சின்ன வயசுல சாலையோரத்தில விளையாடலைன்னாலும் எங்களுக்குச் சொந்தமான களம் ஒன்றில் செங்கல் வைத்துக் கொண்டு பேருந்து போல் மணலில் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டிக் கொண்டு போகும் போது ஒரு மாடு நின்று கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் செங்கல் வைத்து ஓட்டிய போது மாடு விட்ட ஒரு உதை இன்னமும் மறக்க முடியவில்லை. கவனக்குறைவு!
வரப்பு ஓரங்களில் பேருந்து ஓட்டுவது போல ஓடித் திரிந்த காலங்கள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பேருந்து ஓட்டுநர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். எங்க ஊருக்குள்ள ஒரே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் வரும், யார் முதலில் ஊருக்குள் வருவது என போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படி தனியார் பேருந்து ஒருநாள் முன்னதாக வந்துவிட இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் போட்டுக்கொண்ட சண்டை இன்னமும் நினைவில் இருக்கிறது. இதே நிகழ்வு பல வருடங்கள் பின்னர் சென்னையில் பாரிமுனையில் பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இவர்களின் வேகத்திற்கு பலியாகும் மக்கள்!
மதுரையில் படித்தபோது நானும் என் தந்தையும் சாலையோரத்தில் நடந்து சென்றபோது பேருந்து ஒன்று என் தந்தையை உரசிவிட என் முன்னால் தள்ளிச் சென்று விழுந்த தந்தையை பார்த்தபோது நான் அடைந்த அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதது. பேருந்து சற்று வேகம் குறைத்து வந்ததாலும், சாலையின் ஓரத்தில் கற்கள் ஏதும் இல்லாது போனதாலும் என் தந்தை அன்று எவ்வித காயமின்றி தப்பினார்.
மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என கஷ்டப்பட்டு மிதிவண்டி பழகிய பின்னர் சக்கரத்தில் காலை விட்டு காயப்பட்ட கால், வேகமாக ஓட்டிக்கொண்டு வருகிறேன் என சக்கரம் சறுக்கி விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயம் என மிதிவண்டி பயணம் சிரமம் சில முறை தந்தது. அந்த சிரமமே என்னை இந்தியாவில் இருந்தவரை வேறு இரு சக்கர வாகனங்களை பழகவிடவில்லை.
சென்னையில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது என் நண்பன் ஸ்ரீராம் என்னை அவனுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டச் சொன்னபோது பயமாகத்தான் இருந்தது. அவன் அநாயசமாக ஓட்டிச் செல்லும் விதம் கண்டு பிரமிப்புதான் மிஞ்சியது. தலைக்கவசம் இல்லாமல் அவன் பயணித்தது இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறும் வரை நான் எந்த வாகனங்களும் ஓட்டியது இல்லை, ஓட்டப் பழகியதும் இல்லை.
இலண்டன் வந்ததும் கார் (மகிழ்வுந்து) ஓட்ட வேண்டுமெனில் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும் என சொன்னார்கள். சாலை விதிகள் பற்றிய தேர்வு அது. அந்த சாலை விதிகள் தேர்வுதனில் முழு மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகினேன். ஆனால் செயல்முறைத் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறையே தேர்வாகினேன். இத்தனை சட்டதிட்டங்கள் உடைய இங்கே சட்டம்தனை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் உண்டு.
ஒருமுறை எனக்கு முன்னால் மூன்று வாகனங்கள் நின்று கொண்டிருக்க, முன்னால் இடமிருக்கிறதே என மூன்று வாகனங்களை முந்திக்கொண்டு போய் நிற்க எனக்கு முன்னால் காவல் அதிகாரி வண்டி நின்று கொண்டிருந்தது. என்னை இறங்கச் சொல்லியவர், ஏன் இப்படி வந்தாய்? எனக் கேட்க இடமிருந்தது வந்தேன், என் தவறுதான் என்றேன். நீ வந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்குப் பிடிக்கவில்லை, ஏன் வந்தாய் என மறுபடியும் கேட்டார். இடமிருந்தது அதனால் வந்தேன், என் தவறுதான், இனி அவ்வாறு செய்யமாட்டேன் என சொன்னேன். எங்கே வேலை பார்க்கிறாய் என்றார், வேலை இடம் சொன்னதும், சென்று வா என அனுப்பி விட்டார். இத்தனைக்கும் நான் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவில்லை. இருப்பினும் பொறுமை அவசியம் என அந்நிகழ்வு எடுத்துகாட்டியது. ஆனால் நாளிதழ்கள் புரட்டினால் 30 மைல் வேகம் செல்ல வேண்டிய இடத்தில் 70 மைல் வேகத்தில் சென்றார் என்றெல்லாம் செய்திகள் பார்க்கலாம். பல சட்ட திட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாட்டில் கூட வாகன ஓட்டிகளின் செயல்பாடு எரிச்சல் தருவதாகவே இருக்கும். பலர் வாகனம் ஓட்டுவதற்கான அங்கீகாரம் இல்லாமல் வேறு நாடுகளில் எடுத்துக்கொண்ட அங்கீகாரம் வைத்து ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகமே.
புகைப்பட கருவி சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும், வாகன ஓட்டிகள் புகைப்பட கருவி இருக்குமிடம் மட்டும் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள், அதைத் தாண்டியதும் பறந்து செல்வார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்றே தோன்றும்,
ஒருமுறை நான் மஞ்சளிருந்து சிகப்பு விளக்கு வரும் முன்னர் செல்ல வேண்டுமென சென்றபோது மில்லி விநாடியில் எனது வாகனம் புகைப்படம் எடுக்கப்பட்டு 3 புள்ளிகளும் 60 பவுண்டுகளும் கட்டிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, பலமுறை வேகமாக செல்லும் வாகனங்களைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு, எங்கே இத்தனை வேகமாகச் செல்கிறார்கள் என! அதே வேளையில் நாம் வேகமாகச் செல்லும்போது அந்த எண்ணம் ஏன் நமக்கு வருவதில்லை எனும் சிந்தனையும் வருவதுண்டு.
30 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாகனத்தை வெளியில் இருந்து இயக்க அந்த வாகனம் பின்னோக்கிச் செல்ல அருகிலிருந்த மற்றொரு வாகனத்துக்கும், இந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி அவர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. கவனத்துடன் சென்றாலும், கவனமில்லாமல் வந்த லாரி ஒன்றினால் மரணமடைந்த ஒருவர் பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது. முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி என்னை வெகுவாகவே பாதித்தது.
சாலையினைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சாலை விதிகளும், சாலையில் செல்வது பற்றிய எச்சரிக்கையும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பல வசனங்கள் ஆங்காங்கே ஊரில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு 30 நிமிடத்தில் இரவு 10 மணிக்கு பயணித்த கார்! பேருந்து ஒன்று எதிரில் வந்தபோதும் அதன் அருகில் நேராக சென்று மின்னலென விலகிச் சென்ற கார் என சமீப காலத்தில் காரில் தமிழகத்தில் பயணித்தபோது ஏன் இப்படி இவ்வளவு வேகம் என ஓட்டுநர்களிடம் கேட்டபோது 'அப்படியே அணைச்சி போகனும்ணே' எனும் பதிலைக் கேட்டபோது சாலையோரம் மிகவும் பயங்கரமானதாகவே காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
விருப்பமுள்ளோர் தொடர வேண்டுகிறேன்.
13 comments:
வெ. இரா, உங்கள பாராட்டியே ஆகணும். விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்னு சொன்னதை கருத்தில் வைச்சு, பல சம்பவங்களை நினைவிலிருந்து தொகுத்து கொடுத்திட்டீங்க.
//எனது வாகனம் புகைப்படம் எடுக்கப்பட்டு 3 புள்ளிகளும் 60 பவுண்டுகளும் கட்டிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, //
இதுக்கே இப்படி வருத்தப் படுறீங்களே. எங்களுக்கும் இருக்கில இது போன்ற அனுபவம், இதெல்லாம் காலப் போக்கில மறந்துடணும்; இருந்தாலும் மனசில நின்னாதான் அடுத்த டிக்கெட்டும் பவுண்டும் நம்மல விட்டு எஸ்ஸ்ஸ் ஆகாதுங்கிறீங்களா :))
நல்ல பகிர்வு!
மிக்க நன்றி, எல்லோரும் தமது அனுபவங்களை எழுதி அது எல்லோருக்குமான ஒரு எச்சரிக்கையாய் இருக்கவேண்டுமென நினைத்தேன். வேண்டுகோளுக்கு மதிப்பளித்து பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. எல்லோரும் தொடரட்டும். விபத்தற்ற வாழ்வும், குறைவற்ற மகிழ்ச்சியும் கிடைக்கடும்.
-அன்புடன் ஷங்கர்.
அன்பின் வெ.இரா
சாலையோரம் நன்றாகவே விவரிக்கப்பட்டுள்ளது - மதுரையில் படித்தீர்களா - எங்கு? எப்பொழுது ? என்ன படித்தீர்கள் ?
புள்ளிகளுக்கும் பவுண்டுகளுக்கு அவர்கள் பயப்படவே மாட்டார்கள் - அங்கு உரிமம் பெறுவது கடினம் தான் - பழைய நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து இடுகை இட்டு மகிழ்ந்தது நன்று
நல்வாழ்த்துகள் வெ.இரா
//கவனத்துடன் சென்றாலும், கவனமில்லாமல் வந்த லாரி ஒன்றினால் மரணமடைந்த ஒருவர் பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது. //
இது போல் தினமும் நடக்கின்றது நண்பரே... உங்களது அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி...
nicely written. well said radhakrishnan.
-vidhya
நல்ல பகிர்வு
அருமையா தொகுத்து ஒரு பயனுள்ள இடுக்கை தந்து இருக்கீங்க.
பயனுள்ள இடுகை! கடைசி வரிகள் - வெகு யதார்த்தம்!
மிக்க நன்றி தெகா. அதற்குப் பின்னர் வேகமாக ஓட்டுவதென்றாலே அலர்ஜியாகிவிட்டது என்னவோ உண்மை. விரைவில் உங்கள் அனுபவங்களையும் படிக்க ஆவல்.
தங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள் ஷங்கர்.
மிக்க நன்றி ஐயா. உத்தங்குடியில் இளநிலை மருந்தாக்கியல் (ஃபார்மஸி) 1991லிருந்து 1995 வரை பயின்றேன்.
மிக்க நன்றி சங்கவி, உண்மைதான், பல கொடிய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
மிக்க நன்றி ஸ்ரீவித்யா.
மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி சித்ரா.
மிக்க நன்றி பப்பு அம்மா, நீங்க எழுதிய இடுகையும் படித்தேன் என நினைக்கிறேன். சரிபார்த்துவிடுகிறேன்.
நல்லா எழுதி இருக்கீங்க இராதாகிருஷ்ணன்.
எவ்வளவு விதிகள் இருந்தாலும் நம்முடைய கவனமும் ஒழுக்கமும் முக்கியம் என்பதை அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
//வரப்பு ஓரங்களில் பேருந்து ஓட்டுவது போல ஓடித் திரிந்த காலங்கள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. //
:-)
நல்லா எழுதி இருக்கீங்க ராதா!
அருமையாக எழுதியிருக்கீங்க ராதாக்கிருஷ்ணன் சார் .
சாலையில் நடந்து செல்லும்போதும் கவனமாக செல்லுதல் அவசியம் .
எல்லோரும் சாலை விதிகளை மதித்தால் விபத்து என்பதே இல்லை .
மிக்க நன்றி தீபா.
மிக்க நன்றி பா.ரா
மிக்க நன்றி ஸ்டார்ஜன்.
Post a Comment