Wednesday, 23 September 2009

தாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக

தாய்மையைக் கேள்வி குறியாக்கும் செய்திகள் தொடர்ந்து அறிந்து கொண்டே வரும் வேளையில், சமீபத்தில், தனது இரண்டு குழந்தைகளை உயிருடன் கொன்ற தாய் பற்றிய செய்தி அறிந்ததும், ஒரு தாய் எப்படி தனது குழந்தைகளைக் கொல்லத் துணிவாள் எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நம் வீட்டில் எதுவும் நடக்காதவரை எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.

நல்லதங்காள் கதையைக் கேள்விபட்ட போதே எப்படி ஒரு தாய் இப்படி தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள் எனும் கேள்வியும் எழுந்தது.

தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.

தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் என்பதாலேயே நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை.

வாழ்க்கையில் போராட முடியாமல், அவமானம் தாங்க இயலாமல் தாய்மை தள்ளாடுகிறது. இதுபோன்ற தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.

இதுகுறித்து எழுதுவோர் எழுதட்டும்.

11 comments:

நிகழ்காலத்தில்... said...

\\தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.\\

உங்களின் கருத்தை அறிய விருப்பமே,

வருவதை எதிர்கொள்வோம்

கருத்தை பகிர்ந்து கொள்வோம்

வாருங்கள் நண்பரே

கிரி said...

சார் உங்களை போல நானும் நினைத்ததுண்டு ...

இது தாய்மைக்கு மட்டுமல்ல..தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற அனைத்து உறவிற்கும் பொருந்தும்.

இவை அனைத்திற்கும் மிக முக்கிய காரணம்..அவர்கள் வளர்ந்த சூழ்நிலை மட்டுமே காரணம்.

ஒரு தாய் மற்ற ஒருவருடன் கள்ள உறவு வைத்து பிறக்கும் குழந்தையை எங்கேயோ விட்டு விடுகிறார் அந்த குழந்தை ஒரு பையனாக வளர்ந்து ..குற்ற சம்பவங்களில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டால் ..

அவனுக்கு அவன் அம்மா என்னாவாக தெரிவாள் கூறுங்கள்... அவனின் மன நிலையில் தாய்க்கு என்ன மதிப்பு இருக்கும்?

இதை போல பலவற்றை உதாரணமாக கூறலாம். நானும் முன்பு ஏற்று கொள்ள முடியாததாக இருந்தது..இப்போது அதை உணர்ந்து கொள்ளும் மன நிலைக்கு வந்து விட்டேன்.

முடிந்தால் இது பற்றி பின்னர் விரிவாக வாய்ப்பு அமைந்தால் எழுதுகிறேன் ..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வணக்கம் நண்பரே! நீங்கள் ஏதோ சொல்ல என்று வந்து தலைப்பை மட்டும் சொல்லிப் போனது போல் தெரிகிறது. அண்மையில் இங்கிலாந்தில் நடந்த விடயத்தைப் பற்றித் தானே எழுத நினைத்தீர்கள். நீங்கள் இந்த விடயத்தை உளவியல் ரீதியாகவும் இன்றைய இயந்திர வாழ்க்கையில் கணவர் மனைவிக்கிடையில் உள்ள இடைவெளியையும் சுட்டிக் காட்டப் போகிறிர்கள் என்று வந்த எனக்கு மிக்க ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.

நான் இப்படி எழுதுகிறேன் என்று கோபிக்காதீர்கள். சரியான மனநிலையில் இருக்கும் எந்தத் தாயினாலும் தன் பிள்ளையைக் கொல்ல முடியாது. இது என் அபிப்பிராயம் தான். நான் அந்தத் தாய்க்காக மிக இரங்கினேன். சில நிமிடப் பைத்தியக் காரத் தனத்தால் வாழ் நாள் பூராக அவள் தன்னுள் நிச்சயம் வதையப் போகிறாள்.

Radhakrishnan said...

1. நன்றி நண்பரே. இது உணர்வுப்பூர்வமான விசயம் என்பதாலும், இந்த விசயத்தைப் பற்றி ஒவ்வொருவரின் மனதில் பல எண்ணங்கள் தோன்றும் என்பதாலும் ஒரு சிறு விதையைக் கிள்ளிப் போட்டேன். சில காலம் கழித்து எழுதுகிறேன்.

2.நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் உண்மையே கிரி அவர்களே. காலத்தின் சூழ்நிலை என ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருந்தாலும் இதற்கு ஒரு விடை கிடையாதா எனும் எண்ணத்தின் மூலமே எழுந்தது. தங்களின் எழுத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

3. மிக்க நன்றி சகோதரி. நான் தாய்மையின் சிறப்பைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதத்தான் நினைத்தேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல எனது கையில் தவறான ஒரு சோறு கிடைத்துவிட்டது. மேலும் நீங்கள் சொல்வது போல உளவியல் ரீதியாக இந்த விசயத்தை அணுக வேண்டும் என்பதால் இதுகுறித்த ஆராய்ச்சி அவசியமாகிறது. நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், கோபம் இல்லை, ஆனால் அந்த தாய் நல்ல மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என மருத்துவம் சொல்கிறது. அந்த தாய் உண்மை சொன்னால் தான் உண்மை தெரியும்.

சில காலம் கழித்து ஏமாற்றாமல் எழுதலாம்.

Robin said...

//தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் // - உண்மை.
//நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை// தவறான முடிவு.

கோவி.கண்ணன் said...

//தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.//

தனிமனித செயல்களை 'ஊர் சார்ந்த' என்று பொதுப்படுத்தலில் உடன்பாடுகள் இல்லை.

தாய் என்ற சொல்லை புனிதப்படுத்தி வைத்திருப்பதால் அந்த பெண்ணின் செயல் தாய்மையுடன் தொடர்புப் படுத்தப்படுகிறது. மற்றபடி மனித மன வக்கிரங்களில் உறவுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சொல்லும் இன்னொரு தகவலாக, தரவாகத்தான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ராபின் அவர்களே. இதுகுறித்த விழிப்புணர்வு நிச்சயம் தேவைதான்.

மிக்க நன்றி கோவியாரே. தனிமனித செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், சில தனிமனித செயல்களால் எங்கள் ஊரை 'பேய் ஊர்' என்றே அழைப்பார்கள். நான் தந்தது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அதில் எத்தனை பேர் அரசியல்வாதிகள்? அரசியல்வாதிகளால் நாடு சீரழிந்து போய் கிடக்கிறது என எங்கும் பேசக் கேட்பது நிதர்சனம் தானே.

தாய் என்றும் தாய் தான், தனி மனுஷி எனக் கருதிக்கொள்வது ஆபத்தில் முடியும். வாய்மை என்பது யாதெனின் என எழுதிய வள்ளுவர், தாய்மை என்பது யாதெனின் என எழுதி வைத்திருந்தால் தாய்மைக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறித்து எளிதாக எழுதியிருப்பேன்.

மனித மன வக்கிரங்கள் என ஒரு நிகழ்வினைப் பார்த்தோமெனில் அந்த மனித மன வக்கிரங்கள் ஏற்பட என்ன காரணம், அதற்கு துணைபோகும் சமூகம் ஏன் என்பதையும் கூர்ந்து கவனிப்பது அவசியமாகும். தாய்மை எனும் எண்ணம் மேலோங்கி இருக்கும் பட்சத்தில் இந்த வக்கிரங்கள் இடம் தெரியாமல் அழிந்து போகும். தாயுமானவருக்கும் தாய்மை இருந்தது என்கிறது புராணம்.

மேலும் உறவின் உன்னதம் தெரியாது போகும் காரணத்தினால் ஏற்பட்ட விளைவு அல்ல அது. அந்த தாய் தான் செய்த செயலை நினைத்து நினைத்தே மாண்டு போனார்.

கோவி.கண்ணன் said...

//மேலும் உறவின் உன்னதம் தெரியாது போகும் காரணத்தினால் ஏற்பட்ட விளைவு அல்ல அது. அந்த தாய் தான் செய்த செயலை நினைத்து நினைத்தே மாண்டு போனார்.//

எக்சப்சன் கேஸ்கள் ஒட்டுமொத்த சமூகத்தைப் பிரதிபலிக்காது என்பதாகச் சொன்னேன்.

ஒன்பது கொலை செய்த ஒரு பையனை எந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகக் காட்டமுடியும் ?

அந்தப் பெண்ணின் செயலை தாய்மையோடு தொடர்பு படுத்தி கேள்விக்கு உள்ளாக்கினால் பெண்கள் சமூகத்தின் மீது நாம் சுமையை ஏற்றி கேள்வி கேட்கிறோம் என்பதாகவே பொருள் படுகிறது.

11 வயதில் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டான் ஒரு சிறுவன் என்கிற செய்தி சென்றவாரம் வந்தது, அதைச் சிறுவர்களின் குண நலன்களோடு பொருத்திப் பேசக் கூடியதல்ல என்பதே எனது கருத்து.

தன்னுயிர் தந்து இன்னுயிர் காப்பாள் தாய் என்பது தாய்மை போற்றும் பெண்களுக்குத்தான், அதை அனைத்துப் பெண்களுக்குமான ஒன்றாக நாம் பார்க்கிறோம்

வனம் said...

வணக்கம் இராதாகிருஷ்ணன்

எல்லோரும் மனிதர்கள் என பார்த்தால் போதுமானது என நிணைக்கின்றேன்

தாய்மை என சொல்லிச் சொல்லியே ஒரு பெண்ணை எந்த அளவிற்கும் அழுத்திவைக்கும் சமூகம் நம்முடையது
ஒரு தாய் எனில் தன்னைபற்றி கவைபடாது, தன்னை முழுவதும் வருத்திக்கொண்டு தன் பிள்ளைகளுக்காகத்தான் இருக்கவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்துவது சரியாக இருக்காது.

நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மையிலேயே மனிதத்தன்மை சார்ந்து தவறான விடயம் -- அதில் சந்தேகம் இல்லை.

தாய்மை என கொண்டாடாதீர்கள், புனிதமாக்காதீர்கள்
தாய்மை கொண்டு தூற்றாதீர்கள்.

இராஜராஜன்

வனம் said...

வணக்கம்

\\கோவி.கண்ணன் said...

//தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.//

தனிமனித செயல்களை 'ஊர் சார்ந்த' என்று பொதுப்படுத்தலில் உடன்பாடுகள் இல்லை.\\

ஐயா தென் தமிழ் நாட்டின் பக்கம் வந்து பாருங்கள் நீங்கள் உணர்வது தவறு என புரியும்.

உலகமே நம்மை பார்துக்கொண்டிருக்கின்றது என தெரிந்து ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சில் (நீயா நானா) மற்ற சாதிக்காரணை காதலித்தால் கொண்றுவிடுவோம் என மீசை முறுக்கி கூறிய சாதி பைத்தியங்கள் நிறைந்ததுதான் நம் கலாச்சாரம்.
எனக்கு தெரிந்து சென்னையிலேயே நடந்திருக்கின்றது இந்த நிகழ்வு.

சென்னை என்ன கனடாவிலும்தான் நம் தமிழ் கலாச்சார காவலர்கள் நடத்தியிருக்கின்றார்கள்

இராஜராஜன்

Radhakrishnan said...

//தன்னுயிர் தந்து இன்னுயிர் காப்பாள் தாய் என்பது தாய்மை போற்றும் பெண்களுக்குத்தான், அதை அனைத்துப் பெண்களுக்குமான ஒன்றாக நாம் பார்க்கிறோம்//

மிக்க நன்றி கோவியாரே. தாய்மை அனைத்து பெண்களுக்கும் என்றில்லை, மொத்த மனிதத்துக்கும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தாயுமானவரை பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன்.

//தாய்மை என சொல்லிச் சொல்லியே ஒரு பெண்ணை எந்த அளவிற்கும் அழுத்திவைக்கும் சமூகம் நம்முடையது. தாய்மை என கொண்டாடாதீர்கள், புனிதமாக்காதீர்கள் தாய்மை கொண்டு தூற்றாதீர்கள்.//

வணக்கம் மற்றும் மிக்க நன்றி இராஜராஜன் அவர்களே. மிகவும் அழுத்தமான கருத்து. தாய்மையை மனிதத்தன்மை சார்ந்ததாக எடுத்துக் கொண்டுப் பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டது போன்று மிகவும் அவை தவறான செயல்பாடுகள்தான்.