Tuesday, 12 January 2010

நாச்சாரம்மாள்

நாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.

நடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.

நாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.

நாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.

3 comments:

தமிழ் உதயம் said...

முதல் முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். பக்தி மணம் நுகர்ந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.

Chitra said...

நல்லா இருந்தது. ரொம்ப நன்றிங்க.

Radhakrishnan said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி உலவு.காம், தமிழ் உதயம் மற்றும் சித்ரா அவர்களே.

இந்த பகுதியானது எனது நுனிப்புல் நாவல் பாகம் 1 லிருந்து எடுத்து இடப்பட்டது.