடரவும் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக அருமையான அனுபவக் குறிப்புகள். நல்ல பதிவு

Chitra said...

என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.


.........நெகிழ வைக்கும் நினைவுகள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Radhakrishnan said...

மிக்க நன்றி சரவணன், ஸ்டார்ஜன், சித்ரா மற்றும் சின்ன அம்மிணி. ஆமாங்க, எப்படி விலகிப் போயிருக்கக்கூடும் என நினைத்துப் பார்த்தால் ஏதேதோ காரணங்கள் அவையாவும் சரிதானா எனத் தெரியவில்லை.