Saturday, 5 September 2009

அன்புள்ள காதலிக்கு,

நான் எழுதிய
காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
அவை கானல் வரிகளானால்
அதை எழுதிய
எனது கைகள் என்னவாகும்?

தேனைப் பெற்றது மலரின் குற்றமா?
அதை நுகரவந்த வண்டின் குற்றமா?
இல்லை இல்லை
அதை வளர்த்த நிலத்தின் குற்றம்.

உன்னை நினைக்க
மனதில் இடம் இருக்கிறது
உன்னை மணக்க
சட்டமும் இடம் கொடுக்கிறது
ஆனால்...
மாலையோடு நான் வந்தால்
மயான வாசலில்
நிற்க வேண்டுமாம், காற்றில்லாமல்
நான் சொல்லவில்லை
அன்பே!
உன் தந்தை சொன்னார்

உன் தந்தையின் முடிவு
என் வாழ்வின் முடிவாகுமா?
நீ
வந்தால் எரிகிறேன்!
அல்லால் புதைகிறேன்!
நாட்கள் வித்தியாசமாகலாம்
அதுபற்றி
நான் சிந்திக்க வேண்டியதில்லை!

கடற்கரைக்கு நம் கால்கள்
நடக்கவில்லை
கவலை அலையை கடக்கத்தான்
நாம் நீந்த வேண்டும்
சுண்டலுக்கு கை நீட்டி நாம்
சுட்டுக் கொள்ளவில்லை
சுடுகாட்டிற்குப் போகும் முன்
இணைய வேண்டும்!

வீட்டிற்கு நீ ஒரு பெண்தான் என்றாலும்
வீணாக நம் வசந்தத்தை கெடுப்பானேன்
மனம் ஊனமாய் பிறந்திருந்தால்
மங்கையே
உன் தந்தை யோசிக்கலாம்
என்நிலையை நான்
மீண்டும் கூறி
உன்னை ஏன் வதைப்பானேன்
வதைபட்டு வதைபட்டு
வாழ்க்கைக்கு சிதை வைப்பானேன்

காலத்தின் கோலம்
''கலப்பு மணத்திற்கு
கை நிறைய காசு''
நான் கொடுக்கவில்லை
அரசாங்கம் அவிழ்க்கிறது

உன் மனதால் என்னை எண்ணி
உயிரெல்லாம் ஓட்டம் விட்டு
என்னைப் பிரியச் சொன்னால்
எப்படி முடியும் உன்னால்
ஏன் விளங்கவில்லை அவர்களுக்கு!
''கல்யாணம்'' என்று கூறி
''கருமாதி'' வைப்பதற்கு
உன் தந்தைக்கு வழி வைத்து விடாதே!

பாவ செயல்களை
காலம் எப்படி சகித்துக் கொள்கிறதோ
காதலே
நீயும் அவற்றை சகித்துக் கொள்
வேண்டிய மட்டும் எடுத்துக் கூறி
விடைபெற்று வா
விழலுக்கு இறைக்கும் தண்ணீராகிப் போனால்
''விடுதலை'' என
விபத்தில் சிக்கிக் கொள்ளாதே
ஆறுமட்டும் அங்கேயே இரு
அப்பொழுதுதான் நம் காதலுக்கு
அர்த்தம் விளங்கும்

உடலுக்கு ஒப்பந்தம் என்றால்
உடனடியாக கிளம்பி வா
உயிருக்கு ஒப்பந்தம் என்றால்
அங்கேயே ''உலை'' வைத்துக் கொள்
இரண்டிற்கும் ஒப்பந்தம் என்றால்
இரண்டாண்டுகள் பொறுத்திரு
வாழ்வினை சீராக்க
வளமையை நான்
எதிர்பார்க்க வேண்டியுள்ளது

கண்களால்தான் பேசினோம்
ஆனால்
''காதலுக்கு கண் இல்லை''
என்கிறார்களே
கவனமாய் இரு
எனக்குச் சொந்தம் இருந்திருந்தால்
என்நிலை இன்று என் கதியோ?
கடவுளின் செயல்
அக்கவலை இல்லை எனக்கு!

முறையாக வந்து கேட்டால்
''முறை'' பார்த்து
அனுப்பி விடுவார்
முடியும் மட்டும் வருகிறேன்
நடுத்தர வர்க்கத்திற்கு
படகை நடுக்கடலில்
தனியாய் விட்டபாடுதான்!

சாதி பார்த்து
மணம் புரிய வேண்டுமாம்
சாதகம் பார்த்து
வழி பார்க்க வேண்டுமாம்
இவையன்றி
விழிபார்த்தது தவறா?

சாத்திர சம்பிரதாயங்களை
குறை சொல்லவில்லை
அவை சாத்தானாக உள்ளதே என
குறைபட்டுக் கொள்கிறேன்

இணையாத காதலுக்குத்தான்
இவ்வுலகில் மதிப்பு
அதற்காக நாம்
இணையாது போனால்
என்ன நியாயம்?
கடமைகளைச் சரியாய் செய்து வா
உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்!

தந்தையின் மனநிலைக்கு
ஏற்றவாறு தென்றலே
நடந்து கொள்
அதற்காக
இரவை பகலாக்கிக் கொள்ளாதே

முடியும் என்றிரு
நன்றாக உறங்கு
என்றாலும் ஒன்றரை மணிநேரம்தான்
உண்மையான உறக்கம்
அந்த ஒன்றரை மணி நேரத்தையும்
வருத்திவிடாதே

காலம் மாறிவிட்டதை
நான் சொல்லியா
உனக்குத் தெரிய வேண்டும்
காலைச் செய்திகளைப் பார்த்தால்
கண் முன்னால்
அனைத்தும் விளங்கும்
தொலைக்காட்சியைப் பார்
அதன் தொல்லைக்கும் முன்னால்
உன் தொல்லைகள்
ஒன்றும் பெரிதல்ல

ஆகாயத்தைப் பார்த்து
அடைய முடியவில்லையே
என ஆத்திரப்படுவதை விட
பூமியிலாவது நிற்கிறோமே
என பெருமைப்பட்டுக் கொள்!

பெண்கள் முன்னேற்ற சங்கம்
என்றும்
மகளிர் சங்கம்
என்றும்
இந்த மதி கெட்ட உலகில்
பலவும் வைத்து
போராடுவதைப் பார்
அந்நிலையை
உருவாக்கியது யார்?

நானும் கேட்டிருக்கிறேன்
வாழ்வின் கொடுமைக்கு
வரதட்சினை மட்டும்
காரணமல்ல
அதையும் மீறிய
அடிப்படை பிரச்சினைகள்
என்பதை!
நீயும் சங்கம் வளர்த்து
பங்கம் ஏற்படாமல்
பார்த்துக் கொள்

இந்த காதல் வரிகள்
உனக்கு மனமகிழ்ச்சி
ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்!

என்னைக் காணாத உனக்கு
இது ஓர் ஆறுதலாக இருக்கட்டும்
இது உன் தந்தையின்
போனால் கூட
எனக்கு ஒருவகையில் சந்தோசமே!
ஆனால்
நீ அதற்கு வழிவிடாதே

இன்னும் ஓரிரு வருடங்களில்
உன்னைக் காண வருவேன்
அதுவரையில்
எரிகின்ற தீபமாய்
சுடர்விட்டு இரு!

வெப்பத்திற்கு இங்கு
விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது
அங்கே குளிருக்கு விளக்கம்
சொல்ல வேண்டி இருக்கும்
இங்கே வெள்ளத்திற்கு
விளக்கம் சொல்ல வேண்டியிருந்தால்
அங்கே பஞ்சத்திற்கு
பதில் சொல்ல வேண்டியிருக்கும்
நாட்டின் இரு பக்கங்கள்
வாழ்வின் நிலையை
விளக்கி வைக்கும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
அதன் நிலைமையை
உணர்த்தி நிற்கும்

கவலை வந்தால்
அழுது விடு! முடியும் மட்டும்
அழுது விடு
மன உறுதியை
ஏற்படுத்திக் கொள்

இயற்கையின் மேல்
காதலை வளர்த்துக் கொண்டால்
இன்பமாய் இருக்கும்
அவ்வின்பத்தை உனக்குச் சொன்னால்
புரியாது
நீயும் நேசித்துப் பார்
பாசப்பட்டு இருப்பதை
புரிந்து கொள்வாய்

இரத்தத்தின் அளவை
கவனித்துக் கொள்
எண்ணங்கள் பாயும் முறையில்தான்
நமது இயக்கமும் உள்ளது
என்பதையும் உணர்ந்து கொள்

உலகவிசயங்கள் பலவும்
உனது காதுகளில்
கண்களில் பட்டிருக்கும்
சிந்தனை செய்து பார்
அவை உன்னை
கொஞ்சம் அமைதியாய்
இருக்க வழி செய்யும்

கனவுகளுடன் வாழாதே
அவை உன்னை
கணக்கில்லா துன்பத்தில் ஆழ்த்தும்

மாளிகையை கற்பனை செய்து
குடிசையையாவது கட்ட
முயல வேண்டும்! ஏன்
அந்த மாளிகையையே
கட்டிவிட வேண்டும்
வைராக்கியம் உள்ளவரை
வையத்தில் துன்பம் இல்லை
போராடத் துணிந்தவனுக்கு
போர்க்களம்தான் சரியான இடம்
புரிந்து கொள்

பண்பாடு சீரழிந்தால்
இந்த பாரதம்
பண்படாது என்பது
உனக்குத் தெரியும்
இப்பொழுது என்ன
பாரதம் பண்பட்டா
இருக்கிறது என்று
நீ கேட்பது புரிகிறது

உயிர் அலைகள்
உன்னை வந்து
மோதும் போது
என்னை மட்டும்
மோதாமல் இருக்குமா என்ன?

உன் நிலையை உணர்கிறேன்
ஜீன்களின் சாரம்சம் பற்றி
நீ படித்திருப்பாய்
அவைகளை இப்பொழுது
நாடி பிடித்து கொண்டிருக்கிறார்கள்

அதன் நாடி பிடிபட்டு
போனால்
நமது குழந்தைகளின்
எதிர்காலம் பொற்காலம்தான்

என்னே! எந்தன் அவசரம்
காதலுக்கு வழி கிடைக்காத போது
''பிறக்கும் முன் பேர்'' வைத்த
கதையாகி விட்டது
ஆனால் ஒன்று நிச்சயம்
சூரியன் மறைந்தால் தான்
நட்சத்திங்கள் தெரியும்
உன்னை மணந்தால் தான்
வாழ்வின் அர்த்தம் புரியும்

என்னிடம் பலர் கேட்டார்கள்
''காதல்'' ''காதல்'' ''காதல்''
என்கிறீரே
அதன் அர்த்தம் தெரியுமா என்று
நான் வள்ளுவனை
கை காட்டினேன்
கம்பனை எடுத்துரைத்தேன்
பாரதியை படித்துக் காட்டினேன்
அரபுவையும் இந்தியாவையும்
இணைத்துக் காட்டினேன்
இறுதியில்
உன்னையும் என்னையும்
சேர்த்துக் காட்டினேன்

எனக்கு நேரம் போவதே
தெரியவில்லை
காரணம் கேட்டால்
உந்தன் காதலும்
தமிழ்க் காதலும்
என்று விளக்குவேன்

இந்த காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
நம் வாழ்வின் வரிகள்
வசந்தம் வரும்.

3 comments:

Joe said...

இந்த காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
நம் வாழ்வின் வரிகள்
வசந்தம் வரும்.

All the best! (phew, what a long poem!)

தேவன் said...

///உன்னையும் என்னையும்
சேர்த்துக் காட்டினேன்///

மத்த கவிதையெல்லாம் சின்னதா இருந்தது இது கொஞ்சம் பெருசாசாசா... இருக்கு.

கவித கவித இத விட எனக்கு இப்ப வார்த்தை வரலை.

Radhakrishnan said...

1. மிக்க நன்றி ஜோ அவர்களே. 1994ல் எழுதப்பட்ட பல கவிதைகள் அதிக நீளமுடையனவாகவே இருந்திருக்கிறது.

2. இப்பொழுதுதான் கவிதைகளை சுருக்கி எழுதப் பழகிக் கொண்டேன். மிக்க நன்றி கேசவன் அவர்களே.