பயணம் - 3
இரவு நன்றாக உறங்கினோம். காலை எட்டு மணி இருக்கும் என நினைக்கிறேன், தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என மறுமுனையில் கேட்க புவனா என சொல்லி சகோதரி சுந்தராவின் குரலை தவறாக புரிந்து கொண்டேன்.
சிறிது நேரம் பின்னர் சகோதரி சுந்தராவின் கணவர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அடுத்தமுறை துபாய் வரும்போது வீட்டில்தான் தங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது மகிழ்வைத் தந்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி பர் துபாய் என அழைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி டேரா துபாய் என அழைக்கப்படுகிறது. சகோதரியின் வீடு ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. முன்னர் அவர்கள் இருந்த வீடு ஹோட்டலில் இருந்து வெகு அருகில் இருந்து இருக்கிறது.
சகோதரியின் வீட்டில் புவனா, மஞ்சு, குழந்தைகள் பட்டாளம் என சின்ன திருவிழா போன்று கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் சிரமப்பட்டுதான் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிந்தேன். சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
சகோதரியின் கணவருடன் வியாபார விசயங்கள், துபாய் வாழ்க்கை முறை என பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரைபடம் ஒன்று போட்டுத் தந்தார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே எல்லாம் இருப்பதாக வரைபடத்தில் காட்டினார். பின்னர் சகோதரியின் வீட்டினைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாரதியும், நந்தினியும் வீடுதனை சுற்றி காண்பித்தார்கள், நன்றாக பேசினார்கள். விஜய் நவீனுடன் விளையாடுவதிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார்.
மிகவும் அழகிய வீடு. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். பிரியாணி, சிக்கன், ரைதா, சப்பாத்தி, சாதம், இரசம், தயிர்ச்சாதம், வெஞ்சனம், ஊறுகாய், பாயாசம் என மிகவும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக அதிகமாகச் சாப்பிடும் நான் அன்று சற்று குறைவாகவே சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். நிறைய சாப்பிட்டு இருக்கலாம் என மனது சொன்னது.
கிருஷ்ண பவன் என ஒரு உணவுக் கடை இருப்பதாகவும் அங்கே வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்கமாட்டார்கள் என சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. புவனா செய்த சமையலில் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் செய்து இருந்தார்கள். செய்த விதமோ வித்தியாசம், ஆனால் மிகவும் ருசியாகத்தான் இருந்தது. அக்ஷயா அனுஷ்யா, நித்யாஸ்ரீ என மழலைகளின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் இலண்டன் வாழ்க்கை முறை பற்றி பேசினோம். வியாபார நுணுக்கம் எனக்குத் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்த நான், எனக்குப் பிரச்சினையே பேசுவதுதான் என சொன்னேன். அதற்கு சகோதரியின் கணவர் 'அரசியல்வாதி' மாதிரி பேசறீங்க என சொன்னார். அடடா நம்மைப் பற்றி அற்புதமாக கண்டுபிடித்துவிட்டாரே, இனிமேல் அடக்கம் கொள்ள வேண்டியதுதான் என நினைத்த சமயத்தில் புவனா பரஞ்சோதியாருக்கு அழைப்பு விடுத்தார். பரஞ்சோதியாரிடம் பல நிமிடங்கள் பேசினேன். ஊரில் சென்று வாழ வேண்டும் என எண்ணம் பரஞ்சோதியாரிடம் நிலை கொள்ள ஆரம்பித்து இருக்கிறது.
பின்னர் புகைப்படங்கள், அசைபடங்கள் எடுத்துக்கொண்டோம். மிகவும் அழகான சிறப்பான பரிசுகள் தந்தார்கள். பின்னர் கேட்டபோது, புவனா அந்த அழகிய பரிசுகளை ஷார்ஜாவில் வாங்கியதாக சொன்னார். மிகவும் சிறப்பான உபசரிப்பும், அன்பும், பரிசுகளும் என சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அற்புதமான சொந்த உறவுகளுடன் உறவாடிய அந்த தருணங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.
சகோதரியின் கணவர் எங்களை ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட்டுவிட்டுச் சென்றார்கள். அன்புடன் அவர் பழகியது, பேசியது பெரும் ஆனந்தத்தைத் தந்து இருந்தது.
சில நிமிடங்களே ஹோட்டலில் இருந்த நாங்கள் அடுத்து எங்கு செல்லலாம் என ஒரு டாக்ஸியைப் பிடித்தோம்.
(தொடரும்)
4 comments:
நல்ல பயணக்கட்டுரையாக இருக்கு தொடருங்கள்
பயணம் நன்றாக இருக்கிறது..தொடருங்கள்....
நல்ல கட்டுரை. சாப்பாட்டு வகைகளை படித்தால்,விருந்துக்கு நானும் இல்லையே என்ற வருத்தம் ஏற்ப்பட்டது. இந்த நட்பும்,பாசமுமே நாம் பதிவுலகில் பெறும் பொக்கிஷங்கள். மிக்க நன்றி.
மிக்க நன்றி ஆ. ஞானசேகரன், மிக்க நன்றி புலவன் புலிகேசி மிக்க நன்றி ஐயா.
Post a Comment