உண்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளும் பட்சத்தில் உண்மையின் சொரூபமாக இறைவன் விளங்குகிறாரா, விளங்கவில்லையா என்பது தெரிந்துவிடும். எப்படி உண்மை என்று உருவானது எனத் தேடி தேடிக் களைத்துப் போனேன். களைத்திருந்த வேளையில் அவ்வழிதனை கடந்த ஒருவர் சொல்லிச் சென்றார், உண்மை ஒருநாள் வெளி வரும். ஒளிந்திருக்கத்தானா உண்மை? மறைந்திருக்கத்தானா உண்மை? ஒரு உண்மையை பற்றி விளக்கக்கூட ஒரு பொய்மை நிகழ்வுதானா தேவைப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கையில் இறைவன் இஷ்டம் போல சிரிக்கிறான்.
ஒரு நிகழ்வு நடக்கிறது, அந்த நிகழ்வு உண்மையிலே நடந்ததா எனும் கேள்வி எழுகிறது. அதாவது ஒன்று நடந்தது எனில் அது எவ்வாறு நடந்தது, எந்த முறையில் நடந்தது எனும் விளக்கங்கள் தேவைப்படுகிறது. அந்த நிகழ்வினைப் பார்க்கும் தனித்தனி நபர் சொல்லும்போது ஒவ்வொருவரின் விளக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக அங்கே நிகழ்வின் தன்மை மாற்றம் கொள்கிறது. உண்மையான நிகழ்வு என்பது இப்போது பல சந்தேகங்களுக்கு உட்பட்டு தள்ளாடித் தவிக்கிறது. ஒரு அரை மணி நேரம் முன்னர் நடந்த விசயத்தையே நம்மால் புரிந்து கொள்ள இயல்வதில்லை, அதன் தன்மையை அப்படியே நம்மால் விவரிக்க இயல்வதில்லை. இதைத்தான் எந்தவொரு ஆராய்ச்சியும் ஒரு பொருளின் தனித்தன்மையை முழுவதுமாகச் சொல்லிவிட இயல்வதில்லை என ஒருவர் அழகாக எழுதி வைத்ததை உண்மை என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மையா என எப்படிச் சோதித்து கண்டு கொள்வது, எந்த சோதனைப் பயிற்சியைச் செய்து பார்ப்பது? புரியவில்லை. இதன் காரணமாக உண்மை எதுவென இன்னமும் தெரியவில்லை.
உண்மை எதுவெனத் தெரியாதபோது எப்படி இறைவன் உண்மையின் சொரூபமாகத் திகழ்கிறார் எனச் சொல்வது? நல்லது நடக்க வேண்டுமெனில் ஒரு பொய் என ஓராயிரம் பொய் கூடச் சொல் என்கிறது முன்னோர்களின் அறிவு. ஒரு பொய்தனைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவே உண்மையாகிவிடுகிறது என்கிறது ஆய்வுகளுக்கு உட்படாத அறிவு. பொய் என்பது என்ன என எண்ணிப் பார்த்தோமெனில் உண்மையைத் தவிர்த்த அறிவு எனக் கொள்ளலாம். இருப்பதன் அடிப்படையில், அந்த அந்த அறிவுக்கு அடிப்படையில் ஒரு நிகழ்வினைப் பார்க்கும்போது, அந்த நிகழ்வுக்கான காரணிகள் என காணும்போது உண்மை எது, பொய் எது எனும் நிலைத் தடுமாற்றம் என்பது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அறிவு என்றால் எதுவெனச் சிந்தித்துப் பார்த்தேன்.
அறிவு என்பதன் அர்த்தம் அறிந்து கொள்வது எனப் பொருள்படும்படி வைத்துக் கொள்ளலாம். அவரவர் அறிந்து கொள்வது அனைவரும் அறிந்து கொள்வது என்றாகாது, அனைவரும் அறிந்து கொள்வது என்பது அவரவர் அறிந்து கொள்வது என்பதும் ஆகாது. அப்படியெனில் அறிவு என்பது பொதுவான கருவி. இருப்பதை வைத்து அறிந்து கொள்வது என வரும்போது அதற்கான காரணிகள் கிடைக்கும். இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படியெனில் கற்பனையும் கூட உண்மையின் வசம் தன்னை ஒப்படைத்து இருந்திருக்கக் கூடுமோ?
7 comments:
என்னங்க இப்படி கேட்டு சிக்க வச்சுட்டீங்க. யோசிக்கிறேன். கண்டு பிடிச்சிடலாம். இதோடு இன்றே மூன்று முறை படித்து விட்டேன். உங்களுக்கு எப்படியும் பதில் சொல்லியே ஆகணும்னு. இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். :(
ஆஹா, பதில் சொல்லிருவீங்கனு எதிர்பார்க்கிறேன் வித்யா.
//இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். //
இல்லாத ஒன்று கற்பனைக்குள்ளும் வராது, அவதார் படம் கற்பனை என்றாலும் அதில் காட்டப்படும் தோற்றங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் அல்லது ஓரளவு அறிந்து கொள்ளக் கூடிய உருவ அமைப்புகளில் தான் உள்ளது. நம் வடிவமைத்துள்ள / அறிந்துள்ள டெபனேசனுக்குள் தான் நம் கற்பனையும் அடங்கும்.
உண்மை எனப்படுவது..ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் மாறுபடும்..ஆகவே ஒரு மனிதன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நடந்த உண்மையை அவன் மனம் மட்டுமே அறியும்.இதைத்தவிர வேறு எதையும் உங்கள் பதிவுக்கு பதிலாய் இராது.உண்மை என்றாவது வெளிவரும் என்பது பொதுவாக சொல்வது.ஆனால் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியின் உண்மை சம்பந்தப்பட்ட உயிர் அறியும்.
//கோவி.கண்ணன் said...
//இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். //
இல்லாத ஒன்று கற்பனைக்குள்ளும் வராது, அவதார் படம் கற்பனை என்றாலும் அதில் காட்டப்படும் தோற்றங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் அல்லது ஓரளவு அறிந்து கொள்ளக் கூடிய உருவ அமைப்புகளில் தான் உள்ளது. நம் வடிவமைத்துள்ள / அறிந்துள்ள டெபனேசனுக்குள் தான் நம் கற்பனையும் அடங்கும்.//
அதனால் தான் அந்த கேள்வியும் வைத்தேன் கோவியாரே. கற்பனையும் கூட உண்மையின் வசம் தன்னை ஒப்படைத்து இருந்திருக்கக் கூடுமோ? என.
நாம் வடிவமைத்துள்ளத் தோற்றத்தில் கற்பனை அடங்குவதின் காரணமாகவே உண்மையானது தனது தோற்றத்தைத் தொலைத்துத் தவிக்கிறது. மிக்க நன்றி கோவியாரே.
//கோவி.கண்ணன் said...
//இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். //
இல்லாத ஒன்று கற்பனைக்குள்ளும் வராது, அவதார் படம் கற்பனை என்றாலும் அதில் காட்டப்படும் தோற்றங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் அல்லது ஓரளவு அறிந்து கொள்ளக் கூடிய உருவ அமைப்புகளில் தான் உள்ளது. நம் வடிவமைத்துள்ள / அறிந்துள்ள டெபனேசனுக்குள் தான் நம் கற்பனையும் அடங்கும்//
நாம் வடிவமைத்துள்ள, அறிந்துள்ள ஒன்றில் தான் கற்பனை அடங்கும் என்பதாலேயே உண்மைதனை தொலைத்து விட்டோம்.
மிக்க நன்றி கோவியாரே.
//T.V.Radhakrishnan said...
உண்மை எனப்படுவது..ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் மாறுபடும்..ஆகவே ஒரு மனிதன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நடந்த உண்மையை அவன் மனம் மட்டுமே அறியும்.இதைத்தவிர வேறு எதையும் உங்கள் பதிவுக்கு பதிலாய் இராது.உண்மை என்றாவது வெளிவரும் என்பது பொதுவாக சொல்வது.ஆனால் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியின் உண்மை சம்பந்தப்பட்ட உயிர் அறியும்//
உண்மை ஒருபோதும் மாற்றம் கொள்ளாது. தனித்தனி நபருக்கு அவரது எண்ணமே வேறுபாட்டிற்கு காரணம். உண்மை எப்போதும் அது உண்மையே.
மிக்க நன்றி ஐயா.
Post a Comment